Thursday 18 September 2014

தஞ்சைப் பெரிய கோவிலும் தமிழும்



பிற்கால சோழமன்னர்களில் தனிச்சிறப்பு மிக்கப்  பெருவேந்தன் ராசராசன் ஆவான். இவனுடைய வரலற்றினை அறிய இம்மன்னனின் மெய்க்கீர்த்திகளடங்கிய கல்வெட்டுகள், செப்பேடுகள் பெரிதும் துணைபுரிகின்றன. விக்கிரமசோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசன் உலா, கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியச் சான்றுகளும் குறிப்பிடத்தக்கன.
     அருண்மொழி எனும் இயற்பெயர் கொண்டவன். ராசராசன் என்ற சிறப்பு பட்டப்பெயரோடு முடிசூட்டப்பட்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவன்.
      அருண்மொழி. குழந்தையாக இருக்கும் போதே அவன் தந்தையார் சுந்தரசோழன் இறந்துபடுகிறான். அவனைப் பெற்றவள் வானவன் மாதேவியாரும் உடன்கட்டை ஏறினாள்.  "...அரக்கர்களால் தேவர்களுக்கு ஏற்பட்ட துயரைத் துடைக்க சுந்தரச்சோழன் விண்ணுலகெய்தினான்... எனது கணவர் சுந்தரர் அழகு மிக்கவர். ஆதலின் தேவப்பெண்களெல்லாம் அவரை விரும்புவர். அதற்கு நான் உடன்படேன்... வீரராகிய தன் கணவர் இறந்துபட அப்ஸரப் பெண்களெல்லாம் அவரை அங்கே அணைத்து விடுவார்களோ என்று பயந்து அவர் அருகிலேயே எப்பொழுதும் உடன் இருக்கச் சென்றாள்''  என்று திருவலங்காட்டுச் செப்பேடுச் செய்யுட்கள் குறிப்பதாக செப்பேட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
     இப்படியான பண்பாட்டுச் சூழலை,  சதி என்ற உடன்கட்டை ஏற்றுதலை.  வடஇந்தியாவில் வலிந்து நடைமுறைப்படுத்தியவர்கள்  பிராமண மதத்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  இம்மண்ணில் ஆதியில் இருந்து குறிப்பாய் தமிழகத்தில் சிவாகமத்தை நடைமுறையில் வைத்திருந்த சிவமதத்தின் ஆட்சியில் இப்படியாய்  பெண்களை ஒடுக்கியதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
     இதே சோழபரம்பரையில், "...மழவர் குலத்தில் தோன்றிய முதற்கண்டராதித்த சோழனின் பட்டத்தரசியான செம்பியன்மாதேவி தன் கணவனை இளமைப்பருவத்தில் இழந்தும், குழந்தையாயிருந்த தன் ஒரே புதல்வனாகிய உத்தமசோழன் பொருட்டு உயிர் வாழ்ந்தாள்... அவள் எல்லையற்ற சிவபக்தி படைத்தவளாய்ச் சிறப்புற்றிருந்தமையால் `மாதேவடிகள்' எனவும் வழங்கப்பெற்றவள்...'' என்று பிற்கால சோழர் வரலாறு என்ற நூலில் ஆவணப்படுத்தும் தி.வை. சதாசிவப்பண்டாரத்தார், செம்பியன்மாதேவி, தன் கணவன் முதல்கண்டராதித்தன் இறந்தபின் உடன்கட்டை ஏறவில்லை என்று தெளிவுபடுத்துகிறார். இதில் இருந்து நாம் தெளிவு பெற வேண்டியது கண்டராதித்தச்சோழன் வேதஆகமத்தை ஏற்க வில்லை என்பதே. 
     இம்மண்ணில் சிவஆகமத்தையும், தமிழையும் தன்னாட்சியில் நடைமுறை படுத்தியிருக்கிறான். அதனால் `சிவஞானகண்டராதித்தன்' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப் பட்டு இருக்கிறான் என்று சாசனங்கள் குறிப்பதாக பண்டாரத்தார் எழுதுகிறார். அதனால் தான் பிராமணப்பண்பாடு வலியுறுத்தும் உடன்கட்டை ஏற்றுதலை செம்பியன்மாதேவி நிராகரித்து  சிவப்பண்பாட்டின்படி வாழ்ந்திருக்கிறாள்.
     இத்தேவியார், தமிழகக் கலை வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு, வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் தகுதியை உடையது.  தாயாரையும் தந்தையாரையும் இழந்த அருண்மொழியை இளமையில் அன்னைக்கு அன்னையாய், அன்பு செலுத்தும் தாயாய் வளர்த்தவர்கள், அவன் பாட்டி முதல் கண்டராதித்த சோழன் மனைவியாகிய செம்பியன் மாதேவியும் அவன் உடன் பிறந்த தமைக்கையாகிய குந்தவைப் பிராட்டியுமாவர்.  அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் சிவனடி மறவாத சிந்தையராய் தம் ஆற்றலையும் செல்வத் தையும் செலவிட்டு அழியாப் புகழடைந்திருக்கிறார்கள்.
     `...கண்டராதித்த சோழனின் மகனான மதுராந்தகன் என்னும் உத்தமசோழன், தன் தந்தையின் இறப்பின் போது சிறு குழந்தையாக இருந்ததால்,  மதுராந்தகனின் சிற்றப்பா, அரிஞ்சயன் முடிசூட்டப் பெற்றான். அரிஞ்சயனுக்குப் பின் பராந்தகன் என்று அழைக்கப்பட்ட சுந்தரசோழன் ஆட்சி செய்தான். அதன் பின் சுந்தரசோழனின் மகன் அருண்மொழி பட்டம் பெற்று அரசாளவேண்டும் என்று மக்கள் விரும்பினர்...' என்று திருவலங்காட்டுச் செப்பேடுகளில் அறியலாம்.
     சுந்தரசோழனின் மனைவியர் -  பராந்தகன் தேவியம்மன், வானவன் மாதேவி ஆகியவர். இவர்களுக்கு ஆதித்தகரிகாலன், அருண்மொழி ஆகிய இருமகன்களும் இருந்திருக்கிறார்கள். ஒரே மகள் குந்தவையைக் கீழைச் சாளுக்கியர் மரபினன் என்று கருதப்பெரும் வல்லவரையான் வந்தியத்தேவனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்'' என்று கொடும்பாளூர் கல்வெட்டில் காணக்கிடக்கிறது . 
