Saturday 28 June 2014

தடையும் தகர்ப்பும்



தாண்டவபுரம் நவலைத் தடை செய்ய வேண்டும். நாவலாசிரியரைக் கைது செய்ய வேண்டும்” என்ற குரலை மேலோங்கச் செய்த இந்துத்துவா அமைப்புகள் பலவிதமானப் போராட்டங்களை பலவிடங்களில் செய்தன.  அவை தொடர்பாக பல்வேறு இதழ்கள் செய்திகளை வெளியிட்டுயிருந்தன.
“...ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், ‘இந்தியா முழுமைக்கும் நாவலைத் தடை செய்ய வேண்டும், எழுத்தாளரை கைது செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையோடு நாடு தழுவியப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  ‘தமிழ்நாட்டில் மட்டுமே பிரபலமாகி இருந்த தாண்டவபுரம் நாவலின் எழுத்தாளரை இந்தியா முழுமைக்கும் பிரபலமாக்கி, சல்மான் ருஷ்டி ரேஞ்சுக்கு உயர்த்தி விட்டனர்’ என்று பிரபலமான ஒரு நட்சத்திர எழுத்தாளர் மனக் குமுறலை வெளிப்படுத்தினார்”  என்று 2012 மே 02 நாளிட்ட நக்கீரன் இதழ் எழுதியிருந்தது.
அந்த நட்சத்திர எழுத்தாளர் யார் என்று வெளிப்படுத்த வில்லை. போகட்டும். அந்த நட்சத்திர எழுத்தாளர் ஆதங்கப்பட்டதற்கும் பொருள் இருப்பதாக நான் கருதுகிறேன். அந்த எழுத்தாளருக்கு ‘உண்மையான வரலாறும் புனைவும் எவை எவை’ என்று நன்கு விளங்கும். தாண்டவபுரம் நாவல் தமிழ்ச்சமூகத்தின் தொல்சமூகம் தொடங்கி சமூகப் பண்பாட்டுக் கூறுகளையும் பண்பாட்டு அம்சங்களையும்  பரவலாக்கி தொல்காப்பிய இலக்கிய வரம்புக்குள் உள்ளடக்கியே படைக்கப்பட்டுள்ளது. மனிதகுலவரலாறு பொதிக்கப்பட்டுள்ள இந்த நாவலினுள் நாள், மாதம், ஆண்டு அவற்றை தேடிக் கொண்டு இருக்க முடியாது. இது அசலான புனைவு என்று அந்த எழுத்தாளர் திட்டவட்டமாக உணர்ந்திருக்கிறார். இதைத்தான் இப்படியான குரலில் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனை ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கூர்மையாக அனுமானித்து இருக்கிறது. அதாவது பிராமணியத்தின் விஷநாக்கின் வீரியம் எத்தகையது என்பதை வெளிப்படுத்தும் நாவலின் படைப்பாக்கத்தை அவர்களால்  பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த நாவலில் படிந்துள்ள மனிதகுல வரலாற்றுப் போக்கு, அந்த அமைப்பின் மூலந்திரமானக் கொள்கையையே போட்டு நொறுக்கி இருக்கிறது. இது போல இலக்கியப் பதிவுகள் – வரலாற்றுப் புனைவுகள் அவர்களின் அதிகாரமையத்தை அசைத்துப் போடும் ஆற்றல் கொண்டன என்பதை நன்குணர்ந்தே இருக்கிறார்கள்.
இதற்கு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே, திருவாரூர் தங்கராசு அவர்கள்  ஞானசம்பந்தர் வாழ்க்கையை வைத்து நாடகமாக்கியிருக்கிறார் அப்பட்டமாக ஞானசம்பந்தரோடு கூடிய பாலியியல் வாழ்க்கைச்சித்தரிப்புகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த நாடகத்தை அவர்கள் கண்டு கொண்டாலும் வாளா இருந்தனர். காரணம், அப்படியான படைப்பபின் உள்ளடக்கம்  அவர்களின் மூலந்திரமானக் கொள்கையின் மைய பிராமணிய அரசியலை அம்பலப்படுத்த வில்லை என்பதே.
தாண்டவபுரம் நாவலின் உள்ளடக்கம்  ‘தமிழும் சிவமும்’ ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும் என்ற அன்றைய வரலாற்றின் தேவையையும் அதன் குரலையும் தீர்க்கமாக படைப்பு முன் எடுத்துச் செல்கிறது. கூடவே பிராமணவைதீகம், வேதியசைவத்தையும் சமஸ்கிருதத்தையும் ஆட்சி அதிகாரப்படுத்தும் தந்திரஉபாயத்தை வரலாற்றுப் போக்கோடு அழுத்தமாக சொல்லிப் போகிறது.
இன்னும்,  தாண்டவபுரம் நாவலில் தொல்சமூக வரலாற்றுப் போக்கில் தமிழ்ச்சமூக பண்பாட்டுத்தளத்தில் தமிழ்ச்சைவத்தினை முன்னிறுத்தி வேளாண் மக்கள்  எழுச்சியாகத்  திரண்டனர் என்பதையும் தமிழ்ச்சைவம்  பெரிதும் போற்றிப் பேணிப் பாதுகாக்கும்  இகவாழ்வு குறித்து உயர்வாகப் பேசி,  மானிட வாழ்விலை உயர்த்திப் பிடித்திருக்கிறது. அவர்களால் இதனை அப்பட்டமாகச் சொல்லி வெகுமக்களைத் தங்கள் பக்கம் திரட்ட முடியாது. அப்படியான முயற்சியில் இறங்கினால் அவர்கள் முகம் அம்பலப்பட்டுப் போகும். இதனால் தான் இதனைத் திசைமாற்றி, திருஞானசம்பந்தரை இழிவு படுத்திவிட்டதாக புருடா விட்டார்கள்.
