என்னுடைய ‘தாண்டவபுரம்’ படைப்பு குறித்து தொடர்ந்து பதிமூன்று, ‘சுகன்’ இதழ்களில்
விவாதம் நடந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு இதழையும் கூர்மையாகக் கவனித்து வந்து இருக்கிறேன். அவை குறித்து வாசகர்களுக்கு என் கருத்தைத் தெரிவிக்க
வேண்டிய இடத்திலும் இருக்கிறேன். இல்லாவிட்டால், எனது பொறுப்பைத் தட்டிக் கழித்தவனாகி
விடுவேன் என்பதால், இதனை எழுத நேரிட்டது.
தாண்டவபுரம் நாவலைப் படிப்பவர்கள் ஒரு பக்கம் கடவுளை நம்புகிறவர்களாகவும்
மறுபக்கம் நம்பாதவர்களாகவும் இருந்து படித்திருக்கிறார்கள். அவர்கள் போக்கில் விமர்சனம்
செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு முழுமையானப் படைப்பைத் தந்த பின்னர், அந்தப் படைப்பு
மீது படைப்பாளி மீண்டும் ஆளுமை செலுத்தக் கூடாது என்பதில் நம்பிக்கைக் கொண்டவன், நான். அதே நேரம் சரியான விமர்சனத்தை ஏற்பதில் எனக்கு என்றைக்கும்
தயக்கமில்லை.
700 பக்க அளவுள்ள புனைவு தான் இந்த தாண்டவபுரம் நாவல் என்பதை
மறந்து விடக் கூடாது. வரலாற்றைப் பக்கத்திற்கு பக்கம் எழுத இது ஒன்றும் வரலாற்றுப்
புத்தகம் அல்ல. இப்புதினப் படைப்பின் போது அதன் கலைத்தன்மை சிதைந்து விடாமல் செய்நேர்த்தியில்
கவனம் கொண்டிருந்தேன். சிலவிடங்களில் கலைத்தன்மைக் குறைப்பட்டு இருக்கிறது என்று வரும்
விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
தாண்டவபுரம் நாவல் குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்த
பொதிகைச்சித்தர் அவர்கள், என்னுடைய நாவல்களான ‘செந்நெல், மரக்கால், குருமார்கள்’ போன்றவற்றை பொருத்தப் பாட்டுடன் இயங்கியல் கோட்பாட்டுடன் பொருந்தும் தன்மையில்
இருப்பதாக விமர்சனம் செய்திருக்கிறார். பலரும்
ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நானும் ஏற்றுக் கொண்டேன்.
தாண்டவபுரம் குறித்து அவர் எழுதிய விமர்சனப் பக்கங்கள்
ஏராளம். அனைத்தும் சுகன் இதழிலேயே வெளிவந்துள்ளன. அவர் இந்நாவலுக்கு எழுதிய விமர்சனத்தில்
இயங்கியல் வரலாற்று தன்மையைப் புறந்தள்ளி விட்டு
திராவிட இயக்கப் பார்வையில் முன் வைத்திருக்கிறார்.
இவருடைய அனைத்து விமர்சனப் பக்கங்களுக்கும் சி.அறிவுறுவோன்
அவர்கள், இயங்கியல் வரலற்றுத் தன்மையைப் பொருத்தப் பாட்டுடன் பொருத்தி, முடிந்த அளவுக்கு சுருக்கமாக எதிர்வினை ஆற்றி இருக்கிறார்.
இவருடைய எதிர்வினை என் படைப்புக்கு உடன் பட்டதாக
இருக்கிறது.
இந்த இரண்டு விதமானப் போக்குகளையும் சுகன் இதழாசிரியர், இதழின் வடிவம், நோக்கம், வரையறை இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மிகுந்த
சனநாயகப் பண்புடன் அனைத்துப் பக்கங்களையும் வெளியிட்டு இருக்கிறார். சுகன் இதழாசிரியரின்
இப்பண்பு மதிக்கத்தக்கது.
பொதிகைச்சித்தர் அவர்கள், தாண்டவபுரம் நாவல் பெரிய புராணக் காலச் சமூகத்தைப் பிரதிபலித்திருப்பதாக எழுதுகிறார்.
பெரியபுராணம், நிலவுடமை வளர்ச்சி அடைந்தக் காலத்தில் சோழப் பேரரசில் படைக்கப்
பட்டது. வளர்ச்சி அடைந்த நில உடமைச் சமூகத்தின் கட்டமைப்பைக் குலைத்து விடாமல் பாதுகாக்க
வேண்டிப் படைக்கப் பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், தாண்டவுரம் நாவல் காட்டும் காலம் நிலவுடமைச் சமூகம் வளர்ந்து
கொண்டிருந்தக் காலமாகும்.
அச்சமூக அடித்தளத்தின் மீது, சாதிப் பாகுபாட்டுக்கு உடன்படாமல் நிலஉடமைக்கு ஆதரவாகச் செயல்படும் நோக்கத்தில் முற்காலச்
சைவம் உருவாக்கப்பட்டு வளர்க்கப் பட்டதன் அடிப்படையில்
தான் இந்த நாவல் உருவாக்கப் பட்டது. இதற்கான ஆதரவில் தான் சி.அறிவுறுவோன் அவர்கள், தக்கச் சான்றுகளுடன்
எதிர்வினைக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அக்காலச் சமூகப் பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை உள் வாங்கியே இப்புதினம் படைக்கப்பட்டுள்ளது.
