Saturday 7 June 2014

தாண்டவபுரம் நாவல் குறித்து ‘புதின’ எழுத்தாளர் சோலைசுந்தரபெருமாள். ‘சிவ ஒளி’ மாத இதழுக்கு அளித்த விளக்கம். இதனையே நேர்காணலாக வெளியிட்டு இருந்தார்கள்.

1. தாண்டவபுரம் நாவலுக்கு அடிப்படையான அகச்சான்றாக, வரலாறாக அமைந்திருப்பது திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்களே.
2. அவர் வாழ்ந்த காலத்திற்கும் முன்னும் பின்னுமாக எழுதப்பட்டுள்ள வரலாற்று ஆய்வுகள் புறச்சான்றாக உள்ளன
3.தமிழ் மக்களின் வாழ்வைத் தெளிவாக வரையறைச் செய்திருப்பது  இலக்கண நூலான தொல்காப்பியம். இவ்விலக்கணம் 12 ஆம் நூற்றாண்டு வரையிலும் மக்கள் வாழ்வோடு மிக நெருக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது.
4. திருஞானசம்பந்தரின் 4,000 த்திற்கும் மேற்பட்டப் பாடல்களில்தொல்காப்பிய இலக்கண நூலின் உள்ளடக்கமாக உள்ள பொருளதிகார இலக்கணங்களையே தன் படைப்புகளில் - நுட்பமாகவும் மிகுதியாகவும் கையாண்டுள்ளார்.
5. ஆளுடையப்பிள்ளை, குருகுலப்பயிற்சிப் பெற்று தான் இருக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்பமுடிகிறது. அவ்விடத்தில் தான் சிவவாழ்முறையைக் கற்றதோடு தமிழ்மக்களின் வாழ்வியலைச் சொல்லும் தொல்காப்பியத்தைத் தெளிவாக கற்றத் தேர்ந்திருக்கிறார்.
6. `சிவம்தொல்குடி சமூகத்தின் இறுதியில் திணைச்சமூகம் நிலஉடமைச் சமூகமாக அரும்பும் நிலையில் ஐந்திணைக்குரிய தெய்வங்கள் இணைக்கப்பட்டு சிவம் பெரும் தெய்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.
7.தொல்குடி சமூகத்தின் தாந்திரீக வழிபாடாக இருந்த லிங்க வழிபாடு சிவனுக்கு அடையாளமாகக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் வரலற்று வளர்ச்சியைத் தெளிவாகக் கற்று உணர்ந்திருக்கிறார் ஞானசம்பந்தர்.  சிவமும் தமிழும் பிரிக்க முடியாத தன்மையில் தொடக்கம் கொண்டு இருக்கின்றன.
8. காபாலிகம், பாசுபதம், பைரவம், இடங்கைசாக்தம் போன்றவை வேதங்களுக்கு முரணானவை. ( பாணரின் ஹர்ஷ சரித்திரம் - .பி. சந்தா, `தி இண்டோ ஆரியன் ரேஸ்)
9.தேவதாசி முறை தொல்காப்பியத்தில் இலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.. கோயில் முறையோடு தேவதாசிப் பெண்களும் இணைக்கப்பட்டு விட்டனர். `காமப்பகுதி கடவுளும் வரையார்’  என்று தொல்காப்பிய பொருளதிகார நூட்பா எழுதப்பட்டுள்ளது.
10.லிங்கவழிபாடு எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் தேவதாசிமுறையும் இருந்தது. இம்மண்ணில் சிவ - சைவ வழிபாட்டில் இன்றும் லிங்க வழிபாடு இருக்கிறது.
11. திருஞானசம்பந்தரின் பாடல்களே வரலாறாக இருக்கிறது அதாவது அவர் மானிட இயல்புகளை கடவுள் இயல்பாக கூறியிருக்கிறார்.
