Saturday, 17 May 2014

`தாண்டவபுரம்’ நாவலுக்கான மேலாண்மைபொன்னுசாமியின் மதிப்புரைக்கு எதிர்வினை. -சோலைசுந்தரபெருமாள்.



2012 பிப்ரவரி செம்மலர் இதழில் தாண்டவபுரம் நாவலுக்கு மதிப்புரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த மதிப்புரை,  தமிழக வரலாற்றுப் போக்கையோ, பண்பாட்டுச் சான்றாதாரங்களையோ கொண்டு  எழுதப்படவில்லை. வறட்டுத்தனமான போக்கில் வக்கிர மனநிலையோடு  எழுதப்பட்டு இருக்கிறது. தத்துவ இருப்பை கொண்டு இருக்கும் செம்மலர் இப்படியான கட்டுரையை வெளியிட்டு இருப்பது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.  வெளியிடப்பட்டு இருக்கும் மதிப்புரையைச் செம்மலர் கொண்டு இருக்கும் தத்துவத்தோடு பொருத்தி, இந்த எதிர்வினையை எழுதிடாமலும் என்னால் இருக்க முடியவில்லை. அதன் விளைவே இக்கட்டுரை.
       தமிழிலக்கிய வரலற்றில் பக்தி இயக்கக் காலக்கட்டத்தில் சமண பொளத்த மதங்களுக்கு எதிரான சைவசமயப் போராட்டமாக மட்டுமே பார்க்க முடியாது. அப்படியே இடம் பெற்றிருந்தாலும் சமூகத்தின் அடித்தளத்தில் பிரம்மதேயத்துக்கும் தேவதானக்கட்டளைக்கும் இடையிலான மௌனப் போராட்டமாக இருந்ததைக் காணத் தவறக் கூடாது.
       ‘ஆரியர்களுக்கு முன்னிருந்த மக்களின் சமய அனுபவத்தின் கட்டமைப்பு’ அகத்தடக்கியதான பழங்குடி மக்களுடைய சமய உணர்வின் தொடர்ச்சியே பக்தி அல்லது மறை வாத வழிபாடு. வைதீகமல்லாத ஆரியருக்கு முன்னிருந்த இயக்கர் கண்ட வழிபாட்டு முறை பக்திக் கட்டமைபுடையது ’’ (`யோகம்’- இறவாமையும் சுதந்திரம் - மிர்சியா எலியடு)
       பிரமதேயமும், தேவதானக்கட்டளையும் நிலவுடைமைச் சமூகத்தின் இருதுருவங்கள். நிலஉருண்டையின் இயக்கக்கதியில் துருவங்கள் உருவாகி விட்டதைப் போல இந்திய நிலவுடைமையின் வளர்ச்சிப் போக்கில் இவ்விரு துருவங்களும் உருவாகி முதலாளித்துவக் காலக்கட்டத்துக்கு ஏற்றாற்போல அவை தம்மை இன்று தகவமைத்துக் கொண்டுள்ளன. திணைச் சமூகம் வீழ்த்தப்பட்ட இடத்தில் வேர் கொண்ட சிவனியமும் மாலியமும் பெருந்தெய்வக் கோட்பாடுகள். இச்சிவனியமும் மாலியமும் அந்நிய மதங்கள் என்ற முறையில் தமிழகத்துக்கு வெளியே பரவவில்லை. இந்தியப் பெருநிலம் முழுவதும் திணைச்சமூகம் இருந்து பின்னர் நிலவுடைமைக் சமூகத்துக்கான சாதிச் சமூகமாகத் தோன்றி வர்ணத்தில் அவை தொகுக்கப்பட்டு நிலவுடைமைச் சமூகம் வர்ணச்சமூகமாக மாறியது.