      அன்னோர் அங்ஙனம் விரும்பியும்  அருண்மொழியின் பாட்டனின் மகனும், தன் சிறிய தந்தையுமான உத்தமசோழன் அரசனாக இருந்து சோழநாட்டை ஆளும் உரிமையையும்  விருப்பத்தையும் மதித்து  ஆட்சியை அளித்திருக்கிறான் அருண்மொழி என்பதை இங்கு உணரலாம்.  எனவே,  அருண்மொழி நியாய உணர்ச்சியும், அறநெறி பிழையாக் கொள்கையுடன் இருந்திருக்கிறான்.  இப்படியான மனப்பான்மையை வளர்த்தவர்கள் இவனின் பாட்டியான செம்பியன்மாதேவியும், இவனுக்கு மூத்த சகோதரியான குந்தவையுமல்லவா?  உத்தமசோழன் கி.பி.970 இன் தொடக் கத்தில் முடிசூட்டப்பெற்றான் என்று திருவிடைமருதூர் கல்வெட்டுக் காட்டுகிறது என் குறிப்பிடுகிறார் பண்டாரத்தார். 
     கூடவே  இந்த உத்தமச்சோழன், ஆதித்தக்கரிகாலனின் கொலைக்கு காரணமாக இருந்தான் என்ற குறிப்பும் வரலாற்றில் காணக்கிடக்கிறது.  இந்த ஆதித்தக்கரிகாலன், சுந்தரசோழனின் மூத்த மகன் ஆவான். இவன் தந்தை பட்டம் ஏற்று  பழையாறையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான். தந்தையின் கட்டளையை ஏற்று, படைக்குத் தலைமை தாங்கி  பல போர்களை செய்து வெற்றிகளைக் குவித்தவன்.  தமிழ்புலவர் களை ஆதரித்தவன். இவன் ஆட்சியில் சிவனை விளிக்கும் `அர' என்னும் ஒலியே கேட்கப்பட்டது. எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.
     அப்படி என்றால் `அரகர சிவ' என்ற மந்திர ஒலியின் அடிநாதமாக கொண்டிருந்தவர்கள், சிவனை தென்னாடுடையவனாகப் போற்றியவர்களே.    சுந்தரசோழன் ஆட்சியில் `சோமன், இரவிதாசனான பஞ்சவன், பிரமாதிராசன், பரமேசு வரனான பிரமாதிராசன் ஆகிய இவர்கள் பார்ப்பனர் மட்டுமல்ல உடன்பிறந்தோர். இன்னும் பலரும்   சுந்தரசோழன் ஆட்சியில் உயர் பதவி வகித்தோர் ஆவார்.
     இந்த ஆதித்தக்கரிகாலன், இவர்கள் வேதஆகமத்தை கைகொள்ளத் தடையாக இருந்திருக்கிறான்.  சிவஆகமத்தை நடைமுறையில் கொண்டது பிடிக்காமல் தான் ஆதித்தக் கரிகாலனைக் கொலை செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் உத்தமசோழனிடம்,  தங்களின் அரசியல் பலத்தைக் காட்டியே தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டார்கள். உத்தமசோழன் அதிகார பலம் பெற்று இருந்தாலும் அவர்கள் பக்கம் சாய்ந்து போனான். அவர்கள் விருப்பப்படியே உத்தமசோழன் ஆட்சியில் வெளியிடப்பட்ட தங்கக்காசில்  புலி உருவம் பொறிக்கப்பட்டு கூடவே உத்தமசோழன் என்ற பெயரை சமஸ்கிருதத்தில் பொறித்திருக்கின்றனர். 
     இதை சர் வால்ட்டர் எலியட்யின்  `தென்னிந்திய காசுகள்'  என்ற நுhல் உறுதிப்படுத்துகிறது.  சோழ அரசில்  அதிகாரத்தில் இருந்து கொண்டே பிராமண மதக்கொள்கைகளை கடைப்பிடித்துக் கொண்ட தலைமைப் பதவிகளில் இருந்தவர்கள், தமிழையும் சிவமதத்தையும் வேரறுக்கும் பணியினை ரகசியமாகவே செய்து வந்ததிருக்கிறார்கள். இதனால் தான் உத்தமசோழன், ஆதித்தக்கரிகாலனைக் கொன்றதாக ஒரு கூற்று இருக்கிறது.
     சுந்தரசோழன், தன்னுடைய தலைமகன் ஆதித்தக் கரிகாலன் கொலையுண்டதும் மனமுடைந்து கி.பி. 969 இல்இறந்து போனான். அவன் பட்டத்தரசியான வானவன் மாதேவி உடன்கட்டை ஏற்றப்பட்ட செய்தியையும் சுந்தரசோழனின் இளைய மகன் அருண்மொழி தந்தைக்குப்பின் தான் பட்டம் ஏற்காமல் தன் சிற்றப்பாவான உத்தமச்சோழனை பட்டமேற்க இசைந்திருக்கிறான். இதற்கு ஆதாரமாக இருப்பன திருவாலங்காட்டு செப்பேடும், திருக்கோவிலூர்க் கல்வெட்டும் என்கிறார் சதாசிவப்பண்டாரத்தார்.
     ஏழாம் நூற்றாண்டு தொடங்கி `தென்னாடுடைய சிவனேப் போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'யென சிவத்தையும் தமிழையும் முன்வைத்து குரல் எழுப்பிய, பக்தி இலக்கியக்காரர்கள், தமிழ் மொழியை முன்வைத்த சிவமத ஆட்சிக்கான அடித்தளம் போட்டார்கள். 
தஞ்சைப் பழையாறை சோழ சிற்றரசும் சிவமத அறிவாளிகளும் வளர்த்தெடுத்தார்கள். இவர்கள் நோக்கமெல்லாம் இம்மண்ணில் ஏக போக சிவஆட்சியை நிலைநாட்டுவதோடு இல்லாமல் தமிழை உயர்நிலைக்கு கொண்டு வரவும்  சிவஆகமவழி திருக்கோவில்களையும் மக்களையும் பண்படுத்தி ஒருங்கிணைத்தாக வேண்டும் என்பதே. 
     அதாவது சிவஆலயத்தில்  பிராமணர்களின் தந்திர உபாயங்களால்  பிராமணப்பண்பாட்டை தமிழ்ஆகமத்தோடு கலந்து நச்சாய் திணித்த வேதஆகமத்தை வெளியேற்றுவதே பெரு நோக்கமாக இருந்தது.  இதற்காக சிவமதத்தை முன்னெடுத்துச் செல்லும் அறிவாளிகள், வழிநடத்தி அரசியல் அரங்கில் மூடுமந்திரமாக செயல்படுபவர்களோடும் பக்தி இலக்கியக்காரர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு போராடினார்கள். சமண, பௌத்த மதங்களோடு நேரிடையாகவும் பிராமணமதத்தவர்களோடு மறைமுகமாகவும் போராட வேண்டியிருந்தது.
