Thursday 22 May 2014

முற்காலத்துச் சைவமும், தற்காலத்து (சோலை சுந்தரபெருமாள்)தாண்டவபுரமும் -சி.அறிவுறுவோன்

முற்காலத்துச் சைவமும், தற்காலத்து தாண்டவபுரமும்
சி.அறிவுறுவோன்

       ஒருங்கிணைந்த தஞ்சை வட்டாரத்தின் உயர் சாதியினரின் வாழ்வியலை தி. ஜானகிராமன் முதலிய நாவலாசிரியர்கள் விரிவாகப் படைத்த சூழலில் தஞ்சை வட்டாரத்து அடித்தள மக்களின் வாழ்வியலையும் சிக்கலையும் நில உடமையாளர்களுக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டங்களையும் தன் படைப்புகளில் முன்னிலைப்படுத்தி வருபவர் சோலைசுந்தரபெருமாள் அவர்கள் என்று சொல்லுவது மிகையாக இருக்காது. அவர்களது `செந்நெல்’ நாவல் தான், நான் அவர்களோடு தொடர்பு கொள்வதற்குக் காரணமாக இருந்தது. அதையடுத்து அவரது படைப்புகள் அனைத்தையும் படித்து வியப்புற்றேன்.
ஒரு மாபெரும் படைப்பாளி வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்னும் மகிழ்வுக்கு அது காரணமானது. தஞ்சை வட்டாரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வர்க்கப் போராட்ட வரலாற்றைப் படைத்தளிக்க வேண்டுமென்ற  உறுதியான நோக்கத்துடன் மார்க்சிய நோக்குடன் வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்களின் ஆய்வுகளைப் படித்தறிந்ததோடு தானும் தஞ்சை வட்டாரத்தில் பயணம் செய்து சேகரித்த தரவுகளையும் ஆதாரமாகக் கொண்டு அவர் படைத்தளித்திருக்கும் வரலாற்றுப் புதினம் தான்,  `தாண்டவபுரம்’. இந்நாவலை அழகியமுறையில்  பதிப்பித்திருக்கும் பாரதிபுத்தகாலயத்திற்கு முதலில் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தமிழ்ச்சூழலில் இப்படி ஒரு பதிப்பகத்தின் தேவையை அறிந்து பக்குவமாகவும் வளமையாகவும் நடத்திக்கொண்டு இருக்கும் பதிப்பாளர்களை எதிர்கால தமிழுலகம் கவனம் கொள்ளும் என்பதிலும், பெருமைப்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
இந்த தாண்டவபுரம் நாவலைப் போகிறப் போக்கில், சோலை செய்து முடித்ததைப் பார்த்து மலைத்துப் போனேன். அதற்கு கிளம்பிய எதிர்ப்புகள், அந்த நாவலின் தேவையை வலியுறுத்துவனவாக அமைந்தன. மதவாதத்திற்கு எதிராக மதத்தையே பயன்படுத்த முடியும் என்ற ரசவாதத்தை உள்ளடக்கியது தான் `தாண்டவபுரம்’ என்பதைப் புரிந்து கொள்ள மதவாதிகளின் ஆவேச நடவடிக்கைகள் உதவின. அந்தப் புரிதலோடு புராணம் எப்படி உருவாக்கப் படுகிறது? என்பதற்கான இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டுமே முன்வைப்பது நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.
புராணம் உண்மைக்கு நெருங்கியதன்று
திருநாவுக்கரசராகிய அப்பரடிகள் சமணமதத்தை விட்டு விலகிச் சைவரான பிறகு சமணர்கள் அவரைக் கருங்கல்லில் கட்டிக் கடலில் போட்டார்கள். அவருக்கு அந்தக் கல்லே மிதவையாக இருந்து, அவரைக் கரை சேர்த்தது என்று புராணம் கூறும்.   இதற்கு ஆதாரம் இல்லை. ஆனால், நாவுக்கரசர் தமது பாடலில், "சொற்றுணை வேதியன் சோதி வானவன் / பொற்றுணைத் திருந்தடிப் பொருந்தக் கைத்தொழக் / கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் / நற்றுணையாவது நமச்சிவாயவே” பாடுகிறார். இப்பாடலில் கல்லையே  துணையாகக் கட்டிக் கடலில் எறிந்தாலும் நல்ல துணையாக நமச்சிவாயம் இருக்கும் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னைக் கல்லில் கட்டிக் கடலில் எறிந்ததாக அவர் எங்கும் குறிப்பிடவில்லை. இப்பாடல் புராணிகரின் மூளையிற் புகுந்து, கல் கடலில் மிதந்ததாகவும், அக்கல்லே அப்பருக்கு மிதவை ஆனதாகவும்  படைக்கப்பட்டது. நம்பமுடியாத கற்பனையையும் அதையே நம்பும்படியான மனநிலையையும் படைப்பது தான் புராணம்.
அடுத்து திருஞானசம்பந்தர், மயிலைப் பதிகத்தில் `பூம்பாவாய்’ என்று பெண்மணியை விளித்துப் பதிகம் பாடுகிறார். பதினோரு பதிகங்கள் பூவைப்பாட்டில் இடம் பெற்றுள்ளன. மாதந்தோறும் விழாக்கள் நடைபெறும் விதத்தைச் சொல்லி. `அதைக் காணாமல் போவாயோ பூம்பாவாய்!’ என்று ஒவ்வொரு பதிக முடிவிலும் விளித்துப் பாடியிருப்பார். அப்பாடல்களில் ஒன்றில் கூடப் பூம்பாவை என்றொரு பெண் இருந்தாள், அவள் சிவநேயர் என்ற செட்டியாரின் மகள். அவள் பாம்புதீண்டி இறந்து விட்டாள். அவளை எரித்து எலும்பை எடுத்துவைத்திருந்தார் சிவநேயர் என்று கூறவில்லை. ஆனால் திருஞானசம்பந்தர், மயிலை வந்தபோது எலும்பிருந்த மட்குடத்தை சிவநேயர் அவரிடம் காண்பித்தாராம். உடனே திருஞானசம்பந்தர் பதிகம் பாடி பூம்பாவையை உயிர்ப்பித்தாராம் இது புராணக்கதை. மயிலையில் திருஞானசம்பர் பாடிய பூவைப்பாட்டின் முதல் பதிகம் கீழே தரப்பட்டுள்ளது.
"மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் / கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் / ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு / அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்”  இப்பதிகத்தில், ‘அடியார்களுக்கு அமுதுபடைக்கும் காட்சியைக் காணாமல் போவாயோ பூம்பாவாய்" என்று தான் உள்ளது. இவ்விடத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையின் முதல் பாடலைப் பாடிப் பார்த்தீர்களேயானால் திருஞானசம்பந்தர், "பூம்பாவாய்" என்று ஒவ்வொரு பெண்ணையும் விளித்துப் பாடுவது புரியும்.
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் / நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்! / சீர்நல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீகாள்! / கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் / ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் / கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் / நாராயணனே நமக்கே பறை தருவான் / பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்” என்று ஆண்டாள் பாவையரை    விளித்துப் பாடியிருப்பது போன்றே திருஞானசம்பந்தரும் விளித்துப் பாடியிருப்பது புரிகிறதன்றோ?
இப்புரிதலுடன் சேக்கிழார் பாடலைப் பாருங்கள்!  "மண்ணினிற் பிறந்தோர் பெறும் பயன்மதி சூடும் / அண்ணலார் அடியார்தமை அமுதுசெய்வித்தல் / கண்ணினால் அவர்நல்விழாப் பொலிவுகண்டு ஆர்தல் / உண்மையாம் எனில் உலகர் முன்வருக” எலும்பாய்க் கிடக்கும் பூம்பாவையை உலகர் முன்வருக என்கிறார். அதாவது உயிர்பெற்று வருக என்கிறார். திருஞானசம்பந்தர் செய்யாத ஒன்றை செய்ததாகக் கூறுகிறார். பூம்பாவை என்றொரு பெண்ணின் எலும்புத்தொகுதிக்கு மீண்டும் திருஞானசம்பந்தர் உயிர் கொடுத்ததாகச் சேக்கிழார் எழுதுகிறார். ஆகவே புராணம் நம்பிக்கையையும் புனைவையையும் ஆதாரமாகக் கொண்டது. உண்மைக்கு நெருக்கமானதன்று என்பது விளங்கும்.
ஆரியர்களுக்கு முன்பே இருந்த ஆகமங்கள்
ஆனால், புதினம் புனைவுடன் கூடியது என்றாலும் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. ஆதலால் நடைமுறை உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லக் கூடியது.  இந்தப்புரிதலோடு தாண்டவபுரம் நாவலின் உள்ளே பயணித்தால் ஒரு நல்ல தமிழ்ச் சைவன் கூட, இன்று நிலவும் பல சிக்கல்களுக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராட முன்வருவான் என்பதைப் புரிந்து கொள்வது எளிதாகவே இருக்கும். மதவாத அரசியல்காரர்களாலும், முதுகெலும்பில்லாத தமிழ்ச் சைவர்களாலும் கடுமையாக எதிர்க்கப்படும் இந்த தாண்டவபுரம் நாவல், தமிழ்ச் சைவத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக எழுதப்பட்டது என்றால் கடவுள் நம்பிக்கை இல்லாத சோலை அவர்களுக்கு, அதை உயர்த்திப் பிடித்து எழுதவேண்டிய தேவை என்ன வந்தது என்னும் வினா எழும்?
சைவசமயக் குரவர் நால்வருள் முதல்வரான திருஞானசம்பந்தரை இழிவுபடுத்துவது தான் அவரது நோக்கம் என்று சாற்றப்படும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது என்றால், தமிழ்ச் சைவத்திற்கான வேர் அறுபட்டுவிடாமல் காக்கும் திருஞானசம்பந்தரின் முயற்சியை விவரிப்பதேன்? என்ற வினாவும் கூடவே எழும். எனவே, தமிழ்ச் சைவத்தை உயர்த்திப் பிடிப்பதோ திருஞானசம்பந்தரை இழிவுபடுத்துவதோ அவர் நோக்கமன்று. தன் காலத்துக்கு முன்பிருந்தே தொடரும் தமிழ்ச்சைவத்தைத் துhக்கிநிறுத்துவதே தனது தலையாயப் பணி என்று ஏற்றுக் கொண்ட திருஞானசம்பந்தரை சமூகவரலாற்றுக் கண் கொண்டு பார்த்து வெளிப்படுத்துவதும் அதன் மூலம் தற்காலச் சமூக இயக்கத்துக்கு தமிழ்ச் சைவம் வழங்கிவந்த பங்களிப்பைப் புரிந்துகொள்ள உதவும் வகையிலும் இப்புதினம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் உண்மை புரியவரும்.
தமிழ்ச் சைவம் என்று ஒன்று உண்டு என்றால், தமிழ்ச்சைவம் அல்லாத ஒன்று உண்டு என்று விளங்கும். அந்த ஒன்றே வேதியச் சைவம்.  இந்த வேதியச் சைவம், சமற்கிருதத்தையும் `ரிக்’ முதலான வேதங்களையும், ஆரண்யகங்களையும், பிராமணங்களையும், உபநிடதங்களையும்,   உயர்த்திப் பிடிப்பதாகும். தமிழ்ச்சைவம், தமிழ்ப்பார்ப்பானையும் தமிழையும் ஆகமத்தையும்  உயர்த்திப் பிடிப்பதாகும். வேதியர்கள்  தங்களை ஆரியர் வழித்தோன்றல்களாகச் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், ஆரியவேதம் என்று சொல்லப்பெறும் ரிக்வேதம் உருவ வழிபாட்டை வலியுறுத்தவில்லை என்பதைத் தமிழறிஞர். அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் தமது பெரியபுராண ஆராய்ச்சி என்னும் நூலுள் தெளிவாகக் கூறியுள்ளார். காண்க.
       உருவ வழிபாடில்லாத ஆரியர்க்கு சிலை வடிக்கும் முறைகளோ, நுட்பங்களோ, கோவில்கட்டும் முறைகளோ நுட்பங்களோ, வழிபாட்டு முறைகளோ தேவைப்பட்டிருக்க வில்லை. ஆதலால் இவற்றை விளக்கும் ஆகமங்கள், ஆரியர்க்கு உரியவை அன்று. எனவே, ஆரியர் வருகைக்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்து வந்த மக்களால் படைக்கப்பட்டிருந்த ஆகமங்களை சமற்கிருதத்தில் உள்வாங்கி, வேதாகமம் எனப்பிராமணர்களால் பெயர் சூட்டப்பட்டு விட்டன. இந்த பிராமணர்கள் ஆரியரும் அல்லர். சமற்கிருதம் ஆரியமும் அன்று.
சமற்கிருதத்தின் வழித்தடம்
வேதகால ஆரியர்களிடையே  நிலவிய வர்ணம், உயர்வு தாழ்வற்றதாகும். அந்த நிலையிலேயே அவர்கள் முல்லை நிலத்து வாழ்ந்த மக்களோடு கலந்து விட்டனர் அவர்கள் பேசி வந்த ஆரியமொழியும் வழக்கொழிந்து விட்டது. சமற்கிருதம் அறிஞர்களால் உபநிடதகாலத்தில் உருவாக்கிக் கொள்ளப்பட்ட மொழி. அதில் பல்வேறுபட்ட மொழிகளுக்குரிய சொற்கள் உள்வாங்கிக் கொள்ளப்பட்டன. அவ்வாறே பல்வேறு மொழிநுhல்களும் உள்வாங்கப்பட்டன. ஆனால் அந்த மொழிதான் இந்தியாவின் மக்கள் மொழிகளை உருவாக்கி விட்டதாகக் கதைக்கப்படுகிறது. என்றைக்கும் மக்கள் மொழியாக இருந்திராத சமற்கிருதம்  இந்தியாவின் பொதுமொழியான  வழித்தடம் இது தான்.
பிராமணர் செல்வாக்கு அடைந்த நிலையில் சமற்கிருதமே வழிபாட்டு மொழியாகவும் ஆகிவிட்டது. அதற்கு முன்பெல்லாம் மக்கள் மொழிகளே வழிபாட்டு மொழியாக இருந்தன. தமிழ்ப்பார்ப்பனரே கோயில்களில் வழிபாடு செய்து வைப்பவர்களாக இருந்தனர். தி.வே. கோபாலய்யர் அவர்களது கட்டுரைத் தொகுப்பில் `தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்’ என்னும் கட்டுரை மேற்கண்ட செய்தியை ஓரளவிற்கு விளக்குகிறது. தமிழ்ப்பார்ப்பனர்களுக்கும் வேதியப் பார்ப்பனர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை இப்புதினத்தின் மூலம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
"மந்திரம் நான்மறை யாகி வானவர் / சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன / செந்தழல் ஒம்பிய செம்மை வேதியர்க்கு / அந்தியுள் மந்திரம்  ஐந்தெழுத்துமே”  (திருமுறை 3-22-2) இவ்விடம் சுட்டப்பட்டுள்ள பாடலில் திருஞானசம்பந்தர், மந்திரம் தான் நான்மறையானது என்கிறார். `செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்’ என்று அவர் குறிப்பிடுவது மேற்சொல்லப்பட்ட நான்மறையை ஓதியவர்களையேயாகும்.
வெள்ளந்தி, செவ்வந்தி என்று சொல்லப்பெறும். காலையும் மாலையும் அவர்கள் ஐந்தெழுத்தாகிய மந்திரத்தை ஓதினார்கள் என்று  கூறுகிறார். நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரமாகும். மந்திர எழுத்துக்கள் மறைந்துள்ளப் பொருள்களுக்கு உரியவையே.  இதனை, "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த / மறைமொழி தானே மந்திரம் என்ப” (தொல்-பொருள்-செய்யுள் - 480) என்று தொல்காப்பியம் குறிப்பிடும்.  எனவே, மந்திரமொழியால் ஆன நான்மறை தமிழில் இருந்தது என்பது திருஞானசம்பந்தர் பாடல் மூலம் தெளிவாகிறது. மேலும், சமற்கிருத செல்வாக்கு ஏற்பட்டுப் போன காலத்தில் மறையோரும் வேதியர் என்றும் மறை வேதம் என்றுமே சொல்லப்பெற்றுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், செந்தழல் ஓம்பிய வழக்கம் மறையோர்க்கு இருந்தது என்பதும்  புலனாகும். ஆக, கோவலன் கண்ணகித் திருமணத்தைச் செய்விக்கும் நிகழ்வை இளங்கோவடிகள் குறிப்பிடுவதை நோக்குக.
"மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டிடத் தீவலம் செய்வது காண்பார்கண் நோன்பென்னை!’’என்கிறது சிலப்பதிகாரம். ஆதலால் தீ வளர்த்தல் ஆரிய மரபு  என்றும் அம்மரபு தமிழ்மரபில் கலந்து விட்டது என்றும் அ.ச.ஞானசம்பந்தம் தமது பெரியபுராண ஆராய்ச்சியில் குறிப்பிடுவதை ஏற்க இயலவில்லை.
அரசு மொழியான சமற்கிருதத்தை எதிர்த்து தமிழ் சைவம்
"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி / ஓதுவார் தமைநன் னெறிக்கு உய்ப்பது / வேதநான் கினும் மெய்ப்பொரு ளாவது / நாதன் நாமம் நமச்சிவாயவே” (திருமுறை - 3.49.5) சமற்கிருதத்திலுள்ள வேதத்தை ஒலிமாறாமல் ஓதினால் மட்டுமே பலனுண்டு என்பர். ஆனால், தமிழிலுள்ள நான்மறையிலும் மெய்ப்பொருளாகவுள்ள மந்திரத்தை காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க ஓத வேண்டும் என்கிறார் திருஞானசம்பந்தர். எனவே, `வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது’ என்பதற்குப் பொருளாக நான்கு வேதத்திலும் மெய்ப்பொருளாவது என்று பொருள் கொண்டு `நாதன் நாமம் நமச்சிவாயவே’ என்று முடித்தால் ஐந்து எழுத்து மந்திரம் நான்கு வேதத்துக்கு உரியது என்றாகும்.