       இந்த வர்ணச்சமூகக் காலக்கட்டத்தில் தான் பிராமணனாக, பார்ப்பான் உருமாற்றம் பெருகிறான்.  இந்தியாவின் வடபகுதியில் பார்ப்பான் என்னும் சொல் வெவ்வேறு மொழிகளில் வேறு பெயர்களில் இருந்திருக்கலாம். தமிழில் தொல்காப்பியம் திணைச்சமூகத்தை இலக்கணப்படுத்தியிருப்பது போல இந்தியமொழிகளில் வேறு எந்த மொழியும் இலக்கணப்படுத்தவில்லை என்பதால் தமிழகம் தவிர்த்த இதர வடஇந்தியப்பகுதிகளில் திணைச்சமூகம் உருவாகவில்லை என்று முடிவு செய்வது தவறாகும்.
       ஏனெனில், சாதியின் மூலக்கூறு திணைச்சமூகம். அதன் அடுத்தக் கட்டம் சாதிச் சமூகமாகிய நிலவுடைமை காலக்கட்டம். எனவே சாதி எங்கெங்கெல்லாம் உளதோ அங்கங்கெல்லாம் திணைச்சமூகம் இருந்தது என்றே பொருள். திணைச்சமூகக் கடவுளரின் இணைப்பே பெருந்தெய்வங்களாகிய சிவனும் திருமாலும் திணைச்சமூகத்தின் இறுதிக்காலப்பகுதியில் தான், ஆரியர் முல்லை நிலத்து மக்களோடு வடபகுதியில் கலந்து விடுகின்றனர். அப்படிக் கலப்பேற்படு முன்பே மருதத்தின் ஒருபுறம் நிலவுடைமை உறவுகள் தோன்றி விட்டன. சிந்துவெளிக்கடவுள்கள், ஆரியர் வருவதற்கு முன்பே தோன்றி விட்டன. தெற்கே தொல்காப்பிய வழி திணையை அறிய முடிகிறது.
       எனவே திணைச்சமூகத்துக்குரிய பார்ப்பான், பிராமணனாக உருவானது, நிலவுடைமைச் சமூகத்தில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வர்ணச் சமூகத்துக் கெதிராக அவற்றால் போராட முடியவில்லை. எனவே ஆசையை அறுப்பதால் மட்டும் துன்பத்திலிருந்து விடுபட விரும்பித் துறவறத்தை வலியுறுத்தின. மேலும் இந்தியப் பெரு நிலத்தில் நிலவுடைமை என்பது தவிர்க்க முடியாமல் பிராமணியத்தோடு தான் வளர வேண்டியிருந்தது. எனவே வர்ணத்தை எதிர்ப்பதென்பது நிலவுடைமையை எதிர்ப்பது என்பதாகவே அமைந்தது.  இதனால் சமூக வளர்ச்சிக்கு எதிரான போராட்டமாக அது அமைந்து விட்டது.
        முதலாளித்துவ சமூகம் உருவான பிறகு வர்ணம் தேவையற்றதாகி விட்டது. எனவே வர்ணத்திற்கு எதிரான போராட்டம் முற்போக்கானதாக ஆகி விட்டது. திணைச்சமூகம் நீடித்த வரையில் அடுத்துப் புதிதாக உருவாகி வளர்ந்த நிலவுடைமைச் சமூகத்திற்குரிய வர்ண எதிர்ப்பு முற்போக்கானதாக தொல்குடி மக்களால் கருதப்பட்டுருந்திருக்கும். அவ்வேளையில் தான் சதுர்வேதிமங்களங்களும் பிரம்மதேயங்களும் களப்பிரர்களால் தகர்க்கப்பட்டு உழவர்களுக்கே வழங்கப்பட்டன ஆதல் வேண்டும். என்றாலும் சமூகத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாகிய நிலவுடைமையைக் களப்பிரர்களாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. சமணமடங்களுக்கு வழங்கப்பட்ட நிவந்தங்கள் அவற்றை நிலவுடைமையாளர்களாக மாற்றி விட்டன.
       இதனால் பிராமணியம் வளர்ச்சியடைவது தவிர்க்க இயலாதாயிற்று. வர்ணச்சமூகத்தின் தொடக்க காலத்திலேயே தமிழ்ச் சைவம் போலவே பிறமொழிச் சைவமும் உருவாகி இருந்திருந்தாலும் பிராமணியத்தின் அளவிற்கு அதனால் வர்ணத்தையும் சாதியையும் உயர்த்திப் பிடிக்க முடியவில்லை. அதனால் தமிழ்ச் சைவம் வீரியமாக வளர முடியாது தேங்கிப் போய் விட்டது.