     அந்த நீண்ட நெடியப் போராட்டத்தில் தான் ஆயிரக்காணக்கானவர்கள் உயிர்பலிக் கொடுத்து தென்னாடுடைய சிவனையும் தமிழையும்,  தங்கள் பக்கம் நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது. அதே நேரம் அவர்கள் சிவமதத்தை முன்னிறுத்தவும் தமிழைவளர்த்தெடுக்கவும் ஆட்சி அதிகாரத்தை சோழப்பெருமண்ணில் நிலைநாட்டிடும் நோக்கம் அவர்கள் எதிர்ப்பார்த்தது போல அமைந்துவிட வில்லை.  அதேசமயம் சிவமதத்தின் பக்கம் மக்கள் திரண்டு நின்றார்கள். வேளாண்உற்பத்தி உறவுகளுக்கு இப்படியான அவசியத் தேவையாகவும் இருந்தது.
     பக்திஇலக்கியப் போக்குகள், சோழ பேரரசு உருவாகத் தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து பங்காற்றியிருக்கிறது. பிராமணமதத்தவர்களும் இந்தப்போக்கிலேயே பயணித்து, சமணபௌத்த மதங்களின் ஆட்சியில் மறைமுகமாகப் பங்கு கொண்டு இருந்ததோடு இல்லாமல் அதன் வழியே சிவமதத்தையும் செறித்துவிடும்படியான வழிமுறைகளை திட்டமிட்டு செய்து வந்தார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். அப்போக்கு தான் `காலடி சங்கரனின் அத்வைதத் தத்துவத்தை'ப் பெரும் வெற்றியடையச் செய்தது. சிவமதத்தின் பண்பாட்டு வடிவமான தமிழ்ஆகமதத்தில் வேதத்தைக் கலந்து வேதஆகமமாக ஊருமாற்றிடும் தந்திரஉபாயம் வெற்றி அடைந்தது. சிவமதத்தில் இருந்த ஒரு பகுதியினரை அவர்கள் தம் பக்கம் திரும்பினார்கள். அதன் வழியே கடவுளர்களின் மொழியாயும் ஆட்சி மொழியாயும் சமஸ்கிருத்தைக் கட்டமைத்துக் கொண்டார்கள்.
     உத்தமசோழனுக்குப் பிறகு கி.பி. 985 இல் அருண்மொழி சூன் திங்கள் அரியணை ஏறினான். அந்நாள் மாபெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது என்றும், சோழநாட்டை விரிவு படுத்தத் தொடர்ச்சியாக  பல போர்களைப் புரிந்து வெற்றிகளை ஈட்டியிருக்கிறான் என்றும், அவன் மைந்தன் ராஜேந்திரனும் இளவரசு பட்டமேற்று படைக்குத் தலைமை தாங்கி பல போர்களை நடத்தியிருக்கிறான் என்றும் அவர்களது போர்ச் செயல்களைப் பற்றியும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறும் செய்திகள் விரிவானவை என்கிறார் பண்டாரத்தார்.
     தமிழ்நாட்டு வரலாற்றில் ராசராசன் பெருவேந்தனாக வளர்ந்துக் கொண்டிருக்கும் தருவாயில் தன் மக்களையும், நிலஉடமையையும் ஒழுங்குபடுத்த பிரமாண்டமான ஈர்ப்பு தேவைப்பட்டது. இந்திய மண்ணிலேயே ஈடு இணையில்லாத ஒரு கோயிலை எடுப்பிக்க எண்ணினான். பெருவேந்தனாக எவ்வாறு விளங்கினானோ அதே போன்று பெரும் `உடையாரை' (சிவலிங்கத்தை) கோயிலில் அமைத்திடச் செய்தான்.  
     பெருவேந்தர் ராசராசனின் ஆட்சியின் பெருமையையும் சிறுமையையும்   அரசப் பண்டாரத்தில் இருந்த பெருசெல்வத்தைக் கொண்டு அவன் கட்டிய பெருவுடையார் கோயில் சோழர் கால கலைகள் சாட்சியாக அமைந்திருக்கின்றன. இது வரலாற்று சாட்சியம் என்பதில் நமக்கு ஐயமில்லை.
     அவனின் ஆட்சி விரிவடைந்தது போலவே ஆட்சிக்குள் தலைமைப் பொறுப்புகளில் இருந்த வேதபிராமணர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போனது. அவன் கட்டுவித்த பெருங்கோவிலுக்குள் வேதஆகம நடைமுறையை உட்புகுத்தினார்கள். புரோகிதர்கள் பற்றாக்குறையை நிறைவு செய்ய ஆயிரம் பிராமணர்களை வெளிதேசங்களில் இருந்து அழைத்து வரும்படி செய்தார்கள். அவர்களுக்கு சுகபோக வாழ்வு தர பண்டாரத்தில் இருந்து பெரும்படியான செலவை செய்யும்படி ஆயிற்று.
     தன் ஆட்சியில் இருந்த நிலங்களை அளவை செய்து தகுந்த வரிவிதிப்புகளை போட்டு கோயில் பண்டாரத்தை நிரப்பும்படியான தேவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. வேளாண்மை உற்பத்தியில் கிடைத்த வருவாயைக் கணக்கிட்டு வரிமேல் வரி விதிக்க  வேண்டிய நெருக்கடி உண்டாயிற்று. வேளாண்மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள்.  உயர்பதவியில் இருந்த வேதபிராமணர்கள் வேளாண்மக்களிடையே கலகங்கள் ஏற்பட்டு விடாமலும் அவர்கள் ஒன்று திரண்டு விடாமலும் இருக்க வர்ணதர்மத்தை இறுக்கமாகக் கடைபிடிக்க அரசுக்கு வழிகாட்டினார்கள்.
