Saturday 17 May 2014

வரலாற்றுப் புனைவு ‘தாண்டவபுரம்’-சோலைசுந்தரபெருமாள் (சிவஒளி இதழ் வாசகர்களுக்கு எழுதப்பட்டக் கடிதம்)


தாண்டவபுரம் நாவல், வரலாறு கலந்த ஒரு புனைகதை. வரலாறு கலந்த புனைகதையைத்தான் வரலாற்று நாவல் என்று வழங்கி வருகின்றனர். வரலாற்றுச் செய்தியை புராணமாக மாற்றும் போது அதீதி கற்பனை கலந்திருக்கும்.  அதே போல  புராணத்தை வரலாறாக மாற்றும் போது அதீத கற்பனைகள் முற்றாகக் களையப்பட்டு விடும். இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் கையாளும் முறை இது. இந்த நடைமுறையைப் பயன்படுத்தியே பெரியபுராணம் ஞானக்குழந்தையாகவும் கடவுட்குழந்தையாகவும் சொல்லும் திருஞானசம்பந்தரை அதீத அறிவுவளர்ச்சிப் பெற்ற இளைஞராகப் படைத்துள்ளேன்.
           இது இயேசுவை கடவுள் குழந்தையாக அல்லாமல் மனிதப் பிறவியாகப் பார்க்கும் ஆய்வாளர்களது கடைப்பிடிக்கப்படும் போக்கில்  பொருந்துவதாகும். இந்நாவலில் திருஞானசம்பந்தரைக் காட்டப்பட்டு இருக்கும் முறை வரலாற்று மனிதராக உயர்த்தும் அறிவியல் சார்ந்த செயலேயாகும். இவ்வாறு அறிவியல் சார்ந்த செய்திகள் அனைத்தையுமே நீங்கள் வரலாற்றுக்கு எதிரானது என்றும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது என்றும் குற்றம் கற்பித்துள்ளீர்கள். இது ஏற்புடையதன்று.
                சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகை அடியார்களைப் பற்றிய சிறுகுறிப்பையே தருகிறது. பின்னர் அது தான் ஊதிஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளது. பெரியபுராணத்தில் வருவதெல்லாம் கற்பனை இல்லை என்றால் திருத்தொண்டர் தொகையில் சுந்தரர் சொல்லாததை எல்லாம் சொல்ல பெரும்பற்றப்புலியூர்நம்பி, பரஞ்சோதி, சேக்கிழார் ஆகியோருக்கு எப்படி உரிமை வந்தது? அந்த உரிமையை யார் வழங்கியது? அந்தக் கற்பனை செய்யும் உரிமை நவீன காலத்திலிருக்கும் எனக்கு மட்டும் எப்படி இல்லாமல் போகும்?
             மனிதனைக் கடவுளாக்கும் உரிமை சுந்தரர் முதல் சேக்கிழார் வரை உள்ளோருக்கு உண்டென்றால் கடவுளை மனிதனாக்கும் உரிமை எனக்கு உண்டு என்றே நான் கருதுகிறேன். இந்த உரிமையை நான் கையாளாமல் இருந்தால் புராணம் வரலாறாகாமலேயே போய்விடும். ஆகவே அதைச் செய்ய வேண்டிய வரலாற்றுத் தேவை எழுந்து விட்டது.
                இந்திய வரலாறு, குறிப்பாகத் தமிழகவரலாறு திணைச்சமூகத்திலிருந்து பளிச்சென்று தெரிய வருகிறது.   இந்தத் திணைச்சமூகங்களின் கடவுள்களாக மாயோன், சேயோன், வேந்தன், வருணன், கொற்றவை ஆகியோர் காணக்கிடக்கின்றனர். தொல்காப்பியத்தில் எந்த இடத்திலும் சிவனைப் பற்றியோ உமையைப் பற்றியோ உமையொரு பாகனைப் பற்றியோ பேசப்படவே இல்லை.