       தமிழ்ப்பார்ப்பார்களும் வடதேயங்களில் இருந்த பிறமொழிப்பார்ப்பார்களும் தங்களைப் படிப்படியாக வேதியர்களாக மாற்றிக் கொண்டு விட்டனர். பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்தியப் பெருநிலத்தில் மத தத்துவத்தை வளர்த்துக் கொள்ளவும் விவாதிக்கவும் பரப்பவும் ஒரு பொதுமொழி தேவை என்று உணர்ந்த வைதீக அறிஞர்கள் பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் ஆரியமொழி ஆகியவற்றிலிருந்து தேவையான சொற்களை பொறுக்கி கட்டமைத்து உருவாக்கப்பட்ட மொழி தான் வடமொழி என்று சொல்லப்பெறுவது சமஸ்கிருதமாகும்.
சமஸ்கிருதம் என்றாலே உருவாக்கப்பட்டது. கட்டமைக்கப்பட்டது என்று தான் பொருள். இப்படித்தான் அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தப் பொதுமொழியைப் பிராமணர்கள் ஆரியர்களுடையது என்றும் அதனால் தங்களை ஆரியர்களது வாரிசு என்றும் கூறிக் கொண்டார்கள். வர்ணத்தை உயர்த்திப்பிடித்த இவர்களால் சமண பௌத்த மதங்களை எதிர்கொள்ள முடியவில்லை. எனவே தமிழ்ச் சைவம் முதலில் அதைத் தொடர்ந்து பிறமொழிச் சைவமும் சமண பௌத்த மதங்களுக்கு எதிராகப் பக்தி இயக்கத்தை மக்கள் மொழியில் கட்டவிழ்த்து விட்டன.
எனவே இந்தியப் பெருநிலத்தில் பிறமொழிப் பேசுவோர்க்குச் சைவம் அந்நியமானதாக இல்லை. சமஸ்கிருதமே அந்நியமாக இருந்தது. அதனால் தான் வேதியர்களால் பக்தி இயக்கத்தை நடத்திட முடியவில்லை.
மேலும், திணைச்சமூகத்தைச் சேர்ந்த பாணரும் விறலியும் பரத்தையும் சைவத்துக்கு எதிரானவர் அல்லர். களவுக்காலத்துக் கூற்றுக்குரியோராகிய அளவியன் மரபின் அறுவரோடு கற்புக்காலத்துக் கூற்றுக் குரியோராக விறலியும் பரத்தையும் சேர்த்தெண்ணப்படுகின்றனர். இதைத் தொல்காப்பியர் தமது இலக்கண நூலான தொல்காப்பியத்துள் செய்யுள் இயலில் தெரிவிக்கிறார்.
இவர்களில் பார்ப்பான் தலைவன் தலைவி நீங்கலாகவுள்ள அனைவரும் பிராமணியம் வளர்ச்சியுற்ற போது இழிந்தோராக ஆக்கப்பட்டனர். இவர்களில் பாணரும் விறலியும் திருஞானசம்பந்தர் பாட்டுக்கு இசை கூட்டிப் பாடும் திருநீலகண்டயாழ்ப்பாணரும் அவர் மனைவி சூளாமணியாரும் ஆவர். திருஞானசம்பந்தரின் தலயாத்திரை இவர்களையும் இணைத்துக் கொண்டு தான் நடைபெற்றது. மனோன்மணிக்கு உடன்பிறந்தவனாக வரும் கொன்றையாளன் கற்பனைப் பாத்திரம். தேவதாசி மரபில் வந்தவன். மனோன்மணி தேவதாசி மரபில் வந்தவள். இதுவும் கற்பனைப் பாத்திரமே என்றாலும் இப்பாத்திரங்கள்  பண்பாட்டு வரலாற்றின் அம்சமாகத் தான் படைக்கப்பட்டு இருக்கிறார்கள். கோயிலும் தேவதானமும் சேர்ந்து வளர்த்த பண்பாட்டு கூறு அல்லவா தேவதாசி மரபு.
