`...மனிதர்கள் அரசியல், விஞ்ஞானம், மதம் போன்றவற்றை ஏற்று
ஒழுகுவதற்கு முன் உண்ண வேண்டும்,
பருகவேண்டும், உறைவிடம், ஆடை தேட வேண்டும்
என்பது இது
வரைக்கும் கருத்தியல் வளர்ச்சியால் புதர்போல மறைக்கப்பட்டிருந்தது. எனவே வாழ்க்கைக்கு உடனடி
தேவையான பொருள்களை உற்பத்தி செய்தல், அதாவது ஒரு குறிப்பிட்ட
காலகட்டத்தில் குறிப்பிட்ட மக்கள் அடைந்துள்ள பொருளாதார
வளர்ச்சி என்பது தான் அடிப்படையாக
உள்ளது. இதன் மீது தான்
அரச நிறுவனங்கள், சட்டவியல் கருத்துக்கள், கலை இலக்கியங்கள், மக்களின்
மதம் சார்ந்த கருத்துக்கள் ஆகியன
எழுகின்றன. இந்த அடிப்படையில் தான்
நாம் விஷயங்களை விளக்க வேண்டும்...' (மார்க்ஸ்,
ஏங்கல்ஸ்)
வண்டல் மண்ணில் வாழும்,
வாழ்ந்த மக்களின் வாழ்வியல் பண்பாட்டு அம்சங்களை, அவர்களின் போராட்ட வாழ்வுதனை புனைவுகளில்
மையப்படுத்தும் நோக்கம் கொண்டு, என்னால்
படைக்கப்படும் படைப்புகளில் இதுவும் ஒன்று.
வளமையான சோழப்பேரரசை நிறுவி,
பொற்காலம் கண்டான் இராசராசசோழன் என்ற
பெருமிதத்தோடு அம்மன்னனின் ஆட்சி தமிழகத்தில் பொற்காலம்
என்றும், அவன் காலத்தில் தமிழ்
மரபு பின்பற்றப் பட்டது என்றும், தமிழ்மொழி
ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருந்தது என்றும், தமிழ்மக்கள் பண்பாட்டுத்தளத்தில் உச்சம் கொண்டு வாழ்ந்ததாகவும்
இன்றைய ஆட்சியாளர்கள் பெருவாரியான மக்களின் மனங்களில் விதைத்துக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் வரலாற்றுச் சான்றுகள்
காட்டும் பதிவுகள் வேறு விதமாக உள்ளன.
அறியப்பட்டுள்ள சங்ககாலப் பகுதியிலேயே சாதியும் இறுகிப்போன வர்ணமும் உருவாகியச் சமூகம், முடியரசுகள் தோன்றுவதற்கான
நல்ல சூழலை உருவாக்கியிருந்தது. அறியப்படாத
சங்ககாலப் பகுதியும் இருந்துள்ளதற்கான தடயங்கள் தொல்காப்பியத்திலேயே உள்ளதால் சங்க காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கும்
முற்பட்டதாகவே கருதவேண்டியிருக்கிறது. `கோம்பை நடுகல் கல்வெட்டுகளும்
அதை உறுதிப்படுத்துகின்றன.
ஆகவே, நிலஉடமையோடு தோன்றிய
சாதி மற்றும் வர்ண நீதியும்,
தண்டமும் சமூகத்தில் ஆட்சியியலோடும் தொடர்புடையதாகத் தோன்றி நிலைத்து விட்டன.
இதன் வெளிப்பாடாக அமைந்தவை தான் நீதி நூல்கள். அவற்றுள்
தண்டனை முறைகள் உள்வாங்கப்பட்டு உருவாக்கப்பட்டன.
வடக்கே உபநிஷதங்களும், அர்த்தசாஸ்திரமும், மனுஸ்மிருதியும், கீதையும் இவ்வாறு உருவாகியவையே. சமூகத்தால்
உருவாக்கப்பட்ட இவைகள் சமூக வளர்ச்சியை
மட்டுப்படுத்தி வைத்திருந்தன. இவை எல்லாம் சோழப்
பேரரசுக்கு உதவியாக அமைந்து விட்டன.
அறியப்படாத சங்ககாலப் பகுதி என்பது தான்
வடக்கே உபநிஷத்துகள் தோன்றிய காலப்பகுதியாகும். மகதப்பேரரசு
அஜாதசத்துருவோடு தொடங்குகிறது. அர்த்தசாஸ்திரம் சந்திரகுப்தமௌரியன் காலத்து மனுஸ்மிருதிக்கும் பிந்தையது. மகாபாரதம்
பலகட்டங்களில் புதுப்பிக்கப்பட்டது. கீதை இடைச்செருகல். கீதை
மனுஸ்மிருதிக்குக் கொஞ்சம் முன்போ, பின்போ
உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். இப்பார்வையோடு
வரலாற்றை நோக்கினால் வடக்கு தெற்குக்கு நாகரிகத்தைக்
கொண்டு வந்து சேர்த்தது என்பது
வெற்று பேச்சு, உள்நோக்கம்
கொண்டது என்பது தெளிவாகும்.
சூரியவெளிச்சத்தையும் மேய்ச்சல் தரையையும் தேடி அலைந்த ஆரியக்குழுக்கள்
இந்தியாவில் முல்லை நிலப் பகுதியில்
தங்கியபோது உருவானது ரிக்வேதத்தின் புருஷ சூக்தம். இக்கட்டத்தில்
தான் கலப்பு ஏற்படுகிறது. இதனோடு
வளரும் சமூகத்தில் தான் உபநிஷதங்கள் உருவாகின்றன. தனியுடைமையும்
அரசும் தோன்றியக் காலப்பகுதியில் உருவான உபநிஷதங்களும், அர்த்தசாஸ்த்திரமும்,
மனுதர்மமும், கீதையும் நிர்வாக
இயலைப் போதிக்கின்றன. இவற்றினோடு சேர்ந்து தான் பிராமண மதமும்
உருவானது.
இந்தியாவில் சாதிச்சமூகம் வர்ணச்சமூகமாக இறுகி மாற்றம் பெற்றதானலேயே
பேரரசு தோன்றுவதற்கான சூழல் உருவாக முடிந்தது.
ரிக்வேத காலத்தில் வர்ணங்கள் இருந்திருந்தன எனினும் பேரரசு தோன்றவில்லையே
ஏன்? ரிக்வேதகால வர்ணம் இளக்கமுடனான குலச்சமூகச்
சமூகத்திற்கு உரியது.
ரிக்வேத புருஷன், வேலைப்பிரிவினையை
உருவாக்க வர்ணத்தைத் தோற்றுவிப்பதாகவே உள்ளது. ஆனால், அதில்
ஏற்றத்தாழ்வில்லை. அதேசமயம் வர்ணமாற்றம் நிகழமுடிந்தது. வர்ண
மாற்றம் என்பது ஒரு குலக்குழு
உறுப்பினர் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை
விட்டுவிட்டு வேறொரு வேலையைச் செய்ய
முன்வரும் போது அல்லது தெரவிசாகச்
செய்யமுடியாத வேலையை விட்டுவிட்டுத் தெரவிசாகச்
செய்ய முடிந்த வேலையை ஏற்றுக்
கொள்வது. இதை,
குழு கூடிக் கூட
முடிவு செய்திருக்கக் கூடும். அப்போது அவ்வேலைக்குரிய
வர்ணத்தவராகக் கருதப்படுவார். இந்த
வர்ண மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தவரை
சமூகத்தில் ஏற்றத்தாழ்வு தோன்றியிருக்க வழியில்லை.
அப்படித் தோன்றிய வேலைப்பிரிவினையைச்
உபநிஷத் காலத்தில் தான் மறுக்கப்பட்டது.
வர்ணம் இறுகிப்போனது. எனவே,
வேதத்தோடு முடிச்சுப் போட்டுப் பார்ப்பது பிராமணர்களை ஆரியர்களாகக் காட்டவே உதவும். மேலும்,
உபநிஷத்துக்கள் பிராமணர்களால் உருவாக்கப்பட்டவை அன்று. சத்திரியர்களால் உருவாக்கப்பட்டவை.
வடஇந்தியாவில் தமிழகத்தைப் போல அருகருகே நா
நிலப் பாகுபாடு ஐந்திணை ஒழுக்கமும் நிலவவில்லை.
என்றாலும், முல்லையும் மருதமும் அருகருகே பரவலாக நிலவியிருந்ததைப் புராணங்கள்
மூலம் அறியமுடிகிறது. எனவே, முல்லைத்திணையில் (வடக்கே)
குடியேறிய ஆரியர், இந்தியப்பழங்குடிகளோடு மணவுறவு கொள்ள
முடிந்தது. திணைக்குட்பட்ட மணவுறவைக் கொள்ளத் தடையில்லை என்பதே
போதுமானதாயிருந்தது.
வேதகாலமொழி ஆரிய மொழி. சமஸ்கிருதம் அறிஞர்களால் பன்மொழிக்கலவையாக உருவாக்கப்பட்ட மொழியே. பிராமணர்கள்
அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். அதாவது ரிக்வேத புருஷ
சூக்தமும், உபநிஷத்தத்துவமும் அதன் பண்பாடுகளும்
இந்திய மண்ணுக்கே உரியவை. ஆரியர்கள்
இவற்றில் அடையாளம் தெரியாமல் கலந்து விட்டனர். தமிழகத்தில்,
தமிழை இரண்டாமிடத்திற்கு தள்ளி வைத்து சமஸ்கிருத
மொழியே ஆட்சி மொழியானது. தமிழர்களின்
பண்பாட்டுக் கூறுகளையே பிராமணமதம் உள்வாங்கிக் கொண்டிருந்திருக்கிறது என்றே
அறிய முடிகிறது. இவ்வாறே பழைய இந்தியாவின்
இதர பகுதிகளிலும் மக்கள் மொழிகள் இரண்டாமிடத்திற்குத்
தள்ளப்பட்டன. அப்போது தான் தொடர்பு
மொழியாகத் தோன்றி, பொதுமொழியாக சமஸ்கிரும்
நிலைகொண்டிருக்க வேண்டும்.
சோழபேரரசை
இராசராசன் படைத்தான் என்றால் அதன் பின்னணியில்
இயங்கிய தத்துவம் என்ன?
என்ற கேள்வி எழுவது இயல்பானதே.
இதற்கு விடை காண நாம்
பக்தி இயக்கக்காலத்திற்கு பயணிக்க வேண்டும். அப்படியானால் பக்தியியக்கம் தோன்ற காரணமாக இருந்த
காரணிகளை நாம் கவனம் கொள்ள
வேண்டியிருக்கின்றது.
"...பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் தான், கொடுங்கோன்மையை எதிர்க்கும்
உரிமை உண்டென்று பிராமண நூல்கள் கூறுகின்றன.
இக்கலகங்களின் நோக்கம் அரசனை ஒழிக்க
வேண்டும் என்பதல்ல. கொடுங்கோலனையோ, திறமையற்றவனையோ நீக்க வேண்டும் என்பதே.
அத்தகைய கிளர்ச்சிகளுக்கே அந்நூல்கள் ஆதரவளிக்கின்றன. அபாயம்
வரும் காலங்களில் கூட வேளாண்மக்கள் ஆயுதம்
தாங்கக் கூடாது என்ற தடையின்
காரணமாக உழவர்களின் கலகங்கள் துரிதப்பட முடியாமல் போயிற்று. கலகம்
நடைபெற முடியாமற் போன பொழுதும், குடிபெயர்ச்சிக்கு
வாய்ப்பு இல்லாத பொழுதும் உழவர்களின்
எதிர்ப்புணர்ச்சி பக்தி இயக்கமாக எழுந்தது...’’
(ரொமிலாத்தாப்பர்)
அப்படியானால் கொடுங்கோன்மை என்பதன் பொருளென்ன? வர்ணதர்மத்திற்கு
எதிராக இருப்பதே ஆகும்.
தேசாந்திரங்களில்
ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்ட
பிராமணமதத்தவர்கள் தங்களுக்கே உரித்தான தந்திர உபாயங்களைக் கொண்டும்
அவர்கள் இயற்றிக் கொண்ட தண்டச் சட்டங்களைக்
கொண்டும் தங்கள் வசம் இருந்த
புனரமைக்கப்பட்ட பிராமணத்தத்துவத்தைக் கொண்டும் எளிதாக ஆட்சி அதிகாரங்களில்
அவர்கள் இணைந்து கொள்ள முடிந்தது.
அதனைக் கொண்டு அனைத்து மக்களையும்
ஒருங்கிணைவு கொள்ளச் செய்து வைத்திருக்க
முடிந்திருக்கிறது. அவர்கள்
மேற்கொள்ளும் யக்ஞ, யாகங்களின் மூலம்
கைக் கொண்டிருந்த சடங்கு ஆசாரங்களால் மக்கள்
சுரண்டலுக்கு உள்ளானார்கள். இந்தச்
சுரண்டலுக்கு எதிராக திரண்ட மக்கள்
தேசாந்திரங்களில் சமண, பௌத்த மதங்களில்
தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர்.
ஏழாம்,
எட்டாம் நூற்றாண்டுகளிலும் அதன் முன்னும் கோலோட்சிய
சமண, பௌத்த மதஆட்சிகள், தன்னதிகாரம்
கொண்டு வேளாண்மக்களின் மீது நடத்திய வன்முறைகள்
நீண்ட தொடர்ச்சியைக் கொண்டுள்ளன என்பதை வரலாற்றுப் பக்கங்கள்
மெய்ப்பிக்கின்றன.
இக்காலங்களில் தான் புராதன சமூகத்தின்
அடுத்த கட்டமாக வளர்ந்த சமூகம்,
மேலும் தன்னை வளர்த்துக் கொள்ளத்
தடையாயிருந்தவற்றைத் தகர்த்தெறிந்திட சிவ, வைணவ பக்தி
இயக்கங்கள் தோன்றி வளர்ந்தன.
இந்த வரலாற்று வகைப்பாட்டில்
இம்மண்ணின் புராதன சமூக மக்கள்
தாந்திரீகத் தன்மையோடு கூடிய சிவலிங்க வழிபாட்டைக்
கொண்டிருந்தனர். நிலவுடமை முழுதும் அரசனுக்கு உரியதானதாக இருந்த காலத்தில் தோன்றிய
சிவவழிபாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து மக்கள் மதமாக
வீறுகொண்டெழுந்தது.