       எனவே, தொல்காப்பியர் காலத்தில் சிவனோ, உமையோ, உமையொருபாகனோ உருவாகவில்லை என்று தான் உணரமுடிகிறது. திணைச்சமூகத்திற்குப் பின்னர் வந்த சமூகத்தில் தான் சிவன் பெருந்தெய்வமாக உருவெடுத்திருக்க முடியும்.  அதுதான் நிலவுடைமைச் சமூகம்.
படைத்தல், காத்தல், அழித்தல் முத்தொழிலுக்கும் உரிய அரசன் இந்தச் சமூகத்துக்கு உரியவன். இவ்வாறே இச்சமூகத்துக்குரிய கடவுளும் பெருங்கடவுளாகவும் முத்தொழிலுக்கும் உரியவராகவும் படைக்கப்பட்டுள்ளார்.  இது தான் சமூக வரலாறு காட்டும் கடவுள் வரலாறு. இந்திய மக்களின் சொர்க்கம் குளிர்ச்சியயானதாகவும் எஸ்கிமோக்களின் சொர்க்கம் வெப்பமானதாகவும் ஏன் இருக்கிறது? இந்தியா வெப்பமண்டலத்தில் இருப்பதால் இந்தியச் சொர்க்கம் குளிர்ச்சியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். எஸ்கிமோக்கள் பனிக்கண்டமாகிய வடகோளார்த்தத்தில் இருப்பதால் அவர்களது சொர்க்கம் வெப்பமானதாக இருந்தால் தான் கதகதப்பளிக்கும். இதமாக இருக்கும். ஆக விண்ணுலகம் மண்ணுலகத்துக் கேற்றவாறு தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகும். இவ்வாறே சமூக வளர்ச்சிக்கு ஏற்றவாறு தான் கடவுள் வளர்ச்சியும் தத்துவவளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது என்பதை உணரலாம்.
இந்த வளர்ச்சிப் போக்கின் ஊடாகத்தான் தாந்திரிக வழிபாட்டிற்குரிய லிங்கவழிபாடு சிவலிங்கவழிபாடாகவும் திணைச் சமூகக் கடவுளர்களின் கூட்டுக் கலவையாகவே சிவ பார்வதி அல்லது உமையொருபாகம் உருவாக்கப்பட்டு இதன் குறியீடாகச் சிவலிங்கம் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.
இப்பின்னணியில் தான் சிவத்தத்துவஞானமும் ஆகமமும் உருவாக்கப்பட்டன.  இவை தமிழோடு பின்னிப் பிணைந்தவையாக இருப்பதன் காரணமே மேற்சொன்ன வரலாறு தான்.
இனி, தொல்காப்பியங்காட்டும் வாழ்வியல் நெறிகள் தேவாரப்பாடல்களில் களவு, கற்பு இவற்றிக்குரியவை விரவிக்கிடக்கின்றன. திருஞானசம்பந்தர் பாடல்களை உற்று நோக்கினால் மனிதர்களின் இகவாழ்க்கை இன்பங்களையே கடவுளரின் இகவாழ்க்கை இன்பங்களாக மாற்றிக் காட்டியுள்ளதை உணரமுடியும். எனவே, திருஞானசம்பந்தர் தொல்காப்பிய இலக்கணப் பயிற்சி கைவரப்பெற்றவர் என்பது நன்குணர முடியும்.
இப்பயிற்சியை அதிபுத்திசாலி இளைஞர் பதினாறு அகவைக்குள் பெறமுடியும்.  அதனால் தான் அவர் பதினாறாம் அகவையில் பாடத்தொடங்கினார் என்று காட்டி இருபதாவது அகவைக்கு மேல் கொல்லப்பட்டு விட்டதாக நாவலை முடித்துள்ளேன். இப்படியான ஆய்வுகள் முன்னமேயே வெளிப்பட்டுள்ளன என்பதை நீங்கள் கவனம் கொள்ள வேண்டும்.