       தமிழ் முதலிய இந்தியமொழிகள் நீசபாஷை என்று பிராமணர்களால் கூறப்பட்டன. வடமொழி மட்டுமே தேவபாஷை என்றார்கள். அந்நிலையில் பக்தியியக்கம் வடமொழிக்கு எதிராகத் தமிழ்மொழியை உயர்த்திப்பிடித்து மக்களிடம் செல்வாக்குப் பெற்றது. இவ்வாறே வடபுலத்திலும் நிகழ்ந்தது. பிரம்மதேயத்துக்கும் தேவதானக்கட்டளைக்கும் இடையேயான உரசல்கள் சமணத்துக்கும் சைவத்துக்குமான போராட்டத்தில் வடமொழிக்கும் தமிழுக்குமான போராட்டமாகவும் சூத்திரருக்கும் இழிக்கப்பட்டோருக்குமான உறவாகவும் வெளிப்பட்டுள்ளது.
இப்போராட்டம் வெற்றிப் பெறும்வரை வாளாவிருந்த வேதியம் வெற்றிப் பெற்ற நிலையில் வெற்றிக்கு காரணமாக இருந்த திருஞானசம்பந்தரையே நல்லூர் பெருமணத்தில் அவருக்குத் திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் மணக்கோலத்தோடு, அவர் கைத்தலம் பற்ற இருந்தவரையும் சேர்த்தே பிராமணியம், சமணத்தின் போர்வைக்குள் புரிந்து எரித்துக் கொன்றது.  இன்னும் ஒருசில நாயன்மார்களும் சிவத்தொண்டர்களும் அந்தத் தீயில் மாண்டு போய் இருக்கிறார்கள். வைதீகம், ‘ஜோதியில் கலந்தார்கள்’ என்று சொன்னாலும் ஜோதியில் கலத்தல் என்றால் தமிழக வரலாற்றில் பிராமணியம் சதி செய்து கொளுத்தியிருக்கிறது என்றே பொருள்படும். நந்தன், வள்ளலார் இவர்களுக்கு நடந்ததும் இது தான். என்றாலும், வேதியமே பண்பாட்டு வடிவமாக மேலோங்கியது.
என்னதான் சிவப்பிரகாசர், ஆறுமுகநாவலர், மறைமலையடிகளார் இவர்களெல்லாம் வேதியத்துக்கு எதிராக இருந்திருந்தாலும்  வென்றது என்னவோ வேதியம் தான். காரணம் நிலஉடைமை தகராமல் காப்பதற்கான மேல்கட்டுமானத்தை வேதியத்தால் தான் வழங்க முடிந்தது. இந்த வேதியம் ரிக்வேதத்தோடு தொடர்புடையது அன்று.
தாண்டவபுரம், பக்தி இயக்க வரலாற்றை உள்ளடக்கியது என்பதால் துறவறத்துக் கெதிராக இல்லறத்தையும் வேதாசி முறையையும் உயர்த்திப்பிடிக்கிறது. தொல்காப்பியம் பரத்தையிற் பிரிவுக்கான இலக்கணத்தைக் கூறுகிறது. மருதத்திணையின் ஒரு பகுதியில் நிலவுடைமை வடிவம் கொள்வதால் சிவனும் திருமாலும் இங்கு தான் உருவாக்கப்படுகின்றனர்.
 பக்தி இயக்கம் என்பது மதநலனைகளை உயர்த்திப் பிடிப்பது தான். இதன் பின்புலத்தில் பெரிதும் ஆளுவர்க்க நலன்களும் ஓரளவுக்கு உழைக்கும் மக்கள் நலன்களும் இடம் பெறும். தாழ்த்தப்பட்ட பறையர் குடிமக்களின் இழிவை அகற்றுவதில் நந்தன் முன்நின்றதைப் பார்க்கலாம். என்றாலும், அவ்விடத்திலும் வென்றது என்னவோ வேதியம் தான். 