     ராசராசனின் மனைவிமார்கள் எண்ணிக்கை ஏறக்குறைய பதினைந்து.  ஆயினும், உலகமகாதேவி என்று  அழைக்கப் படுவளாகிய `தந்தி சக்தி விடங்கி' என்பவளே பட்டத்தரசியாக விளங்கினாள். ராசராசனின் ஒரே மகனான இராசேந்திரனின் தாயார் திரிபுவன மகாதேவி என்று அழைக்கப்பட்ட வானவன் தேவியே ஆவாள். திருவிசலூர் கோயிலில் இராசராசன் துலாபாரம் ஏறும் போது, தந்திசக்தியும் இரணியகர்ப்பம் புகுந்தாள் என்று அக்கோவில் கல்வெட்டுகள் சான்றுபகர்கின்றன. கே.ஏ. நீலகண்டசாஸ்திரியார், `சோழர்கள்' என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
     துலாபாரம் செய்யவும் இரணியகர்ப்பம் புகவும் புதியதாக தனித்த மண்டபம் கட்டி அம் மண்டபத்தில் ஒன்பது நாள்கள் யக்ஞ குண்டம் வளர்த்து நூற்றுக்கணக்கான புரோகிதர்கள் வேதமந்திரங்கள் சொல்லி நிறைவு செய்வார்கள். அதன் பின்னர், அம்மண்டபத்தில் `துலாபாரம்' நிறுத்தி ஒருபக்கத்தில் மன்னன் அமர மறுபக்கத்தில் பொற்குவியலை கொட்டி சமப்படுத்துவது தான் துலாபாரம் ஏறுதலாகும்.
     ஒருமனித உருவம் தாராளமாக உள்ளே புகுந்து வரும் அளவிலான பசுவின் கர்ப்பப்பைப் போன்று பொன்னால் செய்வித்து அதனுள் குழந்தை வேண்டுபவர் புகுந்து வரச் செய்வதே இரணியகர்ப்பமாகும்.  தங்கத்தால் ஆன இவற்றை  செய்து, யக்ஞ குண்டம் வளர்த்து, புரோகிதர்களிடம் அளித்து விடவேண்டும் என்பதே. அவர்கள் அவற்றை பங்கிட்டுக் கொள்வார்கள். இதைச் செய்ததின் மூலம் இராசராசன் தன் ஆட்சியில் வேதஆகமத்தைக் கடைபிடித்தான் என்பது உறுதிபடுகிறது.
     சோழகால நாணயச் செலாவணியில் ராசராசன் வெளியிட்ட செப்புக்காசுகள் தான் ஆய்வுக்கு கிடைத்திருக்கும் முதல் நாணயமாகும். ஏராளமான காசுகள் கிடைத்திருக்கின்றன. இந்த நாணயத்தில் ஒருமன்னன் அமர்ந்த நிலையில் மலர் ஒன்றை முகர்வது போல இருக்கிறது. மறுபக்கத்தில் `ராசராச' என்று தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டு இருக்கிறது (நீலகண்டசாஸ்த்திரி) என்பதையும் கொண்டு சோழஅரசு இருமொழி கொள்கையைக் கடைப்பிடித்து வந்திருக்கிறது என்பதையும் நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.
     இப்படியான பிராமணப் புரோகிதர்களின் கட்டுப் பாட்டுக்குள் தான் சோழப்பேரரசின் (பொற்காலம்?) ஆட்சி இருந்திருக்கிறது என்று  புரிந்து கொள்ள எண்ணற்றச் சான்றுகள் காணக்கிடக்கின்றன.
     இதனையும் மீறி தமிழுக்கும் சிவமதத்திற்கும் இராசராசன் பங்களிப்பு செய்திருக்கிறான் என்றால் அந்தப் பணிகளுக்கு பின்னால் இரண்டு பெண்கள் இருந்திருப்பதை உணரமுடிகிறது. அவன் பாட்டியான செம்பியன்மாதேவியும் உடன்பிறந்த மூத்தவளான குந்தவையுமே ஆகும். இவர்கள் இருவருமே சிவபக்தியிலும் தமிழ்மீதும் பற்றுக் கொண்டும் இருந்தார்கள். இவர்களின் அன்புகலந்த அறிவுரைகளையும் கேட்டு ஒழுகி வளர்ந்து வந்தவன்  அருண்மொழியாகிய இராசராச சோழன். சிவமதவளர்ச்சிக்குறித்தும், சிற்பம், ஓவியம், முதலானவற்றிலும் கலைவளர்ச்சியிலும் பெரிதும் ஈடுபட அவனுக்கு ஆர்வமூட்டி வளர்த்தார்கள் என்று பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
     கண்டராதித்தச் சோழரின் தேவியரான செம்பியன் மாதேவி, தன் கணவர் இறந்த பின்னர், அரிஞ்சயன், சுந்தர சோழன் உத்தமசோழன் ஆகிய மூவர் ஆட்சிக்காலத்திலும் இராசராசன் ஆட்சியின் கி.பி. 1011 வரையிலும் உயிருடன் இருந்தவர்.
"இன்றைக்கு உலகமே போற்றி வியக்கும் சோழர்கால கலைப்படைப்புகளாக உள்ளவை  திருக்கோயில்கள், கற்சிற்பங்கள், செப்புத்திருமேனிகள் ஆகும்.  இவற்றை வரிசைப்படுத்தி நோக்கிடும் போது `செம்பியன்மாதேவி பாணி' எனத் தனித்த ஒருவகைப் பாணியை உருவாக்கியப் பெருமை இத்தேவியின் வரலாற்றுச் சாதனையாகும்.  `பாரட்' போன்ற வெளிநாட்டுச் சிற்ப இயல் வல்லுநர்கள் `செம்பியன் மாதேவி பாணி' எனத் தனித்த முத்திரையுடன் கலைப்படைப்புகளை அவர்கள் தம் நூல்களில் வெளியிட்டு உள்ளனர்'' என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் தம், ‘சோழமண்டலத்து சிற்பங்களும், ஓவியங்களும்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்
     இராசராசனின் தமக்கையார் குந்தவை, தன்னுடையப் பாட்டியான செம்பியன்மாதேவியாரின் குணநலன்கள் அனைத்தையுமே பெற்று இருந்தவர். தன் தமயனின் ஒவ்வொரு வளர்ச்சியில் பெரிதும் ஈடுபாடு கொண்டு துணைபுரிந்தவள். இராசராசன் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு தானும் தன் தமக்கை குந்தவையும் அளித்த செல்வங்களையும் கூடவே இருந்து செய்த பங்களிப்பையும் தான் கட்டிய பெருவுடையார் கோயிலின் நடுவிமானத்தில் பொறிக்கச் செய்ததில் இருந்தும், தன் இளையமகளுக்கு குந்தவை என்று பெயரிட்டதில் இருந்தும் அவனும் தமக்கையிடத்து பேரன்பு கொண்டிருந்ததை நன்குணரமுடியும்.