இக்காலக் கட்டத்தில் சிவமதம், பிராமண மதத்திற்கு எதிராகக்
கட்டமைக்கப்பட்டதின் கமுக்கம் இதுவே. பின்னர் சிவனுமே
பிராமண மதத்தால் உள்வாங்கப்பட்டு விட்டது. சமணமும் பௌத்தமும் துறவறத்தைப்
போதித்தன. அது மக்களிடம் உள்ள
ஆசையை அறுக்கவே பயன்பட்டன. சொத்தும் வாரிசுரிமையும் ஆசைக்கு அடிப்படையாக இருந்தன.
ஆசையை மக்களால் அறுத்தெறிய முடியவில்லை. அது
தான் சமூக யதார்த்தம் என்பதையும்
மறுப்பதற்கில்லை.
சமூகம் முன்னோக்கிய வளர்ச்சியில்
தவிர்க்க முடியாதவையும் கூட. வளர்ந்த பின்னர்
அரசனும், வணிகரும் அம் மதங்களுக்கு தந்த
நிவந்தங்களால் அவை உடமைவாதிகளாகி விட்டன.
சமண, பௌத்தமதங்களும், பிராமணமதம் போல ஆனது
இதனால் தான் பிராமணியமதம்
போலாகிவிட்ட இம்மதங்களுக்கு எதிராக சிவமதமும், வைணவமதமும்
பக்தி இயக்கத்தைக் கட்டவிழ்த்து விட்டன. சிவமதம் நேரிடையாக
மக்கள் வாழ்வியலில் ஒட்டுறவோடு செல்வாக்கை பெற்று இருந்தது. இம்மதத்தை முன்னெடுத்து சென்றனர் வேளாண்குடி மக்கள். அவர்கள், தங்கள்
தாய்மொழியாகக் கொண்டிருந்த தமிழ்மொழியையும், தன்னுரிமையையும் பண்பாட்டையும் இழக்கச் செய்யும்படியான பேரரசுகள் தோன்றின.
வைசியக்குடிமக்களுக்கு, வணிகத்தை
தேசாந்திரங்கள் முழுமைக்கு தங்குதடையின்றி செய்திடவும் கடல் கடந்து சென்றிவுடம்
ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது. அப்படியான வேலையில் வணிகர்களுக்கு உற்றதுணையாக சமணமதம் விளங்கிற்று. கூடவே,
சமணப்பள்ளிகளுக்குத் தேவையான பொருளாதாரத்தை இந்த
வணிக சமூகத்தால் மட்டுமே இட்டு நொப்ப
முடிந்தது. அதற்கு ஏற்ப இவ்வணிகர்கள்
தாங்கள் வணிகம் செய்யுமிடங்களில் எல்லாம்
சமணத்தை பரப்பிட முன்வந்தார்கள்.
கடற்கரைப் பட்டினங்களின் மூலம் நடத்திடும் வணிகத்தின்
வழியாக கிடைத்திட்ட வருவாய் மிகுதியாகவும்
வேளாண்தொழில் மூலம் அரசுக்கு கிடைத்திட்ட
வருவாய் குறைவாகவும் அமைந்திடும் போக்கு இருந்தன. இந்த குறைந்த வருவாய்
மூலமே வேளாண்மைத் தொழிலை நடத்திட - நீர்ப்பாசனத்திற்கு
அரசு பராமரிப்பு செலவினங்களையும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத்
தள்ளப்பட்டது.
அதே நேரம் வணிகத்தின்
மூலம் பெருவாரியான வருவாயைத் தரும் வணிகர்கள் பக்கம்
அரசுகள் நின்று வணிகர்களின் தேவையை
உடனுடக்குடன் நிறைவேற்றித் தந்தன. கூடவே, வேளாண்உற்பத்திப்பொருட்களை,
வேளாளர்களிடம் வாங்கி ஏற்றுமதியைச்
செய்யும் போது வணிகர்கள், தீர்மானித்த
விலைக்கே வேளாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை
விற்றாக வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள்.
வணிகர்கள் இப்படிச் சுரண்டி கொழுப்பதை அரசுகள்
பாராமுகமாக பார்த்துக் கொண்டிருந்தன. இதனால்
சமணமதம், வேளாளமக்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியாற்று.
`...சமண மதம் தனது
ஆதரவாளர்கள் போர் புரிவதிலும் ஏன்
வேளாண்மையிலும் கூட ஈடுபடக்கூடாது என்று
தடைவிதித்திருந்தது. இவ்விரண்டிலும் உயிர் ராசிகள் கொல்லப்பட்டதே
இதற்கு காரணம். இதன் விளைவாக
சமணர்கள் பிரதானமாக வணிக நடவடிக்கையைப்
பணம் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையோடும் நிறுத்திக்
கொண்டனர். இப்படியானவர்கள்
பெரும்பாலும் வளமிக்கவர்களாக வளர்ந்திருந்தனர். சமணமதம் அவர்கள் வாழ்க்கையில் பெரும்பங்களிப்பை
ஏற்றியிருந்தது. அதுபோலவே சமணமத வளர்ச்சிக்கு அவர்கள்
ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை தந்து
சமணப்பள்ளிகளை வளப்படுத்தி வைத்துக் கொண்டனர்...’ ( பண்டைகால இந்தியா - ஆர்.எஸ்.சர்மா)
சமணமதமும் பௌத்தமதமும், மக்கள்
சமூகவாழ்வியலின் மையப் புள்ளியாக
இருந்த குடும்ப வாழ்வை அதாவது
இகவாழ்வின் சுகபோகங்களை, ஆண்பெண் உடல் இன்பங்களை
முன்நிறுத்தவில்லை. ‘இப்படியான இகவாழ்வு வம்ச விருத்திக்கு மட்டுமே
உரிதானவை’ என்ற கொள்கைகளை
மக்களிடையே போதித்தன. உடல் இன்பங்களை வெறுக்கவும்
செய்தனர். இதற்கு நேர்எதிரிடையானக் கொள்கையை
சிவமதம் மக்களிடம் போதித்தது. சிவமதம்
வாழ்வியல் நடைமுறையை
ஏற்றுக் கொண்டதோடு சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள
முனைந்தது. வெகுமக்களின் நலவாழ்வை மையப்படுத்தி, வளர்ச்சிப்போக்கை அடைந்தது என்று சொல்லுவது மிகையாக
இருக்காது என்று நம்பலாம். சிவலிங்க
வழிபாட்டைக் கொண்டு இருந்த சிவமதமோ,
தென்னிந்திய மண்ணில் வேளாண்மை தத்துவத்தை,
மக்கள் மொழியாகிய தமிழ் மூலம் மேன்மை
படுத்திக் கொள்ள, தாந்திரிக
வாழ்முறையை முன்னிறுத்தி உள்ளடக்கியிருந்தது.
ஆரம்பகால வேளாண்சமூக வாழ்வில், சிவலிங்க வழிபாடானது முழுதும் தாந்திரிகத் தன்மை கொண்டு இருந்தது
என்பதையும் இவ்விடத்தில் கவனம் கொள்ள வேண்டும். அதனால்
தாந்திரீகத்தில் லிங்க
வழிபாட்டினுள் உள்ளாந்தமாய் இருந்த சக்தி வழிபாட்டையும்
இணைத்து சிவபெருமான், பார்வதியை வடிவமைத்துக் கொண்டனர். இவர்களின் வழியே உடல்இன்பங்களை உள்
இகவாழ்வின் அடையாளமாய் முன் வைத்த வழிபாட்டை
முன்வைக்கப்பட்டது. இந்த சிவபெருமான், பார்வதி
படைப்பின் மூலம் இகவாழ்வின் சுகஅனுபவங்களை
மக்களிடம் கொண்டு சென்று சிவமதத்தின்
பக்கம் மக்களைத் திரட்டினர்.
இப்படியான வளமையை முன்கொண்டு சென்றவர்களில்
குறிப்பிடத்தக்கவர்கள் திருநாவுக்கரசரும், ஆளுடையப்பிள்ளை என்று அழைக்கப்பட்ட ஞானசம்பந்தரும்
ஆவர்கள்.
இந்திய
மண்ணில் தோன்றிய மதங்களின் வளர்ச்சி
பற்றி நாம் குறிப்பாகக் காணவேண்டியிருக்கிறது. வேதக்கடவுளர்கள்
அமைப்பு ஆணாதிக்க மிக்கது. இதற்குக் காரணம் ஆண்கள் போரில்
ஈடுபட்டனர் என்பதன்று. வேதகாலக்கடவுளர்களை உருவாக்கிய மேய்ச்சல் பொருளாதாரம் காலத்தால் பிந்தியதில்லை. எனவே வேதகாலக் கடவுளர்கள்
செல்வாக்கிழக்க வேண்டியிருந்தது. தாய்வழித்
தலைமைச்சமூகம், தந்தை வழிச்சமூகமாக
மாறும் காலத்திற்கு இடையில் மறுமக்கள் தாயமுறை மூலம் ஆணாதிக்கம்,
நிறுவனம் பெற்றுள்ளதாகக் தெரிகிறது.
ஆனால், தாய் வழி
உரிமைமுறையின் மிச்சங்களை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை. விவசாயிகளாக
இருந்தபடியால் இந்தியாவின் வெகுஜனங்கள் அவர்களுடைய பழைய தாய்க்கடவுள் அல்லது
சக்தியை வணங்கினர். இந்தியக்
கடவுள் அமைப்பில் முற்காலத்தில் ஆண்கடவுளர்கள் இல்லாமலில்லை. அவர்கள்,
வேளாண்மைத்தொழில் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் இருந்தனர்.
அவர்கள் பொதுவாகப் பின்னுக்குத்தள்ளப்பட்டனர். அல்லது பெண்தெய்வத்துடன் இணைக்கப்பட்டனர். சிவலிங்கத்தை
சக்தி வழிபாட்டோடு இணைக்கப்பட்டதைச் சிறந்த எடுத்துக்காட்டாக நாம்
கருத வேண்டியிருக்கிறது.
தாய்வழி உரிமைமுறையின் பண்புகள்
உள்ள சிந்து வெளிச் சின்னங்கள்
மதம் சார்ந்த தன்மைகள் உள்ளவை
என்பது மார்ஷல் கருத்து. இவை
பற்றி அவரது கூற்றுகளை கவனத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவின்
மதவரலாற்றில் பெண்மைக் கோட்பாடு பெற்றிருந்த முக்கியத்துவத்திற்குக் காரணம், ரிக்வேத
காலத்திற்குப் பிறகு ஆரியர்களைப் பிரித்துப்
பார்க்க முடியாதபடி இந்தியப்பழங்குடி மக்களோடு கலந்து விட்டதேயாகும். இந்த
மண்ணுக்குரிய பண்புகளோட கலந்து போனதாக கொள்ள
வேண்டும் என்று கூற
விரும்புகிறோம். இந்தியாவில் பெண்கள் விவசாயத்தைக் கண்டுபிடித்த
காலக்கட்டத்தில் மட்டுமில்லாமல் எழுதப்பட்ட இந்திய வரலாற்றில் இருந்தும்
காணலாம். அதே போன்று பெண்மைக்
கோட்பாடு தொடர்ந்து வலுவாக இடம் பெறுவதற்கான
காரணம் அதனைப் பின்பற்றிய மக்கள்
பெரும்பாலும் விவசாயத்தைச் சார்ந்தவர்களாகயிருந்ததே ஆகும்.
``...பெண்தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக்
காரணம் அது தோன்றிய சமுதாயத்திலே
தாய் வழி முறை நிலவியதே
என்பது ஆராய்ச்சியாளர் காட்டும் உண்மையாகும். சிரியா, சின்னாசியா, எகிப்து
முதலிய இடங்களில் பெண்தெய்வ வழிபாடு தோன்றியதற்கும் இத்தகைய
சமுதாய முறையே காரணமாகும். பண்டைய மக்களிற்
பெரும்பகுதியினர் தாய்வழி உரிமையைக் கடைப்பிடித்தனர்.
இதன் காரணமாகப் பெண்தெய்வ வழிபாடு தென்னிந்திய
மக்களிடையே பெரு வழக்காயிருந்தது என்று
சமூகவியல் அறிஞர் கொள்வர்...
...வெளித்தோற்றத்திற்குப் புலப்படும் நகர நாகரிகச் சின்னங்கள்
தென்னிந்தியாவிற்கும் சிந்து வெளி நகரங்களுக்கும்
நேரிடையான தொடர்பைக் காட்டாவிட்டாலும் சமய நம்பிக்கை சம்பந்தமான
தொடர்புகளை காட்டுவதை நாம் கவனிக்க வேண்டும்.
பெண்தெய்வ (சக்தி) வழிபாட்டைக் கொண்டிருந்தனர். இவற்றின்
இணைப்பாக இலிங்க வழிபாடும் நிலவியது.
புதைபொருள்களில் ஏராளமான லிங்கங்கள், மொகஞ்சதாரோவிலும்
கண்டெடுக்கப்பட்டன. இவ்வாய்வில் ஈடுபட்டிருந்த மார்ஷல் அவற்றைச் சிவலிங்கங்கள்
என எடுத்துக் காட்டினார். இலிங்க வழிபாடானது உழவுத்
தொழிலை மேற்கொண்டிருந்த பல புராதன நாகரிகங்களில்
காணப்படும் வழிபாட்டு முறையாகும்...
"..நீண்டு குவிந்த கல்வடிவ
ஆண்குறியின் அடையாளமாகவும், அக்கல்லைச் சூழ்ந்த வட்டக் கல்
வடிவம் பெண்குறியின் அடையாளமாகவுமே முன்னையோராற் கருதப்பட்டது. சிந்துவெளி நாகரிகத்திற்குச் சமமான பிற நாகரிக
மக்களிடையேயும் இவ்வழிபாட்டு முறை நிலவியது. ஆண்,பெண் குறிச்சேர்க்கையே
பண்டைக் காலந்தொட்டு இலிங்க வடிவில் அமைந்தது
என்பது பிற்காலச் சைவசித்தாந்த சாத்திர நூலானும் அறியக்கிடக்கிறது...''
