Thursday, 18 September 2014

கதைத் தொகுப்பில் கலைஞர் பெயர் விடப்பட்டுள்ளதா?



(‘முரசொலி’ குத்தலுக்கு தொகுப்பாளர் சோலையின் பதில்)
     02.03.2002 நாளிட்ட முரசொலியின் இரண்டாம் பக்கத்தில் ‘கலைஞரின் சிறுகதை இடம் பெறாதது ஏன்?’ என்ற தலைப்பில் குறிப்பிடத்தக்க பத்திச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது குறித்து...
     ‘தஞ்சை கதைக்களஞ்சியம்’ நூலுக்கு ‘தினத்தந்தி’ எழுதிய விமர்சனத்தினால் ஏற்பட்ட குழப்பம் தான் முரசொலி செய்திக்கு காரணம் என்று பலருக்கும் தெரியாது போய் விடக்கூடும் என்பதாலேயே இந்த விளக்கத்தை எழுதுகிறேன். 
      ‘தஞ்சை சிறுகதைகள்’ ‘தஞ்சை கதைக்களஞ்சியம்’ ஆகிய தொகுதிகளைத் தொகுத்துள்ளேன். இத்தொகுப்புகளுக்குள் அடங்கியுள்ள சிறுகதைகளின் படைப்பாளிகள் அனைவரும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்குள் அடங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முரசொலி பத்திச்செய்தியில் தொகுப்பாளர் சோலை சுந்தரபெருமாள் இடதுசாரி – முற்போக்கு எழுத்தாளராக இருக்கிறார், இன்றைய அரசியல் போக்குக்கு ஏற்ப இத்தொகுப்பைச் செய்திருக்கிறார் என்பதே முரசொலியின் குற்றச்சாட்டு. இது ஆதாரமற்றது. இப்படியான செயல்பாட்டை ‘அவசரகுடுக்கை’ என்பார் எம்மண்ணின் மக்கள். இச்சொல்லாடலை மக்கள் வழக்காறு என்பார் ஆய்வாளர்கள்..
     எம்மண்ணின் சிறுகதை படைப்பாளிகளில் சிறுகதை வடிவத்திற்கு அழுத்தமான பங்களிப்பு செய்தவர்கள் - செய்து கொண்டு இருப்பவர்களில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளோடு அப்படைப்பாளிகளைப் பற்றிய குறிப்புரையோடு தொகுப்பாக்கப்பட்டுள்ளது. இப்படியான உள்ளடக்கத்தோடு 33 படைப்பாளிகளைத் தொகுத்து வெளிக்கொண்டு வந்தது தான் ‘தஞ்சை சிறுகதைகள்’ (1999ல் பெங்களூர் காவ்யா வெளியிட்டது).
     இத்தொகுப்பில் கலைஞர் கதை இருக்கிறது.  பக்.175.  இத்தொகுதியின் உள்ளே திராவிட இயக்க எழுத்தாளர்களின் பங்களிப்பை, சில இலக்கியவாதிகளும், விமர்சகர்களும் திட்டமிட்டே புறக்கணித்து விடுகிறார்கள் என்ற வேதனையை கொந்தளிப்புடன் பலவிடங்களில் பதிவு செய்துள்ளேன்.  இலக்கிய விமர்சனக்கூட்டங்களிலும் நேர்காணல்களிலும் சொல்லி வருகிறேன். (தஞ்சை சிறுகதைகள் பக்கம் 174, 294)
     ‘தஞ்சை சிறுகதைகள்’ தொகுப்பில் விடுபட்டுப்போன திராவிட எழுத்தாளர்களோடு மற்ற சிலரையும், இன்றும் எழுதத் தொடங்கியிருப்பவர்கள் வரையிலும் என் வாசக அனுபவத்துடன் ‘தஞ்சை கதைக்களஞ்சியம்’ என்ற இரண்டாம் தொகுதியை வெளிக்கொண்டு வந்துள்ளேன்.  இத்தொகுப்பில் தான் கலைஞர் இடம் பெறவில்லை. 
     விதையாய் கோட்டைக்குள் இருப்பவரை களஞ்சியத்தில் - பத்தாயத்தில் கொண்டு வருவது நியாயம் இல்லை.  அதுபோல எந்த படைப்பாளரையும் கொண்டு வரவில்லை.  இவ்விரண்டு தொகுப்புகளும் கொண்டு இருக்கும் உள்ளடக்கத்தையும்  தொடர்ச்சியையும் தினத்தந்திக்கு மதிப்புரை எழுதியவர் அறியவில்லை.  ஆனால், பதிப்புரை, என்னுடைய முன்னுரை ஆகியவற்றிலும் குறிப்பாக நூலின் பின் அட்டைப்பட பகுதியில் பெரிய எழுத்தில் பளிச்சென்று படுவது போல் அச்சாகியுள்ளன.