     இம்மன்னன் தன் பாட்டனாகிய அரிஞ்சயனையும் பெரிய பாட்டியாகிய செம்பியன்மாதேவியையும் நினைவு கூர்தற்கு அறிகுறியாக முறையே வடஆற்காடு மாவட்டத்தில் `மேற்பாடி' என்னும் ஊரில் அரிஞ்சயேச்சுரம் என்ற கோயிலும், திருமுக்கூடலில் `செம்பியன் மாதேவிப் பெருமண்டபம்' என்ற மண்டபமும் கட்டியிருப்பது இவன் தன்னை வளர்ப்பித்தவர்களிடம் எத்துணை அன்பும் பாசமும் கொண்டு இருந்தான் என்பது தெளிவு.
     தொடக்க கால சோழப் பேரரசில் கோயில் என்றாலே தில்லைக்கோயிலைத்தான் குறிக்கும். அக்கோயில் தான் தலைமையிடத்தைக் கொண்டு இருந்தது. இக்கோயில் வேதவர்களின் பிடிக்குள் இருந்து கொண்டு இருப்பதை விரும்பாமல் இருந்த ராசராசனின் சடையப்பவள்ளல்கள், பேரரசின் தனித்த அடையாளத்தை கொடுப்பதற்காக தஞ்சையில் பெருஉடையார் கோவிலை அரிய கலைச்செல்வமாக அமைத்திட வேண்டும் என்ற எண்ணத்தை வெளியிட அவனும் தன் தலைமேல் சுமந்து தான் அரியகலைக்கோயிலை படைத்தளித்தான் என்று சொன்னால் மிகையில்லை.
     இராசராசன் பிராமணப்புரோகிதர்களின் பிடிக்குள் இருந்து ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்தாலும் இப்படியான அரியசெயல்களை பிராமணப் புரோகிதர்கள் தடுத்து நிறுத்திட முடியுமா என்ன? இராசராசன் மனதில் நன்றிக்கடனோடு சுமந்திருந்த இப்பெண்களின் மீது வைத்திருந்த பக்தியே அவர்கள் விரும்பியபடியே பெருஉடையார்கோயிலை கட்டியமைக்கும் போது வேதப்புரோகிதர்களோடு சமரசம் செய்து கொள்ள வில்லை என்றும் உணரமுடிகிறது.  
     இராசராசனை வளர்த்த அந்த இருபெண்களும் பெருவுடையார் ஆலயத்தை அமைத்தலிலும், வழிபாடு நடத்தலிலும்  தமிழ்ஆகமப்படியே அதாவது சிவஆகமப்படியே செய்திடவேண்டும் என்று உறுதியாக இருந்திருக்கிறார்கள். அதிலும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதாகவே அமைந்திட வேண்டும் என்று அதற்காக வழிமுறைகளை அவர்களே கண்டு இருக்கிறார்கள். அவர்களின் எண்ணத்தை அவனும் இயன்றவரையிலும் நிறைவேற்றி இருக்கிறான்.
     இவனால் கட்டப்பட்ட அக்கோயிலில் அமைக்கப்பட்டு இருக்கும் பெருவுடையாரின் - லிங்கத்தின் உயரம் 12 அடியாக - உயிர்எழுத்தாக இருக்கிறது. பெருவுடையாரின் மெய்க் காப்பாளர்களாக இருபக்கமும் நிற்கும் துவாரபாலகர்கள் 18 அடியாக - மெய்யெழுத்தாக இருக்கிறார்கள். பெருவுடையாரும் அவரின்  மெய்காப்பாளர்களும் தனித்தனியாக ஒரே கல்லில் வடிக்கப்பெற்று இருக்கிறார்கள். அக்கோயிலின் உயரம் 216 அடியாக - உயிர்மெய் எழுத்தாக கலையின் உச்சத்தை பெற்று நிற்கிறது.
     இத்திருக்கோயிலுள் அமையப்பெற்று இருக்கும் தென்னாடுகொண்ட சிவபெருமான்  ஒருவனாக - ஆயுத எழுத்தாக அமையப்பெற்று இருக்க வேண்டும் என்பதே அப்பெண்மணிகளின் எண்ணமாக இருந்திருக்கிறது.  ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, 247  தமிழின் மொத்த எழுத்துக்களை உள்ளடக்கியே அக்கோயில் அமையப்பெற்று இருக்கிறது.
     `...கோயிலின் வெளித் திருசுற்றிலுள்ள நந்தி ஒரே கல்லில் அமைக்கப்பட்டது. அது பன்னிரண்டடிஉயரமும் பத்தொன்பதரை அடி நீளமும் எட்டேகாலடி அகலமும் உடையது. கோயில் திருச்சுற்றில் பழைய அடியாராகிய சண்டேசுவரர்க்கும் நந்திக்கும் இடங்கள் அமைக்கப்பட்டு இருந்தனவேயன்றி வேறு தெய்வங்களுக்கும் இடமில்லை...' என்று பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார்.
     `இந்த நந்தி ராசராசனால் நிறுவப்பட்டது இல்லை நாய்க்கர் காலத்தில் நிறுவப்பட்டது என்றும் இராசராசனால் நிறுவப்பட்ட  வெளிர் நிறத்தில் சற்று சிறியதாக இருக்கும் நந்தியை வேறு இடத்திற்கு நகர்த்தியிருக்கிறார்கள் என்றும் இப்போது நந்தியை உள் வைத்து கட்டப்பட்டு இருக்கும் மேல்கட்டுமானம் நாயக்கர்கால பாணி என்றும் இன்றைய ஆய்வாளர்கள் சான்று காட்டுகிறார்கள்'
      ஆகமப்படி நந்தி அமைக்கும் போது மேற்கூறை அமைப்பதில்லை. இந்த நந்தியும் இராசராசனால் அமைக்கப்பட்டதே. பிற்காலத்தில் வந்த அரச மரபினர் திருசுற்றில் மாறுதல் செய்யும் போது நந்திககு மேற்கூறை அமைத்திருக்க வேண்டும் என்றே நாம் கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் தான் இந்த நந்திக்கும் பெருவுடையாருக்கும் இடைப்பட்ட நடை 247 அடியாக - தமிழின் ஆககூடுதல் எழுத்துகளாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
"...இராசராசன் தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுண்மைகளை நன்கு விளக்கும் மெய்க்கீர்த்தியை இனிய தமிழ்மொழியில் அகவற்பாவில் அமைத்துத் தன் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை முதலில் மேற்கொண்ட பெருவேந்தன் ஆவான். இவனுக்குப் பிறகு இவன் வழியில் வந்த சோழர்களும் பிறமன்னர்களும் அச்செயலைப் போற்றித் தாமும் மேற்கொள்வாராயினர்.  மெய்க்கீர்த்திகள் எல்லாம் வெறுங்கற்பனைச் செய்திகளல்ல. அவை அவ்வேந்தர்களின் ஆட்சிக்காலங்களில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட உண்மைகளே ஆகும்...'' என்று பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
     எத்துறையிலும் பொதுமக்களுக்கு என்றும் அறிஞர்களுக்கு என்றும் இருவேறான மொழியைப் பயன்படுத்தியவனும் ராசராசனே. தமிழ்கூத்து என்றும் ஆரியக்கூத்து என்றும் ஒழுங்குப்படுத்திவைத்திருக்கிறான்.