``...சக்தியுஞ் சிவமுமாய தன்மையிவ் வுலகமெல்லாம்/ ஒத்தொவ்வா
ஆணும்பெண்ணும் உயர்குண குணியுமாக/ வைத்தனன்
அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை
யெல்லாம்/ இத்தையும்
அறியார்பீட லிங்கத்தின் இயல்பு ஓரார்'' என்று
சிவஞானசித்தியார் தத்துவ விளக்கத்தோடு உரைப்பது
பண்டு தொட்டு வந்த உண்மையே
என்பதில் ஐயமில்லை. சிவனை உணர்ந்து அறிந்து
வழிபடுதற்குச் சிறந்த `அடையாளம்' அல்லது
`குறி ' லிங்கம் என இன்று
வரை கருதப்படுவதும் மனங்கொளத்தக்கது. சைவசித்தாந்தத்தின் வளர்ச்சிக் கிரமத்தையும் படிமுறையையும் அறிந்து கொள்வதற்கு இவ்வுண்மை
முக்கியமானதாகும்..'' (பண்டைத் தமிழர் வாழ்வும்
வழிபாடும் - கலாநிதி க.கைலாசபதி)
ரிக்வேதக்கடவுளர்கள் ஆண்களே. கோத்திரக்குழுவின் தலைவன்
ஆணே ஆவான். (கோத்திரம் என்பது
பசுக்கூட்டத்தை சொத்தாகக் கொண்ட ஆண்மகனையே குறிக்கும்)
கோத்திரத்திற்கு உட்பட்டவர்கள் சகோதர சகோதரிகள் ஆவார்.
அதனால் இக்கோத்திரர்கள் வேற்றுக் கோத்திரத்தில் தான் மணவுறவு கொள்ள
முடியும்.
"...ரிக்வேதத்தில் வரும் `புருஷன்’ பெருந்தெய்வம்
என்று கொள்ள வேண்டும். இவன்
இந்தியாவில் உருவாகிறான்.
அதற்கு முன்பாகவோ ஈரான் நாட்டிலிருந்த போதே
இரு வர்ணங்கள் தோன்றிவிட்டன...’’ இது அம்பேத்கார் கூற்றாகும்.
வர்ணங்கள் உலகின் எல்லா குலக்குழுக்களிலும்
வேலைப் பிரிவினையாகத் தோன்றித் தொல்குடித்தன்மை மறையும் போது வர்ணமும்
மறைந்து விட்டன என்பது வரலாற்று
அறிஞர்கள் நமக்குத் தரும் செய்தி. இந்தியாவில்
மட்டும் முதலாளித்துவச் சமூகம் தோன்றும் வரை
அது இருந்தது. இப்போதும்
வர்ணம் இருந்த இடத்தில் வகுப்பு
ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் ஆதிவாசித்தன்மையும், நிலவுடைமைச்
சமூகத்தன்மையும், முதலாளித்துவச் சமூகத்தன்மையும் இடம் பெற்றுள்ளன.
இதற்குக் காரணம் சாதிச் சமூகமே. சாதி,
இக்காலம் வரை எல்லாச் சமூகத்துக்கும்
உரியதாக இருந்து வருவது தான்.
இந்தச் சாதி அமைப்பு
ஆரியர், இந்தியாவுக்குள் வருவதற்கு முன்பே இந்தியாவில் தோன்றிவிட்டன.
இந்தியச் சமூகத்தில் ஆணாதிக்கம் சாதிச் சமூகத்தின் தோற்றத்திலேயே
அடங்கியுள்ளது. திணைச்
சமூகம், நமக்குத் தரும் தகவல் அதுவே.
ஆரியக்குழுக்களில் இருந்த வர்ணம் ஆதிவாசித்
தன்மையுடைய இளக்கமுள்ள வர்ணங்கள் ஆகும். நிலவுடைமைக்
காலத்து வர்ணங்கள் இறுகிப்போனவை சாதிச்சமூகம் போலவே. இந்த மாற்றம்
ஆரியக்கலப்பு நேர்ந்த காலகட்டத்தில் இந்திய
மக்களிடம் இருந்த சமூக அமைப்புக்குத்
தகுந்தவாறு நிகழ்ந்த மாற்றமாகும். அந்தக் காலக்கட்டமே பண்ணையடிமைச்
சமூகம் தோன்றிக் கொண்டிருந்த காலகட்டமாகும்.
சாதி, இந்தியா முழுமைக்கும்
பொதுவாக இருந்ததால் வர்ணமும் இந்தியா முழுமைக்கும் பொதுவானதாக
இருக்க வேண்டியதாயிற்று. வர்ணச்சமூகத்தின்
இறுகிய தன்மை பண்ணையடிமைச் சமூகத்தின்
படிமமாக உள்ளது. தத்துவங்களும்
நிர்வாக இயலும் அதற்கேற்பவே உருவாக்கப்பட்டன.
சத்திரியர்களால் உருவாக்கப்பட்ட உபநிஷதங்கள், அர்த்தசாத்திரம், மனுஸ்மிருதி, கீதை முதலானவை இப்படி
உருவானவையே. பிராமணர்கள் தங்களை ஆரியர்கள் என்று
காட்டிக் கொள்ள கோத்திரத்தையும் சமஸ்கிருதத்தையும்
கைப்பற்றிக் கொண்டார்கள். உண்மையில் ரிக்வேத ஆரியமொழியும் சமஸ்கிருதமும்
ஒன்றானதல்ல. சமஸ்கிருதம் பன்மொழிக்கலவையான அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. அது என்றும் மக்கள்
மொழியாக இருந்ததில்லை.
இந்தியா முழுமையிலும் தொடர்பு
கொள்ள பிராமணமதம் சமஸ்கிருதத்தையும், சமணம் பிராகிருதத்தையும், பௌத்தம்
பாலியையும் பொதுமொழியாகப் பயன்படுத்தத் தொடங்கின. இப்படி உருவானது தான்
பொதுமொழிக் கோட்பாடு. இந்தக் கோட்பாடுதான் இந்தியப்
பொதுமொழி என்பதிலும் நீடிக்கச் செய்கிறது.
பக்தியியக்கம், ஒடுக்குமுறைக்கு எதிரான மதம் சார்ந்த
எழுச்சி என்பதால் வட்டார மொழியில் - தமிழில்,
மதம் சார்ந்த இலக்கியங்கள் பெருவாரியாகத்
தோன்றின. இப்படி உருவானவையே சிவ,
வைணவ இலக்கியங்கள்.. (ஆனால்
சிவ வைணவக் கடவுளர்கள் சங்ககாலத்துக்கு
முன்பே இங்கே தோன்றியிருந்திருக்க வேண்டும்)
அதனால் தான் ஆட்சியதிகாரப் பொது
மொழிகளுக்கும் தமிழுக்குமான
முரண்பாடு இன்று வரை நீடித்து
வருகிறது.
பிராமணியம் என்பது இம்மண்ணுக்கே உரிய
நிலவுடைமையோடு ஒட்டிப்பிறந்த குழந்தை. இதற்கேற்பவே கடவுள், தத்தவம், மதம்
இவையெல்லாம் உருவாகியிருந்திருக்க வேண்டும் மாறாக
இவை தான் சமூகத்தை உருவாக்கியது
என்பது சமூக இயலுக்கு முரணானது.
இக்கடவுள்கள் உருவான காலத்திலேயே
சமண, பௌத்த மதங்கள் வர்ணத்துக்கு
எதிராகக் குரல் கொடுத்ததால் மக்களிடம்
செல்வாக்கு பெற்றன..
பௌத்த,
சமண மதங்களைப் பின்பற்றியோர், முறையே பாலி,
பிராகிருத மொழிகளைத் தொடர்பு மொழியாக வெளிப்படுத்தினர். இந்திய
தேசாந்திரங்களில் ஏகபோக ஆட்சி மொழியாக
அதிகாரத்தில் ஏற்றி வைத்துக் கொண்டு
இருந்தனர். வடதேசாந்திரங்களில் உள்ள இனக்குழுக்களின் மொழிகள்
சிதைந்து போனாலும் அதிகாரமொழிகளோடு ஒத்திசைவு கொள்ளும் படியான மொழி அமைப்பைக்
கொண்டு இருந்தன. இதனால் இம்மதங்களுக்கு
பெரும்படியான எதிர்ப்பும்
கிளம்பிட வில்லை. ஆட்சி மொழிக்கும்
மக்கள் மொழிக்கும் இடைவெளி பெரிதாக இல்லாமல்
போனது.
அதேசமயம் தென்தேசாந்திரங்களில் இந்த நிலைமை முற்றிலும்
மாறுபட்டு இருந்தது. இத்தேசாந்திரங்களில் மக்கள் மொழியாக இருந்த
தமிழை, அந்த ஆட்சி மொழிகளோடு
எந்த வகையிலும் உறவு படுத்த முடியவில்லை.
அந்த அளவிற்கு தமிழ்த் தனித்தன்மை கொண்டிருந்தது.
மக்கள் மொழியாகிய தமிழ் ஆட்சி அதிகாரத்தில்
இருந்தவர்களால் புறம் தள்ளப்பட்டது. வெகுமக்கள்
இப்படியான போக்கை கலகப்படுத்தும் நிலைக்கு
வந்ததும் சமண, பௌத்தமதங்கள் அதன்
பள்ளிகளிலும், மடங்களிலும் மக்கள்
மொழியை ஏற்கச்செய்து இலக்கியங்களை தமிழ் மொழியில் படைப்புகளாக
ஆக்கும் முயற்சிக்கு ஊக்கமளித்தன. இப்படியாய் இரட்டைக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, மக்களைத் தக்க வைக்கும் முயற்சியில்
ஈடுபட்டன. இதனால் தமிழில் சமண
பௌத்தக் கொள்கைகளை உள்ளடக்கமாக கொண்ட எண்ணற்ற அறஇலக்கியங்கள்
தோன்றின.
பௌத்த, சமணமத இலக்கியங்கள்,
துறவு வாழ்க்கையைத் தான் அறமாக முன்வைத்தன.
ஆண்பெண் இன்ப இகவாழ்வை வெறுத்து
ஒதுக்கினஎன்பது குறிப்பிடத்தக்கது
அவ்விலக்கியங்கள் பெரும்பாலும் இம்மண்ணில் வாழும் வேளாண் மக்கள்
வாழ்க்கையைப் பிரதிபலிக்க வில்லை. அம்மக்களிடம் இவ்விலக்கியங்கள்
போய் சேர்ந்து விடவுமில்லை. அப்படியே போய் சேர்ந்தாலும் பெரும்
நிலஉடமையாளர்கள் பக்கமும் வணிகர்கள் பக்கமுமே நின்றன. அவற்றை வெகு
மக்கள் ஏற்க வில்லை. இந்த
நேரத்தில் பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்தில் முக்கியப்
பொறுப்பேற்று இருந்தார்கள். சங்ககால வர்ணஅமைப்பில் தலைமை
இடத்தில் இருந்த வேந்தர்களை இரண்டாம்
இடத்திற்குத் தள்ளினர். பிராமணர்கள்
முதலிடத்தில் வைக்கப்படும் வர்ணஅமைப்பைப் பிராமணமதம் முன்னிறுத்தியிருந்தது.
பிராமணமதத்தினால்
சமணபௌத்த மதங்கள் எந்தவித பாதிப்புக்கும்
உட்படவில்லை. அவர்களில் பலர் சமண, பௌத்த
மதங்களோடு நல்லுறவைப் பேணிவந்தனர். அம்மதங்களில்
கூட தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
இப்படி அவர்கள் இந்த மதங்களோடு
இணைந்து கொண்டது கூட தங்கள்
சுயநலப்போக்கால் தான். அவ்விடம் இருந்தபடியே
அவர்கள் பிரமணக்கொள்கையை விட்டு வெளியே வரவில்லை.
மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தார்கள். சமணமதம், சமூகத்திலும் அவர்கள் வழிநடத்திய கொள்கைகள்
பண்பாடாக மலரமுடிந்திருக்கிறது. அதை
ஒட்டிப் படைத்திட்ட இலக்கியங்களில் பிராமணமதக் கருத்தாக்கங்களை உட்புகச் செய்தனர். தமிழில் ஐம்பெரும் காப்பியமாக
தலைமை இடத்தில் உள்ள சிலப்பதிகாரத்தைக் குறிப்பிட்டுக்
காட்டலாம். மேலும், சமுகக் கட்டுமானத்திலுள்ளதே
நீதி மற்றும் பண்பாட்டுத் தளத்திலும்
வரும் எனவும் கொள்ளலாம்.
முன்னர்
சுட்டிக் காட்டப்பட்டபடி சமண, பௌத்த மதங்கள், மக்கள்
கொண்டிருந்த இகவாழ்வின் இன்பங்களையும், வேளாண்உற்பத்தியில் கைகொள்ளப்பட்ட குலக்குழு சமூகத்தில் எச்சமாக இருந்த தாந்திரீகச்
சடங்குகளையும், ஒடுக்குமுறைக்கு உட்படுத்தின. இப்படியான
போக்குகளை வேளாண்மக்கள் எதிர் கொள்ளும்படியான தேவை
அவர்களுக்கு ஏற்பட்டது. கூடவே, மக்கள் தங்கள்
தாய்மொழியாகிய தமிழ் மூலம் ஆட்சியாளர்களோடு
தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால்
நடைமுறையில் இம்மக்கள் பல இன்னலுக்கு ஆளாக
வேண்டியிருந்தது.
இம்மண்ணில் சமூக வளர்ச்சியோடு போட்டி
போட்டுக் கொண்டு வளர்ந்த வேளாண்மக்கள்,
தங்கள் வழிபாட்டுச் சடங்குகளில் சிவலிங்கத்தைப் பிரதான இடத்தில் வைத்திருந்தனர்.
சிவஆலயங்களையும், சிவவழிபாட்டையும் நெறிப்படுத்த அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட வடிவமே ஆகமம் ஆகும். இவ்வாகமம்,
மக்கள் மொழியாகிய தமிழிலேயே அமைந்திருந்தது.
இந்திய மண்ணில் வந்தேறிய
வேதவர்களிடம் கோவில் வழிபாடோ, உருவவழிபாடோ
இருந்ததில்லை. வேதங்களில் அதற்கான சான்றாதாரங்கள் இல்லை.
உபநிஷதங்கள் எழுதப்பட்ட பின்னர் அதை நடைமுறைப்படுத்தும்
அதிகாரத்தைப் பெற்று விட்டனர் பிரமணர்கள். இம்மண்ணில்
பூர்வீக வழிபாடான சிவவழிபாட்டை வயப்படுத்திட
அவர்களுக்கு ஒரு வடிவம் தேவைப்பட்டது.
சமணப் பள்ளிகளையும், பௌத்த
விகாரைகளையும் அம்மதத்தவர்களால் நிர்வகித்து வந்த நடைமுறைகளை உள்வாங்கிக்
கொண்டு இம்மண்ணில் வளர்ந்திருந்த ஆகமத்தோடு ஒத்துப் போகக் கூடியவைகளையும்
கலந்து பிராமணமதத்தின் கொள்கையை உயர்த்திப்பிடிக்கும்படியான வேதஆகமதத்தை எழுதிக் கொண்டார்கள். இந்த
வேதஆகமம் சமஸ்கிருதத்தை முன்னிறுத்தியது.