ஆனால், வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது’ என்பதற்கு நான்கு வேதத்தைவிடவும் மெய்ப்பொருளாவது என்று பொருள் கொண்டு `நாதன் நாமம் நமச்சிவாயவே’ என்று கூட்டினால் நான்கு வேதத்தைவிடவும் மெய்ப்பொருளாக இருப்பது நாதன் நாமம் நமச்சிவாயவே’ என்றாகி மந்திரம் நான்மறையான உண்மை விளங்கும். எனவே, தமிழ் நான்மறையே திருஞானசம்பந்தருக்கு உடன்பட்டது என்றாகும். எனவே திருஞானசம்பந்தர் காலத்துக்கு முற்பட்டவரான காரைக்கால் அம்மையார் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் நான்மறையும், ஆகமமும், தமிழ்ச் சைவமும் இருந்தன என்பது தெளிவாகும். மறைமலையடிகளாரும் நான்மறையும் ஆகமமும் தமிழில் இருந்தன என்பதைத் `தமிழர் மதம், மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்’ ஆகிய  நூல்களில் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி கொற்கைக்கிழான் தற்கொற்றன் என்னும் பிராமணனுக்கு முற்காலத்தில் வேள்விக்குடி எனப் பெயர் மாற்றித் தானமாக வழங்கியதைக் களப்பிரர்கள் பறித்து விட்டார்கள் என்பதால் பிராமணர்களுக்கு எதிரியாகக் களப்பிரர் இருந்தனர் என்று கருத இடமில்லை  என்று கூறி எடுத்துக் காட்டும் தருகிறார் மயிலை சீனிவேங்கடசாமி. (களப்பிரர் ஆட்சியில் தமிழகம் பக்கம் 71-72)
"பொருகடல் வளாகம் ஒருகடை நிழற்றி / இரு பிறப்பாளர்க்கு இருநிதி ஈந்து / மனமகிழ்ந்து அருள்புரி பெரும் அச்சுதர் கோவே’’ என்பது தான் அந்த எடுத்துக்காட்டு. அச்சுதர் கோ என்று குறிப்பிடப்படுவதால் களப்பிரர்கள் வைணவர்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்னும் நுhலிலேயே களப்பிரர்கள் வைணவம் சார்ந்தவர்கள் என்பதையும் மயிலையார் தெளிவுபடுத்தி உள்ளார். எனவே, களப்பிரர்கள் சமணர்கள் என்றும் அதனால் சமணமதத்தை ஆதரித்தனர் என்றும் கருதுவது தவறு. மேலும் `இருபிறப்பாளர்க்கு இருநிதி ஈந்து’ என வருவதால் பிராமணர்களுக்குப் பெரிய அளவில் நிதி வழங்கியச் செய்தியை அறிய முடிகிறது. எனவே, களப்பிரர் பிராமண எதிர்ப்பாளர் அல்லர் என்பது தெளிவாகிறது. ஆகவே, அவர்கள் சமற்கிருதத்தை உயர்த்திப்பிடித்தனர். அதே வேளையில் களப்பிரர்கள் சமணத்தை எதிர்க்க வில்லை என்று கூறலாம்.
மேலும். ` கொற்கைக்கிழான் தற்கொற்றன்’ என்னும் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவன் நல்ல தமிழ்ப்பெயர் சூடிய தமிழ்ப்பார்ப்பான் என்பது தெரியவரும். எனவே, அவன் தமிழ்மறைப்படியே பாண்டியனுக்காக வேள்வி வேட்பித்திருப்பான். ஆகவே, சமற்கிருத ஆதரவாளரான களப்பிரர்கள், தமிழ் மீது பகையுணர்வோடு தற்கொற்றனுக்குப் பாண்டியன் வழங்கிய வேள்விக்குடியைப் பறித்துக் கொண்டனர் என்பதே சரி.
       சமணர்களும் சமற்கிருதத்தை ஏற்கவே செய்தனர். களப்பிரர், தமிழகம் வரும் முன்பாகவே சமணம் தமிழகத்தில் பரவி இருந்ததால் களப்பிரர்கள் சமணத்தை ஏற்றிப் போற்றினர். ஆதலால் தமிழ் சைவம் பின்னடைவைச் சந்தித்தது. பல்லவர்களும் திருநாவுக்கரசர் சைவத்தைத் தழுவியபின் மகேந்திரவர்மன் சைவத்தைத் தழுவும் வரை சமணமே அரசமதமாக இருந்தது. ஆனால் சமற்கிருதம் பல்லவர்காலம் முழுவதிலும் அரச மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் இருக்கவே செய்தது. இவ்வாறு களப்பிரர் காலந்தொடங்கி அரசமொழியாகத் தமிழகமெங்கும் கோலோச்சி, சமற்கிருதத்துக் கெதிராக தமிழ்ச்சைவம் தமிழை உயர்த்திப்பிடித்துப் போராட வேண்டியிருந்தது. ஆதலால், பதிகள் தோறும் சென்று திருப்பதிகம் பாடும் பக்தி இயக்கத்தைப் பெரிய அளவில் பாரம்பரியத் தொடர்ச்சி அறாமல் செய்தது தான் திருஞானசம்பந்தரின் பக்தி இயக்கத்தின் சிறப்பம்சம் ஆகும்.
சிவனாக உருவெடுத்த திணைத் தெய்வங்கள்
இந்தப் பாரம்பரியம் எங்கிருந்து தொடங்குகிறது என்பது தான் ஆய்வுக்குரிய செய்தியாகும். திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்கள் முழுவதிலும் சிவன் பார்வதி ஆகியோர் தலைவன் தலைவியாகவே காட்டப் பெற்றள்ளனர். அவர்களது அகவாழ்க்கையானது தொல்காப்பியக் கற்பியலோடு பொருத்தமுற்று வருவதை உற்று நோக்கினால் புரியும். ஆக வாழ்க்கையில் கற்பு நெறி என்பது களவு வாழ்க்கையின் தொடர்ச்சியாகும். எனவே திணைச்சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் சிவன் பார்வதி இவர்கள் வழியாக நம் சமூகத்துக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்னும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து திணைக்குரிய தெய்வங்கள் குலதெய்வங்களை விடவும் பெருந்தெய்வங்களாகும். முல்லைத் திணைக்கு மாயோனும், குறிஞ்சிக்குச் சேயோனும், மருதத்துக்கு வேந்தனும், நெய்தலுக்கு வருணனும், பாலைக்குக் கொற்றவையும் தெய்வங்களாகும். இந்தத் தெய்வங்களை விடப்  பெருந்தெய்வங்களாக சிவனும் திருமாலும் வருகின்றனர்.
சிவன் மலைக்கடவுள், பார்வதி மலைமகள், சேயோன்  குறிஞ்சித்தெய்வம். சேயோன் எனில் சிவந்தவன் என்னும் பொருள்படும். சிவன் என்பது சிவந்தவன் என்னும் பொருள்படுவதேயாகும், சிவனின் தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்பதாகும். வேந்தன் என்கிற முடிமன்னனின் தொழிலும் படைத்தல், காத்தல், அழித்தல் என்பனவாகும், வேந்தன் மருதத்திணையில் தான் உருவாகிறான். மருதத்திணையின் கடவுள் வேந்தனானான், எனவே சேயோனும் வேந்தனும் இணைக்கப்பட்டுச் சிவனானான் என்று புரிந்த கொள்ள முடியும். மேலும் பாலைக்குரிய கொற்றவையின் கொடூரமும் சிவன் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிவன் உருவான பின்னரும் திணைச்சமூகம் நீடித்ததால் சேயோன் முருகனாக்கப்பட்டுப் பார்வதி என்கிற மலைமகள் வள்ளியாக்கப்பட்டு விட்டார்கள். முருகன், சிவனுக்கு மகனாக்கப்பட்டுச் சேயோன் எனின் சிவனுக்கு மகன் என்று ஆக்கப்பட்டு விட்டான். வேந்தன் சிவனுக்குள் ஒன்றிவிட்டதால் வேந்தன் பிற்காலத்தில் இந்திரனாக்கப்பட்டு விட்டான்.  ஆரிய இந்திரன் சமணமதப் பரவலைத் தொடர்ந்து தமிழகத்தில் நிலைத்து விட்டான் என்பது அறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி அவர்களது ஆய்வு முடிவாகும். ஆனால் இந்திரன் ஆரியர் வருகைக்கு முன்பே இங்கு  உருவாக்கப்பட்டு விட்டான் என்று குணா கூறுகிறார். (பார்க்க தொல்காப்பியத்தின் காலம்) இந்தியப் பகுதி அல்லாத பிறபகுதிகளுக்கு இடம் பெயர்ந்த ஆரியக்குழுக்கள் இந்திரன் என்ற பெயரைப் போர்த்தெய்வத்திற்குச் சூட்டாதிருந்ததையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
பரதநாட்டியத்தின் பாதை
புகாரில் நடைபெற்ற இந்திரவிழாவில் தலைக்கோலியாகிய மாதவி பதினோருவகைக் கூத்துக்களை இந்திரவிழா முடியும் வரை ஒவ்வொரு நாளும் ஆட்டிகாட்டுவாள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. சிவன் ஆடியதாகக் கருதப்பெறும் எழுவகைத் தாண்டவங்கள் பதினோருவகைக் கூத்துக்களுக்குள் அடக்கம். இந்திர விழாவுக்கும் பதினோருவகைக் கூத்துகளுக்கும் என்ன தொடர்பு? வேந்தன் சேயோனோடு இணைந்து சிவனான நிலையில்  மருதத்திணை முழுமையும் நிலவுடைமைச் சமூகமாக மாற்ற முறாதிருந்ததால் வேந்தனுக்கு மாற்றாக எஞ்சிய மருதநிலப்பகுதிக்கு இந்திரனையும் மருதம் திரிந்து நிலவுடைமையும் சாதியும் வர்ணமுமாக வளர்ந்து விட்ட பகுதியில் முடியுடை மூவேந்தரும் சிவனும் நிலைகொண்டு பேரரசு தோற்றம் பெற்றதன் முதல்படியாக நிலைத்து விட்டன.
இது தான் அந்தத் தொடர்பாக இருக்க முடியும். எனவே சிவன் ஆடியதாகக் கருதப்பெறும் எழுவகைத் தாண்டவமும் திணைச்சமூகத்துக்கு உரியவை என்பது தெளிவு.  எனவே, சிவன் முதலில் கூத்தபெருமானாகவும் பின்னர் தாண்டவமூர்த்தியாகவும் கூத்து பரதநாட்டியமாக வளர்ந்த நிலையில் நடராசபெருமானாகவும் திணைச்சமூகம் நீடித்திருந்த நிலையிலேயே வளர்ச்சிப் பெற்றிருக்கக் கூடும் இவ்வளர்ச்சிகளின் ஒருங்கிணைப்பே சிவன் என்று உணரலாம்.
தமிழகத்துக்குரிய  நட்டுவாங்கம், பயிலப்படும்  தொழில் முறையாகும். கடவுளுக்கு நேர்ந்து பொட்டுக்கட்டி விடப்பட்ட  பெண்குழந்தை நான்காவது அகவை முதல் பதினோராவது அகவை முடிய, ஏழாண்டு காலம்   பயிலப்பட வேண்டிய  கலைக்கல்வியாகும். முதல் நான்காண்டுகள் இந்தப்  பதினோருவகைக் கூத்துகளையும் பின்னர் மூன்றாண்டுகள் பரத நாட்டியத்தையும் நட்டுவாங்கனார் பயிற்று விப்பார். பரதநாட்டியம் பரத்தையரால் ஆடப்பெற்றதாகும் ஆகவே, பரத்தையரால் ஆடப்பெற்றது பரத்தம் என்றாகிப் பின்னர் பரதம் என்று திரிந்தது. இந்தப் பரதநாட்டியத்தை நன்றாகப் புரிந்து கொள்ள  வேண்டுமானால் அதில் பிடிக்கப்படும் முத்திரைகளைப் புரிந்து கொண்டால் தான் முடியும். அப்போது தான் பார்ப்போருக்குச் சுவை தோன்றும்.  இதனால் தான் தொல்காப்பியத்துள் மெய்ப்பாட்டியல் வைக்கப்பட வேண்டியதாயிற்று. முகக்குறிப்பற்ற முத்திரை சுவையற்றது.
இந்த முத்திரைகள் கைவரப்பெற வேண்டுமெனில் பதினொரு வகை ஆடல்களிலும் தேர்ச்சிப் பெற்றாக வேண்டும். இல்லையேல் பரதத்தில் தேர்ச்சிப்  பெறமுடியாது.  ஆகவே, பரதம் என்கிற பரத்தம் என்ற செவ்வியல்கலை கூத்துக்கலைகளின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் கொண்டதாகும் என்பது தெளிவு. இந்தப் பரதம் என்கிற பரத்தத்தைக் கோவில்களில் தேவதாசியர் மட்டுமே ஆடமுடியும்.  வேறெவரும் ஆடக்கூடாது.  பரம் என்றால் மேல் என்று பொருள். பரஉலகம்  எனில் மேலுலகம். பரம்பொருள் எனில் மேலுலகத்துப் பொருள் - கடவுள். பரத்தை எனில் கடவுள் பெண்டீர், பரதேவதை, இறைமகளிர் என்பதெல்லாம் தேவதாசியரை குறிப்பனவே. எனவே தான் பரத்தையர் ஆடும் ஆட்டம் பரதம் ஆனது. பரதமுனிவர் உருவாக்கியதால் பரதம் ஆனது என்பது பச்சைப் பிராமணப் பொய்.
இதிலிருந்து சிவன், நடராசர் ஆனதன் வரலாற்றைப் புரிந்து கொள்ளலாம். ஆடற்கலை என்பது தோல்கருவியாகிய மத்தளம் நரம்புக்கருவியாகிய யாழ் போன்ற இசைக்கருவிகளுடன் தொடர்புடைய ஏழிசை பயின்று வரும் பண்களோடும் தொடர்புடையதாகும்.  இவை யாழோர் கூட்டம் எனும் காமக்கூட்டத்திற்கு உரியவாகும். யாழ் சிறந்து விளங்கிய காலத்துக்குரியதாகக் காமக்கூட்டம் இருந்ததால் யாழோர் கூட்டம் ஆகியது. அதனால் கந்திருவர் கைக்கு யாழ்போனது. மேற்கண்ட செய்திகளைப் புரிந்து கொள்ள  மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதிய `தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ `நுண்கலைகள்’ ஆகிய நூல்களை நுணுகிக் கற்க வேண்டும். கூடவே இவரது, ‘மறைந்து போன தமிழ்நூற்களை”யும் கற்றல் நன்று.
மக்கட் பண்பாட்டில் திணைச்சமூகம்
தேவதாசியர் நான்காவது அகவையிலேயே இறைவனுக்கு நேர்ந்து பொட்டுக் கட்டி விடப்பட்டு விடுவர். இவர்களில் ருத்திரக் கணிகையரும் உண்டு. ருத்திரக்கணிகையர் என்பார் ஓர் ஆடவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வர். கணவன் இறந்து விட்டால் கைம்மை நோன்பேற்பர். இது பி.எம்.சுந்தரம் அவர்கள் எழுதிய தேவதாசிமுறை எனும் நூலுள் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை மாதவிக்குப் பிறகு தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில், தேவதாசியர் பதியிலார் ஆவார். இவர்களைத் தான் திருவள்ளுவரும் `வரைவின் மகளிர்’ என்று குறிப்பிடுகிறார். வரைவின் மகளாகிய மாதவி, கோவலனோடு பன்னீராண்டு காலம் குடும்பம் நடத்துகிறாள். மணிமேகலையை ஈன்றெடுக்கிறாள். திருவள்ளுவர், `பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில் /ஏதில் பிணம் தழீஇ யற்று’ என்று வரைவின் மகளிர் அதிகாரத்தில் குறள் செய்துள்ளார். பொய்மை முயக்கம் ஊடலால் தோன்றும் கூடல் இன்பத்தைத் தராது.
ஆதலால் தான் `ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்’ என்று வள்ளுவர் கூறினார். இங்கே காமம் என்றது ஊடலும் கூடலும் பொருந்திவருவது. மேலும் ஊடலும் கூடலும், களவு கற்பு இரண்டுக்கும் உரியது. எனவே களவும் கற்பும் காமக்கூட்டம் ஆனது. இதனால் தான் வள்ளுவர் இல்லறவியலைக் காமத்துப்பால் என்று வகைப்படுத்தினார். மேலும், "அறன்எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் / பிறன் பழிப்பதில்லாயின் நன்று’’ என்றும் கூறினார். ஏன் வள்ளுவர் சிறப்பித்துக் கூறவேண்டும்? திணைச்சமூக வாழ்க்கையில் தலைவி, தலைவனோடு தொடர்புபட்டு வாழ்வதைத் தோழிக்கு வெளிப்படுத்துவாள். இது அறத்தோடு நிற்றலாம். இந்த அறத்தோடு நிற்றல் தலைவி தோழிக்கு  நிற்றலைத் தொடர்ந்து தோழி செவிலிக்கு அறத்தோடு நிற்பாள். செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்பாள். இது களவுகாலத்து அறத்தொடு நிற்றலாகும். இது தான் கற்பு வாழ்க்கைக்கு அடிப்படையாகும். எனவே, இல்லறம் மரபுவழியாகவே அறத்தொடு கூடியதாகும் என்பதைக் கூறவே அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றார்.