     "...உலகவரலாற்றில் நமது தமிழகத்தைத் தவிர வேறு எல்லா நாடுகளிலுமே கவின் கலைகள் மன்னனுக்காக அர்ப்பணிக்கப்பட்டு - அடிமைப் படுத்தப்பட்டு - அந்தப்புரம் வரை சென்று அவல நிலையை அடைந்தன.  ஆனால் நம் தமிழகத்தில் இராசராசனும் மற்றெந்த மன்னர்களும் கலைகளை அடிமைப்படுத்தாமல் கோயில்களுக்கே அர்ப்பணித்து புனிதமாகக் கொண்டாடிப் போற்றினர். 
     கலைஞர்களுக்கு ஊதியம் அரசுக் கருவூலகத்தில் இருந்து கொடுக்கப்படாமல் கோயில் பண்டாரங்களிலிருந்து கொடுக்கப்பட்டது.  என்றும்,  தஞ்சைப் பெரியக்கோயிலில் மட்டும் 400க்கும் மேற்பட்ட ஆடல் அரசிகளை நியமித்து அவர்களுக்கு  நிரந்திர வருவாய், குடியிருப்புகள், நிரந்திரப்பணி, சுதந்திர உரிமைகள் ஆகிய இத்தனையும் அளித்து அந்த ஆடல் அரசிகளின் பெயர்களையும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியம், குடியிருப்பின் பகுதி, கதவிலக்கம் முதலான விவரங்களையும் இக்கோயிற்கல்வெட்டுகளில் பொறிக்கச் செய்தான் இராசராசன்.
     ஆனால் அவனது அரண்மனையில் ஒரு பெண் ஆடியதாக வரலாறே கிடையாது...'' என்று தொடர்ந்து எழுதுகிறார், குடவாயில்பாலசுப்பிரமணியன். இப்படியான முறை, நடைமுறையில் ஒழுங்குப்படுத்தப்பட்டு இருந்திருக்க வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. இம்மன்னன் காலத்தில் தேவதாசி முறையை நிலஉடமைச்சமூகம் நடைமுறையில் கொண்டு இருந்ததைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் வைத்துக் கொண்டு நிலவுடமைச்சமூகம் இப்படியான பெரும் வளர்ச்சியினை அடைமுடியாது.
     பக்தி இலக்கியக்காரர்களான நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பாசுரங்கள் மக்களை தங்கள் வசப்படுத்தும் இசைவடிவை கொண்டு இருந்தன. அவை தமிழின் தூய்மையையும் வளமையையும் நுட்பமான இசைக்கூறுகளை கொண்டு இருந்தன.
     ஏழாம் நூற்றாண்டு தொடங்கி திருநாவுக்கரசரும், ஆளுடையப்பிள்ளை என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்தரும், சுந்தரரும் தொடக்கிய பத்திஇயக்கம் தமிழையும் சிவத்தையும் அதிகாரத்திற்கு கொண்டு வர அவர்கள் நடத்திய போரட்டமும் அவர்களோடு துணைநின்று பழையாறை சோழ சிற்றரசு மறைமுகமாக நடத்திய போரும் தான் சோழப்பேரரசு தோன்ற அடிப்படையாக இருந்திருக்கிறது என்பது மிகையில்லை. அவர்களின் உழைப்பும் உருவாக்கத்தையும் கொண்டு ஆட்சி உரிமை பெற்ற சோழ அரசர்களில் பெரும்பாலோரில் ராசராசன் உள்பட அவர்கள் எண்ணத்தை நிறைவேற்றிடவில்லை
      இந்த நாயன்மார்களின் பாடல்களை சிவஆலயங்களில் பல்லவர்கள் காலம் தொட்டே பாடப்பட்டு வந்துள்ளன. ராசராசனை வளர்ப்பதில் கவனம் கொண்டு இருந்தப் பெண்மணிகள் கட்டியக் கோயில்கள் அனைத்திலும் அப்படியானப் பாடல்களை பாட, ஓதுவார்களை நியமித்து  வைத்திருந்திருக்கிறார்கள். அவர்களின் தூண்டுதலின் பேரில் தில்லையில் தேவாரமூவர்களின் பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகளை மறைத்து வைத்து அழிந்துக் கொண்டிருந்ததை மீட்டு எடுக்கும் பணியைச் செய்யுமாறு பரிந்துரைக்க இராசராசன் உடன் செவிசாய்த்திருக்கிறான்.
     தில்லை வாழ்தீட்சிதர்கள் இந்த தேவாரப் பாடல்கள் அடங்கிய சுவடிகளை யாருக்கும் காட்டாமல் மறைத்து வைத்திருந்ததற்கு காரணம் அவர்கள் கைகொண்டு இருந்த வேதஆகமத்திற்கு எதிரிடையான போக்குகளை கொண்டு வந்து விடும் என்பது தான். இன்றைக்குக் கூட அவர்களின் போக்குகளை கவனிக்கும் போது அவர்களிடம் இருந்து தேவாரப்பாடல்களை அவ்வளவு எளிதில் ராசராசனால் மீட்டு எடுத்து இருக்க முடியும் என்று நம்புவதற்கில்லை. அவன் படைவலிமையைக் காட்டித்தான் மீட்டு எடுத்திருக்க முடியும்.
     வேறுவழியின்றி அந்த தீட்சிதர்கள் இராசராசனுக்கு பணிந்திருக்கிறார்கள். கதவைத் திறந்து பார்க்கும் போது அந்த ஏட்டோலைகள் கரையானுக்கு இரையாகிக் கிடக்க அதன் மேல் புற்றாகிக்கிடந்த மண்செறிவுகளை நீக்கி, மூலிகைச்சாற்றை குடம் குடமாக ஊற்றி எஞ்சியிருப்பவற்றை எடுத்து நம்பியாண்டான் நம்பியின் மூலம் தொகுத்துத் தந்துள்ளான்.