12. தாண்டவபுரம் நாவலில், கடவுள் இயல்பை மானிட  இயல்பாக காட்டப்பட்டு இருக்கிறது.
13. அறிவியலுக்குப் பொருந்திவிடும் மனித வாழ்வியியல் உயர்வானதாகத்தான் இருக்கும். அது கீழானதாக - இழிவானதாக இருக்கவே முடியாது.
14.திருஞானசம்பந்தர் குருகுலக்கல்வியை முடித்துக் கொண்டு இளங்குமரப் பருவத்தினராக வருகிறார்.
15 அவர் மனதில் ஏற்பட்டு இருந்த சிவமத தாகத்தையும் தமிழ் மொழியை மேன்மை அடையச் செய்யும் போக்கில் மேலும் மேலும் அவருக்கு தத்துவஞானத்தை அளிக்கப்பட்டு இருக்கிறது.
16. அதற்கான பாத்திரப்படைப்புகள் நாவலில்  உருவாக்கப்பட்டுள்ளன. திருஞானசம்பந்தர் தன் சேத்திராடனப் பயணத்தை தொடங்கிவிடுகிறார். அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைப்படி சமண, பௌத்த மதங்களை நீசமதங்கள் என்று இழிவாகப் பேச வேண்டிய சமூகச்சூழல் அன்று இருந்தது. காரணம், மதங்கள் எல்லாமே ஒன்றை ஒன்று விழுங்கிடும் போக்கில் தான் வளர்ந்தன சமண மதத்திற்கு எதிராக சிவமதத்தை முன்னிறுத்திட இகவாழ்வின் பெருமையினை பாராட்டி பேசி, உயர்த்திப் பிடிக்க வேண்டியிருந்தது. இந்த உணர்ச்சி வேகத்தில் அவர் பாடிய பதிகங்களில், சிருங்காரரசம் என்று சொல்லப்படுகின்ற காமரசம் ததும்ப  பாடல்களை இயற்றியிருக்கிறார். அப்பாடல்களில் கலவி, புலவி- கற்பும், களவும் செறிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
17. இவ்வாறு வெளிப்படுத்தி இருக்கும்  பாடல்களை வெறும் படிப்பறிவுக் கொண்டோ கேள்வி அறிவைக் கொண்டோ பாடப்பட்டு இருக்க முடியாது. இதன் மூலம் திருஞானசம்பந்தருக்கு இகவாழ்வின் நேரடித் தொடர்பு இருந்திருக்கிறது என்று நிருபனமாகிறது.
18. சான்றுக்காக சில பாடல் வரிகளை சுட்ட விரும்புகிறேன்.
1. "அலைவளர் தண்மதி யோடய லேஅடக்கி உமை / முலைவளர் பாக முயங்கவல்ல முதல்வன் முனி / இலைவளர் தாழைகள் விம்மு கானல்… ’’            ( முயக்கம் - கலவி, புணர்ச்சி - பாடல் 2970)    
2. "பனிஆர் மலர்ஆர் தருபாதன் / முனிதான் உமையோடு முயங்கிக் / கனி ஆர் பொழில் சூழ்...’’ (பாடல் 3707)
                3. "காலினோடு கைகளும் தளர்ந்து காமநோய்தனால்’’ (பாடல் 3689) 
                4.  "நிலைவெறுத்த நெஞ்சமொடு நேசமில் புதல்வர்கள் / முலைவறுத்தப் போர் தொடங்கி...’’( 3690) 
5. பையராவரும் அல்குல் மெல்லியல் / பஞ்சின் நேரடி வஞ்சி கொள் நுண்ணிடைத் தையலாள்..’’ (3673)
6. "...விற்பொலி நுதற்கொடி யிடைக் கணிகை...’’ (2642)
7 "வாருறு மென்முலை மங்கைபாட நடமாடிப்போய் ’’ (3028)
8. "திருந்திள மென்முலைத் தேவி பாட நடமாடிப்போய்’’ (3029)