       அஃதும் பிறன் பழிப்பதில்லாயின் நன்று என்றதால் துறவறம் பிற்பட்டது என்பதும் துறவறத்தைப் பின்பற்றுபவர்களாலும் இல்வாழ்க்கைப் பழிக்கப்படாதவாறு அமைய வேண்டும் என்று குறிப்பிடுகிறார். எனவே, இல்லறம் என்பது மரபாக வரும் விழுமியம் என்பது வள்ளுவர் கருத்தாகும். இந்த வள்ளுவர் கருத்து திருஞானசம்பந்தருக்கும் தமிழ்ச் சைவத்துக்கும் உடன்பாடானதாகும். இதனால் தான் சிவன் அம்மையப்பனாகக் காட்சி தருவதாகத் தமிழ்ச்சைவர்கள் கருதுகிறார்கள். திருஞானசம்பந்தரும் இதர சைவசமயக்குரவரும் துறவறத்தை வலியுறுத்தாமல் இல்லறத்தை வழியுறுத்துவதும் இதனால் தான். திணைச்சமூகம் மக்கள் பண்பாட்டில் எத்துணை ஆழமாகப் பதிந்துள்ளது என்பதற்கு இதுவே போதுமானதாகும். இதுவே, பரத்தையரிடையே ருத்திரகணிகையர் தோன்றவும் காரணமாய் அமைந்து விட்டது. இதனால் தான் இளங்கோவடிகள் தமது சிலப்பதிகாரத்துள் மாதவியைக் குறிப்பிடும் போது அவளை வரைவின் மகளாகக் குறிப்பிடாமல்,"கூடலும் ஊடலும் கோவலற்களித்துப் பாடமைச் சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்” என்று கூறினார்.
பரத்தையிடம் செல்ல தலைவனுக்கிருந்த உரிமை
கோவலன் கொலையுண்டபின்னர் மாதவியின் தாயானவள் குலத்தொழிலுக்கு மாதவியை வற்புறுத்தியும் அவள் மறுத்து விட்டாள். அக்காலக்கட்டத்தில் ருத்திரகணிகை வழக்கம் இருந்திருந்தால் மாதவி, புத்தமதத்தில் சேர்ந்து பிக்குனியாகப் பணியாற்றியிருந்திருக்க மாட்டாள். கைம்மை நோன்பு ஏற்றிருந்திருப்பாள். மணிமேகலையையும் புத்தபிக்குனியாக்கி விட்டாள்..  தமிழகத்தில் கோவில்கள்  தோன்றிய பின்னர் தேவதாசியரும் இசைபாடுவோரும் இசைக்கருவிகளைப் புழங்குவோரும் கோவில் சார்ந்தே வாழ்வோராயினர். கலைகள் கோவில்களோடு பிணைக்கப்பட்ட.ன.
திணைச்சமூகத்தில் பரத்தையிற்பிரிவு தலைமகனுக்கு ஓர் உரிமையாகத் தரப்பட்டது. ஆனால் அதற்கு வரம்பு கட்டப்பட்டது. தலைவிக்கு மாதவிடாய் தோன்றி மூன்று நாட்களுக்குப் பிறகு உள்ள பன்னிரண்டு நாட்கள் வரை தலைவியைத் தலைவன் பிரிந்து வாழ்வதில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது" பூப்பின் புறப்பாடு நீங்கிய ஈராறு நாளும் / நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்’ பரத்தையிற் பிரிந்த காலையான’’ (தொல். பொருள்) என்னும் நூற்பா இதை உறுதி செய்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகன் தன் மனைவியான கண்ணகியைப் பிரிந்தவன் பரத்தை வீட்டிலேயே தங்கி விட்டான்.
இதையறிந்த புலவர்கள் கபிலர், பரணர், ஔவையார் முதலானவர்கள் அவன் தவறு செய்யக்கூடாது என்று அவனைப் பரத்தை வீட்டில் சந்தித்துப் பாடல் வாயிலாக அறிவுறுத்துவதைச் சங்க இலக்கியமான புறநாநூற்றில் பதிவு செய்துள்ளதைக் காணலாம். ஆகவே, முன்பு குறிப்பிட்டுள்ளது போல மாதத்தில் பனிரெண்டு நாட்கள் நீங்கலாதகவுள்ள நாட்கள் பரத்தையிடம் செல்ல தலைவனுக்கு உரிமை வழங்கப்பட்டது. ஆகவே, இது தலைவனைப் பொறுத்தளவில் காமப்பகுதி எனச் சொல்லப்பட்டது. காமம் என்பது தலைவன் தலைவியர் அகவாழ்வைக் குறிப்பதாகும் இந்த அகவாழ்வின் பகுதியாகத் தலைவன் பரத்தையிற் பிரிவை மேற்கொள்வதால் காமப்பகுதி ஆகுபெயராகிறது. இதனால் `காமப்பகுதி கடவுளும் வரையார்’ என்னும் தொல்காப்பிய நூற்பா தொல்காப்பியர் காலத்திலேயே தேவதாசியர் இருந்தனர் என்பதைத் தெளிவு படுத்துவதாகும். கடவுளும் என உம்மைத் தொகை வருவதால் இது மாந்தரில் ஆடவர்க்கும் பொருந்துவதாகும் என்பதாம். `காஅய் கடவுட் சேய் செவ்வேள்’ எனப் பரிபாடல் கூறுவதால் கடவுள் எனப்படுவது சிவன் என்பது பெறப்படும்.
`அது  கடவுண்மாட்டு கடவுட் பெண்டிர் நயப்பனவும் அவர்மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பனவும் கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம்.’ என்று மேற்கண்ட நுhற்பாவுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளதால் விளங்கும். "அடியுறைமகளிர் ஆடும் தோளே / நெடுவரை அடுக்கத்து வேய் போன்றனவ” (பரிபாடல் 14,5-6) என்று வரும் பரிபாடல் வரியில் வரும் அடியுறைமகளிர் என்பது தேவதாசியரையே குறிக்கும்.  "வணங்கு இறைமகளிர் அயர்ந்தனர் ஆடும் கழங்கு உறை ஆலியோடு கதழ் உறை சிதறி பெயல் தொடங்கின்றால்…” (அகநானுhறு 334, 7-9) என்பதில் வரும் இறைமகளிர் என்பது தேவதாசியரையே குறிக்கும். 
இந்த தேவதாசிமுறை, லிங்கவழிபாடு நிலவிய பகுதிகளிலெல்லாம் நிலவியது என்றும் இது உலகின் பலபகுதிகளில் நிலவியது என்றும் இது தொல்குடிச் சமூகத்தின் இனப்பெருக்கத் தேவைகருதி உருவாக்கப்பட்ட வழிபாடு எனவும் ஆய்வாளர் குணா அவர்கள் தமது `தொல்காப்பியத்தின் காலம்’ எனும் நூலுள் மூன்றாவது பகுதியுள் ஒன்றிலிருந்து பதினான்காவது உட்பிரிவுவரை மிகவிரிவான ஓர் ஆய்வின் மூலம் விளக்கப்படுத்துகிறார். எனவே, திருஞானசம்பந்தரை கடவுள் அருள் பெற்றவர் என்று காட்டாது தமிழ்மொழியை ஆழ்ந்தகன்று கற்ற மாமனிதாராகக் காட்டு வதற்காகவே ருத்திரதாசியாக வரும் மனோன்மணி என்னும் கற்பனைப் பாத்திரமும் அவள் வழியாகத் தோன்றும் மகவு மூலம்  திருஞானசம்பந்தரின் தமிழ்ச்சைவ மரபு, அவருக்குப் பிற்பட்ட தலைமுறைக்குக் கையளிக்கப்படும் குறிப்புத் தோன்ற செய்யப்பட்டு இருக்கும் குறியீடாகும். இஃது ஓர் இலக்கியவகையாகும்.
இசை மரபு -  மகளிர் ஆடும் கோயிலின் சூழல்
திருஞானசம்பந்தருக்குப் பிறகு ஒன்றரை நூற்றாண்டு கடந்து தோன்றிய சுந்தரர், ருத்திரதாசியாகிய பரவை நாச்சியாரிடம் மையல் கொண்டு அவரை மணந்து கொள்ள விருப்பம் கொள்கிறார். அவர் விருப்பத்தை நிறைவேற்ற சிவன், திருவாரூர் வாழ் வேதியர்கள் கனவில் தோன்றி சுந்தரரது விருப்பத்திற்குத் துணை நிற்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் அதன் பின்பே பரவையாருடன் திருமணம் நிகழ்வதாகவும் புராணம் கூறுகிறது. மேலும் பரவையாருக்குச் சுந்தரரிடம் ஊடல் தோன்றிவிடவே பரவையாரை சமாதானப்படுத்தும் வேலையைச் சுந்தரர் சிவனிடம் ஒப்படைக்கிறார். சிவனும் சுந்தரத்தமிழ்ப் பண்ணுக்காக ஒப்புக் கொள்கிறார் என்றால் சுந்தரரும் சம்பந்தரைப் போலவே கடவுள் அருள் வாய்க்கப் பெற்றவர் என்று தானே பொருள்? அவ்வாறிருக்க சுந்தரர் பரவையாரை விரும்பியதோ திருமணம் செய்து கொண்டதோ தவறன்று எனின், ஞானசம்ந்தர் மனோன்மணி என்னும் ருத்ரதாசியை விரும்பியதோ உறவு கொண்டதோ எப்படி தவறாகும்? இது எப்படி இழிவாகும்? மேலும் ஞானசம்பந்தர் மேற்கொண்ட தமிழ்ச் சைவ வளர்ச்சிக்கு அவளைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடும் அவர் அதைச் செய்துள்ளதாக சோலை அவர்கள் தம் தாண்டவபுரம் புதினத்தில் குறிப்பிட்டுள்ளார். கூடவே புதினத்தில் மனோன்மணி, அருளாளர் மனோன்மணியாகிறார் என்பதை கவனம் கொள்ள வேண்டும்.
மனோன்மணி வெறும் ஆடல் மகளாகவோ பிறதேவதாசியரைப் போலவோ உருவாக்கப்படவில்லை. மேலும் திருஞானசம்பந்தர் தேவதாசியரை அருளாளராகப் பார்க்காதிருந்தால் `நக்கன் உடைய நாச்சியார் என்ற தேவதாசிக்கு `ஞானசம்பந்த தலைக்கோலி’ என்ற பட்டம் ஒலோக மாதேச்சுரம் என்றுழைக்கப்பட்ட ஐயாறப்பர் கோயிலில் வழங்கப்பட்டு இருக்குமா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்விடத்தில் மனோன்மணி படைப்பு கற்பனையானது எனினும் திருஞானசம்பந்தர் தேவாரப்பண்களை ஆடற்கலையோடும் தொடர்பு படுத்தியே பயிலவிட்டிருக்கக்கூடும் என்று தோன்றுவதால் புதினத்தின் தேவைக்கேற்பப் படைக்கப்பட்டது என்று உணரலாம். மனித முயற்சி இப்படித்தான் இருக்கும். இவ்விடத்தில் மாணிக்கவாசகர் எழுதிய திருக்கோவையார் இருபதாவது பாடல் கவனிக்கத்தக்கது.
"சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்து என் சிந்தையுள்ளும் / உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் / துறைவாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசைச் சூழல் புக்கோ / இறைவா! துடவரைத் தோட்கென்கொலாம் புகுந்தெய்தியதே’’ (திருக்கோவையார் (20) என்பதால் தில்லையுள் உறையும் நடராசர்க்கு தமிழ் என்று சொல்லப்பெறும் துறைகளையுடைய அகப்பொருள் அல்லது ஏழிசைச் சூழல் என்று சொல்லப்பெறும். தேவதாசியர், யாழ்ப்பாணர், மத்தளம் வாசிப்போர் முதலான இசை மரபினர் சூழ்ந்த கோவில் இரண்டில் எதுவோ  உவப்பானதாக இறைவனால் ஏற்கப்பட்டது என்று சொல்லப் பெற்றுள்ளதைப்  புரிந்து கொண்டால், சோலைசுந்தரபெருமாள் இதை மீறித் தமது புதினத்துள் எதையும் செய்திடவில்லை என்பது புரியும். "மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய / முல்லை முதலாச் சொல்லிய முறையாற் / பிழைத்தது பிழையாததாகல் வேண்டியும் / இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே” (தொல். பொருள். அகத் - 30) இந்நநூற்பாவுக்குத் தேவரது பூசை முதலாயினவும் மக்களும் முறைமை தப்பிய வழி தப்பாது அறம் நிறுத்துதல் காரணமாகவும் பொருளாக்குதல் காரணமாகவும் பிரிவு உளதாம் என்றவாறு,’’ என்று இளம்பூரணர் பொழிப்புரை கூறுகிறார். எனவே திணைச் சமூகத்திலேயே கோவில் வழிபாடு வந்து விட்டது என்பதும் அவ்வழிபாடு முறைமை தப்பாது நிகழ்வதற்கான ஏற்பாடு இருந்தது என்பதும் தெளிவாகும். ஆகவே, கோயில் என்றாலே ஏழிசை பயின்ற இசைமரபினரும் ஆடல் மகளிரும் கொண்ட சூழல் வாய்க்கப் பெற்றிருந்தது என்று தான் பொருள்.
சிவனும் திணைக்கோட்பாடும்
திருக்கோவையாரிலிருந்து காட்டப் பெற்றுள்ள செய்யுளில் அல்லது எனப்பொருள்படும் `அன்றி’ எனும் சொல் வந்துள்ளதாலும் துறைசார் ஒண்தீந்தமிழாகிய அகமும் ஏழிசைச் சூழலும் வேறுவேறானவை என்பது புலனாகும். யாழோர் மேனவான காமக்கூட்டம் அல்லாத ஏழிசைக் சூழல் புக்கோ என்பதால் அது காமக்கூட்டம் சார்ந்ததன்று கோவில் சார்ந்தது என்றாகும். ஆகவே, சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்பலத்து உறைவானாகிய நடராசர் விரும்பி ஏற்றது கோவில் சார்ந்த ஏழிசைச்சூழல் என்றும் மணிவாசகர் சிந்தையுள் உறைவானாகிய நடராசர் விரும்பி ஏற்றது உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைவாய் என்பதால் அது அகத்திணை என்பதாகும்.  ஆகவே, தமிழ் என்றாலே அகப்பொருள் என்று பொருள்படவருதை உணரலாம். இதனை மயிலை சீனிவேங்கடசாமி அவர்களது `தமிழ்அகம்’ `தமிழ்அகப்பொருள்’ என்னும் கட்டுரைகளால் அறியலாம்.
மேலும் திருத்தொண்டர் புராணம் குறிப்பிடும் காரிநாயனார் என்பவர் அகப்பொருள் இலக்கண அடிப்படையில் பாக்களை இயற்றி அதற்குக் `காரிக்கோவை’ என்று பெயர் சூட்டி அதைத் தமிழ் மன்னர்களிடம் படித்துக் காட்டி, பரிசு பெற்று அதைக் கொண்டு சிவத்தொண்டு புரிந்தார் என்று கூறுகிறது. எனவே களவும் கற்பும் தமிழ்ச்சைவமரபால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது உண்மை. சங்ககாலம் எனப்படுவதும் திணைச் சமூகக் காலகட்டமும் ஒன்றே. சங்ககாலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டோடு முடிவிற்கு வந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அதற்குப் பிறகு சற்றேறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் கழித்தாவது காரிநாயனார் காலம் என்று கூறலாம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரும் இறைவன் இறைவியின் அகவாழ்வு மற்றும் படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்கள் பற்றியே பாடுகிறார். எனவே சங்ககாலம் மறைந்தாலும் சங்ககால வாழ்க்கை சிவனடியார்கள் மனத்தில் ஆழப்பதிந்திருந்தது என்பது நன்கு புலனாகும். ஆகவே, சிவனுக்கும் சைவக்கோட்பாட்டிற்கும் திணைச்சமூகத்துக்கும் நேரடித் தொடர்பு உண்டு என நன்கு புலனாகிறது. நிலவுடைமைச் சமூகத்துக்குரிய பெருந்தெய்வத்தின் மீது திணைச்சமூக வாழ்க்கையைப் பொருத்துவது ஏன்?
நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்கக் காலப் பகுதியில் திணைச்சமூகத்தின் பரப்பும் வலிமையும் இதைச் சாதித்திருக்க வேண்டும். மேலும் திணைச்சமூகத்தின் தொடர்ச்சியாகவே சாதிச் சமூகம் உருவாவதால் சாதிச் சமூகத்தின் கற்பு, கைக்கிளை (காதலற்ற களவின் வாராக் கற்பு) சார்ந்து வருவதால் பண்பாட்டுத் தளத்தில் திணைச்சமூகத்துக்கு உரிய களவின் வழிப்பட்ட கற்போடு இணைப்பை உண்டு செய்து கணவன் மனைவி உறவை வலுப்படுத்தும் முயற்சியாகவும் அமைந்தள்ளது.
சங்ககாலமாகிய திணைச்சமூகக் காலக்கட்டத்திற்குரிய தெய்வங்கள் மாயோன், சேயோன், வேந்தன் வருணன், கொற்றவை என்பது முன்பே எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. தொல்காப்பியம் தரும் செய்தி இது தான். ஆனால், திருமாலைப்பற்றிப் பரிபாடலில் செய்தி வருகிறது. சிவனைப்பற்றி ஒரு பரிபாடலும் இல்லை.  இதனால் சிவனைப் பற்றிய பரிபாடல்கள் மறைந்தொழிந்தன என்று கருதலாம். ஏனெனில் கடல் கொண்ட பூம்புகாரில் ஊர்க்கோட்டம் என்ற பெயரில் சிவபெருமான் கோயில் ஒன்று இருந்ததாக தி.வே. கோபாலைய்யர் அவர்களது கட்டுரைத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலவுடைமை தோன்றியதன் பின்னணி
கயிலைமலையில் சிவனிருக்கும் காட்சியை அவ்வூர்க்கோட்டத்துள் செயற்கையாக உருவாக்கி வைத்து இருந்ததாக உள்ள செய்தியையும் அவர் குறிப்பிடுகிறார். பூம்புகார் சங்ககாலம் நிலவியபோதே கடலால் கொள்ளப் பட்டு விட்டது. எனவே சங்ககாலத்தில் சிவன் கோவிலும் இருந்த செய்தி உறுதியாகிறது. என்றாலும் சிவனைப் பற்றியோ திருமாலைப்பற்றியோ தொல்காப்பியம் ஏன் எதுவும் தெரிவிக்கவில்லை? அதற்கு ஏதாவது முதன்மைக் காரணம் இருந்திருக்க வேண்டும். அது தான் என்ன?