இச்சமகாலத்தில் தான் நித்தியானந்தாவின் காமலீலைகளை, காட்சி ஊடகங்கள் அப்பட்டமாக அம்பலமாக்கியிருந்தன. கூடவே இந்த நித்தியானந்தாவை, திருஞானசம்பந்தர் தொடக்கி வைத்தை மதுரை மடத்திற்கு ஆதினத் தலைமைக்குப் பட்டம் சூட்டினார்கள். இந்த நேரத்தில் தான் தாண்டவபுரம் நாவல் திருஞானசம்பந்தரை இழிவு படுத்தி விட்டதாக இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து களத்தில் இறங்கின. இவர்கள் போராட்டம் குறித்தும் மதுரை ஆதீனத்திற்கு நித்தியானந்தா பட்டம் கட்டிக் கொண்டதற்கும் தொடர்பு படுத்தி மக்கள் கேள்வி எழுப்பலாயினர். இப்படியான மக்களின் கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. போராட்டமும் அவர்களுக்கு கைக்கொடுக்க வில்லை.
திருடனுக்கு தேள் கொட்டியக் கதையாகி போனது. ஒருபக்கம் மாஜி பேராசிரியர்களைக் கொண்டு படைப்பாளியாகிய எனக்கு பலலட்சங்களைக் காட்டி விலை பேசுதலையும் கூடவே, வன்முறைக்கும்பலைக் கொண்டு கொலை மிரட்டல் செய்தலையும் செய்தார்கள். மறுபக்கம் தாண்டவபுரம் நாவலை தடை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும், மாவட்டம் தோறும் பதிவு செய்த வழக்குகளும் தள்ளுபடியானதும் பாப்பாத்தியம்மா ’உப்புகண்டம்’  பறிகொடுத்தக் கதையாக முடங்கிப் போனார்கள் என்பதும் வரலாறு தானே.
இந்தப் போராட்டத்தில் பங்கு எடுத்துக் கொண்ட பேரூர் ஆதினம் இளையபட்டம்  மருதாசலஅடிகளார் அவர்கள், “…செந்நெல் போன்ற பல சிறந்த நாவல்களை எழுதிய எழுத்தாளர் சோலைசுந்தரபெருமாள்,  இந்த தாண்டவபுரம் நாவலை எழுதி என்போன்றோர் மனஉளைச்சல் அடையச் செய்து விட்டார்…” என்று பேட்டி அளித்திருந்தார். (30.4.2012 நாளிட்ட ‘குங்குமம்’)  
இதன் மூலம் என்னுடைய செந்நெல், மரக்கால் ( நந்தனின் வாழ்வை மையம் கொண்டு எழுதப்பட்டது ) இந்த நாவல்களை அடிகளார் படித்திருக்கிறார் என்று நம்பலாம். (அவரைச் சுற்றி இருக்கும் மாஜி பேராசிரியர்கள் எதையும் படிக்காமலேயே புருடா விட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வேறு கதை)
ஏராளமான பதிப்புகளை கண்ட ‘செந்நெல்’ நாவல் தமிழ் நவீன இலக்கிய வாதிகளால் பெரிதும் பேசப்பட்டது. பாரட்டுதலைப் பெற்றது. தமிழக அரசின் பரிசினையும் இலக்கிய அமைப்புகளின் விருதினையும் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பல ஆண்டுகள் பாடமாக வைக்கப்பட்டு இருந்தன.
பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாசலஅடிகளார் அவர்களால் பாராட்டப்பட்ட இந்த ‘செந்நெல்’ நாவலை கொச்சையான நாவல் என்றும் மக்களை இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளது என்றும் கூடவே, வர்க்க மோதலை ஏற்படுத்து விதமாகப் படைக்கப்பட்ட இந்த நாவலை பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கக் கூடாது” என்றும் ஆர்,எஸ்.எஸ் காரர்களால் வழி நடத்தப்படுபவர்கள்,   போராட்டம் நடத்தினார்கள்.
கலகக்காரர்கள் திருச்சியில் செந்நெல் நாவலின் நகலை தீயிட்டு எரித்து கொளுத்தினார்கள். மறியலில் ஈடுபட்டுப் பேராடினார்கள். அதனைத் தொடர்ந்தும் பல போராட்டம் நடத்தினார்கள். பல்கலைக்கழகங்கள் இவர்களின் தந்திரஉபாயங்களில் வீழ்ந்து விட வில்லை.
தமிழ்மக்களின் வரலாற்றையும் இலக்கியப் போக்குகளையும் நன்குணர்ந்த பெற்றோர்களும், மாணவர்களும், கல்வியாளர்களும் கலகக்காரர்களுக்கு ஆதரவு அளிக்க வில்லை.
‘செந்நெல் நாவலை தடை செய்ய வேண்டும்’ என்று குரல் எழுப்பிய போராட்டக்காரர்களின் பொய்முகத்தையும், நாவலின் உள்ளடக்கம் குறித்தான விரிவான தகவல்களையும் ஆதராமாக்கி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (18.11.2011) நாளிதழ் விரிவான செய்தியாக வெளியிட்டு இந்துத்துவா அமைப்புகளின் பொய்முகத்தை அம்பலப்படுத்திற்று. (அதன் ஒளிப்பட நகல் இணைக்கப் பட்டுள்ளது.)