வேளாளர்கள், சிவஆலயங்களில் சிவஆகமம் வழியாக நிர்வகித்து வந்த
தேவதானக்கட்டளைகள், பிராமண மதத்தவர்கர்களின் பொருளாதாரத்தோடு
போட்டிப் போட முடியாமல் போனது. பிராமணமதமோ
சமஸ்கிரும் தேவமொழி என்றும் சமஸ்கிருதமே ஆலயங்களில்
வழிபாட்டுக்கு உரியது என்றும் விதந்து
உரைத்தது.. கூடவே, புரோகிதத்தையும் சமஸ்கிருதமயமாக்கியது.
ஒருபக்கம் தேவதானக்கட்டளைகளின் கீழ் இருந்த வேளாண்குடிகளைச்
சமண,பௌத்த மத எழுச்சி,
உள்வாங்கிக் கொண்டு விட்டது. இதனால், தேவதானக்கட்டளைகள் முன்பிருந்த
பழைய பெருமைகளை இழந்ததோடில்லாமல் பொருளாதார வறுமையாலும் சுருண்டு போய் கிடந்தன
இதுகாறும் தேவதானக்கட்டளைகளின் கீழ் இருந்து ஆட்சியில்
பங்கு கொண்டிருந்த தமிழ் மொழி வழியாக
வழிபாட்டை நடத்திய சிவாச்சாரியர்களையும், பிராமணர்கள் தங்களுக்குண்டான
தந்திர உபாயங்களை காட்டி மயக்கப்படுத்தினர். அதன்
மூலம் தமிழில் நடத்தி வந்த
சிவவழிபாட்டை நிறுத்தச் செய்திருந்தனர். சமஸ்கிருதத்தை தேவமொழி என்ற உயரிய
இடத்திற்கு அவர்களால்
கொண்டு செல்ல முடிந்திருக்கிறது.
அவர்கள் செய்திட்ட வேதஆகமப் புனைவுக்குள் வேளாண்மக்களை உட்படுத்தினார்கள். சிவஆலயங்களில் சமஸ்கிருதத்தில் வழிபாட்டை நடத்திடுவதில் வெற்றிப் பெற்று விட்டார்கள். இதனால்
சிலவிடங்களில் இருந்த தேவதானக்கட்டளைகள்
சமரசப்படுத்திக் கொள்ளாமல் வேதஆகமத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டும் இருந்தன.
கிராமசமூகத்தை இதுநாள்வரையிலும் பாதுகாத்து வந்த தேவதானக்கட்டளைகளுக்கு பதில் பிராமணபரிஷத்,
சபா, என்ற அமைப்புகளின் கீழ்
கொண்டு வந்தனர். தமிழ்மண்ணில் தமிழைத் தாய்மொழியாகவும் சிவப்பண்பாடாகவும்
கொண்டிருந்த சிவாச்சாரியார்களையும் வெற்றி கொண்டு விட்டதால்.
அவர்களையும் இணைத்து பிரமணபரிஷத் என்ற
விரிந்த இந்த அமைப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.
கிராம வாழ்வில் மற்ற வர்ணத்தார்களை உள்ளடக்கியது
தான் சபா. இந்த சபா
தனித்த அதிகாரத்தைக் கொண்டு இருந்தாலும், பிரமணபரிஷத்துக்கு
கட்டுப்பட்டே இருக்க வேண்டும் என்பதை
நிலை நிறுத்திக் கொண்டார்கள்.
இரண்டு
அமைப்பையும் இம்மண்ணில் பெரும்பான்மையான இடங்களில் அமைத்து வெற்றிக் கொண்டார்கள்.
கிராமப்பொருளாதாரம் அவர்கள் வசம் சிக்கிக்
கொண்டு விட்டது. கிராமச்சமூகத்தை
பிராமணபரிஷத் சுவீகரித்துக் கொண்டது. ஆதியில் இந்தியமண்ணில் வந்தேறிய
வேதவர்கள் இங்குள்ள பழங்குடிகளோடு கலந்த போது, வேதப்பண்பாட்டும்
கரைந்து போனது.
இதே காலகட்டத்தில் தான்
பண்ணையடிமைச் சமூகமாக (சாதியை உள்வாங்கிய அல்லது
சாதியைத் தொகுத்த சமூகமாக) வர்ணசமூகம்
இறுக்கமடைந்து பிராமணப்பண்பாடு உருவாகக் காரணமானது அப்படியானவர்கள் மட்டுமே தனித்து `சமிதி'
என்ற அமைப்பின் கீழ் திரண்டிருந்தார்கள். இந்தச்
சமிதி தான் புதிய பிரமணமதத்தைச்
சிவமதத்தோடு கலந்து கட்டமைக்கும் இடத்தில்
இருந்தது. இதைத்
தான் கிராமசமூகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல் திட்டத்தை
பிராமணபரிஷத் மூலம் நிறைவு செய்து
கொண்டு இருந்தது.
சிறுபான்மையான மக்கள் தொகையைக் கொண்டிருந்த
பிராமணர்கள் அரசாட்சியில்
பெரும்பங்கு கொண்டு அரசைத் தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள்.
இந்த நேரத்தில் சமணமும், பௌத்தமும் தங்கள் கொள்கைகளைப் பரப்புவதிலும்
மக்களைத் திரட்டுவதிலுமே கவனம் செலுத்திக் கொண்டு
இருந்தன. இதைப் பயன்படுத்திக் கொண்ட
பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்திற்குள் தங்களை
வளர்த்துக் கொண்டு விட்டார்கள்.
அரசர்கள் வழங்கிய நிலக்கொடையை, பிராமணர்களை
நிலஉடைமையாளர்களாகவும், சமூகத்தில் அதிகாரம் மிக்கவர்களாகவும், மாற்றிவிட்டது. அதனைத் தங்களுடைய தேவைகளுக்கும்
பயன்படுத்திக் கொண்டனர். மேலும்,
கிராம சபாக்களை நடத்திட வேண்டி பொருளாதாரத்தை
தேடிக்கொள்ள அரசாட்சியின் சட்டங்களின் மூலமே பிரமணர்களுக்கு என்றே
சதுர்வேதிமங்களம், பட்டமங்களம், பிரமதேயம், ஏகபோகம் என்ற வடிவத்திற்குள்
நிலங்களை சுவீகரித்துக் கொண்டார்கள். இதனால் ஆட்சி அதிகாரம்
முழுதுமே அவர்கள் கைக்குள் அடங்கிக்
கிடந்தன. தேவதானக் கட்டளைகள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டவைகள் ஆயின.
வேளாண்மையைத் தொழிலாகக் கொண்ட வேளாளர்களாக அடையாளப்பட்ட
பிள்ளைமார்கள், முதலியார்கள்,
உடையார்கள், தீண்டாமைக்கு உட்பட்டு இருந்த பறையர்கள், பள்ளர்கள்
மற்றும் இவர்களுக்கு பண்பாட்டுத் தளத்தில் துணைபுரிந்த சாதியினரும் பொருளாதாரத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் ஒடுக்கப்பட்டு விட்டனர். இதனால், பிராமணர்களின் தலைமையில்
கீழ் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விட்டனர். தமிழும் சிவமதமும் பெரும்
அழிவுக்குப் போய்க் கொண்டு இருந்தன.
இந்த நேரத்தில் பழையாறை
சோழ சிற்றரசு, தான் இழந்து போன
அரசை மீட்டு எடுக்கும் முயற்சியில்
இறங்கியது. இதற்கு
ஊக்கமளிப்பது போல சிவமத அறிவாளிகள்
தமிழை முன்னிறுத்திய சிவவழிபாட்டைப் பரப்பிடவும் சிவஆட்சியை கட்டமைக்கும் திட்டத்தை வடிவமைத்துத் தந்தார்கள். அவர்களே முன்னின்று சோழகுலத்தின்
பலத்தோடு மக்களைத் திரட்டும் முயற்சிக்கு புதிய வழியைக் கண்டுபிடித்தார்கள்.
அதாவது, சிவமதத்தில் உள்ளடங்கி
தனித்தனிக்குழுக்காளாக பிரிந்து கிடந்த தத்துவங்களை ஒருங்கிணைத்து
சிவமதத்தத்துவம் என்ற வடிவத்தை வடிவமைத்தார்கள். ( கவனத்திற்கு பனிரெண்டாம் நூற்றாண்டுக்குப்பின் வடிவம் கொண்ட சைவசித்தாந்தம்
அல்ல.) குறிப்பாக பாசுபதம், வாமம், கபாலிகம், மாவிரதம்
பிரிவுகளின் கூட்டுக்கலவையாகியது சிவமதம். தமிழிசையையும்
சிற்பக்கலையையும் வாமத்தின் உட்கூறுகளையும் உள்ளடக்கியிருந்தது. அதன்
தாக்கம் பக்தி இலக்கியத்தில் மிகுந்து
வெளிப்பட்டன.
முதல் முதலில் பக்தியியக்கத்தைத்
தோற்றுவித்த காரைக்கால் அம்மையார் சிவபக்தியில் மூழ்கி சிவத்தொண்டில் ஈடுபட்டு
பதிகம் பாடியும், மக்களைக் கவரும் சித்துவிளையாட்டுக்களை நடத்திக் காட்டி
ஈர்த்திருந்தார். .சிவமதத்தை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற
முதல் முயற்சி இவரிடம் காணமுடிகிறது. இவரையே
பக்தி இயக்க முன்னோடி என்று
கொள்ள இடம் உண்டு. நந்தன்
உள்பட இந்த வரையறையில் அடக்கலாம்.
இப்படியான சிவப்பணியை மேற்கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்
திலகவதியார். இவருக்கு உடன்பிறந்தவர் திருநாவுக்கரசர். (இயற்பெயர் மருள்நீக்கியார்) இவர்கள்
சிவமதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான காபாலிகத்தை சேர்ந்தவர்கள்.
இம்மண்ணில்
சமணமதம் பெரிதும் மக்களால் ஈர்க்கப்பட்டு இருந்த காலமாகையால் மருள்நீக்கியாரும்,
`வீரசேனர்’. என்ற பெயர் சூட்டிக்
கொண்டு சமணத்தில் இணைத்துக்
கொண்டு விட்டார். திராவிடதேச மேலை மண்ணில் புகழ்
பெற்று இருந்த பாடலிபுத்திரத்தில் சமணத்துறவியர்கள்
ஆயிரக்கணக்கில் கூடி தத்துவ விவாதம்
நடத்தும் காலத்தில் இவரும் அவர்களோடு பங்கு
கொண்டார். அவர்களில்
குறிப்பிடத்தக்கவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
எந்த பிரமணர்களின் சமூக
ஒடுக்கு முறையில் இருந்து வேளாண் சமூகம்
விடுபட வேண்டும் என்று விரும்பி சமணத்தில்
இணைந்ததோ, அச்சமண
மதத்திற்குள் பிரமணர்கள் தங்கள் ஆதிக்கத்தை வடிவமைத்துக்
கொண்டனர். சமணத்திற்குள் இருந்த வேளாளர்கள் அவர்கள்
பிடிக்குள் இருந்து இன்னும் வர்ணதர்ம
கோட்பாட்டிற்குள் இறுக்கம் அடைந்தார்களே தவிர விடுபடவே வழியில்லை
என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தார் திருநாவுக்கரசர்.
இச்சமணத்தில் இருந்து விடுபட தக்க
தருணம் எது? என்று எதிர்பார்த்துக்
கொண்டிருந்தார்.
இவருக்கு உண்டான கொடிய நோயை
போக்கும்படியான சமணமதம் கொண்டிருந்த மருத்துவம்
அவருக்கு உதவிட வில்லை. கொலை
நோயில் இருந்து விடுபட முடியாமல்
மரணவாயிலில் தள்ளப்பட்டுவிட்டார். சிவத்தொண்டில்
ஈடுபட்டு இருந்த அவரின் உடன்பிறந்தாள்
திலகவதியாரை அடைந்தார். துண்ணூற்று வைத்தியத்தின் மூலம் அவர் நோயைப்
போக்கினார் திலகவதியார். திருநாவுக்கரசர், தன்னை சிவமதத்தில்
இணைத்துக் கொண்டு விட்டார். சமணஆட்சியில்
அழுத்தமாக வேர் ஊன்றிக் கொண்ட
பிரமணர்கள், `சமணத்தில் இருந்து தத்துவத்தில் செல்வாக்கு
பெற்று வீரசேனராக இருந்த திருநாவுக்கரசர் வேளாளர்களை
தாந்திரீகத்தில் இருந்து விடுவித்து வைத்திருப்பவர்களை
விழிப்படையச் செய்து விடுவார்’ என்று
உணர்ந்து கொண்டனர்.
அவரை அரசஅதிகாரம் கொண்டு
மிரட்டி பணிய வைத்து மீண்டும்
சமணத்திற்கே கொண்டு வரும் முயற்சியில்
ஈடுபட்டனர். அதே
நேரம் பிராமணமதம் வேளாளமக்களிடையே சொர்க்கம், நரகம் என்ற கருத்தாக்கங்களை
போதித்து வைத்திருந்தது. அதன் மூலம் மக்களை
அச்சுறுத்தி தங்கள் பக்கம் ஈர்த்து
வைத்துக் கொண்டனர்.
திருநாவுக்கரசர், சமணமதமும்
பிரமணமதமும் நடைமுறைப்படுத்தியிருந்த தந்திர உபாயங்களை எல்லாம்
தகர்த்து எறிந்தார். அரசதிகார
மிரட்டல்களை எள்ளிநகையாடினார். ``நாமார்க்குங்
குடியல்லோம் நமனை யஞ்சோம் / நரகத்தில்
இடர்படோம் நடலை யில்லோம் / ஏமாப்போம்
பிணியறியோம் பணிவோம் அல்லோம் / இன்பமே
எந்நாளும் துன்பம் இல்லை.'' என்று
வேளாண்மக்களிடம் சிவமத
எழுச்சிக்கான வேட்கைக் கனலை மூட்டினார். வேளாண்மக்கள்
அவர் பின்னால் வீறு கொண்டு எழுந்தனர்.
சிவஆலயங்கள் தோறும் தனி ஒருமனிதனாக
பயணித்து சிவபெருமானை வணங்கி ஆலயத்தில் உழவாரப்பணி
செய்து வர புறப்பட்டு விட்டார்.