முதலாளித்துவக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களும் இணைந்த நடத்தியப் போராட்டங்கள் சைவம் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியே ஆகும். வள்ளலாரை அடுத்து பாரதி என்ற கண்ணிகளோடு நாம் தொடர்வோமானால் இது விளங்கும். இதைத் தொடர்ந்து மறைமலையடிகளாரது எழுத்தும் கருதத்தக்கது `சாதிவேற்றுமையும் போலிச்சைவரும்’  என்னும் அவரது நூல் முதன்மையானது.  இக்கட்டத்தில் பிராமணியத்துக்கு எதிராக பிற்படுத்தப்பட்டோர் திரட்டப்பட்டதை நோக்கலாம்.
இவை தொடர்பான சில வினாக்களை மேலாண்மை பொன்னுசாமி அவர்களிடம் கேட்க வேண்டியிருக்கிறது. சமணமுனிவர்கள் சாதிவேற்றுமை வர்ணவேற்றுமைக் கெதிராகக் குரல் கொடுத்ததோடு தாழ்த்தப்பட்ட பண்ணை அடிமைகளுக்குக் கல்வி மற்றும் தொழிவாய்ப்புகளை உருவாக்கித்தந்துள்ளனர். இப்படியான அவர்களைச் சூதுவாதுகளால் சைவர்கள் வென்று கழுவேற்றினர் என்றால் பண்ணையடிமைகளும் வணிகர்ளும் அக்கழுவேற்றத்துக்கு எதிராகக் குரல் கொடுக்க வில்லை. ஏன்? 
பாண்டிய மன்னனின் அதிகாரமும் சோழமன்னனின் அதிகாரமும் அவர்களைக் குரலெப்ப விடாமல் செய்து விட்டது என்று எடுத்துக் கொள்வதா? தேவதானக் கட்டளை நிர்வாகிகளும் பிரமதேய கட்டளை அதிபர்களும்  மன்னர்களுக்குப் பின்னால் இருந்து அவர்களது குரலை அடக்கினார்கள் என்று கொள்வதா? அதற்கெல்லாம் வரலாற்றில் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? இல்லை என்ற விடையே கிடைக்கிறது. அப்படி என்றால் சமணர்கள் நீத்துப்போய் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டுப் போயினர் என்று தானே பொருள்? அவர்கள் தனிமைப்பட்டுப் போனதும் திணைச்சமூகம் முற்றாக மாறி மறைந்து போனதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதா? இல்லையா? தொடர்புடையது என்பதே தொல்காப்பியம் காட்டும் வரலாறு.
அப்படியானால்  பக்தி இயக்கக் காலத்தில் அடியார்களுக்கு ஆதரவாகத் திரண்ட மக்கள் கூட்டம் அதிகாரத்துக்கு அஞ்சித்தான் அவர்களை ஆதரித்தார்களா? மேலாண்மை தான் கூறவேண்டும். தாண்டவபுரம் நாவலைப் படைக்கும் போது சைவத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக்கமோ சமணத்தைத் தாழ்த்திக்காட்டும் நோக்கமோ எனக்குக் கிடையாது.  வரலாற்றோடு தொடர்புடையவற்றை நாவலாக்கி இருக்கிறேன். வரலாற்றில் சைவம் தன்னைப் புத்தாக்கம் செய்து கொண்டு பக்தி இயக்கமாக வெளிப்பட்ட காலமும் சமணம் நீத்துப் போய் மக்கள் செல்வாக்கை இழந்து விட்ட காலமும் ஒன்றே. திருஞானசம்பந்தர் சமணத்தை வீழ்த்தும் வெறியுடனேயே பாடியுள்ளார். இதில் மறுப்பேதும் இல்லை. அந்த வெறியை `ஆலவாய்’ பதிகத்தில் நாம் காணமுடியும். அந்த வெறியே  சமணத்துக்கு எதிரான வசைப்பாடல்களாக அமைந்துள்ளன. அவர்களைக் கொலைக்காரர்களாகவோ வஞ்சகர்களாகவோ மாற்றிக் காட்டுவது என் விருப்பமாக இருக்க வில்லை.