     இவை மட்டும் மீட்டு எடுக்க முடியாமல் போயிருந்தால் அன்றைக்கு இருந்த நிலஉடமைச்சமூகத்தின் பண்பாட்டு அம்சங்களையும் பக்திஇலக்கியத்தையும், சோழப்பேரரசு அமைய அவர்கள் வழிநடத்திய  வரலாற்றையும், அன்றைக்கு தமிழகம்முழுதும் இருந்த சமூக வரலாற்றையும், ஐவகை நிலபாகுபாடுகளையும் அந்த நிலத்தில் வாழும் மக்களின் வாழ்முறையையும் நாம் பெறமுடியாமல் போயிருக்கும்.
     ராசராசனை வளர்ப்பித்த அப் பெண்மணிகளால் முத்தமிழும் தஞ்சைக் கோயிலில் வளர்க்கப்பட்டன. அவர்கள் விருப்பத்திற்கு எதிராக ராசராசனால்  நடந்திட இயலவில்லை. அவர்கள் விருப்பப்படியே இசைத்தமிழின் வளர்ச்சிக்குத் திருமுறைகளைத் தொகுத்து தினமும்  பெருவுடையார் முன்பு அத்தமிழ்ப் பதிகங்களைப் பாட வல்லோர்களை நியமித்தான். இவ்வகையில் 48 தமிழ் இசை வல்லோர்கள் நியமிக்கப்பட்டுத் தினமும் திருக்கோயிலில் தமிழ் பாடவைத்து இருக்கிறான். இவர்கள் பாடும் போது உடுக்கையும் கொட்டி மத்தளமும் இசைக்க தக்க இசைக்கலைஞர்களை நியமித்துயிருக்கிறான். அவ்விடம் தேவஆகமமுறைகளைச் சுட்டி இசைக்கலைஞர்களை கோயிலுனுள் அனுமதிக்க இடையூறாக இருந்த வேதவைதீகர்களை  ஒடுக்கவும் செய்திருக்கிறார்கள் அப்பெண்மணிகள்..
     பொய்கைநாடு தென்னவன் மூவேந்த வேளாண், சிறந்த சிவபக்தன். சிவஆகமத்தின் மீதும் தமிழ் மீதும் ஆழ்ந்தப்பற்றைக் கொண்டு இருந்தான். கூடவே குந்தவையின் அபிமானியாகவும் இருந்தவன். குந்தவையின் உடன்பிறந்தான் ராசேந்திரனின் நம்பிக்கைக்கு உரியவன். மன்னனின் ஆணைப்படியே நீ காரியம் செய்து வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. 
     இப்பெரிய கோயிலின் உள்ளேயே, ` உலகமாதேவியார் ராசராசன்' ஆகியோரது செப்புபடிவங்களையும் எழுந்தருளு வித்து அவற்றிற்கு அணிகலன்களும் அணிசெய்திருக்கிறான்.  இவன் முயற்சியால், இப்பேராலயத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், நம்பியாரூரார், நங்கை பரவையார், மெய்ப்பொருள்நாயனார், சிறுதொண்ட நாயனார்' போன்ற பக்திஇயக்கத்தவர்களுக்குச் செப்படிமங்கள் எழுந்தருளுவித்து அந்தச் செப்புபடிமங்களுக்கு அணிகலங்களும் அணிவித்திருக்கிறான்.       
     இவனைக்கொண்டே  ராசராசனை சிவநெறிக்கு இட்டுச் சென்றப் பெண்களின் விருப்பத்திற்கு இணங்கி கி.பி. 995 இல் திருச்சோற்றுத் துறைக்கோயிலில் நாள்தோறும் தேவாரப்பதிகம் பாடுவோர்க்கு நிவந்தமாகப் பொன் அளித்துள்ளான்.
     இராசராசனை வளர்ப்பித்தவர்களுக்கு சிவநெறியில் ஆழ்ந்தப் பற்று இருந்ததால் வைணவமத நெறியில் அவர்களுக்கு வெறுப்பேற்றும் நிலையில் தான் அன்றைய போக்குகள் அமைந்திருந்தன. இருந்தாலும் அவர்கள் வைணவத்தை பரப்பிய ஆழ்வார்களின் மனதைக்கவ்விப்பிடிக்கும்  இனியத் தமிழ் திருப்பதிகங்கள் இவர்கள் மனதையும் சுண்டியிழுத்திருக்க வேண்டும். கூடவே வேதியர்களின் ஒடுக்குதலில் இருந்து தமிழ் மீட்கப்பட வேண்டும் என்பதையும் எண்ணியிருக்கிறார்கள். நாம் தமிழ்மக்களுக்காக தமிழால் ஒன்றுபட வேண்டி நேரம் இது என்ற நம்பிக்கையும் அவர்கள் மனதில் உதித்திருக்கலாம்.
     அதனால் தான் திவ்வியபிரபந்தங்களின் பெருமையை உணர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். பெருமாள் கோயில்களில் திருப்பதிகங்கள் பாடவும் ராசராசன் உதவிபுரிந்திருக்கிறான். இராசராசனின் காலத்திய `உக்கல்' கல்வெட்டு ஒன்று, `திருவாய் மொழித்தேவர்' என்று பெருமைப்பட்டு இருப்பதே அதற்குச் சான்றாக அமைந்திருக்கிறது.
     பிராமண வைதீகத்தின் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் பிற்காலத்தில் ராசராசனே நேரிட்டு பெருவுடையார் கோயிலில்  ஆரியம் பாட மூவரையும், தமிழ்பாட மூவரையும் நியமித்திருக்கிறான். தேவநாகரியைப் பாடியவர்களுக்கு ஒருபடி அதிகமாக ஊதியம் வழங்கவும் ஏற்பாடாகி இருந்திருக்கிறது.  தமிழையும் தேவநாகரியையும் சோழர்குலப் பெண்களால் நேர்கோட்டில் வைத்துப் பார்க்க முடியவில்லை. அதனால் பெருவுடையார் கோயிலை நிர்வகித்த, `தென்னவன் மூவேந்த வேளாண்' மூலம் தமிழ்பாடுபவர் ஒருவரை கூடுதலாக அமர்த்திடவும் தேவநாகரியைப் பாடியவர்களுக்கும் தமிழ்பாடியவர்களுக்கும் ஒத்த ஊதியம் வழங்க செய்திருக்கிறார்கள்.   