திணைச்சமூகம் சாதியின் மூலக்கூறாக இருந்துள்ளது. இதனை, எனது `சாதி உருவாக்கத்தில் உடன்போக்கின் பங்கு’ என்னும் கட்டுரையில் பரக்கக் காணலாம். ஒரு திணை மக்கள் இன்னொரு திணைமக்களோடு மணவுறவு கொள்வதில்லை. அவ்வாறே நானிலமும் ஐந்திணையும் பெரிய அளவிலான தொழிற்பாகுபாடாகும். குறிஞ்சி உழாது வித்தும் உழவோர் வாழ்ந்த மலையும் மலைசார்ந்த பகுதியுமாகும். வேட்டைச்சமூகம் இவர்களதாகும். முல்லை, மேய்ச்சல் சமூகம். காடும் காடு சார்ந்த இடமும் இவர்கள் பகுதியாகும். வரகு, சாமை முதலியவை இவர்களது பயிராகும். முதன்மைத் தொழில் ஆடுமாடு வளர்த்தல்.
மருதம் ஆற்று நீரும் குளத்து நீரும் கொண்டு நெல், கரும்பு வாழை முதலியவற்றைப் பயிர்செய்தல். முதன்மைத்தொழில் உழவு. நெய்தல் கடலோடும் வாழ்க்கை. முதன்மைத்தொழில் மீன்பிடி. பாலை ஆறலைத்தல். வழிப்பறி. வெப்பும் வெப்பு சார்ந்தபகுதியும் இவ்வாறு திணை என்பது இயற்கை சார்ந்த தொழில் பிரிவினையுமாகும். இதனால் ஒரு திணைமக்கள் இன்னொரு திணை மக்களோடு மணவுறவு கொள்வதில்லை. இவ்வாறு ஒரே திணைக்குட்பட்ட குலக்குழுக்களுக்கு இடையே நடைபெற்ற உடன்போக்கு எனும் நிகழ்வு தான் சாதி தோன்றுவதற்குக் காரணமாயிருந்தது.
இவ்வாறு  உருவான சாதிச்சமூகத்தின் திருமணத்தைத்தான் தொல்காப்பியத்தின் கற்பியல் முதல் நூற்பா நமக்கு உணர்த்துகிறது. இது நிலவுடைமை சமூகத்துக்கு உரியது. திணைச்சமூகம் வர்ணச் சமூகமாக மாறிய நிலையைக் குறிப்பதாகும். "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்பாலொருவன் கற்பின் மேற்பாலொருவனும் அவன் கட் படுமே’’ (பாண்டிய நெடுஞ்செழியன் - புறம்) என்றது நிலவுடைமை முழுவளர்ச்சி அடையாநிலையைக் குறிப்பதாகும். "மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க்காகிய காலமுமுண்டே” (தொல்காப்பியப் பொருள் கற்பு)  எனும் நூற்பாவுக்குப் பொருள் கூற வந்த இளம்பூரணர் முதலலூழிக்கண் கீழோர்க்கும் கரணம் பொருந்தவதாயிருந்தது என்று குறிப்பிடுகிறார். இதனால் மேல்கீழ் என்னும் பாகுபாடு உடைய வர்ணம் பின்னர் தோன்றியது என உணரலாம். 
நிலவுடைமைச் சமூகம் சாதியோடும் வர்ணத்தோடும் தோன்றுகிறது. "தொல்குடிச் சமூகத்தில் வேலைப்பிரிவினையாகத் தோன்றிய வர்ணம், உயர்வு தாழ்வு அற்றது. சமூகம் வளரும் போது அது மறைந்து விட்டது. இந்தியாவில் அது மறைய வில்லை.’’ (இந்திய வரலாறு பகுதி - 1 சோவியத் வெளியீடு) இதற்குக் காரணம் இங்கு திணைச்சமூகம் நீண்ட நெடுங்காலம் நிலவியது தான்.
வெளிப்பகையை எதிர்த்த மூவேந்தர் கூட்டணி
மருதம் தான் உபரி உற்பத்தியைத் தரக்கூடியதாகும். இந்த உபரி உற்பத்தி மூலமாகவே நிலவுடைமைச்சமூகம் வளரமுடியும். மருதத்திணையின் ஒரு பகுதி நிலவுடைமையும் சாதியும் வர்ணமும் கொண்ட சமூகமாக மாறியதைச் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர்கள் இருந்ததைத் தொல்காப்பியம் கூறுவதன் மூலம் உணரலாம்.  ஆனால் இவர்களது வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்று தோன்றுகிறது. மருதத்தின் புறத்திணையாக உழிஞைத்திணை வருகிறது. உழிஞை என்றால் மதில் சூழ்ந்த காவல் அரணை முற்றுகையிட்டு வெற்றிபெறுவது. நொச்சித்திணை முற்றுகையைத் தகர்த்து வெற்றிபெறுவது. வஞ்சித்திணையே எல்லை ஆக்கிரமிப்புப் போரைக் குறிப்பது தான். எனினும் உழிஞை அளவிற்குப் பேரளவானது அன்று. இந்த உழிஞைப்போரே ஓர் ஒப்பந்தத்தின் மூலம் கட்டுப்படுத்தப் பட்டிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
மகட்பாற்காஞ்சி என்னும் துறை தொல்குடி சமூகத்தலைவனிடம் முடிமன்னன் பெண்கேட்பதும் தொல்குடித்தலைவன் பெண்தர மறுப்பதும்  அதனால் போர் மூண்டு தொல்குடிச் சமூகம் அழியும் வரை அந்தப்போர் நிகழ்ந்துள்ளது.  இதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. `அணங்காயினாள் தான் பிறந்த ஊர்கே’ என்று நம் புறப்பாடலும் இந்நிகழ்வைக் குறிக்கிறது.  ஆனால் திணைச்சமூகம் அழியும் வரை அடுத்தடுத்து இந்தப் போர் நிகழ்ந்ததாக வரலாறு இல்லை. அப்படி நிகழ்ந்திருந்தால் சாதிச்சமூகம் திணைச்சமூகத்தை முற்றாக அழித்துத் தானும் பலவீனப்பட்டுப் போயிருந்து இருக்கும். வளர்ச்சியும் குன்றிப்போயிருக்கும்.
இவ்விடத்தில் தான் கலிங்கமன்னன் காரவேலனின் கல்வெட்டைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. "…ஆவ அரசன் நிறுவிய வணிக நகரமான பிதும்தாவைக் கழுதைப் பூட்டி உழுவித்த அவன் தனது நாட்டிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாயிருந்ததால் ஆயிரத்து முந்நுhறு ஆண்டுகளாய்த் `தமிர’ நாடுகளுக்கு இடையிலிருந்த கூட்டணியை முற்றாக உடைத்தெறிந்தான். தனக்கு முன் ஆயிரத்து முந்நுhறு ஆண்டுகளாக விளங்கி வந்த தமிழர் கூட்டணியை காரவேலன் தன்னுடைய பதினோராவது ஆட்சி யாண்டில் முறியடித்தான்’ என்று ஒரிசா அரசு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது’ என்பதை குணா அவர்கள் தமது தொல்காப்பியத்தின் காலம் என்னும் நூலுள் காட்டியுள்ளார். இவற்றைக் கந்தசாமி அவர்கள் எழுதிய `தமிழர் கூட்டணி - தமிழக மூவேந்தர் கோட்பாட்டின் தொன்மை துலக்கும் ஹத்திக்கும்பா கல்வெட்டு’ என்னும் நூலிலிருந்து எடுத்தாண்டுள்ளார்.
அந்நநூலினுள் தமிழகத்தின் மூவேந்தர்க்கும் பன்னிரண்டு வேளிர்க்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று உருவாகி இருந்தது என்றும் அதன்படி அவர்கள் கருத்துவேற்றுமையால் ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டாலும் வென்றவர் தோற்றவர் நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளக் கூடாது என்பதாகும் என்று கூறப்பட்டுள்ளது. "கண்ணுமிழ் கழுகின் கானம் நீந்திச் / சென்றார் என்பிலர் தோழி வென்றியொடு / வில்லலைத்து உண்ணும் வல்லான் வாழ்க்கைத் / தமிழ்கெழு மூவர் காக்கும் / மொழி பெயர் தேஎத்த பன்மலை யிறந்த”  (அகம் - 31) தமிழகத்துக்கு அப்பாலுள்ள வேற்றுமொழி பேசப்படும் தேசங்களைக் காக்கும் பொறுப்பு சேரசோழ பாண்டியர்க்கு இருந்ததாக மேற்கண்ட அகப்பாடல் குறிப்பிடுகிறது. தமிழகத்துக்கு வெளியே இருந்த அரசர்கள் இம்மூவர்க்கும் திரை செலுத்தி வந்திருக்க வேண்டும் என்பது இதனால் விளங்குகிறது. எனவே ஹத்திக்கும்பா கல்வெட்டு குறிப்பிடும் தமிழர் கூட்டணி என்பது உண்மை நிகழ்வு தான் என்பதை மேற்கண்ட அகப்பாடலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும்.
மேலும், தமிழ்ச்சங்கம் இருந்ததும் அது பாண்டி நாட்டில் இருந்ததும் அதில் சேர சோழ ஈழ நாடுகளைச் சேர்ந்த புலவர்களது பாடல்களும் நூல்களும் தொகுக்கப் பெற்றிருந்தன எனில் தமிழ் மொழிக்கென ஒரு பொதுவான அமைப்பும் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.  இவ்வமைப்பு முடிமன்னர் மூவர்க்கும் இசைவானதாகவே இருந்திருக்க வேண்டும் இல்லையேல் சேரன் சோழனை பாடிய பாடல்களைப் பாண்டியன் தொகுத்திருக்க வேண்டியதில்லை. எனவே மேற்சொல்லப்பட்ட கூட்டணி நிலவிய காலமும் தமிழ்ச்சங்கம் நிலவிய காலமும் ஒன்றாகவே உள்ளது.  ஆகவே மேற்சொல்லப்பட்ட கூட்டணி உருவாகக் காரணம் என்ன? தமிழகத்துக்கு வெளியே இருந்து வந்த புறப்பகை தான் காரணமா? புறப்பகைதான் காரணம் என்று சொல்லுவது சரியாக இருக்கும் என்று தோன்ற வில்லை.

மூவேந்தர் குறுநில மன்னர்கள் மோதல்
முடிமன்னர் மூவேந்தர், மருதத்தின் ஒரு பகுதி சாதியும் வர்ணமும் நிலவுடைமையும் கொண்ட சமூகமாக மாறியதால் தோன்றினர். இதரப்பகுதியினர் திணைச்சமூகமாகவே இருந்தனர். இந்த நிலையில் மூவேந்தர்க்கும் திணைச்சமூகத்தினர்க்கும் இடையிலான போர் என்பது முடிவில்லாதாக இருந்திருக்க வேண்டும். மேலும், திணைச்சமூகம் வலிமையுடையதாகவும் நிலவுடைமைச் சமூகம் வலிமை பெற வேண்டியதாகவும்  இருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் நிகழ்ந்திருக்க வேண்டும். வேளிர்கள், குறிஞ்சியும் முல்லையும் நிலவியப் பகுதிகளை ஆண்ட குறுநில மன்னர்கள் என்று தெரிகிறது.
திணைச்சமூகங்களுக்கிடையே ஓர் ஒருங்கிணைப்பு நிகழ்ந்திருக்கக் கூடும். அகவாழ்வின் தொன்னெறி மரபு தான் அந்த ஒருங்கிணைப்பைக் கொண்டு வந்திருக்க வேண்டும். சாதிச்சமூகம் உருவாகவும் அத்தொன்னெறி மரபுதான் காரணம் என்றாலும், தொன்னெறி மரபும் சாதியும் வேறுவேறானவையாகும்.  களவின் வழிப்பட்ட கற்பு என்பது தொன்னெறி மரபிற்குட்பட்டது. உறவு முறைவழிபட்ட கற்பு சாதிச்சமூகத்திற்கு உரியது.  எனவே சாதிச்சமூகங்களுக்கிடையே ஒருங்கிணைப்பைக் கொண்டு வர வர்ணம் தேவைப்பட்டது. அந்த வர்ணம், ஏற்றத்தாழ்வற்ற தொல்குடிச் சமூகத்துக்குரிய வர்ணமாக இல்லாமல் ஏற்றத்தாழ்வுடனும் இறுக்கமுடனும் கூடிய வர்ணமாகவும் இருக்க வேண்டியதாயிற்று. எனவே, இந்திய நிலவுடைமைச் சமூகம், வர்ணச்சமூகம் என்றே அழைக்கப்பட வேண்டும். அதனால், முதலாளித்துவச் சமூகத்தை வகுப்புச் சமூகம் என்று அழைக்க வேண்டும்.
இனி வர்ணச்சமூகத்துடன் மோதி அழிந்து விடாமல் இருக்கத் திணைச்சமூகங்களுக்கு கிடையே ஓர் ஒருங்கிணைப்பு உருவாகி இருந்திருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வர்ணச்சமூகம் திணைச்சமூகத்துடன் மோதி அழிந்து விடாமல் இருக்க மூவேந்தர்களுக்குள்ளும் மட்டுமின்றி பன்னிரண்டு வேளிர்களுடனும் உடன்பாடு செய்து கொள்ள வேண்டிய தேவை எழுந்திருக்க வேண்டும். இந்தக்கூட்டணி வடக்கே பனிமலை வரையிருந்த மொழிபெயர் தேயங்களைக் கப்பங்கட்டச் செய்திருக்கலாம். வடக்கே அஜாதசத்ரு அரசு தோன்றிய பின்னரும்  இது நீடித்திருக்க வாய்ப்புண்டு.  இந்தக்கூட்டணி முடிவுக்கு வந்த பிறகே பாரிவேள் போன்ற திணைச் சமூகத்தலைவர்கள் அல்லது குறுநில மன்னர்கள் முறியடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றனர். பாரி மகளிரைக் கபிலர் வேண்டியும் மணமுடிக்க மூவேந்தரும் முன்வராமை இதை நன்குணர்த்தும். தொல்காப்பியர் குறிப்பிடும் மகட்பாற் காஞ்சியில் கபிலர் பாரிமகளிரை மணமுடிக்க வேந்தர்களையும் வேளிரையும் வேண்டிக் கொண்டு போனதற்கான """"துறை"" இல்லை. எனவே தொல்காப்பியர் குறிப்பிடும் மகட்பாற்காஞ்சி கி.மு.1465 க்கு முற்பட்டதாதல் வேண்டும்.
இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்மை மொழியாகத் தமிழ்
கி.மு.165 இல் வெட்டப்பெற்ற அத்திக்கும்பா கல்வெட்டுக்கு 1300 ஆண்டுகள் முன்பு தமிழர் கூட்டணி உருவானது எனில் திணைச்சமூகம் அதற்கு முன்பே நிலைகொண்டு இருந்தது என்று பொருளாகும். எனவே தொல்காப்பியம் கி.மு.1465 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று பொருளாகும்.  இதை மகட்பாற் காஞ்சி தான் உறுதிப்படுத்தும். சிந்துவெளி நாகரிகம் கி,மு. 1500 ஆண்டளவில் வீழ்ந்து விட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஏறத்தாழ அதே காலகட்டத்தில் தான் ஆரியர் இந்தியாவிற்குள் வந்தனர் என்றும் கூறுகின்றனர். சிந்துவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ். சிந்துவெளிநாகரிகம் வீழ்ச்சியடைந்து விட்டாலும் அப்பகுதியில் நலிவடைந்த நிலையில் வாழ்ந்து வந்த மக்கள் தமிழ்மொழியோடு தான் வாழ்ந்திருக்க வேண்டும். எனவே தான் ஆரியவேதமான இருக்கு வேதத்தில் தமிழ்ச் சொற்கள் ஏராளமாக இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆரியர்கள் இந்தியாவின் தென்பகுதிக்கு வந்ததாக வரலாறு இல்லை.
எனவே, ஆரியர் பரவிய பகுதியில் தமிழரும் தமிழும் வாழ்ந்திருந்ததால் தான் இருக்கு வேதத்தில் தமிழ்ச்சொற்கள் இடபெறமுடிந்தது. சிந்துவெளி எழுத்துக்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் காணக்கிடைக்கின்றன. மேலும், அறிஞர் பூர்ணச்சந்திர ஜீவா அவர்களின் ‘சிந்து வெளியில் முந்து தமிழ்’ ஆய்வின் மூலம்  சிந்து மக்கள் பேசிய மொழி தமிழ் என எழுதியுள்ளதையும் காண்க. சிந்து எழுத்துக்கு முந்தையது என்றும் சிந்து எழுத்தோடு தொடர்புடையது என்றும் கருதப்பெறும் கோவை நொய்யலாற்றுப் பேரூர் சுடுமண் ஏட்டு எழுத்து சுமேரிய நாகரிகக் காலத்தோடு எண்ணிப் பார்க்கத் தக்கதாய் உள்ளது. தமிழி எழுத்துத் தமிழகத்தில் தோன்றி வடக்கே பரவுவதற்குள் சிந்து நாகரிகம் அழிந்து விட்டதால் சிந்துவில் தமிழி எழுத்துப் பரவஇயலாமல் போய்விட்டது.