எண்ணாயிரம் சமணமுனிவர்கள் கழுவேற்றப்பட்டது தொடர்பாக நாவலில் மேலோட்டமாக விட்டுச் சென்று இருப்பதாக அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் மேலாண்மை. அக்காலத்தில் தமிழகத்தில் எண்ணாயிரம் சமணமுனிவர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன் எண்ணாயிரம் என்பது எண்வழு என்பது ஒன்று. எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றப்பட்ட இடம் விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பதாக தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டு இருப்பதாக அறிகிறேன்.
புராணத்தில் கழுவேற்றப்பட்ட இடம் மதுரை என்றே வருகிறது. இது இடவழுவாக உணர்ந்தேன். தமிழ்மக்களின் வாழ்வையும், பண்பாட்டுக் கூறுகளையும் தமிழ்மொழியையும் தெளிவாக காட்டும் தொல்காப்பியத்தினை இரண்டாம் தரவாக நாவலுக்கு கொண்டிருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
நாவலின் உள்ளடக்கம் தத்துவம் சார்ந்துள்ளதாகவும் உள்ளதால் அதன் வடிவம் சலிப்பூட்டுவதாகக் கூட அமையலாம். அழகியலிலும் குறைபாடு இருக்கலாம். அது வாசகனின் வாசிப்புத் திறனைப் பொறுத்தும் மாறக்கூடும். மேலாண்மை கூறுவது போல் தாண்டவபுரத்தை முற்றும் சலிப்பூட்டாத வகையில் படைத்திருக்க வேண்டுமாயின் மேலும் எழுநூறு பக்கமாவது காட்சிப் படுத்துவதற்குத் தேவைப்பட்டிருக்கும் என்பதே எனது விடை.
இறுதியாக புராணம் ஞானக்குழந்தையாக திருஞானசம்பந்தரைக் காட்டுவதற்கு மாறாக மனிதக் குழந்தையாகத் காட்டி அதிபுத்திசாலி இளைஞராக வார்த்துள்ளேன். இதனைத் தான் இந்துத்துவா சக்திகள் ஏற்க மறுக்கின்றன. இது அறிவியலோடும் இந்திய வரலாற்றில் நிலவுடைமை, கோவில் நிலம் தேவதாசிமுறை இவற்றோடும் பொருந்துவதாகும். இது பற்றிக் கொஞ்சங்கூட மேலாண்மை வாய்திறக்க வில்லையே ஏன்?
கூடவே, மேலாண்மை தன்னுடைய மதிப்புரையில் ‘பிராமணமதம்’ உயர்வான நோக்கம் கொண்டது அதனை இத்தனை தூரம் விமர்சனம் செய்திருக்கக் கூடாது என்று பதிவு செய்திருக்கிறார். இவ்விடத்தில் தான் அவர்மேல் சில சந்தேகங்கள் எழுகின்றன. இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மூத்தத்தலைவர்களில் ஒருவர். இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிட்) கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். கட்சி, மாநிலத் தலைமைக்குழுப் பொறுப்பிலும் இருக்கிறவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தினை வழிநடத்திடும் பிரதான இடத்திலும் இருக்கும் இவர், பிராமணமதம் உயர்வான நோக்கம் கொண்டது என்று அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதைக் கொண்டு பார்த்தால் மேலும் மேலும் அவர் சார்ந்திருக்கும் அரசியல் தளத்தின் மீது கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது.
காரணம், செம்மையான இந்திய வரலாற்று ஆய்வுகளை வெளிப்படுத்தியவர்களான எஸ்.என்.தாஸ்குப்தா, தேவிபிரசாத் சட்டோபாத்தியா, டி.டி.கோசம்பி, ராகுல்சாங்கிருத்தியான் போன்ற பலரும் இடதுசாரிகளாக தங்களை வெளிப்படுத்திக் கொண்ட சாதனைப்படைத்த ஆய்வாளர்கள். இவர்கள் அனைவரும்  பிரமணமதம் மக்களை ஒடுக்கி தங்களுக்கு அடிமையாக வைத்துக் கொள்ளும் தத்துவத்தை கொண்டு இருப்பதாகவே தான் ஆய்வுகளை தந்துள்ளார்கள்.  