இந்தப் போராட்டம் முறியடிப்புக்குப் பின்னர் அனைத்துப் பல்கலைக்கழகங்களும், தன்னாட்சிக் கல்லூரிகளும் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைத்திருந்தன. பல பருவங்கள் தொடர்ந்து பாடமாக இருந்தன என்பதும் வரலாறு தானே.
கல்கி தொடங்கி சோலைசுந்தரபெருமாள் வரை  பத்து சிறுகதையாசிரியர்களின் சிறுகதைகளைத் தேர்வு செய்து பத்தாம் வகுப்பு துணைப்பாட நூலில் தமிழக அரசு இடம் பெறச் செய்திருந்தது. அந்த வரிசையில் என்னுடைய “மண்ணாசை” என்ற சிறுகதை இடம் பெற்று இருந்தது.
”…இச்சிறுகதையைப் படிக்கும் இளம் உள்ளங்கள் சிதைந்து போகின்றன. இழிவான செயலை பதியவைத்துக் கொண்டு விடுகிறார்கள். இப்படியான கதைகள் பண்பாட்டுச் சீரிழிவை ஏற்படுத்துகின்றன. இதனைப் பாடப்பகுதியில் இருந்து நீக்க வேண்டும்” என்று பரிவார தேவதைகளை உசுப்பி விட்டனர். அவாளுக்கான தந்திர உபாயப் போக்கினைக் கொண்ட  ஆர்.எஸ்.எஸ் பரிவார சிஷ்யகோடிகள்  ‘மண்ணாசை’ சிறுகதையைச் சீண்டி சிலுப்பிப் பார்த்தனர். கூடவே, ஓசைபடாமல் அவர்களின் தந்திரஉபாயப் போக்கினைக் கடைபிடித்து “மண்ணாசை” சிறுகதையோடு  திருக்குறள் உள்பட இன்னும் சில பாடப் பகுதிகளையும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிவிட்டனர்.
இந்த நீக்கத்திற்கு எதிராக மனிதநேயமிக்கவர்களும் அறிஞர் பெருமக்களும் கல்வியாளர்களும் உரத்தக்குரல் கொடுத்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழகத் தமிழாசிரியர் கழகம் போன்ற அமைப்பினர்கள் களத்தில் இறங்கி போராட்டம் செய்தனர். தீக்கதிர், ஜனசக்தி, தினமணி போன்ற இதழ்கள் தலையங்கக்கட்டுரைகள் எழுதி இப்போக்குக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.

அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே, “அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமலேயே துறை நடவடிக்கையின் பேரில் பாடப்பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.” என்று  சொல்லி அச்செயலைக் கண்டித்தார். தொடர்ந்து அரசாங்கம் செய்திருந்த நீக்கத் தடையை நீக்கி தொடர்ந்து பாடத்திட்டத்தில் இடம் பெற ஆணை பிறப்பித்தார் என்பதும் வரலாறு தானே.?

3 comments:

  1. பிதற்றல் – இதற்குப் பெயர் நாவல்?
    தாண்டவபுரம் நாவல் குறித்து ‘புதின’ எழுத்தாளர் சோலைசுந்தரபெருமாள். ‘சிவ ஒளி’ மாத இதழுக்கு அவர் அளித்த விளக்கமும் அதில் வெளிப்படும் முரண்பாடுகளும்.
    விளக்கம்1. தாண்டவபுரம் நாவலுக்கு அடிப்படையான அகச்சான்றாக, வரலாறாக அமைந்திருப்பதுதிருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்களே.
    முரண்பாடுகள்: அகச்சான்று என்பது படைப்பாளியின் கவிதைப் போக்கில் இயல்பாக வெளிப்படும் சான்றுகளே அகச்சான்றுகள் ஆகும். பாண்டிய மன்னன் கூன் பாண்டியன் முன்பே சமணர்கள் ஞானசம்பந்தப் பெருமானை வெருட்டும் வண்ணம் நடந்துகொள்ள, குழந்தைப் பருவத்திலுள்ள சம்பந்தப்பெருமானைக் காக்கத் தாயுள்ளம் கொண்ட பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் பரிவுகொள்கின்றார்; இந்தச் சூழலில் அன்னையைத் தேற்ற சம்பந்தப் பெருமான் பாடிய பாடல் இதோ:
    மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்
    “பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு எய்திடேல்!
    ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
    ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
    இந்தப் பாடலில் பெருமான் தன்னை பால் மணம் மாறாத பாலகன் என “பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு எய்திடேல்! என்று பாண்டிமாதேவிக்குக் கூறுவது ஒரு சிறந்த அகச்சான்று. அகச்சான்றிபடி பால் மணம் மாறாத பாலகனை, கட்டிளம் காளையாக கற்பனை செய்து, கடும் வக்கிரபுத்தியுடன் இந்நாவலாசிரியர் எழுதிய பாலுணர்வைத்தூண்டும் நாவலின் பகுதி இதோ:
    "அவர் மனசும் உடம்பும் ஒரே திக்கில் நெளுநெளுப்பைத் தூண்டிக் கொண்டிருந்தன.அதில் இருந்து விடுபட தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டு இருந்தார்"
    "எப்போது அசந்து உறங்கிப் போனாரோ அவருக்கே நினைவில்லை. அவர் உடம்பிலும் மனசிலும் ஏறி முறுகிக் கிடந்த நெளுநெளுப்பு முற்றிலும் வடிந்து போய் சாசுவதமாய் உணர்ந்தார்."
    (பக்கம் 320)
    "இடுப்பில் இருந்த உத்தரியத்தில் திட்டுதிட்டாய் படிந்திருந்த கொழகொழப்பு இப்போது காய்ந்து முடமுடப்பாக ஆகியிருந்தது. அதிலிருந்து வெளிப்படும் மெல்லிதான இனம் புரிந்து கொள்ளக் கூடிய அம்மணத்தை தன்னோடு நிழலாக இருக்கும் சரணாலயரோ யாழ்ப்பாணரோ உணர்ந்துவிடக் கூடாது என்ற பரபரப்பில் எழுந்தார்"
    (பக்கம்-321)

