Saturday, 17 May 2014

தாண்டவபுரம் நாவல் ஒரு மதிப்பீடு - சீ. அறிவுறுவோன் (கணையாழி மார்ச் 2012)



    `தாண்டவபுரம்சோலைசுந்தரபெருமாள் அவர்களால் எழுதப்பட்டுள்ள வரலாற்றுப் புதினம். இந்த நாவலாசிரியர் படைத்துள்ள நாவல்கள் அனைத்துமே, சமூக அடித்தளத்தோடு பின்னிப் பிணைந்த மேல்கட்டுமானங்களை அழகுறக் காட்டுவனவாக இருப்பவையே. இந்தத் தாண்டவபுரம்  நாவலும் சமூகத்தின் மேல்தளத்திலும் அடித்தளத்திலும் அசைவியக்கம் உடையதாக அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர், சீர்காழியில் தொடங்கித் சோழமண்டலம், பாண்டிமண்டலம் ஆகியப் பகுதிகளில் பயணம் செய்து தமிழின் வளர்ச்சிக்கும் சிவமதப் பரவலுக்கான பணிகளைச் செய்து விட்டுச் சீர்காழி திரும்புகிறார்.  நல்லூர் பெருமணம் என்பதாகிய இன்றைய ஆச்சாள்புரத்தில் அவரது பெற்றோர் நடத்திட முனைந்த  திருமணம் நிகழவிருந்த வேளையில் எதிரிகளால், அவ்வூரின், கோவில் அமைந்திருக்கும் மையப்பகுதி தீயிட்டு, திருமணத்தில் கலந்து கொண்டோர் பலரும் அத்தீயின் கொடுமையில் அழிந்து போனார்கள் என்பதோடு நாவல் முடிகிறது.
சேக்கிழாரின், பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தருக்கு சிவபெருமானின் மனைவி பார்வதிதேவி தன் முலைப்பாலை அருந்தக் கொடுத்து அவரை ஞானக் குழந்தையாக்கினாள். அதனால் அவர் தனது  மூன்றாம் அகவையிலேயே, ‘தோடுடைய செவியன்...’ என்று சிவபெருமானைப் பாடத்தொடங்கித் தனது பதினாராம் அகவையில் சோதியில் கலந்து விடுகிறார் என்கிறார்.
ஆனால், சோலையோ திருஞானசம்பந்தரை ‘அதிபுத்திசாலி’ குழந்தையாகவும் அவரது பதினெட்டாவது அகவையில் நல்லூர் பெருமணத்தில் மணக்கோலத்தில் இருந்த அவரையும் அவரை மணம் செய்த கொள்ள இருந்த மணமகளையும் எதிரிகள் எரியூட்டி அழித்து விடுவதாக எழுதியுள்ளார்
ஞானக்குழந்தை என்பது புராணத்துக்கு வேண்டுமானால் பொருந்தலாம். அறிவியலுக்கு ஒத்து வராது. அதிபுத்திச்சாலித்தனம் அறிவியலுக்குப் புறம்பானது அன்று. அதிபுத்திசாலித்தனம் தான் ஞானமாகச் சேக்கிழாரால் காட்டப்பட்டது.
ஞானசம்பந்தரின் பெரியப்பா சிவநாதவைபாடியார் அவரைத் தேர்ந்த ஞானம் உடையவனாகக் கல்வி கற்பித்தல் மூலம் உருவாக்குகிறார். இவ்வாறு தான் பார்வதியம்மையின் ஞானப்பால் அவருக்குத் தேவையற்றதாகிவிடுகிறது.
ஞானசம்பந்தரின், தேவாரப் பாடல்களில் வரும் கலவி, புலவி தொடர்பான செய்திகளோடு பெண்ணின் இன்பஇயல் உறுப்புகளின் எழுச்சியைக் காட்டும் செய்திகள் அனைத்தும் ஓர் இளைஞனால் மட்டுமே பேச முடிந்தவைகளாகும். அவை பதிகங்களில் பயின்று வந்திருக்கும் முறைகளையும், வடிவங்களையும் இசை நேர்த்தியையும் கணக்கெடுத்தோமானால் தொல்காப்பிய இலக்கண நூலைப் பயிலாமல் அவற்றைப் படைத்திருக்கவே முடியாது என்னும் முடிவிற்கே வரவேண்டியிருக்கிறது.