இதே காலத்தில் பிராமணமதம்
தன் விரிவாக்கத்தை வெகுவாகத் தொடங்கியிருந்தது. இந்திய அளவில் பிரமணத்தத்துவத்தில்
ஞானவான் என்ற உயர்ந்த இடத்தில்
இருந்த கௌடபாதர் மாயாவாதத்தத்துவத்தை உள்ளடக்கிய பிராமணமத தத்துவத்தைப் பரப்பிடுவதில் முனைந்து தன் மாணாக்கர்களிடையே `பிரம'
தத்துவத்தை கொண்டு சென்றார். அவருடைய நேரிட்ட மாணவர்கள்,
தேசாந்திரங்களில் புனரமைக்கப்பட்ட பிராமணமதத்தைப் பரப்பி வந்தார்கள். அவர்களில்
ஒருவர் தான் இப்புனைவில் வரும்
நிஷாங்கரர். எட்டாம்
நூற்றாண்டுக்கு பிற்பாடு இந்த
மாயாவாததத்துவத்தை மக்களிடையே பரப்பி பெரும் திரட்சியை
கூட்டிய காலடி சங்கரர் அல்ல
இந்த நிஷாங்கரர் என்பதையும் கவனம் கொள்ள வேண்டும்.
பிற்காலத்தில் பேர் பெற்ற சங்கரர், கௌடபாதரின்
மாணவருக்கு மாணவராக இருந்து கற்ற
அத்தத்துவத்தை இந்தியாவின்
கடைகோடியில் இருந்து வடகோடிவரை பயணித்து,
அத்தத்துவத்தைப் பரப்பினார். அத்தத்துவத்தை பரப்பிட என்றே, அக்காலங்களில்
சமண, பௌத்த மதங்கள் தங்கள்
கொள்கைகளைப் பரப்பிட அமைத்திருந்த மடங்களை,
மாதிரியாகக் கொண்டு இந்தியாவில் நான்கு
மடங்களை நிறுவினார். அதன் வழியே இம்மண்ணில்
சாதிதர்மத்தைக் கட்டவிழாமல் காக்கச் செய்து, வேதஆகமத்தைக்
கொண்டு சிவஆலயங்களில் பிராமணமத
ஆளுகைக்கு விரிவாக்கியவர் அல்லவா?
சாதியும் வர்ணமும் இந்தியா முழுமைக்குமான பொதுவான
சமூகம் என்பதால் வேதாகமம் என்னும் பொதுக் கோட்பாட்டைப்
பிராமணர்களால் வடிவமைக்க முடிந்தது.
கௌடபாதரின் மாணவர்கள் இம்மண்ணில் முன்னிறுத்திய தத்துவம் மக்களை பூடகத்தில் ஆட்படுத்தி
அவர்கள் வாழ்வை சூனியத்தில் தள்ளி
விடும் என்பதை பரப்பிடும் நோக்கில்
திருநாவுக்கரசர், ``மாசில் வீணையும் மாலை
மதியமும் / வீசு
தென்றலும் வீங்கிள வேனிலும்/ மூசு
வண்டறை பொய்கையும் போன்றதே/ ஈசன் எந்தை இணையடி
நீழலே.'' என்று பதிகம் பாடி,
பிராமணமதத்திற்கு எதிரிடையான பொருள்முதல் வாதத்தத்துவத்தைப் பொறுத்தி சிவபெருமானை எவ்வகையிலும் கண்டடையலாம் என்பதை மக்களிடம் பரப்புதலில்
ஈடுபட்டார். அது
மட்டுமல்லாமல், இப்பதிகத்தில் கண்டுள்ள `ஈசன்' என்ற சொல்லாட்சி
சிவனை மட்டும் குறிப்பதாக இல்லை.
பிரமத்திற்கும் விடையாகக் கொள்ள இடம் இருக்கிறது.
சிவமத விரிவாக்கத்தைக் கொண்டிருந்த
திருநாவுக்கரசர், அவர் வாழ்ந்த கால
சமூகம், `குலம், கோத்திரம், சாத்திரங்களில்'
சிக்கிக் கிடந்தது.
""""சாத்தி
ரம்பல பேசும் சழக்கர்கள்/ கோத்திரமும்
குலமும் கொண்டு என்செய்வீர்?/ பாத்தி
ரம்சிவம் என்று பணிதிரேல்/ மாத்திரைக்குள்
அருளும்மாற்பேறரே!'' என்று பதிகம் பாடி
சிவமக்களிடையே சாத்திரத்தையும் சாதியையும் கோத்திரத்தையும் விட்டொழிக்கும் குரலை உயர்த்தியவர் அல்லவா?
இவர்
பதிகத்தோடு நிறுத்திடாமல் தன் வாழ்நாளில் கண்டடைந்த
சிவஆலயங்கள் தோறும் உழவாரப்பணி செய்து
மக்களை சிவத்தின் பக்கம் ஈர்த்திடும் திருவிழாக்களை
நடத்தி சாதிவேறுபாடு கருதாமல் மக்களைத் திரட்டி சிவமதத்தை கட்டமைத்துக்
கொண்டிருந்தார். இந்தச் சிவமதம் சங்ககால
மதக்கட்டமைப்பில் இருந்து சிறு
மாறுபாடு கொண்டதாகும்.
இப்படியான பக்தி இயக்கக்காரர்கள் தான்,
தாந்திரீகத்தில் இருந்த லிங்கவழிபாட்டையும் சக்திவழிபாட்டையும்
இணைத்து சிவபெருமான், பார்வதிதேவி என்ற சிவசக்தி வழிபாட்டை
முன்னிறுத்தினார்கள். இந்த சிவபெருமான், பார்வதிதேவியர்
மூலமே இகவாழ்வின் சுகஅனுபவங்களை மக்களிடம் கொண்டு சென்று சிவமதத்தின்
பக்கம் வேளாண்மக்களைத் திரட்டும் வடிவத்தை ஏற்படுத்தினார்கள்
``...நமது மரபு வழிபட்ட
அறிவில் கொள்கையம்சமே யதார்த்த நிiயென்று கருதப்பட்டது.
இதனால் நமது பழமையை நாம்
கல்லின் இடையே கண்ட சின்னங்களைப்
போல வார்ப்பை உடைத்த வடிவமைப்புப் போல
என்றும் மாறாத ஓர் உருவத்தில்
பழமையை அறிந்திருக்கிறோம். பழமை மேன்மையானது பொற்காலம்
என்ற கருத்தால் பாதிக்கப்பட்டு சமூக செயல் முறைகளை
அறிய முடியாமலும் திண்டாடுகிறோம்...
...ஒவ்வொரு காலத்தின் தொழில்
நுணுக்கத்தையும், பொருளாதாரத்தையும் ஆராய்வதால், நம் பண்பாட்டை அலட்சியம்
செய்கிறோம் என்பது பொருளல்ல. ஒரு
சமுதாயத்தின் முழுமையான வாழ்க்கையில் பண்பாட்டிற்குரிய இடத்தில் அதனை அமர்த்திக் காண்பதே
நமது நோக்கமாய் இருத்தல் பேண்டும். நமது வரலாற்றாசிரியர்கள் இந்தியப்பண்பாடு
சூன்யத்தில் தோன்றியது போலக் கருதி எழுதினார்கள்.
பண்பாடு என்ற அஸ்திவாரத்தை அவர்கள்
காண்பதில்லை...'' (ரொமிலாதாப்பர்)
முற்கால சோழபேரரசு தன்
வளத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் இழந்து
சுருங்கிசுருங்கி திருவாரூரிலும் பழையாறையிலும் ஒரு சிற்றரசுகளாக கால்
கொண்டிருந்தது. காஞ்சிபுரத்தைத் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து
கொண்டிருந்த பல்லவ அரசுக்கும், மதுரையைத்
தலைநகராகக் கொண்டிருந்த பாண்டிய அரசுக்கும் கட்டுப்பட்டு
கிடந்தனர். திருவாரூரில் இருந்த சோழசிற்றரசும் வீழ்ந்து
போனது. பழையாறை சோழகுலப் பெண்ணான
மங்கையற்கரசியார் பாண்டிதேசத்திற்கு மாதேவியானதால் பழையாறைசிற்றரசால் கொஞ்சம் மூச்சு விடும்படியான
போக்குகள் அமைந்து இருந்தன. இப்படியாய் சில காலம் தாக்குப்
பிடித்தாலும் நீடித்து இருக்க முடியாது என்ற
உண்மையை புரிந்து கொண்டு விட்டது.
இந்தக் காலக்கட்டத்தில் தான்
வணிகர்கள் கடல் கடந்து நடத்திய
வருவாய் பெரும் அளவில் குவிந்து
அவர்களே ஆட்சி அதிகாரத்திற்கு வரும்படியான
ஒரு தோற்றத்தை, வேளாளர்களால் உணர முடிந்தது. காரணம்,
இந்த வணிகர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள
சமணமதத்தோடு ஒன்றிணைந்து போனதால் வேளாளர்களால் தங்கள்
பயிர்த்தொழிலில் நீடித்து நிற்க முடியாதபடி வணிகர்களால்
சுரண்டப்பட்டார்கள்.
இத்தோடில்லாமல் தங்களுக்குண்டான உரிமையான சிவவழிபாட்டினை மரபு வழிப்பட்ட முறையில்
வழிபட முடிந்தவற்றிலும் சிவஆலயங்களை
நிர்வகிக்கும் தேவதானக்கட்டளையிலும் வணிகர்கள் தங்கள் பக்கம் சாய்த்துக்
கொள்ள அரசு துணை போனது.
வேளாளர்கள் கையில் இருந்த அனைத்து
உரிமைகளும் பறிபோனதும் தங்கள் வாழ்வுரிமையை கோரும்
கலகத்தைத் தொடங்கியிருந்தனர். இவ்விடத்தில் இந்தக் கலகத்திற்கு சிவமதத்தை
மீட்டு எடுக்கும் பயணம் மேற்கொண்டிருந்த திருநாவுக்கரசர் தலைமை
தாங்கியிருந்தார்.
இதே நேரத்தில் பல்லவ
அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் சமணமதத்தோடு
முகம் காட்டிக் கொண்டிருந்த பிராமணர்களின் வழிகாட்டலின்படியே, ஆதிசைவர்கள் என்று அழைக்கப்பட்ட சிவாச்சாரியார்கள்
பிராமணர்களின் சூழ்ச்சிக்கு தங்கள் சுயத்தை இழந்து
பிராமணர்களோடு கலந்து இருந்தார்கள்.
பிராமணர்களாக உருமாறியவர்களும் பிராமண குலத்தவர்களும் கைகோத்துக்
கொண்டு புனரமைக்கப்பட்ட பிராமணமதத்தின் பிடியில் சிவஆலயங்களை கொண்டு வந்து. வேதஆகமத்தையும்
சமஸ்கிருதத்தையும் கோவில்களில் நிலைநிறுத்திடும் பணியில் இறங்கியிருந்தனர். வடதேசாந்திரங்களில்
அவர்கள் எளிதாக தங்கள் இலக்கினை
அடைந்திருந்தார்கள். அப்படியான போக்கில் தென்தேசாந்திரங்களிலும் ஓரளவுக்கு
வெற்றியையும் ஈட்டியிருந்தார்கள்.
சோழசிற்றரசோடு இணைந்த சிவமத அறிவாளிகள்,
நீண்ட எதிர்காலத்திட்டத்தோடு, ``தென்னாடுடைய சிவனே!'' என்ற குரலை உயர்த்தி
தமிழும் சிவமதமும் ஆட்சி அதிகாரத்திற்கு ஏற்றப்பட
வேண்டும். அப்போது தான் வேளாண்குடிகள்
தங்கள் சுயஉரிமையைப் பெற முடியும் என்ற
பிரச்சாரத்தை துவங்கியிருந்தனர். திருநாவுக்கரசரின் சிவதலப்பயணத்தாலும் இந்தப் பிரச்சாரம் எளிதில் வேளாளமக்களைச்
சென்றடைந்தது.
சீர்காழி சதுர்வேதி மங்களத்தில், கௌனிகர் கோத்திரத்தில் பிறந்த
ஆளுடையப்பிள்ளையின் பெற்றோர், தங்களின் ஒரே மைந்தன் குலவழிப்படியே
சிவபெருமானுக்கு வழிபாடு நடத்திடும் பணியை
ஏற்கச் செய்து திருமணம் முடித்து
வைக்கும் நோக்கத்தில் இருந்தார்கள். அதே நேரம் ஆளுடையப்பிள்ளை
தன் குருகுலக்கல்வியை முடித்துக் கொண்டு வெளியே வந்ததும்,
தான் சிவமதத்தையும் தமிழையும் மக்களிடம் பரப்பிட சிவத்தலங்கள் தோறும்
சேத்திராடனம் செல்லும் நோக்கத்தை வெளிப்படுத்திட்டார். அதை அறிந்த சிவமத
அறிவாளிகளும், சோழச் சிற்றரசினரும்
ஆளுடையப்பிள்ளையின்
சேத்திராடனப்பயணத்தை வலுவான ஆயுதமாக பயன்படுத்திக்
கொண்டனர்.
தென்தேசாந்திரங்கள் முழுவதும் பயணித்த திருநாவுக்கரசர் தொடங்கிய
சிவஆலய வழிபாடும், உழவாரப் பணியும் ஒரு பக்கம் சிவ
மக்களை எழுச்சி அடையச் செய்து
கொண்டிருந்தன. அது போல அன்றைக்கு ஆளுடையப்பிள்ளையின்
சேத்திராடனப்பயணத்தை வழி நடத்திய பழையாறை
சோழச் சிற்றரசு அதன் இலக்கினை அடைய
வழிகோலியது. பத்தாம்
நூற்றாண்டில் வலிமை மிக்க சோழப்பேரரசு அமைய
மக்களாட்சி தத்துவத்தை அடி நாதமாகக் கொண்ட
பக்தி இயக்கம், படிக்
கல்லாக அமைந்தது. ஆனால், அப்படியான வெற்றியைப்
பிராமணர்களின் தந்திரஉபாயங்கள், சிவமதத்தத்துவத்தையும் தமிழையும் வீழ்த்தி புறம்தள்ளி, வேத ஆகமத்தை ஆலயங்களில்
நிறுத்தின. பிற்காலத்தில்
உருவான சோழப் பேரரசு, இன்றைய
ஒரிசா வரை பரவியது என்றால்
அதற்கு வேத ஆகமமும் ஒரு
துணை என்றே கொள்ள வேண்டும்.
பிராமணமதத்தவர்கள், இம்மண்ணில் தோன்றிய எந்த
மதத்தையும் விட்டு வைக்க வில்லை. அனைத்து
மதங்களிலும் தங்களை இணைத்துக் கொண்டு,
அவர்களுக்கே உரித்தான தந்திர உபாயங்களால் அந்த
மதங்களைச் சாரம் இழக்கச் செய்தனர்.