    நாவலாசிரியருக்கு அகச்சான்று என்றால் என்ன என்றே தெரியவில்லை. இவர் தமிழாசிரியர் என்பது இன்னும் வெட்கக்கேடான ஒன்று. அருவெறுப்பான, அழுகிப்போன சிந்தனைகளைக் கொண்ட இவர் பாலுணர்வைத்தூண்டும் செக்ஸ் கதை எழுதமட்டுமே லாயக்கானவர். இவர் போன்றோருக்குச் சாகித்திய அகாடமி விருது கொடுக்கும் அறிவுஜீவிகள் உள்ளவரை இவர் போன்றோரின் சொத்தை ஆய்வுகள் தொடரும். இந்த நாவலைத் தடை செய்யக் கூடாது. இந்த அழுகிய மனம் கொண்ட அசிங்கம் பிடித்த ‘படைப்பாளி’ என்ற போர்வையில் திரியும் கொக்கோக எழுத்து கீழ்த்தர வார்த்தைகளின் சாக்கடை வணிகனை தமிழ்ச் சமூகத்துக்குத் தோலுரித்துக் காட்டும் சான்றாவணம் அல்லவா இந்த அழுகல் நாவல்.
    பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

    ReplyDelete
  2. “தாண்டவபுரம்” நாவலுக்கான முன்னுரையின் 118 - ம் பத்தியில்
    "தஞ்சை மண்ணின் கீழக்கோடியில் உள்ள சீர்காழி என்று அழைக்கப்படும் சிவபுரமே ஆளுடையப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட திருஞானசம்பந்தர் பிறந்த ஊராகும். " என்று பிதற்றியுள்ளார் இந்நாவலாசிரியர்.

    சமயக் குரவர்கள் நால்வரில், திருஞானசம்பந்தரை 'ஆளுடைய பிள்ளை' என்றும், திருநாவுக்கரசரை 'ஆளுடைய அரசு' என்றும், சுந்தரமூர்த்தி பெருமானை 'ஆளுடைய நம்பி' என்றும், மாணிக்கவாசகப் பெருமானை 'ஆளுடைய அடிகள்' என்றும் அழைப்பது சைவ மரபு. 'ஆளுடைய' என்ற அடைமொழி இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்' என்ற பெருமைக்காகவும், 'பிள்ளை' என்பது குழந்தைப் பருவத்தில் இருந்தமையால் சம்பந்தருக்கும், 'அரசு' என்பது 'நாவுக்கரசே' என்று இறைவனால் அழைக்கப்பட்டமைகாக அப்பருக்கும், 'நம்பி' என்பது 'தம்பிரான் தோழன்' என்ற பெருமைக்காக சுந்தரருக்கும், 'அடிகள்' என்பது அழுது அடியடைந்த அன்பராம் மாணிக்கவாசகருக்கும் வழங்கப்படுவது சைவசமயிகள் அனைவரும் அறிந்த ஒன்று. சிறப்புப் பெயரை இயற்பெயரென சாதிக்கும் நாவலாசிரியரின் கண்டுபிடிப்பு ஒன்றுக்காகவே சாகித்திய அகாடமி விருது வழங்கப்படலாம்!!! வெட்கக்கேடு!!!!

    பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

    ReplyDelete
  3. “தாண்டவபுரம்” நாவலுக்கான முன்னுரையின்1௦3 - ம் பத்தியில் ஆசிரியர் சோலை சுந்தரப்பெருமாளின் தீர்ப்பு பின்வருமாறு:
    "ஆளுடையப்பிள்ளை, பாலகனாக சேத்திராடனம் மேற்கொண்டார் என்பதும் அவருக்கு சிவபார்வதி முலைப்பால்அமுது ஊட்டினாள் என்பதும் புராணக் கற்பனையே. மிகைபட ஏற்றிக் கூறும் சேக்கிழாரின் கற்பனையே அன்றி வேறில்லை. புராணப் படைப்பாளிகளுக்கு இப்படியான கற்பனை செய்து படைப்பைச் செய்திடும் உரிமை உண்டு."