9. யோனி, அல்குல், பேரல்குல், தனம், மாதனம், கொங்கை, முலை இப்படியான பெண்ணின் உறுப்புகளை வகைவகையான உவமைகளோடு  நூற்றுக்கு மேற்பட்டப் பாடலில் இடம் பெற்றுள்ளன.
10.`வவ்வுதல்என்ற சொல்லை திருப்பிரமபுரம் பதிகத்தில் பெரும்பான்மையானப் பாடல்களில் பயன் படுத்தியுள்ளார். இச்சொல்லுக்கு அகராதி தரும் பொருள், கவ்வுதல், பற்றுதல். " விரகநோய் கண்ட பெண்கள் துயிலைத் துறக்கச் செய்தல்’’ (உரையாசிரியரின் உரையில் சொல்லப்பட்டு இருப்பது. (மேலேச் சுட்டப்பட்ட சான்றுகள், `திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் - உரையாசிரியர், பி.ரா.நடராசன், உமாபதிப்பகம், சென்னை)
19. திருஞானசம்பந்தர் பிரம்சாரியத்தையும் துறவறத்தையும் ஏற்க வில்லைஅதன் வெளிப்பாடு தான்  அவர் இகவாழ்வை வெளிப்படுத்தியது. -  அவர் பாடல்களில் இப்படியான இகவாழ்வில் மகிழச் செய்யும் செய்திகள் இடம் பெற்றுள்ளன. இதனையே அவர் பிரச்சாரப்படுத்தினார்.
20. இதன் வழியே திருஞானசம்பந்தருக்கு கோவிலோடும் கோவில் சார்ந்த நிலஉடமையோடும் இருந்த தேவதானக்கட்டளையில் நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அவரோடு யாழ்ப்பாணரும் சூளாமணியாரும் உடன் பயணிக்கிறார்கள்.
21. திருஞானசம்பந்தர், எழுத்துக்காரரைக் கொண்டு பதிகப்பாடலை எழுத வைக்கிறார். யாழ்ப்பாணர் இசையமைக்கிறார். சூளாமணியார் பாடச் செய்கிறார்கூடவே கோயிலில் உள்ள கோயில் பெண்டீர் அபிநயத்து ஆடற்கலை நிகழ்த்தி இருக்க வேண்டும். கோவில்களில் பாட்டும் கூத்துமாய்த் தான் தமிழர் இறைவழிபாடு நடைபெற்று இருக்கிறது.
22. பரதம் என்னும் ஆடற்கலை தேவதாசியினால் மட்டுமே ஆடப்பட்டது. ஆகவே இப்படி கோயில்களில் வழிபாடு நடத்தி மக்களைத் திரட்டியிருக்கிறார்கள்.
23. தேவதாசி முறையை உற்பத்தி செய்தது நிலஉடமைச் சமூகம் தானே? அப்படியான நிலஉடமைச் சமூகத்தோடு தன்னைப் பொருத்திக் கொண்ட திருஞானசம்பந்தர் மட்டும் அதில் இருந்து எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?
24. இந்த அனுபவ நெகிழ்ச்சி தான் திருஞானசம்பந்தர், மனோண்மணி என்ற தேவதாசிப்பெண் தன்னுடைய சிவத்தொண்டுக்கு அவசியம் என்று கருத இடம் இருக்கிறது. கூடவே அப்பெண்ணும் சிவத்தொண்டு ஆற்றுவதே தம் நோக்கமாகக் கொண்டு அவரோடு இணைந்து சிவத்தொண்டு ஆற்ற முன்வந்திருக்கிறார். அதுவும் தன்னை பிரதானமாகக் கொண்டு காத்திருக்கும் சிவத்திற்கும் தமிழுக்கும் அரும்பணியாற்ற வேண்டும் என்ற உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தும் பெண்ணோடு நேயம் கொள்வதில் தவறு ஏதுமில்லை. அக்கால சமூகத்திலும் அதற்கு தடையிருக்க வில்லை.
