`அம்மையப்பன் குளிக்கரை அம்புட்டுக்கிட்டு முழிக்கிற' என் பள்ளித் தோழர்கள்
என்னை இப்படிச் சொல்லி கிண்டல் செய்வார்கள்.
நான் பிறந்திருக்கும் ஊர் உட்கிராம மான
காவனூர். அந்த இரண்டு ஊர்களுக்கும்
நடுவில் தான்
இருக்கு. அங்க
வாழ்ற எல்லாருமே வெள்ளாமைக் காரவங்க தான். அவங்களோடு
ஒன்னாடிமுன்னாடியா வாழ்ந்துக்கிட்டு இருக்கிறேன். இப்படி இருக்கிற காலத்துல, நான்
கதை எழுத வேண்டும் எங்கிற
ஆசை வந்தது ஒரு வேகசாகத்திலத்தான்.
பசுமை விரிந்து கிடக்கும்
வயல் வெளிக்கிடையில் பிடாரிக் கோயில். அதை ஒட்டியது
போல பெரிதாக அலைமோதிக் கொண்டிருக்கும்
சொக்கநாதர் குளம். அது நிறைய
அல்லிக்கும் தாமரைக்கும் பஞ்சமே இருக்காது. அதன்
இடையே `பொத் பொத்' என்று
விழுந்து எழும் மீன்கொத்திகள், மூழ்கி
மூழ்கி எழும் கானாங்கோழிகள், சாம்பல்பறவைகள்.
குளத்தைச் சுற்றிலும் அடர்ந்து கிடக்கும் தாழைக்குத்துக்கள். இடைஇடையே
மருதாணி குத்துக்கள். அவை
கொள்ளாமல் பூத்துக்கிடக்கும் மலர்கள். எந்தநேரமும் அதன் மணம் கம
கமத்துக் கொண்டு கிடக்கும். குளக்கரையின்
விளிம்பில் ஈச்சன் மரங்கள். ஈச்சன்
மட்டைகளில் தொங்கிக்கிடக்கும் தூக்கணாங் குருவிக்கூடுகள் அற்புதமான கலைக்குடிகளாய் காட்சி தரும். அவற்றிலிருந்து
தலைநீட்டி கீச்சிடும் தூக்கணாங்குருவிக் குஞ்சிகள்.
அவ்விடங்கள் தான் என் பொழுது
போக்கும் இடங்கள். (என் அப்பாவிற்கு மடமாகத்தெரியும்.
காரணம் அவர் சைவமடங்களைப் பற்றி
நன்கறிந்தவர். ஆனாலும் அவர் சிவபக்தர்.)
எனக்கு காலம் நேரம் போவது
தெரியாமல் ரசித்துக்கிடந்த ஆண்டுகள் பல. என்
நண்பர்களும் வந்து கூடுவார்கள்.
பசியை மறந்த நிலையிலும், இருள்
சூழ்ந்த நிலையிலும் பேசுவோம் பேசுவோம். தெரிந்த இலக்கியங்கள், அரசியல்,
பண்பாட்டு போக்கிரித்தனங்கள், எழுதப்போகும்
கதை (அந்தச்சூழலில் எழுதியவை எதையும் இதழ்கள் ஏற்றுக்
கொள்ள வில்லை என்பது வேறு
விஷயம்)
`இவனோட எட்டுக்குத்து எளையதுங்க
எல்லாம், அப்பனுக்கு
சம்பாத்திச்சிப் போடுதுங்க. இவன் என்னாடான்னா ஊரைச்
சுத்திக்கிட்டு கிடக்கிறான். பத்தாததுக்கு நாலஞ்சி அகராதிப்புடுச்சதுங்க இவனைக் கோலிக்கிட்டு
நிக்கிறானுங்க. உருப்புடுவானா? என் புத்தியச் செருப்பால
அடிச்சிக்கனும். பத்தாவது
வரைக்கும் படிக்க வைச்சது என்
தப்பு தானே? பண்ணை சூவன்னா
செட்டியாரு அப்பவே சொன்னாரு. ` நீ
உன்புள்ளைய படிக்க வச்சி எதுக்கு
ஆவப்போவுது. கட்சிக்கட்டிக்கிட்டுஅகராதி பேசித்திரியத்தான் ஆகும்' ன்னார். நான்
கேட்கில. இப்ப ஏன் பிடாரிக்கோயில்ல
ஒக்காந்துக்கிட்டு வக்கணைப் பேசிக்கிட்டு இருக்க மாட்டான்? அவன்
கையால நாலு காசு கொண்டாந்து
கொடுக்காத வரைக்கும் சோறு போடாதே அமுசு...