    ஆனால், திருஞானசம்பந்தரின் அகச்சான்று அடங்கிய பின்வரும் தேவாரப் பாடல்கள் இந்நாவலாசிரியரின் வாசிப்புக் குறைபாட்டையும், அரைவேக்காட்டுத்தனமான ஆணவத் தீர்ப்புகளின் ஓட்டையையும் வெட்ட வெளிச்சமாக்கும்.
    போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
    தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்;
    காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர்
    பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!
    3ம் திருமுறை: 24:திருக்கழுமலம்:3053-ம் பாடல்

    இப்பாடலின் பொருள் பின்வருமாறு: பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து "யார் தந்த அடிசிலை உண்டனை?" என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார். அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளுகின்றார். ( போது - மலர். போதை ஆர் - மலரை யொத்த; பொற்கிண்ணம், அடிசில் - சோறு. போனகம்; இங்கே அடிகளார் உண்டருளியது பாலேயாயினும், அதிற்குழைத்த உணவு ஞானம் ஆதலால் அடிசில் எனப் பட்டது. )

    கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத,
    படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞானமுனிவன்,
    இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல்,
    நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை கெடுதல் ஆணை நமதே.
    2ம் திருமுறை: பதிக எண்.84 - திருநனிபள்ளி : 2387ம் பாடல்.

    இப்பாடலின் பொருள், "கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் பதியின்கண் நால்வேத, ஆறங்கங்களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன், தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப்பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும். (ஆறும் நாலும்-ஆறங்கங்களும் நால்வேதங்களும், அத்தர்பியல்மேல் இருந்து-தந்தையார்
    திருத்தோள்மிசை அமர்ந்து, பிடரியின் மேல் அமர்ந்து)

    மேலே குறிப்பிட்ட இரண்டு பாடல்களிலும் உள்ள அகச்சான்றுகளின் அடிப்படையில்
    1. பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து "யார் தந்த அடிசிலை உண்டனை?" என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார் என ஞானசம்பந்தரே பாடியிருப்பதும்.
    2. ஞானசம்பந்தர் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும்போது பாலகனாக இருந்ததும், தந்தையின் பிடரியின் மேல் அமர்ந்து பாடியருளியதும் ஞானசம்பந்தரின் திருவாக்கின் அடிப்படையிலேயே சேக்கிழார் பெருமான் பாடினார் என்பதும்
    உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் விளங்கும். சேக்கிழாரின் புராணக் கற்பனை என்று அறிவுஜீவி சோலை சுந்தரப் பெருமாள் கூறுவது எவ்வளவு அபத்தம் என்பது வாசகர்களுக்கு விளங்கும். இந்தப் பேத்தல் நாவலுக்குத் தடையாம்! அந்தத் தடைகளை இந்த ஆல் இன் ஆல் அழகு சுந்தரம் தகர்த்தாராம்!!

    தமிழ் ஆர்வலர்களுக்கும் சைவ சமய ஆர்வலர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்! இது போன்ற கால் காசுக்குப் பெறாத கொக்கோகம் தர அசிங்கங்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று வீண் விளம்பரம் தராதீர்கள். கக்கூஸில் வைத்துப் படிப்பதற்குக் கூடத் தரமில்லாத நாவல்கள் எழுதவும் படைப்பாளிகள் என்று பட்டம் கட்டிக்கொண்டு திரியும் அற்பர்களுக்கும் எழுத்துரிமை உண்டு. அத்தகையவர்களால் சைவத்துக்கோ, திருஞான சம்பந்தப்பெருமானுக்கோ எந்தக் குறைவும் ஏற்பட்டு விடாது. தமிழில் அரிச்சுவடி கற்கும் என்னைப் போன்றோருக்கே இந்நாவலின் தரம் விளங்கும்போது, மற்றவர்களுக்கு புரியாதா? எழுதுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு; அவர்களை அடையாளம் காட்டி விமர்சிப்பதற்கு வாசிப்பாளர்களுக்கு உரிமை உண்டு. விமர்சனம் தொடரும்.
    பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

    ReplyDelete