எனவே தான்,  சிவநாதவைபாடியார் தேவைப்பட்டிருக்கிறார். ஆகவே  முறையான கல்வியோடு சைவசமயப் பற்றும் ஞானசம்பந்தருக்குச் சேர்த்தளிக்கப்பட்டுள்ளது என்பது தான் சம்பந்தர் தேவராப் பாடல்கள் மூலம் நமக்குத் தெரியவருகிறது. இதனால் அவர் ஏறத்தாழ பதினைந்து அல்லது பதினாறு அகவையில் பாடத்தொடங்கி இருபதாவது அகவைக்குள் கொல்லப் பட்டு விட்டதாகச் சோலை தம் நாவலில் கூறியிருப்பது ஏற்கத் தக்கதாகவே உள்ளது. 
இந்த அகவையானது காமக்கனவுகளைத் தரக்கூடிய அகவையே என்பதாலும் தொல்காப்பிய நெறி அறிந்திருந்ததாலும் காமச்சுவை ததும்பவும்  ஞானசம்பந்தரால் தேனிசைத் ததும்பும் தமிழ்ப் பதிகங்களைப் பாடமுடிந்திருக்கிறது என்று கருதவும் இடமுள்ளது. மேலும் சைவம் துறவறத்தை வலியுறுத்தவில்லை. இல்லறத்தையே வலியுறுத்துகிறது. இதனால் தான், மறைமலையடிகளார் தமது `மக்கள் நூற்றாண்டு உயிர்வாழ்க்கைஎன்ற தமது நூலுனுள், `இறைவன் அம்மையப்பன் வடிவிலேயே உள்ளார்என்று எழுதுகிறார்.
ஆகவே, திருஞானசம்பந்தர் திருமணம் செய்து கொள்ள இருந்த நேரத்தில் சோதியில் கலந்தார் என்பது அவரது பிரமச்சாரியத்தைக் காப்பாற்றவே எனக் கதைப்பது பொருத்தமற்றது. நந்தன் சோதியில் கலந்தார் என்றால், சமஸ்கிருத்தையே உயர்வான மொழி என்று தூக்கிப்பிடித்துக் கொண்டு இருக்கும் பிராமணர்கள்   நந்தனை  ஓமக்குண்டத்தில் இறங்கச் செய்த சதி பின்புலமாக உள்ளது. அவ்வாறே, இதிலும், சமணர்களின் பேரால் பிராமணியம் சதிச் செய்துள்ளதாகவே நாவலில் சோலை  குறிப்பிட்டுள்ளார்.
                இது போலவே வள்ளலாரும் பிராமணச் சதியாலேயே கொல்லப்பட்டார் என்ற குறிப்பையும் பலரும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.  ஆகவே, ஜோதியில் கலந்தல் என்பதுதீயிட்டு எரிக்கும் கொலை’ என்பதைத் தவிர வேறில்லை’ என்பது தெளிவு.
இந்த நாவலின் படைப்பாளி, பிராமணமதம் என்னும் சொற்றொடரைப் பயன் படுத்தியுள்ளார். இது வடமொழி சார்ந்த சைவத்தைத் தான் அப்படிக் குறிப்பிட்டுள்ளார். சமஸ்கிருமொழி சார்ந்த சைவம், நால்வர்ணத்தையும் வர்ணநீதியையும் உயர்த்திப் பிடிப்பதாகும்.  ஆனால், தமிழ்ச்சைவம் அப்படிப்பட்டதல்ல. சாதிப்பாகுபாட்டையோ, வர்ணப்பாகுபாட்டையோ ஏற்பதில்லை.
இத்தாண்டவபுர நாவலில் திருஞானசம்பந்தரின் திருமணச்சடங்கை திருநீலகண்ட யாழ்ப்பாணர் செய்கிறார்.  அப்போது அவ்விடம் வரும் சிவநாதவைபாடியாரைப் பார்த்து எழுந்து கொள்ளும் திரு நீலகண்டரை, “நீங்களும்  அடியார் தாமே’ நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று வைபாடியார் கூறிவிடுவதாக வருகிறது நாவலில். நீலகண்டயாழ்ப்பாணரை சிதம்பரத்திற்குள் புகவிடாத நிலையில் ஞானசம்பந்தரும் யாழ்ப்பாணரோடு சிதம்பரத்தின் புறச்சேரியிலேயேத் தாங்கி விடுவதாகக் காட்டப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தரோடும் இதரரோடும் நீலகண்டயாழ்ப்பாணரும் அவர் துணைவியார் சூளாமணியாரும், ஒன்னடை மன்னடையாக மாட்டு வண்டியிலேயே  பயணம் செய்வதாக வருகிறது.