இயற்கை மாற்றத்தால் நேர்ந்த திரிபின் காரணமாக வடநாட்டின் கொடுந்தமிழாக இருந்த பாகதம் மாகதம் அர்த்தமாகதி போன்ற மொழிகள் ஆரியமொழிக்கலப்பால் மேலும் திரிந்து தமிழினின்று வேறு மொழிகளாக உருமாறின. என்றாலும், அவை தமிழி எழுத்துகளின் அடிப்படையிலேயே தங்கள் எழுத்துக்களை அமைத்துக் கொண்டன. இவ்வாறு தமிழ் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்மை மொழியாகத் திகழ்ந்ததை உணரலாம். நாம் இந்தச் செய்தியை இவ்வாறு நோக்குவோமானால் அகநாநுhற்றின் 31 ஆம் பாடல் இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் நிலவிய கொடுந்தமிழோடு ஆரியம், கிரேக்கம் முதலான மொழிகள் கலந்து மொழிபெயர் தேயம் உருவான பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். கி.மு. 165க்கு முன்பும் அலெக்சாந்தர் படையெடுப்புக்குப் பின்பும் எழுதப்பட்ட பாடலாக இருந்திருக்க வேண்டும்.
உழிஞைத்திணை மருதத்துக்குப் புறத்திணையாகவும் நொச்சித்திணை உழைஞையின் புறத்ததாகவும் இருந்துள்ளதால் உழிஞை ஆக்கிரமிப்புப் போர் என்பதும் நொச்சி ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் என்பதும் தெளிவாகும். உழிஞை கோட்டைக் கொத்தளங்களுடன் உள்ள மதில்களை முற்றுகை இட்டுப் பொருதும் போர். நொச்சியானது முற்றுகையை முறியடிக்கும் போராகும். எனவே கோட்டைக் கொத்தளங்களுடன் கூடிய அரசுகள் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்துள்ளதை உணரமுடிகிறது. மேலும், ‘என்ப, என்மனார்புலவர்’ என்று தொல்காப்பியர் தமது நூற்பாக்களில் தெரிவிப்பதால் தொல்காப்பியத்துக்கு முற்பட்ட நூற்களுக்கான இலக்கணமாக அது திகழ்கிறது என்பது தெளிவாகும்.
எனவே, முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி இலக்கணமாக்கப்பட்டதால் உழிஞை, நொச்சி போன்ற புறத்திணைகள் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டவை என்பதாகும். கி.மு. 1500 இல் கண்ணனுடைய துவாரகையைக் கடல் கொண்டு விட்டது. தமிழ் உரையாசிரியர்கள் மூன்று கடற்கோள்களைக் குறிப்பிடுகின்றனர். முதல் கடல்கோளில் முதற்சங்கம் இருந்த தென்மதுரை அழிந்ததையும் இரண்டாவது கடற்கோளில் கபாடபுரம் அழிந்ததையும் மூன்றாவது கடற்கோளில் புகார் அழிந்ததையும் குறிப்பிடுகின்றனர்.
புகார்நகரின் கடலடிப்படத்தை ஆய்வு செய்த இங்கிலாந்து கடலடி ஆய்வாளர் புகார் நாகரிகம் 11000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கின்றனர். செயற்கைக்கோள் படம், புகாரின் பழைய கடற்கரை தற்போதைய கடற்கரையிலிருந்து ஏழரை கி.மீ கடலுக்குள் இருப்பதாகக் காட்டுகிறது என்றும் அங்கு 49 அடி ஆழம் நிலவுவதாகவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். எனவே புகார் நகரம் மூன்று முறை மூன்று கடற்கோளாலும் அழிந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. துவாரகையை ஆய்வு செய்ய நடுவண் அரசு முயற்சி மேற்கொண்டதைப் போல கடலடிப் புகாரையும் குமரிமுனைக்குத் தெற்கேயுள்ள கடலடிப் பரப்பையும் ஆய்வு செய்ய   நடுவணரசு முன்வரவேண்டும் அவ்வாறு முன்வந்தால் தான் சிந்துவெளிக்கு முன்பிருந்தே தமிழர்நாகரிகம் சிறந்து விளங்கியது என்பதும் இந்தியவரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதும் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
தொன்மை சமூகத்தைப் பாதுகாப்பதில் புத்த சமணமதங்கள்
மகத அரசை அஜாதசத்ரு தோற்றுவிக்கும் வரை மூவேந்தர்க்குக் கப்பம் கட்டிய சிற்றரசுகள் ஆங்காங்கே இருந்திருக்க வேண்டும். நூற்றுவக்கன்னருக்கும் பாண்டியருக்கும் இடையிலான போரே பாரதப்போர் எனப் புராணமாக்கப்பட்டு விட்டது என்று ஒரு கருத்து உள்ளது. ஏனவே, பண்டைய இந்திய வரலாறு இதுவரை பிராமணியத்துக்கு சார்பாகவே உள்ளது. அது மீளாய்வு செய்யப்படவேண்டும் எனும் செய்தி தொடர்ந்து வலியுறுத்தப் பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் அவர்களைத் தமிழ் வெறியர்கள் என்று பட்டங்கட்டி ஒதுக்கிவைத்தனர். 
வேதத்திலேயே மீமாம்சகம் என்று ஒரு பகுதி உண்டு. இது மீமாம்சகரால் இயற்றப்பட்டது. அப்பாடல்கள் மூலம் பெருந்தெய்வங்கள் தேவையில்லை சிறுதெய்வங்களே போதும் என்னும் போர்க்குரலை அவன் எழுப்புகிறான். சிறுதெய்வங்கள் தொல்குடிச் சமூகங்களையும் பெருந்தெய்வங்கள் நிலவுடைமைச் சமூகத்தையும் பகரம் செய்கின்றன. இதன் பொருள் என்ன? நிலவுடைமைச் சமூகம் வேண்டாம். தொல்குடிச் சமூகத்தை அழியாமல் பாதுகாக்கவேண்டும் என்பதேயாகும். இது உண்மையிலேயே சமூகவளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்கும் முயற்சியே ஆகும்.
சாதி, வர்ணம், பிராமணியப்புரோகிதம்  ஆகியவை தொல்குடிச் சமூகத்துக்கு அடுத்த நிலவுடைமைச் சமூகத்துக்கு உரியவை. பெருந்தெய்வம் வேண்டாம் என்பது நிலவுடைமை சாதி, வர்ணம் மூன்றும் வேண்டாம் என்பதே ஆகும். இதைத்தான் சமண, புத்தமதங்களும் செய்தன. சமண, புத்த மதங்களால் சிறுதெய்வங்களைக் கைவிட முடியாமைக்கு இதுவே முதன்மைக்காரணமாக இருந்திருக்க வேண்டும். தொல்குடி சமூகமாகிய திணைச்சமூக மாந்தரும் மீமாம்சகனும்  சமண, பௌத்தரும் விரும்பியதைப் போலவே தங்களது பழங்குடிச் சமூகம் அழியாது காக்கப்படுவதை விரும்பியிருப்பர். அதன் வெளிப்பாடாகவே மூவேந்தருடன் போரிடுவதற்கு மாறாக உடன்படிக்கை மூலம் மூவேந்தரின் நாடுபிடிக்கும் செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்திருக்க முடிந்துள்ளது. வேளிர்கள் இவர்களது பகரவர்களாக இருந்திருக்க வேண்டும் இதைத்தொடர்ந்து நிலவுடைமைப் பெருந்தெய்வமாக வளர்ந்த சிவன் பிராமணியத்தால் உள்வாங்கப்படுவதற்கு முன்பாகவே திணைச்சமூகக் கோட்பாடுகளுக்கு இணக்கமானவராக தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டிய சூழல் தோன்றி விட்டது. என்றாலும் பெருந்தெய்வம் திணைக்குரியது அன்று.
ஏனெனில், நிலவுடைமை வளர்ச்சி என்பது இந்தியாவில் திணைச்சமூக அழிவில் தான் உள்ளது. திணைச்சமூக அழிவு என்பது குலக்குழுக்கள் திருமண உறவின் காரணமாக உறவின்முறைச் சமூகமாக அல்லது சாதிச் சமூகமாக மாற்ற முறுவதன் மூலமாக நிகழ்கிறது. தொல்காப்பிய மகட்பாற்காஞ்சி திணைச்சமூகத்துக்கும் நிலவுடைமைச் சமூகத்துக்குமான உடன்பாட்டின் மூலம் நிகழாமல் நின்று விடுகிறது. பாரி,காரி, ஓரி,அதியமான் போன்றவர்கள் மீது மூவந்தர்கள் போர் தொடுப்பதற்கு முன்பு வரை காரவேலன் கல்வெட்டு மூலம் குறிப்பிட்டுள்ள ஒப்பந்தம் தொடர்ந்தது என்று பொருள். இதனால் நிலவுடைமைச் சமூகம் வல்லடியாக வளர்ச்சியடையாமல் திணைச்சமூகம் சாதிச் சமூகமாக வளர்ந்து மாறமாற நிலவுடைமைச் சமூகமும் வளர்ந்து கொண்டே வந்தது என்றும் பொருள். இதற்குத் தகுந்தாற்போலவே தத்துவக் கட்டுமானம் அரசியல் கட்டுமானம் ஆகியவை உருவாக முடியும்.
சிறுதெய்வங்களும் பெருந்தெய்வமும்
அதனால் தான் இந்தியாவில் அடிமைச்சமூகம் ரோமாபுரியில் உருவானதைப்போல உருவாகாமல் பண்ணையடிமைச் சமூகமாக உருவாகியது. சேயோன், வேந்தன், பழையோள் ஆகியோரின் இணைப்பாகச் சிவனும், மாயோன், வருணன் இவர்களின் இணைப்பாகத் திருமாலும் ஆகிய பெருந்தெய்வங்கள் தமிழ்ப்பார்ப்பனர்களால் வடிமைக்கப் பட்டிருக்க வேண்டும். கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்னும் கோட்பாடு திணைச் சமூகம் சாதிச்சமூகத்துக்குள் ஒன்றி விடுவதைப் போன்றதாகும். கூடு என்பது உடலைக் குறிக்கும். பாய்தல் ஆன்மாவின் செயலைக் குறிப்பதாகும். திணைச் சமுகமும் நிலவுடைமைச் சமூகமும் மோதிக்கொள்ளாது பார்த்துக் கொள்வது தமிழ்ச்சைவத்தின் அடித்தளமாயிருந்தது. வேதியச் சைவத்திற்கு நிலவுடைமையைத் தூக்கிப்பிடிப்பது மட்டும் நோக்கமாயிருந்தது. ஆதலின், வேதியச் சைவத்தால் பக்திஇயக்கத்தை நடத்த முடியவில்லை.  சமணமும், பௌத்தமும் வீத்தப்பட்டபின் வேதியச் சைவம் தமிழ்ச்சைவத்தை அடக்கி வைத்து விடுகிறது. நிலவுடைமைச் சமூகம் வளரவளர பிராமணியமும் உரம்பெறுவதை இதன் மூலம் உணரமுடியும்.








 அ. 1 . குலம்   2. குலக்குழு  3. சாதி  /  ஆ 1 பருவுடல் 2 நுண்ணுடல்  3. ஆன்மா 
இ. 1 அழித்தல் 2. படைத்தல் 3. காத்தல் / ஈ.  1.குலதெய்வம் 2. திணைதெய்வம் 3. பெருந்தெய்வம்
உ. 1. நிலவுடைமை  2. சாதி  3. வர்ணம் /  ஊ. 1. முதலாளியம்  2.  சாதி  3. வகுப்பு
இந்த முக்கோணங்கள் நம் சமூகத்துக்கும் தத்துவத்துக்கும் இடையேயான தொடர்பைப் புரிந்து கொள்ள உதவும்.  1. குலம் குலக்குழுக்குள்ளும் குலக்குழு சாதிக்குள்ளும் ஒன்றி ஒரே சமூகமாக உருவாகி இருக்கும் பழைய சமூக அமைப்புகளின் தொகுதியாக சாதி இருக்கிறது என்பதே முதல் முக்கோணமாகும். 2.ஆன்மா நுண்ணுடல் உள்ளும் நுண்ணுடல் பருஉடல் உள்ளும் இருந்து இயங்குவதைக் குறிக்கிறது. இது இரண்டாவது முக்கோணமாகும். இது ஒருவகையான தொகுதி. இந்தத்தொகுதி பண்பாட்டுத்தளத்தில் வேலைசெய்வதற்கு உரியது. 3. ஒரு குலம் இன்னொரு குலத்தை அழித்தல் மூலமாக தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கிறது. இது உணவு சேகரிப்புக் காலக்கட்டமாகும். ஒரு குலக்குழு உற்பத்தி செய்து கொள்வதன் மூலமாக தன் உணவுத்தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. காத்தல் நிலவுடைமை காலக்கட்டத்திற்குரிய தெய்வநிலையையும் குறிப்பதாகும். வேந்து நிலையையும் குறிக்கும்.
4. குலதெய்வம் குலத்துக்குரியது. இது சிறு தெய்வமாகும். திணை தெய்வம் குலக்குழுவிற்கு உரியது.  பெருந்தெய்வம் நிலவுடைமை காலக்கட்டத்திற்குரியது.  சாதியும், வர்ணமும் இந்தக் காலக்கட்டத்திற்கு உரியவை. பெருந்தெய்வம் கடவுள் என்றும் சொல்லப்படுகிறது. 5. நிலவுடைமை சாதியையும் வர்ணத்தையும் உள்ளடக்கியது ஆகவே, வர்ணச்சமூகம் என்று சொல்லலாம். 6 முதலாளித்துவ சமூகம் சாதியையும் வகுப்பையும் உள்ளடக்கியது ஆகவே இதை வகுப்பு சமூகம் என்று சொல்லலாம்.  வர்ணம் அழிந்து வகுப்பு உருவானாலும் நிலவுடமை சமூகத்திற்குரிய பெருந்தெய்வமே முதலாளித்துவச் சமூகத்திற்கு உரியதாகவும் இருக்கிறது. ஆகையால் சமூகத்தின் பண்பாட்டுத்தளம் வர்ணச் சமூகத்தில் இருந்ததை விட வகுப்பு சமூகத்தில் முன்னேற்றம் உடையதாக இருக்கிறது. இதனை சனநாயகக் காலக்கட்டம் என்கிறோம்.
இந்தக் காலக்கட்டங்களை தமிழ்ச் சைவம் கடந்து வந்துள்ளதனை இந்த முக்கோணங்கள் விளக்குகின்றன.  இவ்விடத்தில் டி.டி.கோசாம்பி அவர்கள் இந்திய வரலாற்றில் பழைய சமூகம் புதியசமூகத்துக்குள் புகுந்து கொள்ள முடிந்துள்ளதைக் காணமுடிகிறது எனக்குறித்துள்ளார். (பண்டைய இந்தியா - அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு)
பருஉடல் அழியக்கூடியது. நுண்ணுடல்  பிறவி தோறும் நீடிப்பது.  ஆன்மா நுண்ணுடல் இல்லாமல் பிறவி எடுக்க இயலாது. ஆன்மா அழியாதது அதை யாரும் உற்பத்தி செய்வதில்லை. கடவுளும் அப்படியே கடவுள் சிறுதெய்வம் அன்று. மேலும் பெருந்தெய்வம்  கடவுள் எனப்படுவது. அது சிவனே யாகும் என்பதே அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் கருத்தாகும். பிறவி என்பது ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை அழிப்பதற்காக எடுக்கப்படும் ஒரு சாதனம். கூடுவிட்டு கூடுபாயும் கோட்பாடு இப்படி உருவானது தான். இது தான் தமிழ்ச்சைவத்தின் தத்துவக் கட்டுமானம். இந்தத் தத்துவக்கட்டுமானமானது ஆக்கல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலாயிருந்து பின்னர் ஐந்தொழிலாய் விரிவடைந்திருக்க வேண்டும்.
குலச்சமூகம் நிலவியபோது சொத்து இல்லை. அன்றாட உணவுக்கான வேட்டையும் தேடுதலும் என்பது இல்லாமல் வாழமுடியாது. எனவே அழித்தல் மூலம் மட்டுமே படைத்தலும் காத்தலும் நிகழ்ந்தது.  ஆகவே பழையோள் என்கிற தாய்த்தெய்வம் கொடூரமானவளாகக் காணப்படுகிறாள். திணைச்சமூகம் ஓரளவு உணவு உற்பத்திச் சமூகம். பேரளவான உடைமைகள் சமூக உடைமையாக இருந்தன. அவை பொதுவடை என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இன்னும் ஊர்ப்புறங்களில் பொதுவடை என்ற பெயரில் ஊருக்குச் சொந்தமான பொதுச் சொத்து இருப்பதைக் காணலாம்.
தொல்காப்பியர் திணைச்சமூக ஆதரவாளர்
தனிச்சொத்து உருவாகத் தொடங்கியதை அடுத்துப் பொதுச்சொத்து பொதுவடை என்று அழைக்கப்பட்டிருத்தல் வேண்டும். கிழவன் என்னும் சொல் திணைச்சமூகத்துக்குரியது. சிறுவுடைமையைக் குறிப்பதாகலாம். எனவே ஆக்கல் வேண்டி அழித்தலும் ஆக்கலை உறுதிப்படுத்துதல் வேண்டிக் காத்தலும் நிகழ்ந்திருக்க வேண்டும். இது வெற்பன், குரிசில், ஊரன் போன்றோர் மூலம் நிகழ்ந்திருக்க வேண்டும் இதனால் தான் திணைத்தெய்வங்கள் சேயோன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை (பழையோள்) எனத் தோன்றின.
நிலவுடமைச் சமூகத்தில் உபரி உற்பத்திக்காகப் பயிர்த்தொழில் என்றாகி விட்டதால் பண்ணையடிமைகளை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. பண்ணையடிமைகளுக்கு ஆதரவானவற்றை அழிக்கவேண்டியுள்ளது. பண்ணை அடிமைகளுக்கு எதிரானவற்றைக் காக்கவேண்டியுள்ளது. இதைச் செய்யும் போது சாதி வர்ணம் இவற்றை ஏற்றுத்தான் ஆகவேண்டும். இவற்றை ஏற்க மறுப்பது திணைச்சமூகத்துக்குத் திரும்ப வேண்டும் என்பதாகும். நிலவுடைமைச்சமூகத்துக்கும் திணைச்சமூகத்திற்கும் இடைப்பட்டதாக ஒரு சமூகம் இருந்திருக்க வில்லை. ஆனால் ஒரு கணுநிலைக்கு உரிய கோட்பாடாகத் தொன்னெறி மரபு உருவாகி நிலைத்துச் சாதிச் சமூகத்துக்கு வித்திட்டது.