அத்தோடில்லாமல் அம்மத ஆட்சியில் அங்கம்
கொண்டு ஆட்சி அதிகாரத்தில் தங்களை
உட்படுத்திக் கொண்டு, பிராமணமதத்தை
விரிவாக்கிக் கொண்டனர். சமூக
அடித்தளம் இந்த வேலைக்கெல்லாம் இசைந்து
கொடுத்து பிராமணமதத்திற்கு அடித்தளமாக அமைந்து போனது.
புத்தமதம் தோன்றும் போது பொருள்முதல் வாதத்தை
கொண்டிருந்தது. அது காலப்போக்கில் கருத்துமுதல்வாதமாக
மாறியதற்குக் காரணமானவர்களாக இருந்தவர்களும் பிராமணமதத்தவர்களே. என்றாலும், சமூகத்துக்கு ஏற்றவாறு புத்தமதமும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியதாகி
விட்டது என்பதும் கவனத்துக்கு உரியது.
பிராமணமதத்தவனான நாகார்ஜுனன், பௌத்தமதம் தழுவி, செல்வாக்கு பெற்ற
துறவியாக அங்கிகரிக்கப்பட்டவன். அவன் பௌத்தமதத்தின் அடிப்படைத்
தத்துவத்தை தகர்த்தத் தந்திரத்தை வரலாற்றுப்
பக்கங்கள் நிரப்பிக் கொண்டு கிடக்கின்றன. அதனால்
தான் புத்தமதத்தில் மகாயானப்பிரிவு உண்டாகி உருவவழிபாட்டை ஏற்றுக்
கொண்டது என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.
சிவமதத்தின் வளர்ச்சிப்போக்கை உயர்த்திப்பிடித்த பக்தி இயக்கத்தில் தன்னை
உட்படுத்திக் கொண்ட ஆளுடையப்பிள்ளை என்று
அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், பிராமணமதத்தவர் என்று வெகுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு
இருக்கிறார். இதற்கு அவர் பிறந்த
குலத்தின் அடையாளமாக இருக்கும் கவுனிககுலம் பிராமணியமரபுக்கு
உட்பட்டது என்று நிறுவுகிறார்கள்.
இது திட்டமிட்டு பிராமணர்கள், தன்வயப்படுத்தியதின் தந்திர உபாயமே. அதை அப்படியே ஏற்றுக்
கொண்டு பொருள்முதல் வாததத்துவத்தை நோக்கி பயணிக்க முடிந்த
பக்திஇயக்கத்தை கருத்துமுதல் வாத போக்கில் திசை
திருப்பச் செய்தத்
தகிடுதத்தப் போக்காகும் என்பதற்கு தக்க சான்றாதாரங்கள் உள்ளன.
`பாத்திரம் அறிந்து பிச்சையிடு, கோத்திரம்
தெரிந்து பெண்ணைக் கொடு' என்று மக்களிடம்
புழங்கிய வாய்ச்செலவை நாம் பொத்தாம் பொதுவாய்
எடுத்துக் கொள்ள முடியாது. இன்றைக்கு
நேற்றைக்கு வழங்கப்பட்டு வருவதாகக் கொள்ள முடியவில்லை. இம்மண்ணில்
கோத்திரம் பற்றிப் பேசத் தொடங்கிய
காலத்தில் இருந்து புழக்கத்திற்கு வந்திருக்க
வேண்டும்.
`...நந்திவர்ம பல்லவன், தமிழ்மன்னர்களால் (யார் யார் என்ற
குறிப்பு இல்லை) முற்றுகைக்கு ஆளாகிய
ஊர் நந்திபுரம். இவ்வூர் கும்பபோணத்திற்கு மூன்று
மைல் தெற்கில் உள்ள நாதன் கோவிலுக்கு
ஒரு மைல் கிழக்கே உள்ளது. பேரரசனான
நந்திவர்ம பல்லவன், தன் ஆட்சியை நிலை
நிறுத்துவதற்காக உதயச்சந்திரனை தளபதியாக நியமித்திருந்தான். அவன் தலைமையில் சிலபகுதிகளை
தமிழ் மன்னர்களிடம் இருந்து மீட்டான். இப்படி
உதயச்சந்திரன் எந்தஎந்த வகையில் உதவி செய்து
யார்யாரிடம் போரிட்டு வெற்றி கொண்டு அரசை
ஊன்றினான் என்ற விபரத்தைத் தெரிவிக்க
வில்லை. என்றாலும், உபயேந்திரம் சாசனம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த உதயச்சந்திரன் வேண்டுகோளின்படி நந்திவர்ம பல்லவன், குமாரமங்கல வெள்ளட்டூர்க் கிராமத்தையும், கொற்றக்குடி கிராமத்தின் `ஜலந்திரங்களை' யும் (நீர் இறைக்கும்
ஏற்றங்கள்) உதயச்சந்திரமங்கலம் எனப் பெயரிட்டு நூற்றுஎட்டு
பிராமணர்களுக்கு தானம் செய்தான்...
`...நான்கு எல்லைக்குள் நதி,
கால்வாய், ஜாலம் (மதகு) இவைகளுடன்
அனுபவிக்கத் தகுந்ததும், எல்லாவிதமான நல்ல பரிகாரங்களுள்ளதுமான பூமியை
மற்ற அதர்ம வேலைகளை ஒழித்து
தானம் செய்யச் செய்து எழுதிய
உபயேந்திரம் செப்பேட்டின் மூலம் தானம் பெற்ற
108 பிராமணர்களின் கோத்திரம், சூத்திரம், ஊர் பெயர், பெறுபவனின்
பெயர்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. இந்த
அடங்களில் உள்ள பிராமணக் கோத்திரங்களில்
கவுணியன், சாண்டிலியன் ஆகிய இரண்டு கோத்திரங்களின்
பெயர் இல்லை. யாகங்களை நடத்தி
வைக்கும் பிரமணர்கள் மட்டுமே தானம் பெறும்
உரிமையைப் பெற்று இருந்தனர்.
இன்றைக்கும் சிவவழிபாடு நடத்தி வைக்கும் கோத்திராதிகள்
தங்களையும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அவ்வுரிமை,
அவர்களுக்கு அளிக்கப்பட
வில்லை. தவிரவும் இரண்டாம் நந்திவர்மன் காலத்து `தண்டத்தோட்டம்’ செப்பேடு சாசன தானப் பட்டிகைகளிலும்
சிவமாரப் பல்லவன் காலத்து `ஹல்லெகெரே’
செப்போடுச் சாசன, தானப் பட்டிகைகளிலும்,
மற்றவர்களின் செப்பேடுகளிலும் அதே நிலை தான்
தரப்பட்டுள்ளது. (பல்லவர் செப்பேடுகள் முப்பது
- உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்)
இதன் மூலம் நாம்
தெளிவாக உணரமுடிவது கவுணிகக்கோத்திரம் பிராமணகுலவழி கோத்திரத்தில் தொடர்பு உடையது அல்ல.
இந்த மண்ணில் உருவான பூர்வீக
தன்மை கொண்ட சிவாச்சாரிகளின் கோத்திரர்
என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. கூடவே, ஆளுடையப்பிள்ளை, ஞானசம்பந்தன்
என்ற பெயர்களும் இம்மண்ணின் பூர்வீக வேளாண்குடிகள் கொள்ளும்
பெயர்களே ஆகும். இன்றைக்கும் தாங்கள்
பிராமணக்குலவழி தோன்றியவர்கள் என்று தங்களை அழைத்தக்
கொள்பவர்கள், இப்பெயர்களை, நாமகரணபடுத்திக் கொள்வதில்லை. அதுமட்டுமல்லாமல் ஆளுடையப்பிள்ளை பிராமணக்குலவழித் தோன்றல் என்று ஒரு
வாதத்திற்காக ஏற்றுக் கொள்ளுவோம்.
ஆளுடையப்பிள்ளை,
தான் மேற்கொள்ளப்போகும் தேசாந்திர சேத்திராடனத்தின் நோக்கத்தை தெளிவு படுத்தி விடுகிறார்.
இவரை வழிநடத்தும் அறிவாளிகள் சிவமதத்தையும் தமிழையும் முன்னெடுத்து வேளாண்மக்களை திரட்டும் மக்கள் இயக்கத்தேவையை முன்
வைக்கிறார்கள். இந்த இயக்கம் தென்னாடு
முழுமைக்கும் சிவமதமும் தமிழும் ஆட்சி அதிகாரத்திற்கு
ஏற்றிட வேண்டும் என்பதே.
``சங்க நுhல்களில்
எந்த வேதம் சிவனருளிய வேதம்
என்று குறிப்பிடப்படுகிறதோ, எந்த வேதம் தமிழ்
இன அந்தணரோடு தொடர்பு படுத்திக் குறிப்பிடப்படுகிறதோ
அந்த வேதம் ஆரியர் வேதம்
அல்ல. என்றும் அந்த வேதம்
ஆரியர் வேதத்திற்கு வேறான தமிழர் வேதம்
என்றும் தமிழர்
வேதத்தோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள அந்தணர், தமிழ் இனத்தைச் சார்ந்தவரே,
பிராமணர் அல்ல என்றும் சங்கப்பாடல்களிலிருந்தே
அறிகிறோம். இவைகளையே பிற்காலத்தில் தோன்றிய திருமுறைகள் வலியுறுத்திக்
கூறி உறுதிப்படுத்தியுள்ளன. சிவன் நான்கு பிரிவு
வேதத்தை நால்வர்க்கு அருளி, ஆகமத்தையும் அருளியதாகக்
கருதப்படுவதற்கும், `அந்தணர்' என்ற சொல் ஆதியில்
தமிழினத்தினரைக் குறித்தது என்பதற்கும் ஆதாரம் திருமுறைகளில் உள்ளன.’’
(தமிழர் வேதம் - யு.சுப்பிரமணியன்)
நால்வகை வேதம் குறித்து
திருஞானசம்பந்தர் தன்னுடைய பதிகங்களில் குறிப்பிடுவது ஆரியர்களின் வேதம்
தான் என்று ஒரு சார்பாகச்
சொல்லிவருகிறார்கள். இதுவும் பிரமணர்களின் தந்திரஉபாயம்
தான். `வேதம் ஓதி வெண்ணூல்
பூண்டு வெள்ளை எருது ஏறிப்
பூதம் சூழப் பொலிப வருவார்
புலியின் உரித்தோலார்' எனவும் வேதம்
நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே'
எனவும் `மறை ஓதும் எங்கள்
பரமன்' என்றும் `தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன்' சிவபெருமானே வேதங்களை தொகுத்தவர் என்று தன் பதிகங்களில்
பலவிடங்களில் பதிவு செய்திருக்கிறார். இவர்
சொல்லியதெல்லாம் தமிழ்வேதமே என்பதே புலனாகின்றன.
இன்னும், சமணமதத்திற்குள் பிராமணமதத்தவர்கள் நுழைந்து அவ்விடமும் தங்களுடைய கீழறுப்பு வேலைகளைச் செய்ததைக் கண்டு வெறுப்புற்றே திருநாவுக்கரசர்
சிவமதத்திற்கு திரும்பிடுகிறார். பிராமணர்கள் கைக்கொண்டு இருக்கும் ஆரியவேதத்தை அவரால் எப்படி ஆதரிக்க
முடியும்? அவர் தன்னுடைய பதிகங்களில்,
`...உணர் மெய்ஞ்ஞானம் விரித்தவன் காண் விரித்த நால்வேதத்தான்
காண்' என்றும் `வேதந்தான் விரித்தோத வல்லானை' என்றும் `அருளாகி ஆதியாய் வேதமாகி'
என்றும் `வேதத்தின் பொருளானாய்...' என்றும் சிவபெருமானே வேதத்தின்
விளைபொருள் என்கிறார். அவை எல்லாம் தமிழ்வேதமே
என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடம் இல்லை என்று
தெளிவு பெறமுடியும்.
தமிழ்குறித்து, சிவம்குறித்து, ஆதிவரலாறு குறித்து ஆய்வுகளை எழுதிய மறைமலையடிகள், நா.சி. கந்தையாப்பிள்ளை போன்றவர்களும்
இப்படியான முடிவைக் கொண்டுடிருந்தனர் என்பதையும் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.
பக்தி
இயக்கவாதிகள் மக்களிடையே கொண்டு செல்லவேண்டிய தத்துவக்
கட்டுமானத்தைச் செறிவாக கொண்டு இருந்தனர்.
அதாவது சமஸ்கிருதமொழியையோ, பிராமணக்கடவுளரையோ, புனரமைக்கப்பட்ட வேதகாமத்தையோ முன்னெடுத்துச் செல்ல வில்லை. இவற்றை
வீழ்த்திடவே வேளாண்மக்களைத் திரட்டி கடுமையான உழைப்பையும்
உயிர்த் தியாகத்தையும் தந்திருக்கிறார்கள்.
ஆளுடையப்பிள்ளை, மேற்கொண்ட சேத்திராடனப் பயணத்தின் தொடக்க காலம் (பருவம்)
குறித்து சரியான ஆவணப் பதிவுகள்
வழியே அறிய முடிய வில்லை.
சேத்திராடனத்தின் போது திருத்தலங்களில் அவர்
பாடிய பதிகங்கள் கால நிர்ணயத்தை வெளிப்படுத்திடவில்லை.
தேவாரத் தொகுப்பாளர்கள் வரலாற்றுக் காலமுறைமையை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கிறார்களே தவிர அதிலும் தெளிவில்லை.
அவரவர் பார்வையில் வைப்புமுறை அமைந்திருக்கின்றன.
ஆளுடையப்பிள்ளை, பாலகனாக சேத்திராடனம் மேற்கொண்டார் என்பதும் அவருக்கு
சிவபார்வதி முலைப்பால்அமுது ஊட்டினாள் என்பதும் புராணக் கற்பனையே. மிகைபட ஏற்றிக் கூறும் சேக்கிழாரின்
கற்பனையே அன்றி வேறில்லை. புராணப் படைப்பாளிகளுக்கு இப்படியான
கற்பனை செய்து படைப்பைச் செய்திடும்
உரிமை உண்டு.
ஆளுடையப்பிள்ளை, குருகுலக்கல்வியை முடித்துக் கொண்டு திரும்பிடும் போது
அவருக்கு பதினான்கு அகவையைப் பெற்றிருக்க இடமுண்டு. அப்பருவமே சேத்திராடனப்பயணம் புறப்பட வாய்ப்பாக இருந்திருக்கும்.