     கூடவே,  இந்த ஆலயத்தில் வழிபடுவோர் சோமசூத்ர பிரதட்சணம் என்று சொல்லுகின்ற  நெறியை விடுத்து முழுப்பிரதட்சணம் செய்யும் வசதியையும் உண்டாக்கித் தந்திருக்கிறான்.  சிவஆகம ரீதியாக அமைக்கப்பெற்ற இடைக்கழி வண்ணப்பட ஓவியங்கள் கலைப்பொலிவும் வரலாற்றுச் செய்திகளும் நிரம்பியதாக அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கும் அக்கோயிலில் உள்ள கல்வெட்டே சான்றாகிறது.
     பெருவுடையார் ஆலயத்தில் ஆகம நெறியில் வழிபடுவதற்கு பல்வேறு இசைவாணர்களும், ஆடல் பாடல் வல்ல மகளிரும், ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேவாரப்பாடல்களான தெய்வநெறியைப் புகட்டும் நாயன்மார்களின் பாடல்களை `பண்'வகைகளைக் கொண்டு இசை அமைப்புச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தைப் பெறவும் அதை விரைவாக செய்து முடிக்க எண்ணினான். அதில் வல்லவர்களை தேடும்பணியில் ஈடுபட்டு இறுதியில் எருக்கம்புலியூரில்  வாழ்ந்து, இசையிலும் யாழிலிலும் வல்ல பாணர் குடியில் தோன்றிய  நங்கை ஒருத்தி பண்ணியல்பு அறிந்தவள் என்று அறிகிறான்.  அவளை அழைத்து வந்து  ஏழுதிருமுறைகளுக்கும் தனித்தனியாக தமிழ்ப்பண் அமைக்கச் செய்தான்.  அப்பண்ணிசையைக் கொண்டே இசைவாணர்களும் ஆடல் பாடல் வல்லவர்களும் தினம் தினம் தேவாரத்தை இசையோடு பாடியிருக்கிறார்கள், ஆடியிருக்கிறார்கள்.
     இப்படியான பணிகளை சிவமதத்திற்கும் தமிழுக்கு செய்திருக்கும் இராசராசனை வேதியர்கள் தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள பலவழிகளை மேற்கொண்டு இருந்திருக்கின்றனர். அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். அரசவையில் திருமந்திர ஓலைநாயகமாக விளங்கியவர்கள் இருவர்.  `சேனாதிபதி கிருஷ்ணன் இராம மும்முடிச்சோழ பிரமாராயன்' என்ற ஒருவன். `ஈராயிரவன் பல்லவராயன்' ஆகிய, `மும்முடிச்சோழ போகன்' என்பான் மற்றொருவனாவான். இந்த இருவருமே வேதபிராமணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதலாமவன், இராசராசனின் படைப்பிரிவுக்கு தளபதியாகவும் இருந்திருக்கிறான். இப்படியான தகவல்களை அடங்கிய கல்வெட்டுகள் ஆவுடையார்கோயிலில் பதிக்கப் பெற்று இருக்கின்றன.
     ராசராசனின் ஆட்சியின் இறுதிகாலத்தில் சமணத்துறவியான அமிர்தசாகர், யாப்பருங்கலம், யாப்பெருங்காரிகை என்ற நூல்களை எழுதினார். இப்புலவர் அமிர்தசாகரை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துச் சிறு குன்ற நாட்டில் வந்து வாழுமாறும், இராசராசன் கேட்டுக் கொண்டதோடு `ஜெயங்கொண்ட சோழன்' என்ற பட்டத்தையும் ஏற்றுக் கொண்டான் என்கிறார் நீலகண்டசாஸ்த்திரியார்.
     யாப்பருங்கலம் என்பது யாப்பிலக்கணத்தைப் பற்றிய விரிவான விளக்கம் கொண்டது. காரிகை என்பது அதன் சுருக்கம். யாப்பருங்கலம் பரப்பிலும், தமிழ்ச் செய்யுள், அடி, சீர்கள் ஆகியவற்றின் பலவகைகளைப் பற்றிய விளக்கத்திலும் விரிவானது. அழிந்து போயிருக்கக் கூடிய அல்லது தெரிந்திராத பல இலக்கிய வகைகளின் சான்றுகளும், எடுத்துக் காட்டுகளும் பேணி பாதுகாக்கப்பட்டுள்ளன. இக்கருத்துக்கள் குணசாகரின் காரிகை உரைக்கும் பொருந்தும். அவர் அமிர்தசாகரின் சீடர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
     இராசராச சோழன் வரலாற்றைக் கூறும் நூல் ஒன்று அந்நாளில் இருந்தது என்பது திருப்பூந்துருத்தியிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியமுடிகிறது. இந்த நூலின் பெயர், ` ஸ்ரீ இராசராசவிஜயம்' என்பது. அதன் ஆசிரியர்  சர்வணன் நாரணன்பட்டாதித்தன் என்பார் ஆவார். இந்நூல், தேவநாகரியில் எழுதப்பட்டது. அன்றியும் `இராசராசேசுவர நாடகம்' என்ற நாடக நூல் ஒன்றும் இருந்தது என்பது தஞ்சைப் பெரியக்கோயிலில் உள்ள கல்வெட்டால் புலானகிறது'.  இந்நூல் தமிழில் அமைந்தது. கூடவே இராசராசன் தஞ்சையில்  `இராசராசேச்சுரம்' என்னும் பெருங்கோயில் எடுப்பித்த வரலாற்றைக் கொண்டு இருந்திருக்கிறது'  என்கிறார் பண்டாரத்தார்.  இந்தநாடகம் மக்களைச் சென்றடைந்து, ஈர்த்தும் இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. 
     அன்றைக்கு தமிழ், ஆட்சி அதிகாரத்தில் எப்படி எவ்விடத்தில் வைக்கப்பட்டு இருந்ததோ அதிலிருந்து         நூல் பிசகிடாமல் தான் இன்றைக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் தமிழை வைத்திருக்கிறார்கள். என்று நாம் உறுதிபடச் சொல்லிட முடியும்.
      ராஜராஜன் - பெருவுடையார் கோயில் -100 நிறைவு  கருத்தரங்கம் அக்டோபர்,31-2010 தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்க மாநில அமைப்பு நடத்திய ஆய்வரங்கம்.

No comments:

Post a Comment