நம்முடைய சமூகத்தில் கோவில் என்பது ஒரு பொருளாதார மையமாகத் திகழ்கிறது, எனவே, திணைச்சமூகக் காலகட்டத்திலிருந்து தொகுக்கப்பட்டக் கலைகள் நிகழ்த்தப்படும் இடமாகவும் இது விளங்கியது. மேலும் லிங்கவழிபாடு எங்கெல்லாம் இருந்ததோ அங்கங்கெலாம் தேவதாசிமுறை இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ( தொல்காப்பியத்தின் காலம் - குணா)
எனவே, இங்கும் தேவதாசிமுறை உருவானது. தேவதாசிகள் தான் பரதத்தை ஆடமுடியும் என்றும் விதி செய்தார்கள். ( தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், நுண்கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி) இதனால் தான் தலைக்கோலி பட்டம் வாங்கிய பெண் மணிகள் அனைவருமே தேவதாசிகளாக இருந்தனர்.( மேற்சொன்ன ஆய்வு நுhல்)
இந்தத் தேவதாசிகளைப் பற்றித் தொல்காப்பியத்தில் செய்தி வருகிறது. "காமப்பகுதி கடவுளும் வரையார் / ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்” (தொல். புறத் - 23) இதற்கு நச்சினார்கினியார் உரை பின்வருமாறு. `பகுதி ஆகுபெயர். அது கடவுள் மாட்டு கடவுள் பெண்டீர் நயப்பனவும் அவர் மாட்டு மானிடப்பெண்டிர் நயப்பனவும் கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும் பிறவும் ஆம்
காமம் என்பது களவு கற்பு வாழ்க்கைக்குரியது. காமப்பகுதி என்பது இல்லறத்துக்கு வெளியே அதாவது காமக்கிழத்தி, இற்பரத்தை, தேவதாசி இவர்கள் மூலம் கிடைப்தாகும்.  இங்கு கடவுளும் வரையார் என்றதனால் தேவதாசி மூலம் கிடைக்கும் பகுதி காமத்தையே குறித்துள்ளார்.  ஏனோர் பாங்கினும் என்றதனால் கடவுளல்லாத மானிடற்கும் பொருந்தும் என்று பொருள்.
இதனாலும், "பூப்பின் புறப்பாயிரறு நாளும் / நீத்தகன்றுறையார் என்மனார் புலவர்/ பரத்தையிற் பிரிந்த காலையான’’ (தொல் - கற்பு - 16) தலைமகளுக்கு மாதவிடாய் கழிந்தபின் வரும் 12 நாட்களும் தலைமகன் பரத்தையின் இல்லத்தில் தங்கக் கூடாது என்பதாலும் திணைச்சமூகத்தில் காமப்பகுதி அனுமதிக்கப்பட்டிருந்ததை அறியலாம்.
இதனால் தான் சுந்தரர் தேவதாசியாகிய பரவையாருடன் தொடர்பு வைத்திருந்ததை யாரும் இழிவாகவோ நம்முடைய மரபுக்கு எதிரானதாகவோ யாரும் கருதுவதில்லை. மேலும் திருஞானசம்பந்தர் பிரம்மச்சாரி  அல்லர். அவர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததாகக் கருதப்பெறுதால் அவர், தன்னை அவளுக்குத் தந்தையாகக் கருதிக் கொண்டு அவளை மணம் செய்து கொள்ள மறுத்து விடுவதாக உள்ளது. உண்மையிலேயே பிரமச்சாரியாக இருந்திருந்தால் நல்லலூர்பெருமணத்தில் நடக்க விருந்த திருமணத்துக்கு அவர் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்.  ஆகவே பிரமச்சாரி அல்லாத ஒருவர் இகவாழ்வில் நாட்டமுடையவராகவே இருத்தல் இயல்பே.