என் ஜென்மம் வரைக்கும் கல்லு
உடைச்சி தான் சோறு திங்கனுன்னு
என் தலையில எழுதியிருக்கு...'
என் அப்பாவின் ஆத்திரத்திலும்
நியாயம் இருப்பதை உணர்ந்து கொண்டு தான் இருந்தேன்.
பின்னாளில் என் அப்பாவோடு சித்தாள்
வேலைக்குப் போகவும் நேர்ந்தது. இதிலும்
சூவன்னா செட்டியாரின் கைங்கரியம் இருந்தது.
ஏன்னா என் தோழர்களின்
துணையோட மக்கள்நல்வாழ்வு மன்றம் தொடங்கிட்டோம், `இலக்கியப்
பாவை' என்ற கையெழுத்துப் பிரதியையும்
ஆரம்பிச்சிட்டோம், `பண நோட்டு மைனர்கள்'
நண்டுகால் நடராசனும் நளாயினிகளும்' போன்ற எழுத்துக்கள், மைனர்களின்
அந்தரங்கத்தை அரங்கேற்றம் செய்தன. நான் தொடராக
எழுதிய `என் காதலிக்கு தூது'
என்ற வசனக்கவிதை, ஊருக்குள் இருக்கும் பெரிசுகளுக்கு நல்ல தீனியாக இருந்தது.
அதன் வழியாக மைனர்களுக்கு
சேதி போனது. அவர்களின் கோபம்
அடியாட்களை அனுப்பிட அடிபட்டதும், அடிக்க வைத்தவர்களையேத் தண்ணீர்
காட்டி அனுப்பிய அனுபவமும் உண்டு. அடுத்த
இதழில், `எறும்பைப் பிடிக்க ஏழுபேர் வேண்டுமோ?'
என்ற கவிதை வெளியிட்டேன். இப்படி
எழுத ஒளியேற்றியது தெருவிளக்குகள் தான். அவை தான்
எனக்கு கர்ணபரம்பரை கதைகளைச் சொல்லித்தந்தன.
ஓய்வு கிடைக்கும் போதெல்லாம்
நூலகத்துக்குப் போவேன். கிடைக்கிற பத்திரிக்கைகளை
ஆர்வமாகப் படிப்பேன். படித்ததும் சோகம் என்னை அப்பிக்கும்.
ஒரு கதையிலக் கூட நான் வாழும்
மண், அந்த மண்ணுல வாழுகிற
மக்க, அவங்க பேசுற மொழி
அவங்களை ஒண்டி வாழும் மத்த
உயிருங்க எதையும் படிக்க முடியலேயேங்கிற
சோகம் தான் அது.
இதையெல்லாம்
உள்ள வச்சி நாமே கதை
எழுதினா என்னாங்கிற கேள்விக்கு விடையைப் பொருத்தி சின்னச்சின்ன கதைகளா எழுதச் தொடங்கினேன்.
பத்திரிக்கைகளுக்கு அனுப்புனா, போன கையோட திரும்பிடும்.
நான் சோகப்படல. இந்தப்
பத்திரிக்கைகள் இப்படித்தான். அதுக்குன்னே
சோடனைப்பண்ணி எழுதினாத்தான் போடுவாங்க. இது நமக்கு எதிரிங்கிற
முடிவுக்கு வந்துட்டேன். ஆனா, பக்கத்தில் இருக்கும்
திருவாரூர் நகரில் வாழும் என்
நண்பர்கள் பலரின் கதைகள் பிரசுரம்
கண்டு விடும்.