தொல்காப்பியர் காலத்தில் பாணர், கூத்தர், விரலி ஆகியோரெல்லாம் இழிந்தோர் அல்லர். களவுக் காலத்தும் கற்புக் காலத்தும் தலைவன் தலைவியரோடு இருந்து அவர்களுக்காகக் கூற்று நிகழ்ந்தும் அளவளவி மகிழும் மாந்தர்களாவர். நிலவுடைமையும், சாதியும், வர்ணமும் தோன்றிய பின்னரே அவர்கள் இழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தொல்காப்பிய நெறியறிந்த திருஞானசம்பந்தர், நீலகண்ட யாழ்ப்பாணரையும் சூளாமணியாரையும் விலக்கி வைத்து விடவில்லை என்பது சாதிக்கும் வர்ணத்துக்கும் அவர் காட்டும் எதிர்ப்பேயாகும். மறைமலையடிகளாரும் `சாதிவேற்றுமையும் போலிச்சைவரும்என்னும் நூலுள் இச்செய்தியைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருஞானசம்பந்தர்  தன்னையே தமிழாகரன் என்று தன் பாடலுள் குறிப்பிட்டுக் கொள்கிறார். தமிழ் மீதும் அவருக்குள்ளப் பற்றும் பாசமும் அவனை அப்படிப் பேச வைக்கிறது.
ஆகவே, அவர் தமிழ்ச் சைவத்தை உயர்த்திப் பிடித்தது வியப்பிற்குரியது அன்று. தில்லையில் ஞானசம்பந்தர் நடராசர் சன்னதியில் பாடியதை தில்லைவாழ் அந்தணர் என்று சொல்லப்பெறும் தமிழ் பிராமணர்களால் தடுக்கப்பட வில்லை. சமஸ்கிருத வேதியர்களே தடுக்கும் முயற்சியில் இறங்கிடுகிறார்கள். திருஞானசம்பந்தர், தன் பதிகங்களில் குறிப்பிடப்படும் தமிழ் ஆகமக் கோட்பாட்டை, வடமொழியை முதன்மையாகக் கொள்ளும் சைவபிராமணர்கள்  வேதஆகமமாகப் பார்க்கிறார்கள்.
                நிலவுடைமை, சாதி - வர்ணம் என்ற ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியதாதாகிய சமூக அமைப்பு  உருவானதன் பயனாகப் பிராமணியம் தோற்றம் கொண்டு வளர்ந்து பரவியது என்பதை சோலை தமது முன்னுரையில் சொல்லியுள்ளார். இவ்வாறு தோற்றம் பெற்று வளர்ந்து பரவிய பிராமணியமும் வடமொழி சார்ந்த சைவமும் வர்ணத்துக்கு எதிராகப் போராடிய சமண, பௌத்த மதங்களுக்கு எதிராகத் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது.
காரணம்,  திணைச்சமூகமாக இருந்தது வரையும் வர்ணத்துக்கு எதிரான தளமாக அது இருந்தது தான்.  திணைச் சமூகம் தான்,  சாதிக்கான மூலக்கூறு என்பதை மறுக்கவும் முடியாது. திணைச்சமூகம் முற்றாக அழிக்கப் பெற்ற நிலையிலேயே முடிமன்னர்களின் பேரரசுகள் உருவாயின என்பதால் களப்பிரர் காலத்தின் முற்பகுதி பிராமணியத்துக்குகான இருண்டகாலமாகவே இருந்து. சமண, பௌத்த மதங்களுக்குக் கிடைத்த நிலக்கொடை  பொற்கொடை  இவற்றின் காரணமாக சமணப்பள்ளிகளும் பௌத்தப் பள்ளிகளுமே   நிலவுடமையாளர்களாகி விட்டன.