25. இந்த அனுமானத்தில் தான் நாவலில் மனோண்மணி படைக்கப்பட்டு இருக்கிறார். தமிழ்காப்பிய மரபிலும் இலக்கணமரபிலும் இதற்கு சான்றுகள் உள்ளன. குறிப்பாக மாதவி, மணிமேகலையும் தேவதாசிப் பெண்களே. இவர்கள் பௌத்தமதத்தைச் சார்ந்தவர்கள். துறவறத்தை ஏற்றார்கள். அவர்கள் இருவரும் காப்பிய பாங்கில் மக்கள் விரும்பக்கூடிய மனிதர்களாகப் படைக்கப்பட்டு இருக்கிறார்கள். மனோண்மணியோ சிவமதத்தில் தன்னை இணைத்துக் கொண்டவள், இகவாழ்வை பெருமையாகக் கருதி கொண்டாட முனைகிறார்.
26."காமப்பகுதி கடவுளும் வரையார்என்பதற்கு இணங்கவே திருஞானசம்பந்தரோடு மையல் கொண்டு இருந்திருக்கிறார். தொல்காப்பிய இலக்கணம் காட்டும் வாழ்வியலின் படி கடவுளும் விலக்கல்லவே. கடவுளும் தேவதாசிகளோடு உறவு வைத்துக் கொள்ள உரியவர். கடவுளும் இதற்கு விதிவிலக்காக இருக்கத் தேவையில்லை என்பது தான் தொல்காப்பியம் காட்டும் வாழ்நெறி. கடவுளின் குழந்தை என்று சொல்லப்படுகின்ற திருஞானசம்பந்தர் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?                         
27.இந்த நிகழ்வு இலக்கியத்திற்கு எதிரானதாகவோ, தமிழ்மரபுக்கு மாறானதாகவோ கொள்ள இடம் இல்லை.. இதன் வழியேயும் திருஞானசம்பந்தர் தன்னை தமிழாகராக’ வெளிப்படுத்திக் கொண்ட மேன்மை மிக்க மனிதரை இழிவுபடுத்துவதாக ஆகாது. இதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் தமிழின் இலக்கிய இலக்கணப் பயிற்சி இல்லாதவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் தான் தமிழை இழிவுபடுத்த முன்நிற்பவர்களாக இருக்க முடியும்.
28. நாகம் தீண்டி மரித்துப் போன பூம்பாவை, சாம்பலாய் எலும்புக்குவியலாய் குடத்தினுள் அடைக்கப்பட்டு இருந்தவரை திருஞானசம்பந்தர் உயிர்பெறச் செய்திருக்கிறார் என்று புராணம் சொல்லுகிறது. இது அறிவியலுக்கு ஒவ்வாத செயல். புராணக்கற்பனையே. இந்தக் கற்பனையைக் கொண்டு பெரியவர்கள் சொல்லுவது போல இந்தப் பூம்பாவை திருஞானசம்பந்தருக்கு மகளாகத் தான் இருக்க முடியும். இதில் எனக்கும் கருத்து வேறுபாடில்லைஇவ்விடத்தைக் கொண்டு நாவலில் வரும் மனோண்மணியைபூம்பாவையோடு முடிச்சிப் போட்டு பேசுவது அறிவுடைமையாகாது. அப்படியான நிகழ்வு எதுவும் நாவலிலும் இடம் பெறவில்லை.
29.புராணங்களில் வரும் வரலாற்றுக்கு உதவாதச்  செய்திகளையும், புனைவுகளையும் நீக்கி விட்டு எடுத்துக் கொள்ளக் கூடிய உரிமை நவீன படைப்பாளிகளுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் உள்ள உரிமையாகும். தாண்டவபுரம் நாவல் யாரையும் இழிவுப் படுத்த வில்லை. அந்த நோக்கம், படைப்பாளியான எனக்கும்  இல்லை.