     இடதுசாரிகள், கலைஞர் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றகழகத்தை விடுத்து கூட்டணி அமைத்துக் கொண்டதால் தான் தொகுப்பில் தொகுப்பாளராகிய நான் கலைஞரை புறந்தள்ளியதாக முரசொலி கருதி செய்தி வெளியிட்டு இருப்பது வெறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதை நடுநிலைமையோடு தொகுப்புகளை படிப்போர்  உணர்வார்கள்.
     நான் இந்த இரண்டு தொகுதிகளையும் தொகுக்கக் காரணம் - என்னுடைய உள்ளுணர்வை - இத்தொகுதிகளில் எழுதியுள்ள நீண்ட முன்னுரைகளை படிப்பவர்களுக்கும் படித்தவர்களுக்கும் பிடிபட்டுவிடும். 
     இத்தொகுதிகளை வெளிக்கொண்டு வர தனியாளாய் நின்று எவ்வளவு பொருளை இழந்திருப்பேன்? எவ்வளவு காலத்தை செலவிட்டிருப்பேன் என்பதையும் இத்தொகுதிகள் அடையாளப்படுத்தும்.
     ஒரே வரியில் நான் சொல்ல வேண்டுமானால் எல்லாவற்றையும் மீறி இலக்கியவாதியாகிய ‘கலைஞரையே’ நான் மிக மிக... அதிகமாய் நேசிக்கிறேன்.  நான் அறிந்தவரை இடதுசாரிகளும் கலைஞர் என்ற இலக்கியவாதி - படைப்பாளி மீது நல்ல நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றே அறிகிறேன்.
     ஒரு பின்னோக்கிய பார்வையில்...
     ‘தஞ்சை சிறுகதைகள்’ வெளிவந்ததும் முதல்வராக கலைஞர் இருந்தபோது நேரில் நூலை தருவதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.  பதிப்பாளர் ‘காவ்யா’ சண்முகசுந்தரம் அவர்கள் கலைஞரிடம் கொடுத்துள்ளதாகச் சொன்னார். 
     சமயம் வாய்க்கும் போது நானே நேரில் தர வேண்டும் என்று இருந்தபோது தான்... கீழவெண்மணி மக்களின் வர்க்கப்போராட்ட நாவலான ‘செந்நெல்’ நூலினை தமிழகஅரசு பரிசுக்கு உரியதாக தேர்வு செய்திருந்தது. அப்பரிசை திருவள்ளுவர் தின விழாவில் பேராசிரியர் அவர்கள் என்னிடம் வழங்கினார்கள். அப்போது அருகில் அமர்ந்திருந்த முதல்வர் கலைஞர் அவர்களிடம் அத்தொகுப்பை அளித்து வந்தேன்.
     ‘கலைஞர் - ஒரு சரித்திர நாயகனின் பயணம்’ - இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன் எழுதிய கட்டுரையை ஜூன் 2010 கணையாழி’யில் வெளியிட்டிருந்தார்கள். 
     இந்தக் கட்டுரையின் மையப்பரப்பில் தஞ்சை சிறுகதைகள் நூலின் அட்டைப்படத்தை அச்சிட்டிருந்தார்கள்.  அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து அதே வெங்கட்சாமி நாதனால் தஞ்சை சிறுகதைகள் நூலுக்கு எழுதிய விமர்சனமும் வெளிவந்தது.  அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். 
     அதே காலத்தில் தினமணி, தீக்கதிர், ஆங்கில ஏடான இந்து, இந்தியா டுடே ஆகிய இதழ்கள் இத்தொகுதிக்கு விமர்சனங்கள் எழுதியிருந்தன. 
     கலைஞரின் கதையைச் சிறப்பாக குறிப்பிட்டும் இருந்தார்கள்.  இப்படியான தகவல்களையும் கலைஞர் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்ற விருப்பத்தோட எழுதியுள்ளேன்.
‘முரசொலி’ கடிதம் - ‘தீக்கதிர்’  - 24.03.2002)

1 comment:

  1. ஐயா நீங்கள் தொகுத்த “ தஞ்சை கதைக்களஞ்சியம்’ என்ற நூல் எங்கு கிடைக்கும். உங்களின் தஞ்சை சிறுகதைகள் தொகுப்பை படித்தேன். நன்றாக இருந்தது. எனக்கு தஞ்சை கதைக்களஞ்சியம் நூலை அனுப்ப இயலுமா? அந்த தொகுப்பில் உள்ள கதைகளின் பெயரையும் ஆசிரியரின் பெயரையும் தந்தால் நலம், எனது E Mail
    enselvaraju@gmail.com. எனது Blog. enselvaraj.blogspot.in. நன்றி

    ReplyDelete