இந்த நிலையில் வர்ணத்துக் கெதிரான செயல்பாடு நீர்த்துப் போய், வெறும் கூச்சல் மட்டுமே இருந்தது. மொத்தத்தில் அம்மதங்கள் நீர்த்துப் போய் விட்டன என்பதே வரலாறு நமக்கு வழங்கும் செய்தி. அந்த நிலையில் வாய்ப்பேச்சுக்கு எதிரான நடவடிக்கையைக் கூட பிராமணர்களால் வழி நடத்தப்பட்ட வடமொழிச் சார்ந்த சைவம் முன்னெடுக்க முடியாமல் இருந்தது. வடமொழி மக்களிடம் செல்லாது போனது. மக்களும் ஏற்க வில்லை.  மேலும் வர்ணாசிரமத்தையும் அது கைவிடத்தாயரில்லை.
எனவே, தமிழ்ச் சைவம், பக்தி இயக்கத்தைக் கைக் கொண்டு வளர்ந்த போது வடமொழிசார்ந்த சைவமும் பிராமணர்களும் வஞ்சகத் திட்டங்களோடு வாளாவிருந்தனர். மன்னர்களோ தமிழ்ச் சைவத்தையும் வடமொழிசார்ந்த பிராமணச் சைவத்தையும் ஒரு சேர ஆதரித்தனர்.  நீர்த்துப் போன மதமான  சமணத் துறவியர்களை கழுவில் ஏற்றிய போது மக்கள் எதிர்ப்பு, மன்னர்களுக்கு எதிராக இல்லாமல் போனது. அதனால் தான் இந்தக் கழுவேற்றம் நாவலில் கோடிக்காட்டப்பட்டுள்ளது. காரணம், கழுவேற்றப்பட்ட 8,000 சமணர்கள் என்று கொள்வதா? எண்ணாயிரம் என்கிற ஊரில் இருந்த சமணர்கள் என்று எடுத்துக் கொள்வதா? என்றெழும் சிக்கல் தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
மேலும் சதுர்வேதிமங்களம், பிரம்மதேயம்  இவைவெல்லாம் பிராமணர்களுக்கான நிலவுடைமைகள்.  தேவதானக்கட்டளை தமிழ்ச் சைவத்துக்கானது.  இந்தத் தேவதானக்கட்டளையின் மேலாண்மையின் கீழ்வரும் அடிமைகுடிமை எனப்பட்டோரெல்லாம் தமிழ்ச் சைவத்தின் பக்தி இயக்கத்தில் நம்பிக்கைக் பெற்றுத் திரண்டதன் விளைவாகத் தான் அரசனுக்கே சமணர்களைக் கழுவிலேற்ற வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியிருக்கும்.
சேக்கிழார்  குறிப்பிடும் அனல்வாதம், புனல்வாதம் என்பதெல்லாம் புராணிக உத்தியே. வாதம் செய்தலை மூடி மறக்க  உதவும் பூச்சு அவ்வளவே. அதனால் தான் இந்நாவலில் அவை பெரிதுப்படுத்தப் படவில்லை என்று தோன்றுகிறது.
வேளாளர்களும், சோழச்சிற்றரசும், பாண்டிமாதேவியாரும், அமைச்சர் குலச்சிரையாரும், மித்திரனும் கொன்றையாளனும், சரணாலயனும்,  சிவநாதவைபாடியாரும், நீலகண்டயாழ்ப்பாணர் - சூளாமணியாரும், தேவதாசிப் பெண்ணான மனோண்மணியும்  சதுர்வேதிமங்கள அதிபர் பரமேஸ்வரஅய்யரும்  பிராமண பரிஷத்தும் திருஞானசம்பந்தரோடு தொடர்பு படுத்தப்பட்டு நாவலின் அசைவியக்கத்திற்கு காரணமாக உள்ளனர்.
இந்த நாவலுக்கு மனோன்மணி என்ற தேவதாசிப் பெண் பாத்திரம் அவசியம் தானா? என்று கேட்கத் தோன்றும். நம்முடைய கோவில்கள் தேவதாசிமுறையோடு பின்னிப் பிணைந்தது. இந்த தேவதாசிமுறை `கோயில் பெண்டீர்’ `அடியுறை மகளிர்என்ற பெயர்களில் கடைச்சங்கக் கால முதலே இருந்துள்ளனர். கோவில் பரத்தை, இற்பரத்தை என்பதில் கோவில் பரத்தை என்பாரே இந்தக் தேவதாசியர் ஆவார்.