30. நாவலைப் படிக்கவே செய்யாமல் யாரோ தப்பான அரசியல் நோக்கில் நகர்த்தி விடுவதை ஏந்திப் பிடிப்பதை விடுத்துநாவலைப் படித்து விட்டு விவாதித்தால் சமூகத்திற்கும் மக்களுக்கும் பயன் அளிக்கும் என்று நம்புகிறேன்.

3 comments:

  1. பிதற்றல் – இதற்குப் பெயர் நாவல்?
    தாண்டவபுரம் நாவல் குறித்து ‘புதின’ எழுத்தாளர் சோலைசுந்தரபெருமாள். ‘சிவ ஒளி’ மாத இதழுக்கு அவர் அளித்த விளக்கமும் அதில் வெளிப்படும் முரண்பாடுகளும்.
    விளக்கம்1. தாண்டவபுரம் நாவலுக்கு அடிப்படையான அகச்சான்றாக, வரலாறாக அமைந்திருப்பதுதிருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்களே.
    முரண்பாடுகள்: அகச்சான்று என்பது படைப்பாளியின் கவிதைப் போக்கில் இயல்பாக வெளிப்படும் சான்றுகளே அகச்சான்றுகள் ஆகும். பாண்டிய மன்னன் கூன் பாண்டியன் முன்பே சமணர்கள் ஞானசம்பந்தப் பெருமானை வெருட்டும் வண்ணம் நடந்துகொள்ள, குழந்தைப் பருவத்திலுள்ள சம்பந்தப்பெருமானைக் காக்கத் தாயுள்ளம் கொண்ட பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் பரிவுகொள்கின்றார்; இந்தச் சூழலில் அன்னையைத் தேற்ற சம்பந்தப் பெருமான் பாடிய பாடல் இதோ:
    மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்
    “பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு எய்திடேல்!
    ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
    ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
    இந்தப் பாடலில் பெருமான் தன்னை பால் மணம் மாறாத பாலகன் என “பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு எய்திடேல்! என்று பாண்டிமாதேவிக்குக் கூறுவது ஒரு சிறந்த அகச்சான்று. அகச்சான்றிபடி பால் மணம் மாறாத பாலகனை, கட்டிளம் காளையாக கற்பனை செய்து, கடும் வக்கிரபுத்தியுடன் இந்நாவலாசிரியர் எழுதிய பாலுணர்வைத்தூண்டும் நாவலின் பகுதி இதோ:
    "அவர் மனசும் உடம்பும் ஒரே திக்கில் நெளுநெளுப்பைத் தூண்டிக் கொண்டிருந்தன.அதில் இருந்து விடுபட தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டு இருந்தார்"
    "எப்போது அசந்து உறங்கிப் போனாரோ அவருக்கே நினைவில்லை. அவர் உடம்பிலும் மனசிலும் ஏறி முறுகிக் கிடந்த நெளுநெளுப்பு முற்றிலும் வடிந்து போய் சாசுவதமாய் உணர்ந்தார்."
    (பக்கம் 320)
    "இடுப்பில் இருந்த உத்தரியத்தில் திட்டுதிட்டாய் படிந்திருந்த கொழகொழப்பு இப்போது காய்ந்து முடமுடப்பாக ஆகியிருந்தது. அதிலிருந்து வெளிப்படும் மெல்லிதான இனம் புரிந்து கொள்ளக் கூடிய அம்மணத்தை தன்னோடு நிழலாக இருக்கும் சரணாலயரோ யாழ்ப்பாணரோ உணர்ந்துவிடக் கூடாது என்ற பரபரப்பில் எழுந்தார்"
    (பக்கம்-321)