தொன்னெறி மரபு களவுவழிப்பட்ட கற்பைக் குறிப்பதாகும். கற்பியலின் முதல் நூற்பா களவின் வாராக் கற்பைக் குறிப்பிடும். ஆனால் திணைச்சமூகம் களவு வழிப்பட்ட கற்பைப் பண்பாட்டோடு இணைத்ததால் நிலவுடைமைச்சமூகமாக மாறுவரை ஆக்கிரமிப்புப் போர் நிகழ்த்த விடாமல் செய்து இருந்திருக்க முடியும். அப்படியான காலகட்டத்திலேயே தீண்டாமைக்கு எதிராகவும் வர்ண ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் தமிழ்ச்சைவம் கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்ள முடிந்ததோடு நிலவுடைமைக்கு ஆதரவாகவும் இருக்க முடிந்தது.
இவ்வாறு தமிழ்ச்சைவம் உருவானது, மாலியமும் உருவானது என்று சொல்லப்படுவது நிகழ்ந்திருக்குமானால் தொல்காப்பியத்தில் சிவனும், மாலும் ஏன் குறிப்பிடப்பட வில்லை என்னும் வினா எழும், அதற்கு ஒரே விடை தொல்காப்பியரே திணைச்சமூக ஆதரவாளராக இருந்தார் என்று நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. தொல்காப்பியரை மாறுபட்ட தமிழ் மீமாம்சகர் என்று கூறலாம் என்றே தோன்றுகிறது. என்றாலும் கடவுள் என்னும் சொல்லைப் பெருந்தெய்வம் என்னும் பொதுப்பெயராகவே ஆண்டுள்ளார். எனவே சங்ககாலம் அல்லது திணைச்சமூகம் நிலவிய காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு    முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுவரையான காலம் வரை என்று கூறுவதை ஏற்க இயலாது. அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பாகவும் நிலவியிருந்த உண்மையைக் காரவேலன் கல்வெட்டு கூறும் ஆண்டுக்கணக்காலும் தொல்காப்பியத்தின் மகட்பாற்காஞ்சி பாரிமகளிர்க்குப் பொருந்தி வராமையாலும் உணரலாம்.  மகட்பாற்காஞ்சிக் கான போர் கி.மு. 1465 அல்லது அதற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டது என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
சமற்கிருதத்திற்கு மூலமொழியாக தமிழ்
பொதுவுடைமைக் கோட்பாட்டையும் நடைமுறையையும் வடித்துக் கொடுத்த தோழர் மார்க்ஸ் அவர்கள், "இந்தியாவில் மிக நீண்ட நெடுங்காலம் தொல்குடிச் சமூகம் நிலைத்திருந்ததனாலேயே சாதி உருவாகியுள்ளது’’ என்று கூறியுள்ளதாகச் சோவியத் நாட்டின் முன்னேற்றப்பதிப்பகம் வெளியிட்டுள்ள `இந்திய வரலாறு’ என்னும்  நூலின் முதல் தொகுதியில் கூறப்பட்டுள்ளது. தோழர் மார்க்ஸ் குறிப்பிடும் தொல்குடிச் சமூகம், திணைச்சமூகமேயாகும். திணைச்சமூகம் நீண்டநெடுங்காலம் நீடித்திருக்கத் தமிழர் கூட்டணி தேவையாய் இருந்தது. இந்தத் திணைச்சமூகம் இந்தியா எங்கணும் நிலவியிருந்திருக்க வேண்டும். இல்லையேல் இந்தியா எங்கணும் சாதி இருந்திருக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கும். எனவே திணைச்சமூகம் நீடித்து நிலவிய பகுதிகளில் மட்டும் சாதி உருவானது என்று கொண்டால் அதன் மறுதலையாகச் சாதிச்சமூகம் உள்ள இடங்களில் எல்லாம் திணைச்சமூகம் நீண்டகாலம் நீடித்திருந்தது என்பதே உண்மை.  எனவே தொல்காப்பியர் காலம் கி.மு 1465 க்கு முற்பட்டது என்பதை ஏற்பதைத்தவிர வேறு வழியில்லை. ஏறத்தாழ ஆரியர் இந்தியப் பகுதிக்குள் நுழைந்த காலகட்டமும் அதுவும் ஒரே காலகட்டமாக இருந்திருக்கும்.
எனவே தான் நாநிலப் பாகுபாட்டையும் ஐந்திணைக் கோட்பாட்டையும் இந்தியா முழுமைக்குமான இலக்கணமாகத் தொல்காப்பியரும் முந்து நூலாரும் படைத்திருந்திருக்க வேண்டும். இந்தியத் துணைக்கண்டம் முழுமையிலும் வழங்கி வந்த தமிழ் வடபகுதியில் கொடுந்தமிழாக நிலவி வந்ததால் பழங்கன்னடம் பழம்மலையாளம் என்பது போல பாகதி (பிராகிரும்) மாகதி (பாலி), அர்த்தமாகதி போன்ற பெயரால் வழங்கப்பட்டன. பின்னர் ஆரியமொழிக் கலப்பாலும் கிரேக்க மொழிக் கலப்பாலும் வேறுவேறு மொழிகளாகத் திரிந்து போயின என்றாலும் தமிழி எழுத்தைப் பின்பற்றியே இந்தியத் துணைக்கண்டத்து மொழிகள் அனைத்தும் தங்கள் எழுத்தை அமைத்துக் கொண்டன. சமற்கிருதம் அறிஞர்களால் உருவாக்கப்ட்டு அரசினது தேவைக்காகவும் புரோகிதத்தின் தேவைக்காகவும் பேணிப்பாதுகாக்கப்பட்டது. இதனால் அது யாருக்கும் தாய்மொழியாக இருக்க முடியவில்லை.
பிராமணர்களுக்கெதிராக திருஞானசம்பந்தர்
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களது வடமொழி வரலாற்றில் சமற்கிருதத்திற்குத் தமிழ் மூலமொழியாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதை நடுநிலை ஆய்வு காண்ணோட்டம் உள்ளவர்களால் நன்கு உணரமுடியும். எனவே மகதத்தில் அஜாதசத்துருவின் அரசு அமைவதற்கு நீண்ட நெடுங்காலத்துக்கு  முன்பாகவே சேர சோழ பாண்டியர் அரசுகள் தோன்றியிருந்தன. இருந்தாலும்,  அவர்கள் திணைச்சமூகங்களை அழித்துத் தங்கள் அரசுகளைப் பேரரசுகளாக உருவாக்கிக் கொள்ளாமல் இருந்ததால் தான், அஜாதசத்துருவின் அரசு பேரரசாக முதன் முதலில் உருவெடுத்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் பார்க்கிறார்கள்.
 அவர்கள் தமிழர் கூட்டணியின் துணையோடு சேர, சோழ, பாண்டியர் மொழிபெயர் தேயத்து மன்னர்களுக்குக் காப்பு வழங்கியதாக அகநாற்றுப் பாடல் கூறியுள்ளதைக் (முன்பே காட்டியுள்ளோம்) காணத் தவறுகிறார்கள். என்னதான் மூவேந்தரும் பன்னிரண்டு வேளிர்களின் துணையோடு இமயம் வரை இருந்த மன்னர்களுக்குக் காப்பு வழங்கியிருந்தாலும் அஜாதசத்துருவின் அரசைப்போன்று அதிகாரமிக்க அரசாக அவை இல்லாமற்போனதற்குக் காரணம் கூட்டணிக்கோட்பாடுதான். கி,மு 4 ஆம் நுhற்றாண்டு முதல் அஜாதசத்துருவின் மகதப்பேரரசு உருவாகித் தொடர்ந்ததை முன்னிட்டு வர்ணபேதங்கள் வெடித்து மோதின. அடக்குமுறைகள் கண்டமேனிக்கு நடந்தேறின. கௌடில்யனும் மனுவும் அவற்றையே தங்கள் நூல்களில் முறைப்படுத்தினர். சமற்கிருதம் வடபகுதி அறிஞர்களால் உருவாக்கப்பட்ட மொழியாக இருந்தது.
 அது பின்னர் தமிழகத்துள் பரவத்தொடங்கியது ஆகவே, "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ / எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” எனும் தொல்காப்பிய நூற்பா ஓர் இடைச்செருகல் என்றாலும் கூடப் பிராமணிய எதிர்ப்பாளரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். வடமொழி என்று அழைக்கப்பெறும் சமற்கிருதம், உபநிடதங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும் உபநிடதம் என்பது சத்திரியர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சியியலும் அதற்குத் துணையான தத்துவஇயலுமாகும்.
களப்பிரர்களும் பல்லவர்களும் வடமொழியை உயர்த்திப் பிடித்தனர். பிராமணர்களைப் பல்லவர்கள் தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.  அதன் பின்பே தமிழகத்துப் பார்ப்பனரும் தங்களைப் பிராமணர்கள் என்றும் தங்களை ஆரிய வழிவந்தவர் என்றும் கூறிக் கொள்வாராயினர். இந்தக்கட்டத்தில் தான் தமிழ்ச்சைவம் மங்கியது. மகேந்திர பல்லவனின் பிந்திய ஆட்சிப்பகுதி முதற்கொண்டே தமிழ்ச்சைவம் மீண்டும் தழைக்கத் தொடங்கியது. அதற்கு நாவுக்கரசர் காரணமாக இருந்தார். அடுத்து வந்த திருஞானசம்பந்தர் பக்திஇயக்கத்தின் தலைமகனாகத் திகழ்ந்தார். சாதிக்கெதிராக, வர்ணத்துக்கெதிராக மூடத்தனத்துக் கெதிராக பிராமணியத்திற்கு எதிராக சமற்கிருதத்துக்கு எதிராக தமிழை முன்னிறுத்தினார். அகவாழ்க்கையோடு தொடர்புடைய தமிழை முன்னிறுத்தாமல் சிவப்பற்றை வளர்க்க முடியாது. என்றுணர்ந்ததால் தன்னையே தமிழ்ஞானசம்பந்தன் என்றும் கலைஞானசம்பந்தன் என்றும் மீண்டும் மீண்டும் கூறிக்கொள்கிறார்.
தமிழ்ச் சைவத்திற்கெதிராக பிராமணியத்தின் வன்முறை கருத்து
தமிழ் என்றால் அகம் அல்லது அகப்பொருள் எனப் பொருள் சங்ககாலத்துக்குப் பிறகே தோன்றியது என்று மயிலை சீனி.வேங்கடசாமி எழுதுகிறார் என்றாலும் யாழ்பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற் பொருட்டுக் கபிலர் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார் என்று கூறப்படுதலால் தமிழ் என்றால் அகப்பொருள் என்னும் பொருள் தோன்றியது கடைச்சங்கக்காலத்தின் இடைக்காலத்தில் என்று கொள்ளலாம். தேவாரப்பாடல்கள் அகத்துறை சார்ந்து வருவதாலும் ஞானசம்பந்தர் தன்னைத் தமிழ்ஞானசம்பந்தன் என்று கூறிக்கொள்வதாலும் ஞானசம்பந்தர் தன்னை அகவாழ்க்கையோடு இணைத்துக் கொண்டவர் என்பது தெளிவாகும்.
களவின் வாராக் கற்பு அவருக்கு உடன்பாடானது அன்று என்பதால் அவர் சாதி மறுப்பாளராக உள்ளார். பின் சொக்கியை மணக்க இருந்தது களவின் வாராக் கற்பு தானே எனலாம். ஆம் பெற்றோர் விருப்பத்தை நிறைவேற்றுவது என்று வரும்போது அது நிகழ இருந்தது. எனவே களவின் வழிப்பட்ட கற்பாக மனோன்மணி பாத்திரம் வருகிறது.  மேலும்,  ஞானசம்பந்தரின் பெரியப்பாவாக வரும் சிவநாதவைபாடியார் தன்னால் ஞானவானாக ஆளாக்கப்பட்ட  ஆளுடையப்பிள்ளைக்கு மனோன்மணியே ஏற்றவள் என்று கருதினாலும் ஞானசம்பந்தரின் பெற்றோர் விருப்பத்திற்கு மாறாகத் தன்னால் எதும் சொல்ல முடியவில்லை என்பதை தெரிவித்து விடுகிறார்.
மனோன்மணி பாத்திரம் முழுக்க முழுக்கக் கற்பனை என்று முன்பே கூறியுள்ளோம். திருஞானசம்பந்தர், தனது அகவாழ்வு ஈடுபாட்டைச் சிவன் பார்வதி மீது ஏற்றிப்பாடினார். அந்த ஈடுபாட்டைப் புதினமாக்கும் போது ஞானசம்பந்தரின் பாடல்களை அப்படியே பயன்படுத்த முடியாது.  ஆகவே புதினத்துக்கு ஏற்றவாறு ஆளுடையப்பிள்ளைக்கு ஓர் இணையாக மனோன்மணி படைக்கப்பட்டுள்ளாள். இவள் ருத்திரதாசியாகக் காட்டப்பட்டுள்ளதால் தேவதாசி முறையின் மறுபக்கம் ஏற்கப்படவில்லை. அந்த மறுபக்கத்தைத்தான் மூவலுhர் இராமாமிர்தத்தம்மாள் அவர்களும் `தாசிகளின் மோசலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்னும் தமது புதினத்துக்கான முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும்,  மனோன்மணி சிவஅருளாளராகப் படைக்கப்பட்டுள்ளார். எனவே மனோன்மணிப் பாத்திரம், திருஞானசம்பந்தரை இழிவுப்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தமிழ்ச் சைவத்துக்கும், வரலாற்றுக்கும் எதிரானதாகும். இந்தக்குற்றச்சாட்டு மதவாதிகளால், படைப்பாளியின் மீது திட்டமிட்டு திரிக்கப்பட்ட சதியே.
அதேவேளையில் மடாதிபதிகள் பெரும்பாலும் பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுபவர்களாகவும் ஞாயப்படுத்துபவர்களாகவும் உள்ளதைச் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாகவும் அறியும் போது `காமப்பகுதி கடவுளும் வரையார்’ என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்கு அவர்கள் எடுத்துக் காட்டாகத் திகழ்வதைக் காண முடிகிறது. என்றாலும், அவர்கள் தங்களைத் துறவிகளாகப் பறைசாற்றிக் கொண்டு இவ்வாறு நடந்து கொள்வது ஏற்க முடியாததாகவுள்ளது. மேலும், தொல்காப்பியத்துக்கு பிந்திய நூலான திருக்குறள் சங்ககாலத்து நூலேயானாலும் `வரைவின் மகளிர்’ என்னும் அதிகாரத்தின் மூலம் பரத்தைமையை அகவாழ்வின் பகுதியாகக் கருதுவதை ஒதுக்க வேண்டும் என்ற கருத்தை விதைத்துள்ளது.
இது சங்க காலத்தின் கடைப்பகுதியில் நிகழ்ந்துள்ள மாற்றமாகும். எனவே மாதவிக்குப் பிறகும் தேவதாசி முறை சட்ட விரோதமாக்கப்பட்டதற்கு முன்பு     வரையிலும் ருத்திரதேவதாசி முறை ஏற்புடையதாகவே இருந்துள்ளது என்பதை உணரலாம். ஆகவே, ஞானசம்சந்தரைத் துறவியாகப் பார்ப்பதோ முருகனின் அவதாரமாகப் பார்ப்பதோ மனோன்மணி என்னும் கற்பனைப் பாத்திரம் ஞானசம்பந்தரை இழிவுபடுத்துவதாகப் பார்ப்பதோ  அவ்வாறே மனோன்மணி பெற்றெடுக்கும் குழந்தையை ஞானசம்பந்தரின் கோட்பாடு மற்றும் நடைமுறையின் உருவகமாக எடுத்துக் கொள்ளாமல் ஞானசம்பந்தரை இழிவுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட குழந்தையாகப் பார்ப்பதோ வரலாற்றின் வளர்ச்சியையும் தமிழ்ச்சைவத்தையும் சிதைக்கும் பிராமணியத்தின் வன்முறைக் கருத்தாகும்.
தமிழ் பார்ப்பனரும் வேதப் பிராமணரும்
ஆக, தமிழ்ச்சைவம் திணைச்சமூகக் காலகட்டத்தில் உருவாகித் திணைச்சமூகத்துக்கும் நிலைவுடைமைச்சமூகத்துக்கும் இடையிலான உடன்பாட்டின் காரணமாக வேதியச் சைவம் போல் வளராமல் சாதிக்கும் வர்ணத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிரானதாக வளரவேண்டியிருந்தது. வடநாட்டில் வைதிக மதத்திற்கு எதிராகச் சமணமும் பௌத்தமும் செய்தவேலையை தமிழகத்தில் சைவமும் மேற்கொண்டது. அதனால் களப்பிரர் காலத்தில் அரச ஆதரவோடு சமணமும் சமற்கிருதமும் மேலோங்கிச் சைவத்தையும் தமிழ்ப்பார்ப்பனர்களையும் தலையெடுக்க விடாமல் செய்தன. பல்லவர் காலத்திலும் மகேந்திரவர்மன் ஆட்சியின் முற்பாதி வரையிலும் அது தொடர்ந்தது. அதன் பிறகு தமிழ்ச்சைவம் தலையெடுக்கத் தொடங்கியது அந்நிலையிலும் வேதியச் சைவத்தால் சாதி, வர்ணம், ஏற்றத்தாழ்வு அடிமைத்தனம் இவற்றிக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியவில்லை.