`லிங்கவழிபாடு எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் தேவதாசி முறை இருந்துள்ளது’ `தொல்காப்பியக் காலம்என்ற தன் நூலில் ஆய்வாளர் குணா அவர்கள் பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கிச் செல்வதை இவ்விடத்தில் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தத் தேவதாசி முறைக்கெதிராக சுதந்திரப் போராட்டக்  காலக்கட்ட முதலே தமிழகத்தில் போர்க்குரல் ஒலித்தது. இன்னும் சொல்லப் போனால் மாதவியும் மணிமேகலையும் அந்த எதிர்ப்புக் குரலின் முன்னோடிகளே. பரதம் தமிழ்க்கலை என்பதும் பரதத்தை தேவதாசிகளே ஆடவேண்டும் என்பதும் அறிந்து கொள்ளப்பட வேண்டிய செய்தி.  இதை மயிலையார் மறைந்து போன தமிழ் நூல்கள், தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் நுண்கலைகள் முதலான நூல்கள் வாயிலாக அறியலாம்.
மேற்குறிப்பிட்ட தேவதாசி முறையை ஒழிக்கக் குரல் கொடுத்த மூவாலூர் இராமாமிருதத்தம்மாள் `தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்என்றொரு நாவலை எழுதியுள்ளார். அதற்கான முன்னுரையில், ‘இனிப் பரதம் ஆட வரமாட்டோம்எனத் தேவதாசியர் ஒத்தக் குரல் எழுப்ப வேண்டும் என்று கூறி அதற்கான காரணங்களை முன்வைக்கிறார்.
அப்படி அவர் சொல்லக் காரணம், தேவதாசிப்பெண்கள் சிருங்கார ரசத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர் என்று பச்சையாகக் குறிப்பிடுகின்றார். `காமப்பகுதி கடவுளும் வரையார்என்று தொல்காப்பிய நூற்பாவில் வரும் பகுதி என்பது  ஆகுபெயர் என்பதால் அது பரத்தைமையையே குறிக்கும். ஆகவே, அது தேவதாசியரையே குறிப்பதாகும்.
எனவே, கோயில் பரத்தையாகிய தேவதாசி மனோன்மணியோடு ஞானசம்பந்தர் உறவு கொண்டது  தொல்காப்பிய விதிப்படியே... (பரத்தையிற் பிரிவை தொல்காப்பியம் ஏற்கிறது)  கோவில் மரபுப்படியும் தவறு அன்று. மேலும், அவன் பிரமச்சாரியும் இல்லை. ஞானசம்பந்தனரின் பெரியப்பாவான சிவநாதவைபாடியாரே அவரது பெற்றோர்கள் பார்த்த மணமகளை விட மனோண்மணியே அவருக்குத் தகுதியானவள் என்று கருதுகிறார்.
அவரைப் பொறுத்தவரை  மனோண்மணியை , மாதவி  நிலைக்கு உயர்த்தி  விடுகிறார். மனோண்மணி வழியாகப் பெறும் திருஞானசம்பந்தரின் குழந்தையை வெறும் குழந்தையாகப் பார்ப்பது தவறு.
வடமொழிக்கு எதிராக தமிழாகச் சைவத்தோடு ஒன்றிய தமிழாக மற்றும் தமிழ் வாழ்வியலாகவும் பிராமணிய எதிர்ப்பாகவும் அக்குழந்தையைப் பாவித்திட வேண்டியிருக்கிறது. மனோண்மணி வழியாக திருஞானசம்பந்தருக்குப் பிறகு வந்த தலைமுறைக்குக் கையளிக்கப்பட்டிருப்பதாகவே அதைக் கருத வேண்டும். அதன் தொடர்ச்சியே இன்றைய பிராமண எதிர்ப்பு என்று கூடச் சொல்லலாம். பேராசிரியர், கலாநிதி .கைலாசபதி அவர்களுடைய திறானாய்வுக் கட்டுரைகள் அடங்கிய `நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்என்னும் சிறு நூலில், `சமூகவியலும் கோவில் வழிபாடும்என்ற கட்டுரையில்  நன்கு விளக்கப்பட்டுள்ளது.
எனவே,  தாண்டவபுரம் நாவல் அதன் உள்ளடக்கத்துக்கு ஏற்ப வாசிப்புத்தன்மைக்குரியதாகவும் நவீனத்தன்மையுடையதாகவும் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.
                                (கணையாழிமார்ச் 2012)

No comments:

Post a Comment