    நாவலாசிரியருக்கு அகச்சான்று என்றால் என்ன என்றே தெரியவில்லை. இவர் தமிழாசிரியர் என்பது இன்னும் வெட்கக்கேடான ஒன்று. அருவெறுப்பான, அழுகிப்போன சிந்தனைகளைக் கொண்ட இவர் பாலுணர்வைத்தூண்டும் செக்ஸ் கதை எழுதமட்டுமே லாயக்கானவர். இவர் போன்றோருக்குச் சாகித்திய அகாடமி விருது கொடுக்கும் அறிவுஜீவிகள் உள்ளவரை இவர் போன்றோரின் சொத்தை ஆய்வுகள் தொடரும். இந்த நாவலைத் தடை செய்யக் கூடாது. இந்த அழுகிய மனம் கொண்ட அசிங்கம் பிடித்த ‘படைப்பாளி’ என்ற போர்வையில் திரியும் கொக்கோக எழுத்து கீழ்த்தர வார்த்தைகளின் சாக்கடை வணிகனை தமிழ்ச் சமூகத்துக்குத் தோலுரித்துக் காட்டும் சான்றாவணம் அல்லவா இந்த அழுகல் நாவல்.
    பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

    ReplyDelete
  2. “தாண்டவபுரம்” நாவலுக்கான முன்னுரையின் 118 - ம் பத்தியில்
    "தஞ்சை மண்ணின் கீழக்கோடியில் உள்ள சீர்காழி என்று அழைக்கப்படும் சிவபுரமே ஆளுடையப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட திருஞானசம்பந்தர் பிறந்த ஊராகும். " என்று பிதற்றியுள்ளார் இந்நாவலாசிரியர்.

    சமயக் குரவர்கள் நால்வரில், திருஞானசம்பந்தரை 'ஆளுடைய பிள்ளை' என்றும், திருநாவுக்கரசரை 'ஆளுடைய அரசு' என்றும், சுந்தரமூர்த்தி பெருமானை 'ஆளுடைய நம்பி' என்றும், மாணிக்கவாசகப் பெருமானை 'ஆளுடைய அடிகள்' என்றும் அழைப்பது சைவ மரபு. 'ஆளுடைய' என்ற அடைமொழி இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்' என்ற பெருமைக்காகவும், 'பிள்ளை' என்பது குழந்தைப் பருவத்தில் இருந்தமையால் சம்பந்தருக்கும், 'அரசு' என்பது 'நாவுக்கரசே' என்று இறைவனால் அழைக்கப்பட்டமைகாக அப்பருக்கும், 'நம்பி' என்பது 'தம்பிரான் தோழன்' என்ற பெருமைக்காக சுந்தரருக்கும், 'அடிகள்' என்பது அழுது அடியடைந்த அன்பராம் மாணிக்கவாசகருக்கும் வழங்கப்படுவது சைவசமயிகள் அனைவரும் அறிந்த ஒன்று. சிறப்புப் பெயரை இயற்பெயரென சாதிக்கும் நாவலாசிரியரின் கண்டுபிடிப்பு ஒன்றுக்காகவே சாகித்திய அகாடமி விருது வழங்கப்படலாம்!!! வெட்கக்கேடு!!!!

    பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

    ReplyDelete
  3. “தாண்டவபுரம்” நாவலுக்கான முன்னுரையின்1௦3 - ம் பத்தியில் ஆசிரியர் சோலை சுந்தரப்பெருமாளின் தீர்ப்பு பின்வருமாறு:
    "ஆளுடையப்பிள்ளை, பாலகனாக சேத்திராடனம் மேற்கொண்டார் என்பதும் அவருக்கு சிவபார்வதி முலைப்பால்அமுது ஊட்டினாள் என்பதும் புராணக் கற்பனையே. மிகைபட ஏற்றிக் கூறும் சேக்கிழாரின் கற்பனையே அன்றி வேறில்லை. புராணப் படைப்பாளிகளுக்கு இப்படியான கற்பனை செய்து படைப்பைச் செய்திடும் உரிமை உண்டு."