விரிந்து பரந்து பட்டப் பல்லவப் பேரரசில் சமண மதத்தின்
ஆட்சி அதிகாரப் போக்கு மேலோங்கி இருந்தது. கூடவே, சமணப் பள்ளிகளே நிலஉடமை அமைப்பாக மாறி இருந்தது. சோழப்
பேரரசு பிராமணியத்தையும் சமஸ்கிருதத்தையும் உயர்த்திப் பிடித்து தமிழையும் சைவத்தையும்
இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. இது வெளிப்படையாகத் தெரியாமல் இருக்க செல்லரித்துக்
கிடந்த தேவாரத்தை நம்பியாண்டார் நம்பி மூலம்
மீட்டு எடுத்து திருஞானசம்பந்தர் காலத்து இசைக் குறிப்புகளையும் இணைத்துக் கொடுத்தது
என்பதையும் இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால், சோழச் சிற்றரசோ பிராமணியத்தையும் சமஸ்கிருதத்தையும் எதிராக நிறுத்த வேண்டிய சமூகச்
சூழலில் இருந்தது. பல்லவ பேரரசின் ஒண்டு குடியாக இருந்தச் சோழச் சிற்றரசு - பழையாறை - தனக்கே உரித்தானப் போக்கில்
தமிழையும் சிவத்தையும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டிய ஏற்பாடுகளை கமுக்கமாகவும்
வெளிப்படையாகவும் செய்யத் தொடங்கியது.
பராந்தகச் சோழன் காலத்திலேயே சிறுகோயில்கள் பெரியக் கோயில்களாக
உருப் பெற்றிருந்தன என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் பொருள் என்ன? சிறுகோயில்களாக இருந்த சிவஆலயங்களையும் அதனை உள்ளடக்கிய
வேளாண்மக்களையும் திரட்டி, பேரரசாக உருவெடுக்க வேண்டியத் தந்திர
அரசியல் நுட்பங்களை உள்ளடக்கி புது வடிவம் கொண்டு நடத்திய போராட்டக் களத்தை நாவல் மையம்
கொண்டுள்ளது. சரியானத் திசையில் அக்காலச் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு அம்சங்களோடு தாண்டவபுரம் நாவல் வடிவம் கொண்டுள்ளது. இதற்கு மேல் இவ்விரு
அரசுகளின் பொருளாதாரத்தை விரிந்த தளத்தில்
வைத்துப் படைப்பாக்கினால் அது புதினமாக இருக்காது.
நாவலைத் தொட்டுக் கூடப் பார்க்காத சில புலவர்கள் எழுதிய
வாசகர் கடிதத்தில்,
வேளாளர்கள் ஏதோ ஒரு சாதியைச் சார்ந்தவர்கள்
போலவும் நான் விரும்பி சோழியவெள்ளார் சாதியில் பிறப்பெடுத்தது போலவும் அச்சாதியை உயர்த்திப்
பிடிப்பதற்காகவே நாவல் எழுதியுள்ளேன் என்பது போலவும் எழுதியிருக்கிறார்கள்.
அவர்கள் முதலில் சோழச் சிற்றரசிலும் சோழப் பேரரசிலும்
வேளாண்மையைக் கொண்டுடிருந்த வேளாளர்களில் எத்தனைச் சாதிகள் இருந்திருக்கின்றன, இன்றைக்கும் இருக்கின்றன என்று தெரிந்து கொண்டு நாவலைப்
படித்து விமர்சனம் செய்யட்டும். அவர்கள் உண்மையிலேயே
தமிழ்ப் புலவர்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம். இல்லாவிடில் அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகக்
குப்பைக் கொட்டும்,
கொட்டியப் புலவர்களாகத் தான் கொள்ள
வேண்டியிருக்கும்.
பிப்ரவரி 2012 ‘செம்மலர்’ இதழில், ‘தாண்டவபுரம்’ நாவலுக்கு விமர்சனம் எழுதிய மேலாண்மை பொன்னுசாமி அவர்களுக்கும் பொருத்தப்பாடுடையது
இக்கடிதம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கும் சிவாச்சாரியார்கள் ஒரு சாதியைச் சார்ந்தவர்களாக
இல்லை. முற்காலத்து சைவம், சாதித் தீண்டாமையை ஒதுக்கி வைத்து விட்டு
தமிழையும் சிவத்தையும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வரும் தத்துவச் செறிவு கொண்டு இருந்தது
என்பதை ஏனோ மறுக்கிறார்கள்.
திராவிட இயக்க அரசியலை உயர்த்திப் பிடித்தவர்களின் ஆட்சி
அதிகாரப் போக்கு, ஆங்கிலத்தைத் தூக்கிப் பிடித்தது. அப்போக்கு தான், தமிழை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியது.
இன்று அது நிருபணம் ஆகியிருக்கிறது. அதனைப் போலத் தமிழ்ப்புலவர்களும் இருக்கிறார்களோ
என்னவோ?
No comments:
Post a Comment