குறிப்பாக தேவிபிரசாத் சட்டோபாத்தியா அவர்கள் முதிர்ந்த வயதில் இறக்கும் வரையிலும் தன்னை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிட்) கட்சியில் உறுப்பினராகவும் கட்சிக்கு தலைமை வகித்திருந்த பெரும் தலைவர்களோடும் மிகவும் நெருக்கமானவராகவும் இருந்திருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன். இவர், பிராமண மதக் கோட்பாட்டை அகமும்புறமுமாக தகுந்த சான்று ஆதாரங்களைக் கொண்டு முகமூடியை கிழித்து எறிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ‘உலகாயதம்’,  ‘இந்திய நாத்திகம்’, ‘இந்தியத் தத்துவ இயல் எளிமையான அறிமுகம்’, ‘இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட நூற்களை எழுதியிருப்பவர். இவரின் சுண்டு விரலைப்பிடித்துக் கொண்டு நடந்திட எனக்கு தகுதியிருப்பதாக ஒரு போதும் நினைத்தேன் என்றில்லை. ஆனால், அவர் எழுதியுள்ள ஆய்வுகள் என்னை முழுமையாக நெறிப்படுத்திக் கொண்டு இருக்கின்றன என்று சொல்லுவதில் எனக்கு தயக்கம் இல்லை.
       மேலாண்மை சிறந்த சிறுகதையாளர். இதனை நான் எங்கு வேண்டுமானாலும் உரத்தக் குரலில் சொல்லுவேன். சொல்லிக் கொண்டும் இருக்கிறேன். ஆனால், மேலாண்மைபொன்னுசாமி அடிப்படை வரலாறு கூடத் தெரியாமல் இருக்கிறார் என்று நினைக்கும் போது தோழமை எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன். இது நாள் வரையிலும் சொல்லிக் கொண்டு இருந்தமைக்கு வருத்தப்படுகிறேன். எனக்கு, மேலாண்மையின் மீது ஏற்பட்டு இருக்கும் வெறுப்பின் காரணமாகச் சொல்லுவதாக சிலர் கருத இடம் இருக்கிறது. இதனை எளிதாக புறம் தள்ளிவிடுவது போல ‘சுகன்’ இதழுக்கு மேலாண்மை எழுதிய கடிதத்திற்கு, ‘‘எதிர்வினை கட்டுரை’’ யாக நவீன ஓவியர் ஷாராஜ் எழுதிய, ‘நிர்வாண தரிசனங்கள் x பாலிச்சை வியாபாரங்கள்’ சாட்சியாக இருக்கிறது. அது போது சுகன் இதழில் வெளிவந்த வாசகர் கடிதங்களும் மேலாண்மையின் வரலாற்றுப் பார்வையைக் காரி உமிழ்ந்திருக்கின்றன.
       மேலாண்மை, தாண்டவபுர நாவலுக்கு மதிப்புரை எழுதி அது அச்சேறி பின்பு தான் இந்துத்துவ சக்திகள் நாவலின் படியச்சைக் கொளுத்தினார்கள் என்று மறுமொழி பகர்வாரேயானால் அது ஏற்புடையதாக இருக்காது. அதனை நேர்மையாக கருதவும் இடமில்லை. தன் கையில் கிடைத்திருக்கிற - தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் சாதூர்யமும் அவரிடம் இருக்கிற ‘அதிகார’ போதையில் எழுதவும் அதனை வெளியீடு செய்யவும் செய்திருக்கிறார் என்று அறிகிறபோது வருத்தப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றே தெரிவித்துக் கொள்கிறேன். இந்த எதிர்வினை தொடர்பாய் நான் விவாதிக்க உறுதுணையாக இருந்த தோழர், சி.அறிவுறுவோன் அவர்களுக்கு  நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

No comments:

Post a Comment