இருபது வயதுக்குள் அவர் மறைந்து போனார்
என்பதை ஏற்றுக் கொள்ளல் உத்தமமாக
இருக்கும். காரணம்,
அக்கால சமூக சூழல் அப்படியானது.
பௌத்த, சமணமதங்கள் அழிவுக்கு உள்ளாகியிருந்தன. அவற்றின் மேல் பிராமணமதம்
எழுச்சி அடையும் திசையில் தான்
தேசாந்திர நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இதற்கு எழுதப்பட்டு இருக்கும்
வரலாற்று ஆவணங்கள் துணை நிற்கின்றன.
ஞானசம்பந்தர் வாழ்வின் கடைசி ஓராண்டு காலத்தில்
சேத்திராடனப்பயணம் மேற்கொண்டத் தலங்களை, அதுவும் என்னுடைய அவதானிப்பில் ஒருங்கிணைத்துக்
கொண்டேன். அதன் வழியே இந்தப்
புனைவு கட்டப்பட்டு இருக்கிறது.
அக்கால நிலஉடமைச் சமூகம்,
தன் தேவைக்காக உற்பத்திச் செய்து வைத்திருந்த தேவதாசி
சமூக நடைமுறையைக் கணக்கில் கொண்டேன். ஆளுடையப்பிள்ளையையும் தேவதாசி குலப்பெண்ணான மனோன்மணியும்
இகவாழ்க்கையில் ஈடுபாடு கொண்டார்கள் என்று
நான் புனைந்திருப்பது வாசிப்பாளர்களை புளங்காகிதம் அடையச் செய்யும் நோக்கத்தில்
இல்லை. அன்றைக்கு பௌத்த, சமணமதங்கள் இகவாழ்வின்
சுகஅனுபவங்களை வெறுத்து ஒதுக்கியிருந்தது. நான்
முன்பகுதியில் கூறப்பட்டபடியே சிவமதம்
தன் எழுச்சிக்கு இகவாழ்வின் சுகானுபவங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய
இடத்தில் இருந்தது.
`...அக்கால சிவமதத்திற்குள் அகப்புறச்
சமயங்கள் என்று பிரித்துக் காட்டும்படியாக,
`பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமசாரம், வயிரவம், ஐக்கியவாதம் போன்றவை இருந்தாலும் பாசுபதம்,
மாவிரம், காபாலிகம் இம் மூன்றுமே தங்களுக்குள்
தனித்த போக்கைக் கொண்டிருந்தன. வாமமும், காபாலிகமும் மிக நெருக்கமான வாழ்முறையைக்
கொண்டிருந்தன. ( திருநாவுக்கரசர் காபாலிகர், ஆளுடையப்பிள்ளை பாசுபதர். வேளாண்மக்களின் தொடக்கக் கால வழிபாட்டு முறையில்
தாந்திரீகம் முழுமை கொண்டிருந்தது)
`...தாந்திரீக வாமசாரத்தில் ஆண்-பெண் சேர்க்கையானது
பொருள் செல்வத்தை அதிகரிக்கச் செய்யும் என்று கூறுகிறது. ஆனால்,
இங்குப் பொருள் செல்வம் வேளாண்
விளைப்பொருட்களை வைத்துக் கணக்கிடப்படுகிறது. இவை
வேளாண்சமூகத்தின் கருத்துகளாகும். உலகாயதவாதிகளும் வேளாண்மையின் முக்கியத்துவத்திற்குச் சார்பாக பேசுகிறார்கள் இதற்கு
ஆதாரங்கள் உள்ளன என்பதையும் இங்கு
குறிப்பிடலாம். உலாகாயுதம் என்ற பெயரே இதைக்
குறிக்கிறது என்று விளக்கலாம்...' (தேவிபிரசாத்)
அதனால் தான் பெண்ணின்ப
ஈடுபாடு என்பதை சிவமத அறிவாளிகள்
ஏற்றுப் போற்றுகிறார்கள். அதனால் தான் பக்தி
இலக்கியக்காரர்கள் தங்கள் படைப்புகளில் சிவபெருமான்
பார்வதிதேவியரின் இகவாழ்வின் வாழ்முறையைப் படைத்தார்கள். இக்காலத்தில் தான் கோவில்களில்
வளமை பெற்ற சிற்பங்களை வடிவமைத்தார்கள்.
`...மைதுனச் சிற்பங்கள் (காமச்குறிப்புடைய
சிற்பங்கள்) செழிப்பின், மந்திரவாத-சமய அடையாளமாகக் கருதப்பட்டன.
இவை மங்களமானவை என்று முற்காலத்தவர் கருதினர்.
தாந்திரீகப் பழக்கங்களின் செல்வாக்கே இத்தகைய சிற்பங்கள் தோன்றக்
காரணம்...' (ரொமிலாதாப்பர் - வரலாறும் வக்கிரங்களும்)
நிலஉடமைச் சமூகத்தில் கலகக்குரலை
எடுத்துச் சென்றவர்கள் அச்சமூகம் கைக்கொண்டு இருக்கும் பண்பாட்டு கூறுகளில் உள்ள அம்சங்களை தங்களுக்கு
உடன்பாடாக இருக்கும் தருணத்தில் அவற்றை மறுதளிப்பதில்லை. அப்பண்பாட்டோடு
தங்களை கலவைக்கு உட்படுத்திக் கொள்ளுவார்கள். அதுதான் வரலாறு நமக்கு காட்டும் அறிவு. நிலஉடமைச் சமூகத்தில் சீர்திருத்தம் செய்ய முற்பட்ட இளைஞன்
ஞானசம்பந்தன் மனோன்மணியோடு கலந்தது தவறு ஏதும்
இல்லை. கூடவே அவர் சமூகம் கொண்டிருந்த அறக்கோட்பாட்டினை
மீறினவரும் இல்லை. சிவமதம்
இப்படியான செயல்பாடுகளை ஏற்றுக் கொண்டிருந்தது என்பதும்
உண்மை. இக்காலச் சமூகம் அப்படியானவற்றை இழிவாகவும்
கருதியதில்லை. என்னைப் பொறுத்தளவில் மனோன்மணி
சிவத்தொண்டராக இப்புனைவின்
முதன்மையான இடத்தில் அமர்த்தப்பட்டு இருக்கிறாள் என்பதே.
பக்தியியக்கம், சோழப்பேரரசு அமைய அடித்தளமிட்டு வைத்தது.
வேளாளர்களை சிவமதத்தின் கீழ் ஒன்று திரட்டி
வைத்திருந்தது. இவற்றை இலகுவாக தன்
வயப்படுத்தும் நோக்கத்துடன் பிராமணமதத்தவர்கள் செய்த தந்திர உபாயம்
விரித்த வலையில், வளர்ந்து வந்த சோழஅரசு சிக்கிக்
கொண்டு விட்டது. அதுமட்டுமல்லாமல் வேளாண் மக்களையும் வேளாண்மையையும்
ஒடுக்கி புரோகிதர்களின் கையில் ஆட்சியை அளித்து
பெரும் நிலஉடமையை உற்பத்தி செய்து கொண்டது. ஒரு
பேரரசை கட்டிக்காக்கும் போக்கில் மக்களை வயப்படுத்தி வைத்திருக்கும்
தந்திரஉபாயமாகத்தான் சோழப்பேரரசை நிர்மாணித்த ராசராசனால் கட்டி முடிக்கப்பட்டது பெருஉடையார்
கோவில் என்று சொல்லுவது மிகையாக
இருக்காது.
அக்கோயிலின்
வடிவமைப்பும் அதில் வெளிப்பட்டு இருக்கும்
சிற்பக்கலையின் நேர்த்தியையும் காணும் நமக்கு வியப்பளிப்பதை புறம் தள்ளிட முடியாது. அக்கோவிலின்
அடிப்படையான அமைப்பும் வேதகாமத்தைப் பின்பற்றி அமைந்திட வில்லை. தமிழ் ஆகமத்தைக் கொண்டு
தான் இருக்கிறது. பிற்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேதகாமமுறைக்கு
கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை கோவில் கட்டமைப்பில்
காணமுடிகிறது.
பனிரெண்டாம்
நூற்றாண்டு வாக்கில் கட்டமைக்கப்பட்ட சைவமதமும், பக்தி இயக்கக்காரர்கள் கொண்டிருந்த
சிவமதமும் ஒன்றானது அல்ல என்ற புரிதலோடும்
தான் புனைவினை செய்திருக்கிறேன். இந்தப் புனைவு வாசிப்பவர்களின்
மனதில் அப்படியான போக்கைத்தான் ஒற்றிச்செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.
தொடக்கக்காலச் சைவம் தமிழ்ச்சைவம்.
இன்றைக்கு தமிழ்ச்சைவத்தை விழுங்கி வேதிய சைவமாகவே வளர்ந்திருக்கிறது.
மேலும், திணைச் சமூகத்திலேயே
சிவத்துக்கான இருப்பு இருந்திருக்க வேண்டும்.
அவ்வாறே வழிபாட்டு முறைகளும் இருந்துள்ளன. பக்தி இயக்கம் தான்,
சிவத்தைத் தோற்றுவித்தது என்றால் திணைச் சமூகத்தில்
இருந்த வழிபாட்டுமுறை எது என்னும் வினாவை
எழுப்பிடும். அதோடு சிவவழிபாட்டுக்கான அடிப்படைச்
சமூகத்தைக் கண்டறிய முடியாமலும் போகும்.
ஒன்றின் தொடர்ச்சி அதன் வளர்ச்சிப் போக்கில்
வேறொன்றாக அமைந்திருப்பது போலத் தோன்றினாலும் நம்
பண்பாட்டு வளர்ச்சியோடு அதனை ஒப்பிட்டுப் பார்த்தால்
அந்தத் தொடர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும்.
அப்படித்தான் திணைச் சமூகத்தின் மலைக்கடவுளரையும்
கயிலைமலைக்குரியவராகக் காட்டப்பபெறும் சிவனையும், அவன் மனைவி மலைமகள்
பார்வதியையும் உமையொரு பாகனையும் லிங்கவழிபாட்டையும்
இணைத்துப் பார்த்தால் நம் சமூக வளர்ச்சிக்கும்
பண்பாட்டு வளர்ச்சிக்கும் உள்ள இணையான தொடர்பை
உணரவும் விளங்கிக் கொள்ளவும் முடியும்.
சிவத்தொண்டர்களில் (நாயன்மார்களில்) குறிப்பிடத்தக்கவராக இருப்பவர் நந்தனார். அவர்
கால சமூக வாழ்க்கையை முன்
வைத்து என்னால் எழுதப்பட்ட `மரக்கால்’ நாவல்
பரவராகப் பேசப்பட்டது. தேர்ந்த வாசகர்கள் பலரும்
அந்நாவல் குறித்து நேரிட்டும், கடிதவாயிலாகவும் பேசியிருக்கிறார்கள்.
அப்படியானவர்களில் தமிழக அரசின் இந்து
அறநலத்துறையில் முதன்மைப் பொறுப்பில் இருந்து பணியாற்றி வரும்
திரு சி.செயராமன் அவர்களும்
ஒருவர். நாங்கள் ஒரு திருமண
விழாவில் சந்தித்துக் கொண்டோம். அப்போது, அவருடன் விரிவாக பேசும்
வாய்ப்பு கிட்டியது.
தஞ்சை மண்ணின் கீழக்கோடியில்
உள்ள சீர்காழி என்று அழைக்கப்படும் சிவபுரமே
ஆளுடையப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட திருஞானசம்பந்தர்
பிறந்த ஊராகும். சமணமதமும்,
பௌத்த மதமும் இம்மண்ணில் கோலோட்சிய
இம்மண்ணில் சிவமதமும் தமிழும் ஆட்சி அதிகாரம்
பெற மக்களைத் திரட்டும் நோக்கில் ஆளுடையப்பிள்ளை, சேத்திராடனப்பயணம் - பக்திஇயக்கப் பயணம் மேற்கொண்டிருந்தது குறித்தும்,
அப்போது, அவர் பிற சமண
மதத்தவர்களோடும், பௌத்த மதத்தவர்களோடும், பிராமண
மதத்தவர்களோடும் நடத்திய போராட்டம் குறித்தும்
பேச்சு நீண்டது.
கொள்ளிடக்கரையில் இன்றைக்கு ஆச்சாள்புரம் என்று
அழைக்கப்படும் திருநல்லூர்பெருமணத்தில் ஆளுடையப்பிள்ளை மணம் புரிய இருந்த
சொக்கியார், அவர்கள்
குடும்பத்தார், மற்றும் சிவத்தொண்டர்கள் பலரும்
தீயிட்டு பொசுக்கப்பட்ட சம்பவத்தை வாய்மொழி வரலாறாக சொல்லப்பட்டு வருவதைப்
பற்றி சொன்னதோடு விட்டுவிடவில்லை. இது பற்றி விரிவான
ஆய்வு மேற்கொண்டு நாவலாக படைக்குமாறு
என்னை உசுப்பிவிட்டார்.
தேவார மூவர் என்று
போற்றப்படுபவர்களில் குறிப்பிடத்தக்கவரான திருஞானசம்பந்தர் குறித்தும் அவர் சிவமதத்திற்கும் தமிழுக்கும்
செய்துள்ள பணிகள் குறித்தும் உள்ள
அகச்சான்றுகளைக் கண்டு கொள்ளும் தேடலை
மேற்கொண்டேன். திருஞானசம்பந்தர் தேவாரம், திருநாவுக்கரசர் தேவாரம், சேக்கிழார் பெரியபுராணம் போன்றவற்றை தீவிர வாசிப்புக்கு உட்படுத்தினேன்.
அக்கால வரலாற்றுக் குறிப்புகளும், அக்கால வேளாண்சமூக வாழ்முறைகளும்
என் மனதுள் எழுப்பிய நீண்ட
`திரை’, அலை அலையாய் விரிந்தது.
காலத்தை நீட்டிக்காமல் நானும்
என் நண்பர் தி.நடராசனும்
ஆச்சாள்புரம் நோக்கிப் புறப்பட்டு விட்டோம். என்படைப்புகள் மீது அக்கறையும் நம்பிக்கையும்
கொண்டு இருக்கும் புலவர் சௌ. இராமலிங்கம்
அவர்கள், `வாருங்கள்’ என்று அவர் பிறந்த
ஊரான ஆச்சாள்புரத்திற்கு அழைத்துச் சென்றார்.