மேலும், சுந்தரருக்கு பொருந்திவரும் காமப்பகுதி திருஞானசம்பந்தருக்கு மட்டும் எப்படி இழிவூட்டுவதாக மாறிவிடும்? தமிழ் என்றாலே அகப்பொருள் என்பதாகவே சொல்லப்பட்டுள்ளது. கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டை, `ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்கக் கபிலர் பாடியதுஎன்று தான்  குறிஞ்சிப்பாட்டுக் கூறுகின்றன. எனவே களவு கற்பும் உடைய அகப்பொருளே தமிழ் என்பதாலும் தன்னையே `தமிழாகரன்என்று திருஞானசம்பந்தர் சொல்லிக் கொள்வதாலும் மனோன்மணியோடு திருஞானசம்பந்தருக்குள்ள உறவு அகப்பொருள் சார்ந்ததே. மேலும் மனோண்மணி இந்நாவலுள் மாதவி மணிமேகலை தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளாள் என்பதை மறந்து விடக்கூடாது.
தமிழக வரலாற்றில்ஜோதியில் கலத்தல்என்றாலே எரித்துக் கொல்லுதல் என்றே பொருள் கொள்ள வேண்டும். நந்தனாரை வேதியர் ஓமக்குண்டத்தில் இறக்குவது கடவுளின் பெயரால் நடத்தப்பட்ட கொலை தான். இதைப் பிராமணர்கள் தான் செய்தனர் இதனை பெரியபுராணத்தின் வழியாகவே இதைப் புரிந்து கொள்ள முடியும். வள்ளலார் எரிக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்று செவிவழிச் செய்தி உண்டு. எனவே திருஞானசம்பந்தர் ஜோதியில் கலந்ததும் அப்படித்தான்.
நல்லூர்பெருமணம் என்று சொல்லப் பெறும் ஆச்சாள்புரத்தில் இன்றும் மக்கள் இக்கருத்தை வெளியிடுகின்றனர். நான் எனது களஆய்வின் போது அவ்வூர் மக்கள் என்னிடம் கூறியது `எரித்துக் கொன்றார்கள்என்பதே. கூடவே `சிலம்புநா.செல்வராசு அவர்கள் இக்கருத்தை விரிவாக சான்றுகள் கொண்டு தன் நூலின் உள்ளே எழுதியிருக்கிறார்.( சிலம்பு - செல்வராசு - 2001 - பக்கம் 46, 47)
சமஸ்கிருதத்திற்கு எதிராகத் தமிழை உயர்த்திப்பிடித்து வர்ணத்துக்கு எதிராகத் தமிழ் வாழ்வியலை உயர்த்திப்பிடித்தது. இவ்வாறான காரணங்களால் பிராமணர்கள் தமிழ்ச் சைவத்தை அழிக்க திருஞானசம்பந்தரை அழித்தால் போதும் என்று நினைத்தார்கள். திருஞானசம்பந்தர் காலத்துக்கு முன் உள்ள இலக்கியங்களில் வரும் பாடல்களை விட இவர் படைத்தளித்துள்ள இலக்கிய  வடிவங்கள் அதன் நேர்த்தி, இசைத்தன்மை புதுமை வாய்ந்தாக அமைந்து பிற்காலத்தில் குறவஞ்சி. காவடிசிந்து, தூது போன்ற இலக்கிய வடிவங்களுக்கு வளமூட்டியதாக இருக்கிறது. இது திருஞானசம்பந்தர் தமிழுக்கு செய்த பணி அளப்பரியது. ( புதிய நோக்கில் தமிழ்யாப்பு - முனைவர் பொற்கோ ) தமிழை உயர்த்திப் பிடித்ததோடு இல்லாமல் வளமை சேர்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதன் விளைவாக உருவான பிராமணச் சதிச் செயலே திருஞானசம்பந்தரின் ஜோதியில் கலத்தலாகும்.
மனோன்மணியின் குழந்தை என்பது குறியீடு. தமிழ், தமிழ்மக்களின் வாழ்வியல் நெறி, சமயநெறி ஆகியவற்றின் ஒட்டு மொத்தக் குறியீடாகவே அது விளங்குகிறது. அவை தலைமுறை தலைமுறையாகக் கையளிக்கப்பட்டு வருவதாலேயே பிராமண எதிர்ப்பும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான குரலும் தமிழோடு பின்னிப் பிணைந்து வந்து கொண்டிருக்கிறது.  இதை மூடிமறைக்கவே `இந்துஎன்ற கலாச்சாரம் உருவாக்கப் பட்டுள்ளது.