வேதியச் சைவத்தை முன்னெடுத்த பிராமணர்கள் தங்களது ஆதிக்க மனப்பான்மை மற்றும் உயர்வு மனப்பான்மையினின்று இறங்கி வரவில்லை இதனால் சமண, பௌத்தத்துக்கு எதிராகப் பக்தி இயக்கத்தை நடத்த வேண்டிய முழுப்பொறுப்பும் தமிழ்ச் சைவ சமயக் குரவர்களையே சார்ந்திருந்தது. இதே நிலை தான் பக்தியியக்கம் வடக்கே பரவியபோதும் நிகழ்ந்தது. வேளாளர் பிராமண முரண்பாடு மற்றும் வேளாளர் வணிகர் முரண்பாடு வேளாளர் சமணர் முரண்பாடு வேளாளர் சமற்கிருத முரண்பாடு ஆகியவற்றில் தமிழ்ச் சைவம், வேளாளர் பக்கம் நின்றது.
 பல்வேறு மொழி பேசிய மக்களும் தங்கள் தங்கள் தாய்மொழியில் நிகழ்ந்த பக்தி இயக்கத்தின் பின்னால் அணிதிரண்டனர். ஆனால்   அவ்வப்பகுதி வேதிய பிராமணர்கள் சமற்கிருதத்தின் துணை கொண்டு பிற்காலத்தில் மக்கள் எழுச்சியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டனர். அம்மக்களுக்குரிய மொழிகள் சமற்கிருதக் கலப்பால் தோன்றியவை என்பதால் இவ்வேலை எளிதானது. ஆனால், தமிழ்நாட்டில் இவ்வாறு செய்ய முடியவில்லை. அதற்குக் காரணம் தமிழ்ச்சைவம் தமிழையும் வடமொழி மற்றும் பிராமண எதிர்ப்பையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதபடி உயர்த்திப்பிடித்தது தான் ஆகும்.
இவ்விடத்தில் தமிழகத்துப் பார்ப்பனர், எவ்வாறு வேதிய பிரமணரிலிருந்து வேறுபடுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் தேவை.  பெரியபுராணம் குறிப்பிடும் கூற்றுவநாயனார் களப்பிரர். இவர் சோழதேசத்தில் முடிசூட்டிக் கொள்ள விரும்புகிறார். தில்லை வாழ் அந்தணர்கள் சோழ வம்சத்தவர்க்கு மட்டுமே முடிசூட்ட முடியும் என மறுத்து விடுகின்றனர். முடிசூட்டும் மரபுரிமை தில்லை வாழ் அந்தணரிடம் இருந்ததும் சேர,சோழ பாண்டியர் மட்டுமே முடிசூட்டிக் கொள்ள முடியும் என்பதும் இதன் மூலம் உணரப்படும். முன்பு கூறப்பட்ட 1300 ஆண்டகால ஒப்பந்தம் காரணமாக இம்மரபு உருவாகி இருந்திருக்க வேண்டும். ஆகவே, அந்தணர் என்போர் தொன்று தொட்டு இருந்து வந்த தமிழகத்து பார்ப்பனர்களே ஆவார் என்பது துலங்கும்.  வேதிய பிராமணர் தமிழகம் வந்தபின் தோன்றிய வேதிய  ஆதிக்கத்தையும் விஞ்சியதாகத் தில்லை வாழ் அந்தணர் தங்களைக் காட்டிக் கொள்ள வேதியத்தையே துணையாக்கிக் கொண்டு விட்டதாகத்தான் தோன்றுகிறது.
பெரியாருடன் களம் அமைத்த தமிழ்ச்சைவம்
சித்தர்களும், மாணிக்கவாசகருக்குப் பிறகு சிவப்பிரகாசர், பட்டினத்தாரும் தாயுமானவரும் அவர் வழியை ஒற்றிச் சென்றனர். அவர்களுக்குப் பின்னர் வள்ளலார், பாரதி, மறைமலைஅடிகள், தென்னிந்திய சைவசித்தாந்தக் கழகத்தாரும் இருந்துள்ளனர். இதே காலக்கட்டத்தில் மறைமலைஅடிகளார் பிராமணிய எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைத்துப் பெரியாருடன் தோள் கொடுத்துப் போராடினார் என்ற வரலாற்று உண்மையை விரும்பு வெறுப்பின்றி நோக்குவார்க்கு பன்மொழி மாநிலங்களமைந்த  ஒரு நாட்டில் மாநில உரிமையோடு மொழி உரிமையையும் பிராமண எதிர்ப்பு, சாதி, வர்ணம், தீண்டாமை ஆகிவற்றுக்கான எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு போன்றவற்றையும் முன்னெடுப்பதற்குத் தமிழ்ச் சைவம் இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி வைத்திருந்ததால் இன்றும் அது சாத்தியமாகிறது என்பது புரியும்.
தமிழ் நாட்டில் பெரியார் தலைமையில் தீண்டாமைக்கு எதிராகவும் வர்ணத்துக்கு எதிராகவும் பிராமணத்திற்கு எதிராகவும் களமைக்க முடிந்ததைத் தமிழ்ச்சைவத்தின் இருப்பைத் தொடர்ந்தே வலிமையாகச் செய்ய முடிந்தது. மறைமலையடிகளாரின் `சாதிவேற்றுமையும் போலி சைவரும்’ இன்றும் கூடப் பயன்படும் நூலாக இருந்து தமிழ்ச்சைவத்தைச் செத்து விடாமல் காப்பாற்றி வருகிறது என்று கூறலாம்.
இவ்விடத்தில் ஒரு செய்தியை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. திருநாளைப்போவார் என்று அழைக்கப்படும் நந்தன் தன் இழிவைப் போக்கிக் கொள்ள பருவுடல் அழிந்தபின் நுண்ணுடலோடு சிவனை காணும் பெரு விருப்போடு தீயில் இறங்கி மாண்டு போகிறான் என்பதே உண்மை. நுண்ணுடல் சிவத்தரிசனம் செய்வது உண்மை என்றால் கூட இழிவு நீங்கிவிட்டபின் தில்லை நடராசர் கோயிலில் நந்தன் போனபாதை என்று சுட்டப்பட்டு அடைக்கப்பட்டிருப்பதேன்? நந்தன் பருவுடலோடு தடைகளை மீறி தில்லை நடராசரைத் தரிசிக்கப் போயிருந்ததனால் தானே அப்பாதை அடைக்கப்பட்டுள்ளது! தமிழ் அந்தணர்கள் வேதியரான பின் நிகழ்ந்த கொடுமையன்றோ அது! இந்த நாவலாசிரியர் சோலையின் `மரக்கால்’ நாவலில் நந்தன் நுண்ணுடலோடும், பருவுடலோடும், தன் தோழனான நாகனோடு தில்லை நடராசரைத் தரிசிப்பதைக் காணலாம்.
ஆங்கிலத்தின் ஆதிக்கம்
இன்றையக் காலக்கட்டத்தில் ஆங்கில எதிர்ப்பு மிகவும் தேவைப்படுகிறது. இந்தியாவின் ஆட்சி மொழியாகிய இந்தி கூட கல்வி மொழியாக வளரமுடியாமல் உள்ளதற்கு காரணம் ஆங்கிலக்கல்வி மோகமே. இதனால் இந்தியாவே மற்றுமொரு இங்கிலாந்தாக மாறிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை மறுக்க முடியாது. இதனையும் பிராமணியம் கைத்தட்டி வரவேற்று கொண்டு தானே இருக்கிறது. மொழி வெறும் தொடர்பு சாதனம் மட்டுமே அதனால் மனிதனுக்குத் தேவைப்படும் போதெல்லாம் ஏதாவது ஒரு மொழி அவனுக்குக் கைகொடுத்து விடும். ஆகவே, மொழிப்பற்று என்பதெல்லாம் வேற்றுமையை விதைப்பவை தான் என்று உரைப்பவர்களும் உள்ளார்கள். இவர்களுக்குப் பின்னாலும், பிராமணியம் ஒளிந்து கொண்டுள்ளதைக் காணத்தவறக் கூடாது.
எனவே, தனித்தமிழ்க் கோரிக்கை என்பது கூட சைவத்தின் வழிகாட்டலாகவே பிராமணிய எதிர்ப்பாகவே மறைமலை அடிகளாரால் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. அன்று சமற்கிருதத்தை ஆதரித்தவர்கள் இன்று ஆங்கிலத்தையும் ஆதரிக்கிறார்கள். வேலையற்ற பட்டதாரிகளின் பிழைப்புச் சாதனமாக தொடங்கப்பட்டது ஆங்கிலப்பள்ளிகள். அப்பள்ளிகளில் இன்றைக்கு வேலைதேடி குவியும் அப்பட்டதாரிகள்  கொத்தடிமைகளைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். இருந்தாலும் அவர்களின் ஆதரவோடே ஆங்கிலப்பள்ளிகள் புற்றீசல் போல தோன்றிவளர்ந்து தமிழ் மொழியையே அழித்து விடும் நிலைக்கு வளர்ந்துள்ளன. வளர்கின்றன. மக்களும் தங்கள்  குழந்தைகளை ஆங்கிலப்பள்ளியில் சேர்த்தால் கௌரவம் என்று கருதும் அவலம் அளவுகடந்து பெருகியுள்ளது. திராவிட ஆட்சியாளர்களும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களும்  இதற்கு உரம்போட்டு வளர்த்து தானே வருகிறார்கள்? அதோடு தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டிப்போட்டு பங்காற்றிக் கொண்டு இருக்கின்றன.
தாண்டவபுரம் நாவல்
இதற்கெல்லாம் சரியான மாற்று தமிழையும் இதர இந்திய மொழிகளையும் கல்விமொழியாக அரசு அறிவித்து அவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு ஆங்கிலத்தை முற்றாக அகற்றவும் முன் வரவேண்டும். அதே நேரத்தில் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் ஆக்கம் தரவேண்டும். இனி இந்தியாவின் விடுதலையைப் பாதுகாக்க வேண்டுமானால் அயல்நாட்டு முதலீடுகளை விரட்டுவதோடு ஆங்கிலத்தையும் விரட்டியாக வேண்டும் என்னும் நிலை எடுத்தாக வேண்டும். இதற்கும் தமிழ்ச்சைவ இருப்பே முதல் வழிகாட்டியாகவுள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பிராமணியம் முதலாளியத்தத்துவக் கட்டமைப்பில் நிலை கொண்டு பன்னாட்டு மூலதனத்தை வரவேற்கிறது.    
முற்காலத் தமிழ்ச்சைவம் திணைச்சமூகம், நிலவுடைமைச் சமூகம் என்னும் இருமையங்களுக்கு இடையே இணக்கத்தைக் கொண்டுவர உழைத்தது. அதன் தத்துவம் மந்திரத்தானான நான்மறையுள்ளும் கோவில் நடைமுறை மற்றும் வழிபாட்டு நடைமுறை ஆகமத்துள்ளம் இருந்துள்ளதை அவை அழிந்த பின்பும் உணரும்படியான பதிவுகள் உள்ளன. பிராமணியம் நிலவுடைமை என்னும் ஒரு மையத்தை ஏற்றுக் கொண்டது. இதனால் முற்காலச் சைவம் சனநாயகக் காலகட்டத்துக்கு ஏற்புடையதாக அமையும்.
இந்தச் சூழலில் தான் `தாண்டவபுரம்’ நாவல் வெளிவந்துள்ளது. இது தமிழ்ச்சைவத்தை முன்னிறுத்துவதால் இந்தியாவின் எதிர்காலத்திற்கான சனநாயகத்தேவைகளை  உள்ளடக்கி உள்ளது என்பதை உணரமுடியும்.  பக்திஇயக்கம் தெற்கே இருந்து வடக்கே பரவியதைப்போல தாண்டவபுரமும் தெற்கிலிருந்து வடக்கே பரவும் வாய்ப்புள்ளது. அது சாத்தியமானால் மாநிலமொழிகள் அனைத்தும் ஆட்சிமொழிகளாகவும் கல்விமொழிகளாகவும் மாநிலங்கள் அனைத்தும் சமத்துவம் வாய்ந்த உறுப்பினர்களாகவும் உள்ள பலமையங்களைக் கொண்ட ஓர் இந்திய ஒன்றியம் உருவாகும் என்று நம்பலாம்.
திருஞானசம்பந்தர், திருநீலகண்டயாழ்ப்பாணரையும் அவர் துணைவியாரையும் தன்னுடைய குழுவில் இணைத்துக் கொண்டே பயணம் செய்கிறார். யாழ்மீட்டும் வல்லுநர், தாழ்த்தப்பட்டவர் என்று தெரிந்திருந்தும் வேற்றுமை பாராட்டாது தம் குழுவில் இணைத்துக் கொண்டிருந்தது தீண்டாமைக்கும் சாதிக்கும் எதிரான செயலாகும். அவ்வாறே, அவர் கோளறு பதிகம் பாடி கோள்கள் மனிதவாழ்வைத் தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாகக் கருதும் மூடக்கருத்தை எதிர்த்துள்ளது போன்ற மூடநம்பிக்கைக்கு எதிரான செய்திகள் நடுநடுவே கூறப்பட்டுள்ளன.
நல்லூர்பெருமணத்தில் சொக்கியை மணக்க இருக்கும் தறுவாயில் சொக்கியும் திருஞானசம்பந்தரும் மணக்கோலத்திலேயே எரியூட்டப்பட்டு விடுகின்றனர். அவர்களைச் சார்ந்தோரும் எரியூட்டப்பட்டனர் என்று தாண்டவபுரம் புதினம் கூறுகிறது. ஆனால், புராணம் திருஞானசம்பந்தர் ஜோதியில் கலந்து விட்டாதாகக் கூறுகிறது. நந்தனைத் தீயில் இறங்கச் செய்ததைத் தான் ஜோதியில் கலந்ததாகப் புராணமே கூறுகிறது. எனவே, ஜோதியில் கலத்தல் என்றால் எரியூட்டுதல் என்றே பொருளாகும். வள்ளலாரும் ஜோதியில் கலந்தார் என்கின்றனர். ஆனால், பிராமணியவாதிகள் தான் வள்ளலாரை எரித்துப் பிணத்தைக் கருக்கிய நிலையில் மலைச்சாரலில் போட்டு விட்டதாகவும் வெள்ளைக்காரனின் காவல்துறை கடலூர் காவல் நியைத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தது என்றும் கூறுகின்றனர். எனவே, ஜோதியில் கலத்தல் என்னும் புராண நிகழ்வை எரியூட்டுதல் என்னும் உண்மை நிகழ்வாகக் காட்டுவதே புதினத்துக்கு ஏற்புடையதாக இருக்கும். மேலும், நல்லலூர்பெருமணத்தில் சிவன் குடிகொண்டிருக்கும் கோயிலின் தலபுராணம் கூறும் செய்தி ஆராயத்தக்கதாக உள்ளது.
சொக்கியும் அவரைச் சார்ந்தோரும் ஜோதியில் கலந்தபோது அதிலிருந்து தப்பிச்செல்ல முனைந்தோரை, நந்திதேவர் தடுத்து விடுவதாக உள்ளது. சோதியில் கலத்தல் உண்மையாயின் தப்பிச் செல்ல முயலுவானேன்? நந்திதேவர் தடுக்கிறார் என்றால் அதன் பொருள் என்ன? எரியூட்டப்பட்டது என்பதே பொருளாகும். அப்படியானால் நந்திதேவர் யார்? திருநாளைப்போவார் புராணத்தில் நந்தன் திருப்புங்கூரைச் சென்றடைந்து சிவனைத் தரிசிக்கும் போது நந்தி மறைப்பதாகவும் நந்தனுக்கு உதவியாக சிவனே நந்திதேவரைத் தலையை ஒருக்கணித்து நந்தன் தரிசனத்துக்கு உதவுமாறு கோருவதால் நந்தி தலையை ஒருக்களித்துக் கொள்வதாகப் புராணம் கூறகிறது. நல்லூர் பெருமணநந்தியும் திருப்புன்கூர்  நந்தியும் ஒருவரே எனில் ஒருவர் உதவுவது ஏன்? இன்னொருவர் பகையாவது ஏன்?
நந்தனைத் தில்லையில் எரிப்பதற்காகத் திருப்புன்கூரில் உதவுவதும், எரியூட்டப்பட்ட தமிழ்ச்சைவர்கள் தப்பிவிடக்கூடாது என்னும் நோக்கம் நல்லலூர்ப்பெருமணத் தடுத்தலிலும் வெளிப்படுகிறது.  நந்தன் தமிழ்ச்சைவர். திருஞானசம்பந்தரும் தமிழ்ச்சைவர். இருவரும் தப்பிவிடக்கூடாதே என்பது நந்திதேவரின் நோக்கம். இந்த விருப்பம் தான் வேதியர்களின் விருப்பமும் ஆகும். எனவே, நந்தி வேதியர்களின் குறியீடாகவே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு தமிழ்ச்சைவருக்கும் வேதியருக்கும் உள்ள முரண்பாடு புராணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் பிராமணியமும் வேதியமும் சனநாயக முரணாகவும் பன்முகப் பண்பாட்டுக்கு முரணாகவும் விளங்குவதைப் புதினம் விளக்குகிறது.
