Saturday 17 May 2014

மதுரை ஆதீனம் `தாண்டவபுரம்’ நாவல் குறித்து வெளிப்படுத்திய நேர்காணலுக்கு எதிர்வினையாக, ‘வசந்த்’ தொலைகாட்சி நேர்காணலில் சோலைசுந்தரபெருமாள் வெளிப்படுத்திய செய்திகள். நாள் 2.3.12



மிழ் என்றால் துறை சார்ந்த அகப்பொருள் என்று சிறப்புப் பெயர் பெறும்.  இதனை மாணிக்கவாசகர் தன் திருக்கோவையார் என்னும் நூலில் இருபதாவது பாடலில் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
                சேக்கிழார், காரிநாயனார் புராணத்தில், காரிநாயனார், `காரிக் கோவைஎன்ற நூலை அகத்துறை விளக்கம் பெறுமாறு எழுதி மூவேந்தரிடமும் எடுத்துச் சென்று படித்துக் காட்டி பரிசு பெற்று அப்பொருள் கொண்டு சிவத்தொண்டு ஆற்றினார் என்று கூறுகிறார்.  இதனால் தமிழும், அகவாழ்வும் சிவனடியார்களோடு பின்னிப் பிணைந்துள்ளது.
                தமிழ்நெறி விளக்கம் என்னும் அகத்துறை இலக்கணம் ஒன்று உள்ளது. அது, `அன்பின் ஐந்திணை ஒழுக்கம்தமிழ்நெறி என்று வலியுறுத்துகிறது. இவ்வாறு தமிழ் என்றால் அகத்துறை என்ற சிறப்புப் பெயருக்கு உரிதாக அமைவதை உணரலாம். இதன் அடிப்படையிலேயே திருஞானசம்பந்தர் தமிழ்நெறியோடு தன்னை இணைத்துக் கொண்டதால் தன்னைத் தமிழாளர் என்றும் தமிழாகரர் என்றும் கலைஞானசம்பந்தர் என்றும் தன்னைக் கூறிக் கொள்ள முடிகிறது.
இவ்விடத்தில் ஐந்திணைக்கும் உரிய கடவுளரின் இணைப்பாகவே சிவபெருமான் வடிவம் பெற்றிருக்கிறார் என்ற செய்தியைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எனவே, சிவனும் தமிழோடு பொருந்திய கடவுள் ஆவார். பரத்தையர் பிரிவை அனுமதிக்கும் தொல்காப்பியம் `காமப்பகுதி கடவுளும் வரையார்என்று கூறுவதன் மூலம் தேவதாசியர் அப்போதே தமிழ்ச் சமூகத்தில் இடம் பெற்றுள்ளதையும் அவர்கள் கடவுளோடும் மனிதர்களோடும் உறவு கொண்டு இருந்தமையும் இலக்கணப்படுத்தி உள்ளது. ஆகையால் பரவையாரிடம் சுந்தரர் பொருட்டு சிவபெருமான் தூது போனது தமிழின் மீது கொண்ட காதலாலேயே எனலாம். இவ்விடம் பரவையார் தேவதாசி என்பதை மறந்து விடக்கூடாது. இது சிவபெருமானுக்குத்  தெரியாத செய்திகள் அல்ல.
சுந்தரர் தேவதாசியோடு உறவு வைத்துக் கொள்வதை சிவபெருமான் விரும்புவார் என்றால் அது தமிழ்நெறிக்கும் சிவநெறிக்கும் முரண்பட்டது அல்ல என்றால் என்னுடைய கற்பனைப் பாத்திரமான தேவதாசி -- ருத்திர தாசி மனோன்மணியோடு திருஞானசம்பந்தருக்குக் காட்டப்பட்டுள்ள உறவு எப்படி இழிவானதாகக் கருதமுடியும்?
நாவல் என்பது புராணத்திலிருந்து மாறுபட்டது.  இராமாயண சீதையை மலையாள காவியமாகிய `சிந்தா விஷ்டியாய சீதாஇல் இராமன் உத்தரவுக்கு இணங்கி தீயில் இறங்க மறுத்துள்ளதை முற்போக்கான செய்தியாக இன்றைய இலக்கிய உலகம் அங்கிகரித்துள்ளது.
இதை யாரும் மத விரோதமாகப் பார்க்க வில்லை. அது போலவே தேவதாசி மனோன்மணியை மாதவி நிலைக்கு மாண்புடையவளாக உயர்த்திக் காட்டியிருப்பது மகளிர் உரிமையை உயர்த்திப் பிடிக்கவே ஆகும். இறுதியாக ஜோதியில் கலத்தல் என்றால் தீயிலிட்டு எரித்துக் கொலை செய்தல் என்றே பொருள்படும். நந்தனார் விசயத்தில் நடந்தது இது தான் என்று பெரியபுராணமே கூறுகிறது. இது அப்பட்டமான வடமொழி பிராமணச்சதி என்றே கூறவேண்டும்.
நல்லூர்பெருமணத்தில் இன்று வாழும் மக்கள், திருஞானசம்பந்தர் எரிக்கப்பட்ட அன்று அவரோடு எரிந்து போனவர்களையும் ஒரே இடத்தில் புதைத்து விட்டதாகச் கூறுகிறார்கள். இது எங்கள் களஆய்வில் வெளிப்பட்டது. இதனை ஆய்வாளர்கள் பலரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கு மேல் கூறுவதற்கு எதுவுமில்லை. மற்றபடி தமிழ்ச்சைவம், சாதிக்கு எதிராகவும் வர்ணத்துக்கு எதிராகவும் போராடியது என்பதை என்னுடைய `தாண்டவபுரம்நாவலில் பாத்திரப்படைப்புகள் மூலம் வார்த்துள்ளேன்.

No comments:

Post a Comment