கோயில் சிற்பங்களை இழிவுபடுத்துவதாகக் கூறுவது அவதுhறு ஆகும். அச்சிற்பங்கள் அங்கே இடம் பெற்றிருப்பதற்கான வரலாற்றுக்கு காரணங்களை நாவலின் முன்னுரையிலேயே ஆதாரத்துடன் கூறியுள்ளேன் .
சமயமறுமலர்ச்சி, தமிழ் நெறி மறுமலர்ச்சி, தமிழிசை மறுமலர்ச்சி அனைத்தையும் திருஞானசம்பந்த உருவாக்கியதால் தான் பிராமணர்களால் சதி செய்து கொள்ளப்பட்டார் என்று நாவலை முடித்துள்ளேன். இப்படி ஒரு வரலாற்றுப் புதினத்தை, - தாண்டவபுரத்தைப் படைத்துக் காட்டியிருப்பது யாரையும் இழிவு படுத்துவதாகாது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
இப்படி ஒரு படைப்பு இருக்கும் போது இதனைப்  படிக்காதவர்களுக்கும், அரைகுறையாக படித்தவர்களுக்கும், உள்நோக்கம் கொண்டு  அரசியல் படுத்தி கலகம் விளைவிக்க நினைப்பவர்களுக்கும் நான் பதில் சொல்லிக் கொண்டு இருக்கத் தேவை இல்லை என்றே கருதுகிறேன்.
உண்மையில் உங்களுக்கு தமிழ்ச்சைவத்தின் மீதும் சிவபெருமான் மீதும் அக்கறை இருப்பின், அறிவுலகத் திறந்த மேடையிலும், காட்சி ஊடக தளத்திலும் விவாதிக்க வாருங்கள் உங்களை வரவேற்கிறேன். அதைவிடுத்து “கொலைசெய்து விடுவோம் என்று மிரட்டல் விடுப்பதும், இரவு பொழுதில் வன்முறைக்கும்பலை அனுப்பி பணியவைக்க முயற்சி செய்வதற்கெல்லாம் பயந்து போய்விடுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள்.
“எவ்வளவு பணம் வேண்டும்? எத்தனை லட்சம் வேண்டும்? வாழ்நாளில் நீங்கள் பார்க்கவே முடியாத  பணத்தைத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியது, நாவலைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக ஒரு அறிக்கை தந்தால்  போதும். எங்கள் செலவில் விளம்பரப்படுத்திக் கொள்கிறோம். எங்கள் அமைப்பு கோடீஸ்வரர்களை  கொண்டது… அரசியலில் நெருக்கடி கொடுத்து உங்களை கைது செய்யவும் ஒரு பக்கம்  வேலை நடந்து கொண்டு இருக்கிறது. உங்கள் மீது மாவட்டம் தோறும் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். உயர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்… நீங்கள் இன்னும் எதிர்பார்க்க முடியாத நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும்” இப்படி மாஜி பேராசிரியரைக் கொண்டு பேசவைத்து,  பணக்கட்டுகளைக் காட்டினால் நான் மயக்கம் கொண்டு விடுவேன் என்று நினைக்காதீர்கள்.
நீங்கள் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். வரவேற்கிறேன். உங்கள் அரசியல் பலத்தைக்காட்டி என்னை மிரட்டிவிடலாம் என்று எளிதாக கணித்து விடவேண்டாம். உங்கள் அரசியல் பலத்தை விட தத்துவசெறிவு கொண்ட அரசியல் தளம் எனக்கும் உண்டு என்பதையும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.
( “சிவஒளி’’ இதழுக்கு  எழுதிய கடிதத்தை, அதன் ஆசிரியர், “பிரசுரம் செய்ய இயலாது. காரணம், தாங்களிடம் நாங்கள் பதிவு செய்திருந்த நேர்காணலில் இக்கடிதத்தில் கண்டுள்ளச் செய்திகள் பெரும்பாலானவை உள்ளடங்கியே இருக்கின்றன என்பதே…” )

No comments:

Post a Comment