இனியும் சமணர்கள் முற்போக்கானவர்கள் அவர்களைக் கழுவிலேற்றியது பிற்போக்கு பிராமணியத்துக்கு ஆதரவான நிகழ்வு என்பார் உளர்.  முற்போக்கான சமணர்கள் வீழ்ச்சியடையக் காரணம் என்ன? சமணப்பள்ளிகளே நிலவுடைமைகளாக மாறிவிட்டன. சந்திரகுப்தமௌரியரின் ஆசிரியர் பத்ரபாகு `இழிதொழில் செய்வோர்க்குச் சமணப்பள்ளியில் இடமில்லை என்கிறார். புத்தர் அடிமைகளைப் புத்தச்சங்கத்தில் சேர்ப்பதில்லை என்று அரசர்க்கு உறுதியளிக்கிறார்’ என்று ராகுல்ஜி எழுதுகிறார். எனவே சமணமும் பொளத்தமும் நிலவுடைமைக்குத் தலைவணங்கிப் போக வேண்டியதாகி விட்டதை உணரமுடிகிறது. அதே நேரத்தில் பிராமணியத்துக்கு ஆதரவாக் களமிறங்கவும் முடியாத நிலை. சமூகவளர்ச்சி என்பது நிலவுடைமையோடு தொடர்பு கொண்டிருந்ததால் சமண, பௌத்த எதிர்ப்புத்தான் முற்போக்கானதாகும். பிராமணியம், வர்ணம் இவற்றை சேர்த்து எதிர்ப்பது தான் மேலும் வலுவூட்டுவதாகும். இது தான் தமிழ்ச்சைவத்தின் மீட்சிக்கானதும் பக்தியியக்கம் வடக்கே பரவியதன் கமுக்கமும் ஆகும் என உணர்க.
சைவம் வென்றதன் ரகசியம்
சிவநாதவைபாடியாராகிய ஞானசம்பந்தரின் ஞானதந்தையைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். இவரும் புனைவுக்கு உள்ளான பாத்திரம் தான். இந்தப் பாத்திரம் யாரையும் கோபப்படுத்த வில்லை. ஆனால் இவர் கடவுளையே ஆட்டம் காணவைக்கும் காத்திரம் பெற்றவராவர். இவர் தான் திருஞானசம்பந்தருக்கு மூளையாக இருந்தவர். தமிழ்ச்சைவத்தின் கட்டமைக்கப்பட்ட தத்துவக்கோட்பாடுகளுக்கு விளக்கமளித்து பக்தி இயக்கத்தை வழிநடத்துபவர். சோழ சிற்றரசோடு நெருக்கமான உறவைப் பேணி வருபவர்.  மித்திரன் என்னும் ஒற்றனின் உறுதுணையோடும் தேவதானக்கட்டளையின் காரியக்கணக்கர் சொக்கலிங்கம்பிள்ளையின் துணையோடும் திட்டங்களை தீட்டுபவர். இவர் பிரம்மச்சாரி. ஆனால் தேர்ந்த சித்தமருத்துவச் சிகாமணி. ஒடுக்கப்பட்டு கிடந்த மக்களின் நோயை போக்கும் பணியை செய்து அவர்களின் உடலையும் மனதையும் வளப்படுத்திக் கொண்டு இருப்பவர். திருநீற்றில் மூலிகைப் பொடிகளைக் கலந்து நோய்தீர்க்கும் வல்லவர். இவர் கொடுத்த திருநீற்றைக் கொண்டு தான் திருஞானசம்பந்தர், மதுரை மன்னன் கூண்பாண்டியனின்  சூலை நோயைக் குணப்படுத்துகிறார்.  சைவம் வென்றதன் ரகசியம் இது தான். ஞானசம்பந்தர், `மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ என்று பாடிப்பாண்டியனுக்குத் திருநீறு அணிவித்ததனால் நோய் சரியாகி விட்டது என்னும் புராணச்செய்திக்கும் வைபாடியார் தயாரித்த திருநீறுதான் பாண்டியனைக் குணமாக்கியது என்னும் ‘‘தாண்டவபுரம்" புதினம் செய்திருக்கும் பங்களிப்புக்கும் இடையில் எத்துணை வேறுபாடு உள்ளது? புராணத்துக்கும் நாவலுக்கும் உள்ள வேறுபாடே இது தான்.
தாண்டவபுரம் நாவல் முன்னிறுத்தும் முரண்பாடுகள்
புராணம் மனிதனைக் கடவுளாக்குகிறது அல்லது கடவுள் அருள்பெற்றவராக்குகிறது. திருஞானசம்பந்தருக்கு பின்னால் ஒன்றரை நூற்றாண்டு கழித்து வந்த சுந்தரர் திருத்தொண்டர் தொகையில் ஞானசம்பந்தரைப் பற்றி இரண்டு வரிகள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால் சேக்கிழார் திருஞானசம்பந்தரை கடவுளாக காட்டுவதற்கு ஏகப்பட்ட பாடல்களைப் பெரியபுராணத்தில் எழுதி வைத்துள்ளார். சீர்காழி தோணியப்பர் கோயில் குளத்துக்கரையில் அழுதபடி இருந்த ஞானசம்பந்தருக்குப் பார்வதிதேவி தன் முலைப்பாலை அருந்தக் கொடுக்க ஞானம் பெற்றதால் மூன்றாம் அகவையிலேயே ‘தோடுடைய செவியன் விடையேறியோர்’ என்று  தொடங்கும் பாடலைப் பாடியதாகப் புராணம் படைக்கிறார்.
ஆனால் சோலை அவர்கள் தனது நாவலில் திருஞானசம்பந்தர் குருகுலப்பயிற்சியை முடித்துச் சிவநாதவைபாடியாரின் அருளுரைகளைக் கேட்டு அவர் ஆசியோடு பக்தியியக்கப் பயணத்தை மேற்கொள்ளும் போது அவருக்கு அகவை பதினாறுக்கு மேல் என்று குறிப்பிடுகிறார். சேக்கிழார் ஞானசம்பந்தரைக் கடவுளாக்குகிறார். சோலை மனிதனாக்குகிறார். ஆளுடையப்பிள்ளை, நனிப்பள்ளிக்குப் போன வேளையில் அவர் மாமன் மகள் உமாமகேஸ்வரியை சந்திக்க நேர்கிறது. தனக்கே உரிய முறைப்பெண்ணைச் சந்திக்கும் போது ஓர் இளைஞனுக்கு மனத்தில் எப்படிக் கிளுகிளுப்பும் ஆர்வமும்  எழுமோ அதை அப்படியே உருவாக்கி அவர் மனிதன் தான், கடவுளன்று என்று சாதித்துள்ளார்.
அடுத்து நனிப்பள்ளி கோயிலில் படுத்துறங்கும் வேளையில் காணும் அழகிய கனவினை அழகுபடச் சித்தரித்துள்ளார்.. இதன் மூலம் திருஞானனசம்பந்தர் மனிதனே என்பதை இலக்கிய்படுத்தியுள்ளார். சிலமுற்போக்காளர்களே கூட இதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் திருஞானசம்பந்தர் ஆரோக்கியமான கட்டுடலையும் கொண்டவர். மனமலர்ச்சியைப் பெற்றவர்.   தேர்ந்த இளைஞனாக காட்டுவதற்கு இதெல்லாம் நல்ல உத்தியாக வந்துள்ளன. ஆகவே, நாவல் இலக்கியம் நவீன த்தோடும் அறிவியலோடும் தொடர்புடைய படைப்பு என்பதற்கு ஏற்பவே சோலை, தன் `தாண்டவபுரம்’ நாவலைப் படைத்துள்ளார்.
இந்த நாவலின் அடித்தளத்தில் தேவதானக்கட்டளைக்கும் பிரம்மதேயத்துக்குமான இயல்பான முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ளன. கூடவே, வேளாளர்க்கும் பிராமணர்க்குமான முரண்பாடு, வேளாளர்க்கும் வணிகர்க்குமான முரண்பாட்டோடு,   வேளாளர்க்கும் சமற்கிருததுக்குமான முரண்பாடு, தமிழுக்கும் சமற்கிருத்துக்குமான முரண்பாடாகவும் வேளாளர்க்கும் சமணத்துக்குமான முரண்பாடு சைவத்துக்கும் சமணத்துக்குமான முரண்பாடாகவும் வந்துள்ளன. இந்த முரண்பாடுகளுக்கு இடையேயான நகர்வாகவே தான் தாண்டவபுரம் புதினமாக வந்துள்ளது. ஆக முரண்பாடில்லாமல் இயக்கமில்லை என்னும் அறிவியல், நாவல் முழுமையிலும் பளிச்சென்று தெரியும்படியான நிகழ்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நவீன காலத்திற்குரிய நாவல்
நிலவுடமையின் உச்சக்கட்டத்தில் பேரரசுக்குக் கடல் கடந்த நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு தமிழகவணிகர்கள் தங்கள் மரக்கலங்களையே தந்து உதவி இருக்கிறார்கள் எனில், அவர்களது வணிக நலன் அதில் அடங்கியுள்ளது. வணிகர்கள் அரசர்களுக்கு நிகரான செல்வம் படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரச ஆதவு இல்லாமல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்  வாணிகம் நடைபெற முடியாது. எனவே, வணிகசெல்வாக்கு என்பது அரசனுக்குச் சாதகமாக இருந்த அளவுக்கு நிலவுடைமையாளர்களாக இருந்த வேளாளர்களுக்குச் சாதகமாக இருந்திருக்க முடியாது. எனவே, வேளாளர்களும் தேவதானகட்டளைகளும் பக்தியியக்கத்தின் வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை செய்துள்ளார்கள்.
இதைத் தான் தாண்டவபுர நாவலில் வரும் அண்ணாமலைச்செட்டி சமணத்துக்கு ஆதரவாக இருந்தாலும் வேதியர்களை எதிர்த்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கும் வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொண்டு இருக்கிறார். அதே நேரம்  வேளாளர்களுக்கு எதிராகவே செயல்படுகிறார். அவருக்கு, சமணமதம் அரசமதமாகவுள்ளதால் வசதியாக உள்ளது. இந்த நிலையின் காரணமாகவே வேளாளர் வணிகர் முரண்பாடு, சைவ சமண முரண்பாடாகவும் வெளிப்பட்டுள்ளதை அழகாக நாவல் சித்தரித்துள்ளது.
இதுவரை கூறப்பட்டுள்ளதின் தொகுப்பாக பின்வருமாறு கூறலாம். தொடக்கக் காலத்தில் முற்போக்காகக் காணப்பட்ட சமண பௌத்தமதங்கள் காலப்போக்கில் நிலஉடமை பண்பாட்டுக்கு இசைவானதாக மாறிப்போயின.  அவை முற்போக்காக  இருந்ததாக நாம் கருதிய காலக்கட்டத்தில் சமூகஇயக்கத்தை பின்நோக்கி இழுத்தன. அவை நிலஉடமையோடு சமரசம் செய்து கொண்ட போது பிராமணியத்துக்கு வளைந்து கொடுத்தன.
அம்மதங்களின் தோல்விக்கு இது தான் முக்கிய காரணம். தமிழ்ச் சைவமோ நிலவுடைமை காலக்கட்டத்திலும் திணைச்சமூகக் காலக்கட்டத்திலும் நிலஉடமைக்கு ஆதரவாக இருக்கும்போது  வர்ணத்துக்கும் சாதிக்கும் எதிராக இருந்தது போலவே முதலாளித்துவ சமூகத்தின் வகுப்புக்கும் சாதிக்கும் எதிராக இருப்பதைக் காண முடியும்.  ஆனால் வேதிய சைவம் அது தோன்றிய காலமுதல் இன்றுவரையிலும் பிராமணியத்தை உறுதியாக உயர்த்திப் பிடித்து வருகிறது. 
நிலவுடைமைக் காலத்தில் சாதியையும் வர்ணத்தையும் உயர்த்திப்பிடித்தது. முதலாளித்துவ காலத்திலும் சாதியையும் வர்ணத்தையும் உயர்த்திப்பிடிக்கிறது. இது தான் வேதியச்சைவம். தன்னுடைய பிராமணிய கொடுநாக்குகளை முதலாளித்துவச் சமூகம் நீடிக்கும் வரை நீட்டிக் கொண்டே இருப்பதற்கு காரணமாகும். பிராமணிய எதிர்ப்பையும் தமிழை உயர்த்திப்பிடிப்பதையும் தன்னுடைய முழு இலக்காகக் கொண்டுள்ள தமிழ்ச்சைவம் முதலாளித்துவச் சமூகத்தின் பண்பாட்டுத் தளத்தில் பிராமணத்திற்கு எதிராகவும் பொதுமொழிக்கு எதிராகவும்  சனநாயக சக்தியாகவும் திகழ வாய்ப்பு உள்ளது.
எனவே, சர்வாதிகாரத்திற்கு  எதிராகவும் சனநாயகத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கக் கூடிய சனநாயக சக்திகள்  ஒன்று திரளும் போது தமிழ்ச்சைவம் புறக்கணிக்க முடியாத ஒன்றாகிவிடும்.  இதே காரணத்திற்காக தொழிலாளிவர்க்கம் தமிழ்ச்சைவத்தை அரவணைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படும். இந்தத் தேவையை `தாண்டவபுரம்’ நாவல் தன்னுடைய பரப்பினுள் காணும்படியாக வைத்துள்ளது. இதனால் இந்த நாவல் நவீன காலத்துக்கும் உரியதாகிறது.
இவ்வளவுச் சிறப்புடைய தமிழ்சைவம் ஏன் தொடர்ந்து வேதியச் சைவத்திடம் தோற்றுவருகிறது? என்று கேட்காமல் இருக்க முடியாது. தமிழ்ச்சைவம் திணைச்சமூகத்தையும் நிலவுடைமைச் சமூகத்தையும் இணக்கப்படுத்தும் நிலையில் தோன்றியது என்பதால் சாதியையும் வர்ணத்தையும் எதிர்த்ததைப் போல நிலவுடைமையை எதிர்க்க வில்லை. அப்படியே எதிர்த்திருந்தாலும் நிலவுடைமைச் சமூகம் வளர்ச்சி நிலையில் இருந்த போது தமிழ்ச்சைவம் தான் அழிக்கப்பட்டிருந்திருக்கும்.
ஆனால், இந்தச் சிக்கல் வேதியச் சைவத்துக்குக் கிடையாது. நிலவுடைமை என்கிற ஒரு மையம் தான் வேதியச் சைவத்தால் முன்னெடுக்கப்பட்டது. ஆகவே, நிலவுடைமை வளர்ச்சிக் காலத்தில் சாதியும் வர்ணமும் சமூகதளத்தில் வலிமையாகவே இருந்திருக்கும் என்பதால், வேதியச் சைவம் வெற்றியடைந்தது.  சொத்துடன் சேர்ந்தே சாதியும் வர்ணமும் தோன்றி வலிமையடைந்ததால் சொத்து இருக்கும் வரை சாதியும் வர்ணமுமோ சாதியும் வகுப்புமுமோ ஒழிக்க முடியாதிருக்கும்.
இது தான் வேதியச் சைவத்தின் வலிமை. நிலவுடைமையை ஆதரித்துக் கொண்டே சாதியையும் வர்ணத்தையும் எதிர்த்தாலோ, சாதியையும் வகுப்பையும் எதிர்த்தாலோ வேதியச்சைவத்திடம் தமிழ்ச்சைவம் தோற்றுத்தான் ஆகவேண்டும். இது  சொத்தை ஆதரித்துக் கொண்டே சாதியை எதிர்க்கும் திராவிட இயக்கம் கொள்கையளவில் தோற்றுக் கொண்டே  இருப்பது போன்றதாகும். (திராவிட இயக்கம் கடவுள் இல்லை என்றது. தமிழ்ச்சைவம் கடவுள் உண்டு என்று நம்பியது அவ்வளவே) இந்த  நாவல் நமக்குத் தரும் செய்தி இது தான். வர்க்கப்போராளிகளுக்கு இந்தப்புரிதல் அவசியத்தேவை என்பதால் `தாண்டவபுரம்’ ஒரு நல்லபடைப்பாக ஏற்கப்படும் என்பதில் ஐயமில்லை.

பிற்சேர்க்கை
1.      திணைச் சமூகத்தில் வரும் வருணன் கடல் தெய்வம்.  ஆரிய தெய்வமான வருணன் மழை தெய்வம். ஆகவே இரண்டும் வேறு வேறானவை.
2.      திணைச் சமூகத்தின் உடன் போக்கு, சாதி உருவாகக் காரணமாக இருந்தது. நெருக்கடிக்கு உள்ளான முதலாளித்துவ சமூகத்தில் சாதி மறுப்புத் திருமணம் சாதியை ஒழிக்கும் தன்மை வாய்ந்ததாய் உள்ளது. இது உடன்போக்கின் முன்னேறிய வடிவம்.
3.      புறப்பொருள் வெண்பாமாலைக்குள் வரும் மகற்பாற்காஞ்சி மூவேந்தர்கள், பெண் வேண்டியதும் தொல்குடித் தலைவன் தனது பெண்ணைக் கொடுத்து விடுவதாக வருகிறது. இது தொல்காப்பிய மகட்பாற்காஞ்சிக்கும் ‘புறப்பொருள்வெண்பாமாலை’ மகட்பாற் காஞ்சிக்கும் உள்ள கால வேறுபாட்டையும் சமூகவளர்ச்சியையும் குறிப்பதாக உள்ளது. இந்த சமூக வளர்ச்சி நிலவுடமையின் முழுவளர்ச்சியாகவும் பேரரசின் முழுவளர்ச்சியாகவும் பிராமணியத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியாகவும் விளங்கி தமிழ்ச்சைவத்தை வீழ்த்துகிறது. பிராமணியம் தமிழ்ச் சைவத்தை வீழ்த்தி விட்டாலும் தமிழ்ச் சைவமானது காலம் தோறும் பிராமணியத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறது மறைமலையடிகள் காலம் வரை...
4.      வேதிய சைவர்கள் பெரும்பாலும் அத்வைதம் பேசும் ஒருமைவாதிகளாகவே உள்ளனர். எனவே, பிராமணியச் செருக்கு பிரம்மம் அல்லது மையம் என்பதைத் தவிர மற்றவை எல்லாம் மாயை என்னும் சர்வாதிகார நோக்கும்  கொண்டவர்களாகிப் பன்னாட்டு மூலதனத்துக்கு ஆதரவானப் போக்கை மேற்கொண்டிருக்கின்றனர்.
       (இக்கட்டுரையின் முதற்பதிப்பு, ‘முற்காலத்து சைவமும் பிற்காலத்து தாண்டவபுரமும்’ என்னும் தலைப்பில் தனிசிறு நூலாக 2012 ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்தது.)



No comments:

Post a Comment