    ஆனால், திருஞானசம்பந்தரின் அகச்சான்று அடங்கிய பின்வரும் தேவாரப் பாடல்கள் இந்நாவலாசிரியரின் வாசிப்புக் குறைபாட்டையும், அரைவேக்காட்டுத்தனமான ஆணவத் தீர்ப்புகளின் ஓட்டையையும் வெட்ட வெளிச்சமாக்கும்.
    போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
    தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்;
    காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர்
    பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!
    3ம் திருமுறை: 24:திருக்கழுமலம்:3053-ம் பாடல்

    இப்பாடலின் பொருள் பின்வருமாறு: பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து "யார் தந்த அடிசிலை உண்டனை?" என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார். அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளுகின்றார். ( போது - மலர். போதை ஆர் - மலரை யொத்த; பொற்கிண்ணம், அடிசில் - சோறு. போனகம்; இங்கே அடிகளார் உண்டருளியது பாலேயாயினும், அதிற்குழைத்த உணவு ஞானம் ஆதலால் அடிசில் எனப் பட்டது. )

    கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத,
    படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞானமுனிவன்,
    இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல்,
    நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை கெடுதல் ஆணை நமதே.
    2ம் திருமுறை: பதிக எண்.84 - திருநனிபள்ளி : 2387ம் பாடல்.

    இப்பாடலின் பொருள், "கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் பதியின்கண் நால்வேத, ஆறங்கங்களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன், தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப்பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும். (ஆறும் நாலும்-ஆறங்கங்களும் நால்வேதங்களும், அத்தர்பியல்மேல் இருந்து-தந்தையார்
    திருத்தோள்மிசை அமர்ந்து, பிடரியின் மேல் அமர்ந்து)

    மேலே குறிப்பிட்ட இரண்டு பாடல்களிலும் உள்ள அகச்சான்றுகளின் அடிப்படையில்
    1. பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து "யார் தந்த அடிசிலை உண்டனை?" என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார் என ஞானசம்பந்தரே பாடியிருப்பதும்.
    2. ஞானசம்பந்தர் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும்போது பாலகனாக இருந்ததும், தந்தையின் பிடரியின் மேல் அமர்ந்து பாடியருளியதும் ஞானசம்பந்தரின் திருவாக்கின் அடிப்படையிலேயே சேக்கிழார் பெருமான் பாடினார் என்பதும்
    உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் விளங்கும். சேக்கிழாரின் புராணக் கற்பனை என்று அறிவுஜீவி சோலை சுந்தரப் பெருமாள் கூறுவது எவ்வளவு அபத்தம் என்பது வாசகர்களுக்கு விளங்கும். இந்தப் பேத்தல் நாவலுக்குத் தடையாம்! அந்தத் தடைகளை இந்த ஆல் இன் ஆல் அழகு சுந்தரம் தகர்த்தாராம்!!

    தமிழ் ஆர்வலர்களுக்கும் சைவ சமய ஆர்வலர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்! இது போன்ற கால் காசுக்குப் பெறாத கொக்கோகம் தர அசிங்கங்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று வீண் விளம்பரம் தராதீர்கள். கக்கூஸில் வைத்துப் படிப்பதற்குக் கூடத் தரமில்லாத நாவல்கள் எழுதவும் படைப்பாளிகள் என்று பட்டம் கட்டிக்கொண்டு திரியும் அற்பர்களுக்கும் எழுத்துரிமை உண்டு. அத்தகையவர்களால் சைவத்துக்கோ, திருஞான சம்பந்தப்பெருமானுக்கோ எந்தக் குறைவும் ஏற்பட்டு விடாது. தமிழில் அரிச்சுவடி கற்கும் என்னைப் போன்றோருக்கே இந்நாவலின் தரம் விளங்கும்போது, மற்றவர்களுக்கு புரியாதா? எழுதுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு; அவர்களை அடையாளம் காட்டி விமர்சிப்பதற்கு வாசிப்பாளர்களுக்கு உரிமை உண்டு. விமர்சனம் தொடரும்.
    பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

    ReplyDelete