அவங்க எல்லாரும், `ஊனக்கண்ணு
டோரியா சென்னைப்பட்டணம் போறீயா?' என்று கேலிப்பண்ணுவாங்க. அப்பெல்லாம்
நான் நிசமாவே சுண்டிப்போய் தான்
திரும்புவேன். (இன்றைக்கு அவர்களை இதழ்களில் பார்க்க
முடியாமல் போயிருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம்
இருக்கு.) திரும்ப
ஊருக்குள்ள வந்ததும் அவங்க செஞ்ச கிண்டல்
எல்லாம் மறந்து போயிடும்
அப்படியான மறதி தான் எனக்கு
பலமாவும் இருந்துச்சு. என்
மக்களையும் மண்ணையும் முன் வச்சே எழுதிக்கொண்டு இருந்தேன்.
இந்த நேரத்தில் தான்
`கலைமகளில்' குறுநாவல் போட்டி அறிவிச்சிருந்தாங்க. அதுவரையிலும்
ஒரு கதைக் கூட பிரசுரம்
ஆவாத நெலமையில குறுநாவல் எழுதுவது என்ற முடிவுக்கு வந்தேன்.
என் மக்களான வெள்ளாமைக்காரவங்க, தினம்
தினம் எப்படியெல்லாம் செத்துச் செத்து பிழைக்கிறாங்க என்கிற
போராட்ட வாழ்க்கையை முதன்மைப்படுத்தி எழுதினேன். கூடவே, ஆணுக்கு நிகரா
வேலைப்பாக்கும் ஒரு பெண் `எல்லம்மா'.
அவள் கணவன் வீரப்பன்.
அவன் விரும்பினபடி எல்லாம்
குடிக்கிறதும் பொண்டுக தொடர்பும் வச்சிக்கிட்டு இருக்கான். அவனை எதிர்த்து ஒரு
வார்த்தைக் கூட அவள் பேசினதில்லை.
பெண்கள் அப்படிப் பேசினாப்
போதும், ஆம்பளைங்க தமிழ்மாச ஒன்னாம் தேதியோ அம்மாவாசை
நாளிலோ ஊரைக் கூட்டிப்புடுவாங்க. வழக்கமா
கிராமங்களில் கிடைக்கும் அடி அவளுக்கும் கிடைக்கும்.
தான் பெத்த ஒரே பொண்ணுக்காவ
தன் கணவன் செய்யிற அடாவடித்தனத்தை
எல்லாம் தாங்கிக்கிட்டு இருக்கா.
அவளோட கணவன் வீரப்பன்,
ஒரு நாள் சரோசா வோட
ஓடிப்போகிறான். அப்போது எல்லாம்மாவோடு பக்கத்துணையாக
நின்று வேலைப்பாத்துக் கிட்டு இருந்த ஆராயி,
`உழைத்துப் போராடினால் தான் நம் வாழ்க்கையில்
நாம ஒரு மனுசியா இருக்க
முடியும்' என்று நம்பிக்கையூட்டினாள்.
எல்லாம்மாவின் நம்பிக்கை வெற்றி பெறுகிறது. சில
ஆண்டுகளுக்குப் பிறகு சரோசா வேறு
ஒருத்தனோடு ஓடிப்போகிறாள். மீண்டும் வீரப்பன் அவளைத் தேடி வருகிறான்.
அவனுக்கு துணையாக ஊர் ஆண்கள்
வருகிறார்கள். `என்னா இருந்தாலும் அவன்
தான் உனக்கு தாலிக்கட்டின புருஷன்.
அவனோட வாழ்றது தான் ஒனக்கு
பெருமை' என்று பரிந்து கொண்டு
பேசுகிறார்கள். இந்த
வீரப்பனால் அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட
போராட்டக் காயங்களை நினைத்து அவனை மறுதளிக்கிறாள். அவர்கள்
விடுவதாக இல்லை. அவள் மௌமாக
இருந்தாள்.
எல்லம்மா நாள் முழுதும் உளுந்துபயிறு
எடுத்த அரிப்பில் கிடந்து, உழன்று பயிர் கட்டைச்
சுமந்து கொண்டு வருகிறாள். அந்தியின்
தென்றல் அவளை மெல்ல வருடிக்
கொடுத்து ஆற்றுப்படுத்துவதை ஏற்றுக் கொண்டு வருகிறாள்.