வளமான வண்டல் நிலத்தை
உடைய பரந்த மண் அது
என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து
போயிற்று. இவ்வூரில் பெரும்பாலும் வேளாண்மக்களே வளமான வாழ்க்கையை கொண்டு
இருப்பதை அம்மக்களோடு பழகிய நாட்களில் அறிந்து
கொண்டோம். முதலில் முதல் மூன்று
நாட்கள் அவ்வூரில் வாழ்பவர்களிடையே புழங்கும் வாய்மொழி வரலாற்றையும், வாய்மொழிகதைகளையும் கேட்டு அறிந்து கொண்டோம்.
குறிப்பாய் உழுவித்து உண்பவர்களான உழைப்பாளி மக்கள் சொன்னவை எங்களை
மேலும் மேலும் உசுப்பிக் கொண்டிருந்தன.
இரண்டு வார இடைவெளிக்குப்
பின்னர் மீண்டும் தோழர் சி.அறிவுறுவோன்
அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு
ஆச்சாள்புரத்தைச் சுற்றிலும் உள்ள, பெரும்பான்மையாக சமண
மதத்தவர்கள் வாழ்ந்த கிராமங்களைச் சுற்றி
அலைந்து தகவல்களை பதிவு செய்தோம். மகேந்திரப்பள்ளி
அப்படியான ஊர்களில் குறிப்பிடத்தக்கதாய் அமைந்து போனது. அது பல்லவமன்னன் மகேந்திரவர்மனால் திட்ட
மிட்டு உருவாக்கப்பட்ட அந்நாளைய நகரமாகும்.
இறுதியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய இடம் ஆச்சாள்புரத்தில்
அமைந்துள்ள, வெண்ணீற்று உமைநங்கையார் சகிதாமாக இருக்கும் சிலோகத்தியாகேசர் சிவஆலயமே என்பது எங்களது திட்டமாக
இருந்தது. திருநிறைவறை - கருவறையுடன் கூடிய சின்னதான கோபுரமும்,
அவற்றை உள்ளிட்ட சுற்று மதிலும் அமைக்கப்பட்ட
ஆலயத்தைப். பார்த்த மாத்திரத்திலேயே அவ்வாலயம்
தொன்மை மிக்கதாக அறிய முடிந்தது. இன்றைக்கு
இருக்கும் ஆலயம், பிற்காலத்தில் பல
நிலைகளில் விரிவாக்கம் பெற்றுள்ளது என்றும் உணர முடிந்தது. பழைய
வாயிலின் தென்புறமாக திருஞானசம்பந்தரும் அவரை மணக்க இருந்த
சொக்கியாரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. மிகவும் பிற்காலத்தில் அம்மேனிகள்
வழிபாட்டுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
நாங்கள் அப்பகுதியில் வாய்மொழியாக
சேகரித்த வரலாறுகளும் கதைகளும் இட்டு நொப்பி வைத்திருப்பதில் இருந்து
நான் அறிந்து கொண்ட ஆய்வு
அடங்கலாவது... ஆளுடையப்பிள்ளை தொடங்கிய சேத்திராடனப்பயணத்தில் நீலகண்டயாழ்ப்பாணரும் அவர்மனைவியும் பெரும்பங்களிப்புக் கொண்டு இருக்கிறார்கள். இந்தப்
பயணம் பெருவாரியான மக்களை சிவ மதத்தின்
மீதும் தமிழ் மீது திரட்டியிருக்கிறது.
இதைப் பொறுக்க மாட்டாதவர்கள் ஆளுடையப்பிள்ளையை
அழித்துவிட தீயிட்டு இருக்கிறார்கள். அந்த தீயில் வெந்தவர்களைக்
குவித்து கோவிலுக்கு தென்புறம் அடக்கம் செய்து நினைவிடமாக
ஆக்கியிருக்கிறார்கள் என்பதே. இது தான்
இந்நாவலுக்கு அடிநாதமாக அமைந்திருக்கிறது.
-
சோலைசுந்தரபெருமாள்
பிதற்றல் – இதற்குப் பெயர் நாவல்?
ReplyDeleteதாண்டவபுரம் நாவல் குறித்து ‘புதின’ எழுத்தாளர் சோலைசுந்தரபெருமாள். ‘சிவ ஒளி’ மாத இதழுக்கு அவர் அளித்த விளக்கமும் அதில் வெளிப்படும் முரண்பாடுகளும்.
விளக்கம்1. தாண்டவபுரம் நாவலுக்கு அடிப்படையான அகச்சான்றாக, வரலாறாக அமைந்திருப்பதுதிருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்களே.
முரண்பாடுகள்: அகச்சான்று என்பது படைப்பாளியின் கவிதைப் போக்கில் இயல்பாக வெளிப்படும் சான்றுகளே அகச்சான்றுகள் ஆகும். பாண்டிய மன்னன் கூன் பாண்டியன் முன்பே சமணர்கள் ஞானசம்பந்தப் பெருமானை வெருட்டும் வண்ணம் நடந்துகொள்ள, குழந்தைப் பருவத்திலுள்ள சம்பந்தப்பெருமானைக் காக்கத் தாயுள்ளம் கொண்ட பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் பரிவுகொள்கின்றார்; இந்தச் சூழலில் அன்னையைத் தேற்ற சம்பந்தப் பெருமான் பாடிய பாடல் இதோ:
மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்
“பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு எய்திடேல்!
ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
இந்தப் பாடலில் பெருமான் தன்னை பால் மணம் மாறாத பாலகன் என “பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு எய்திடேல்! என்று பாண்டிமாதேவிக்குக் கூறுவது ஒரு சிறந்த அகச்சான்று. அகச்சான்றிபடி பால் மணம் மாறாத பாலகனை, கட்டிளம் காளையாக கற்பனை செய்து, கடும் வக்கிரபுத்தியுடன் இந்நாவலாசிரியர் எழுதிய பாலுணர்வைத்தூண்டும் நாவலின் பகுதி இதோ:
"அவர் மனசும் உடம்பும் ஒரே திக்கில் நெளுநெளுப்பைத் தூண்டிக் கொண்டிருந்தன.அதில் இருந்து விடுபட தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டு இருந்தார்"
"எப்போது அசந்து உறங்கிப் போனாரோ அவருக்கே நினைவில்லை. அவர் உடம்பிலும் மனசிலும் ஏறி முறுகிக் கிடந்த நெளுநெளுப்பு முற்றிலும் வடிந்து போய் சாசுவதமாய் உணர்ந்தார்."
(பக்கம் 320)
"இடுப்பில் இருந்த உத்தரியத்தில் திட்டுதிட்டாய் படிந்திருந்த கொழகொழப்பு இப்போது காய்ந்து முடமுடப்பாக ஆகியிருந்தது. அதிலிருந்து வெளிப்படும் மெல்லிதான இனம் புரிந்து கொள்ளக் கூடிய அம்மணத்தை தன்னோடு நிழலாக இருக்கும் சரணாலயரோ யாழ்ப்பாணரோ உணர்ந்துவிடக் கூடாது என்ற பரபரப்பில் எழுந்தார்"
(பக்கம்-321)
நாவலாசிரியருக்கு அகச்சான்று என்றால் என்ன என்றே தெரியவில்லை. இவர் தமிழாசிரியர் என்பது இன்னும் வெட்கக்கேடான ஒன்று. அருவெறுப்பான, அழுகிப்போன சிந்தனைகளைக் கொண்ட இவர் பாலுணர்வைத்தூண்டும் செக்ஸ் கதை எழுதமட்டுமே லாயக்கானவர். இவர் போன்றோருக்குச் சாகித்திய அகாடமி விருது கொடுக்கும் அறிவுஜீவிகள் உள்ளவரை இவர் போன்றோரின் சொத்தை ஆய்வுகள் தொடரும். இந்த நாவலைத் தடை செய்யக் கூடாது. இந்த அழுகிய மனம் கொண்ட அசிங்கம் பிடித்த ‘படைப்பாளி’ என்ற போர்வையில் திரியும் கொக்கோக எழுத்து கீழ்த்தர வார்த்தைகளின் சாக்கடை வணிகனை தமிழ்ச் சமூகத்துக்குத் தோலுரித்துக் காட்டும் சான்றாவணம் அல்லவா இந்த அழுகல் நாவல்.
பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
“தாண்டவபுரம்” நாவலுக்கான முன்னுரையின் 118 - ம் பத்தியில்
ReplyDelete"தஞ்சை மண்ணின் கீழக்கோடியில் உள்ள சீர்காழி என்று அழைக்கப்படும் சிவபுரமே ஆளுடையப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட திருஞானசம்பந்தர் பிறந்த ஊராகும். " என்று பிதற்றியுள்ளார் இந்நாவலாசிரியர்.
சமயக் குரவர்கள் நால்வரில், திருஞானசம்பந்தரை 'ஆளுடைய பிள்ளை' என்றும், திருநாவுக்கரசரை 'ஆளுடைய அரசு' என்றும், சுந்தரமூர்த்தி பெருமானை 'ஆளுடைய நம்பி' என்றும், மாணிக்கவாசகப் பெருமானை 'ஆளுடைய அடிகள்' என்றும் அழைப்பது சைவ மரபு. 'ஆளுடைய' என்ற அடைமொழி இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்' என்ற பெருமைக்காகவும், 'பிள்ளை' என்பது குழந்தைப் பருவத்தில் இருந்தமையால் சம்பந்தருக்கும், 'அரசு' என்பது 'நாவுக்கரசே' என்று இறைவனால் அழைக்கப்பட்டமைகாக அப்பருக்கும், 'நம்பி' என்பது 'தம்பிரான் தோழன்' என்ற பெருமைக்காக சுந்தரருக்கும், 'அடிகள்' என்பது அழுது அடியடைந்த அன்பராம் மாணிக்கவாசகருக்கும் வழங்கப்படுவது சைவசமயிகள் அனைவரும் அறிந்த ஒன்று. சிறப்புப் பெயரை இயற்பெயரென சாதிக்கும் நாவலாசிரியரின் கண்டுபிடிப்பு ஒன்றுக்காகவே சாகித்திய அகாடமி விருது வழங்கப்படலாம்!!! வெட்கக்கேடு!!!!
பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
“தாண்டவபுரம்” நாவலுக்கான முன்னுரையின்1௦3 - ம் பத்தியில் ஆசிரியர் சோலை சுந்தரப்பெருமாளின் தீர்ப்பு பின்வருமாறு:
ReplyDelete"ஆளுடையப்பிள்ளை, பாலகனாக சேத்திராடனம் மேற்கொண்டார் என்பதும் அவருக்கு சிவபார்வதி முலைப்பால்அமுது ஊட்டினாள் என்பதும் புராணக் கற்பனையே. மிகைபட ஏற்றிக் கூறும் சேக்கிழாரின் கற்பனையே அன்றி வேறில்லை. புராணப் படைப்பாளிகளுக்கு இப்படியான கற்பனை செய்து படைப்பைச் செய்திடும் உரிமை உண்டு."
ஆனால், திருஞானசம்பந்தரின் அகச்சான்று அடங்கிய பின்வரும் தேவாரப் பாடல்கள் இந்நாவலாசிரியரின் வாசிப்புக் குறைபாட்டையும், அரைவேக்காட்டுத்தனமான ஆணவத் தீர்ப்புகளின் ஓட்டையையும் வெட்ட வெளிச்சமாக்கும்.
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்;
காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!
3ம் திருமுறை: 24:திருக்கழுமலம்:3053-ம் பாடல்
இப்பாடலின் பொருள் பின்வருமாறு: பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து "யார் தந்த அடிசிலை உண்டனை?" என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார். அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளுகின்றார். ( போது - மலர். போதை ஆர் - மலரை யொத்த; பொற்கிண்ணம், அடிசில் - சோறு. போனகம்; இங்கே அடிகளார் உண்டருளியது பாலேயாயினும், அதிற்குழைத்த உணவு ஞானம் ஆதலால் அடிசில் எனப் பட்டது. )
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத,
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞானமுனிவன்,
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல்,
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை கெடுதல் ஆணை நமதே.
2ம் திருமுறை: பதிக எண்.84 - திருநனிபள்ளி : 2387ம் பாடல்.
இப்பாடலின் பொருள், "கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் பதியின்கண் நால்வேத,
ஆறங்கங்களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன், தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப்பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும்
எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும். (ஆறும் நாலும்-ஆறங்கங்களும் நால்வேதங்களும், அத்தர்பியல்மேல் இருந்து-தந்தையார்
திருத்தோள்மிசை அமர்ந்து, பிடரியின் மேல் அமர்ந்து)
மேலே குறிப்பிட்ட இரண்டு பாடல்களிலும் உள்ள அகச்சான்றுகளின் அடிப்படையில்
1. பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து "யார் தந்த அடிசிலை உண்டனை?" என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார் என ஞானசம்பந்தரே பாடியிருப்பதும்.
2. ஞானசம்பந்தர் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும்போது பாலகனாக இருந்ததும், தந்தையின் பிடரியின் மேல் அமர்ந்து பாடியருளியதும் ஞானசம்பந்தரின் திருவாக்கின் அடிப்படையிலேயே சேக்கிழார் பெருமான் பாடினார் என்பதும்
உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் விளங்கும். சேக்கிழாரின் புராணக் கற்பனை என்று அறிவுஜீவி சோலை சுந்தரப் பெருமாள் கூறுவது எவ்வளவு அபத்தம் என்பது வாசகர்களுக்கு விளங்கும். இந்தப் பேத்தல் நாவலுக்குத் தடையாம்! அந்தத் தடைகளை இந்த ஆல் இன் ஆல் அழகு சுந்தரம் தகர்த்தாராம்!!
தமிழ் ஆர்வலர்களுக்கும் சைவ சமய ஆர்வலர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்! இது போன்ற கால் காசுக்குப் பெறாத கொக்கோகம் தர அசிங்கங்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று வீண் விளம்பரம் தராதீர்கள். கக்கூஸில் வைத்துப் படிப்பதற்குக் கூடத் தரமில்லாத நாவல்கள் எழுதவும் படைப்பாளிகள் என்று பட்டம் கட்டிக்கொண்டு திரியும் அற்பர்களுக்கும் எழுத்துரிமை உண்டு. அத்தகையவர்களால் சைவத்துக்கோ, திருஞான சம்பந்தப்பெருமானுக்கோ எந்தக் குறைவும் ஏற்பட்டு விடாது. தமிழில் அரிச்சுவடி கற்கும் என்னைப் போன்றோருக்கே இந்நாவலின் தரம் விளங்கும்போது, மற்றவர்களுக்கு புரியாதா? எழுதுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு; அவர்களை அடையாளம் காட்டி விமர்சிப்பதற்கு வாசிப்பாளர்களுக்கு உரிமை உண்டு. விமர்சனம் தொடரும்.
பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.