வீரப்பன் அவளை எதிர் கொண்டு,`
எல்லா! என்ன இருந்தாலும் நான்
ஆம்பள... இந்த இடத்தில உன்
காலில் விழுறேன். என்னை மன்னிச்சிடு...' என்று
சொல்லிக் கொண்டே அவள் முன்
நெடுஞ்சாணாக விழுகிறான். அவள், அவனை கண்கொண்டு
பார்க்காமல் தலைச்சுமையை இலகுவாக்கிக் கொண்டு அவள் பாட்டுக்குப்
போய் கொண்டு இருக்கிறாள். இது
தான் கதை.
கிராமமக்களின் ஏச்சும் பேச்சும் அவர்கள்
பேசி புழங்கும் மொழியிலேயே எழுதினேன். என் இலக்கும் அதன்
திசையும் ஓரளவுக்கு ஒத்து வந்து கைக்
கொடுத்தது. இந்த குறுநாவலில் நான்கைந்து
மனிதர்களின் மனசு எப்படி எப்படி
எல்லாம் நெறிக்கப்படுகிறது என்பதோடு உழைப்பாளி மக்கள் வாழ்க்கையில் உள்ள
நெளிவு சுளிவுகளை நெகிழ்வாக எழுதிய அந்த `மனசு'
குறுநாவலை கலைமகளுக்கு அனுப்பி வைத்தேன்.
கொஞ்ச கால இடைவெளிக்குப்
பின்னர் வழக்கமாக திரும்பும் உறையாக இல்லாமல் வந்த
உரையைப் பிரித்தேன்... `வாழ்த்துக்கள். தங்கள்
`மனசு' இரண்டாம் பரிசுக்கு உரியதாக கலைமகள் தேர்வு
செய்திருக்கிறது. கி.வா.ஜகநாதன்'
என்று இருந்தது. படித்ததும்
என் மனசு ரெக்கைக் கட்டிக்
கொண்டு கிராமம் முச்சூடும் பறந்து
வந்தது. முதன் முதலில் என்
மக்களோடுப் பின்னிப் பிணைக்கப்பட்ட வாழ்க்கை எழுத்து வடிவத்தில் இலக்கியப்
பத்திரிக்கையில் வரப் போகிறதே என்ற
சந்தோசத்தில் தலைகால் புரியாமல் போனது
கூட நெசம் தான்.
`மனசு' பிரசுரமான இதழும்
பரிசுத்தொகைக்கான காசோலையும் இணைத்தக் கடிதத்தை பெற்ற போது பெரிதும்
மகிழ்ச்சியடைந்தேன். அக்கடிதத்தில்,கி.வா.ஜகநாதன்அவர்கள்
`சென்னை வந்தால் சந்திக்கலாமே' என்று
குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். சூட்டோடு சூட்டாய் சென்னை போய் திரு.கி.வா.ஜவை
சந்தித்தேன். மரபு ரீதியான விசாரிப்புக்குப்பின்...
`கதையின் உள்ளடக்கம் பெரிய விஷயம். கதையைச் சொல்லியுள்ள விதமும்
ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, கொச்சையான பேச்சி
மொழி அது தான் கலைமகளுக்குப்
பிடிக்க வில்லை. இப்படி எழுதப்பட்ட
கதையை கலைமகள் வெளியிடுவது இது
முதலும் கடைசியாகவும் இருக்கும்...
...உங்கள் வழி சரியானது
தான்னு நீங்க நினைத்தால் போய்க்கிட்டு
இருங்க. வாழ்த்துக்கள் சோலைசுந்தரபெருமாள்...' என்று
என்னை `கலைமகள்' அனுப்பி வைத்து விட்டது. அதே
நேரம் `தாமரை' சட்டுன்னு கை
நீட்டி தாங்கிப் பிடிச்சதாலத் தான் நான் நிலைச்சி
நிக்க முடிஞ்சது.
அதுக்குப் பக்கத் துணையா இருந்தவர்
கவிஞர் கே.சி.எஸ்.
அருணாசலம். இலக்கியவிமர்சகர்களான திரு.திக.சிவசங்கரன்,
வல்லிக்கண்ணன், புதுக்கோட்டை பாலா' போன்றவர்கள் தொடர்ச்சியாய்
என்னை ஊக்கப்படுத்தி வளர்த்தார்கள் என்பது தான் உண்மை.
(இக்கட்டுரை தினமணி நாளேட்டோடு இணைப்பாக
வரும் `கதிரில்' 2000 பிப்ரவரியில் வெளிவந்தது)
No comments:
Post a Comment