நானும் என் படைப்புகளும்
- சோலைசுந்தரபெருமாள்.
சங்ககாலம் தொடங்கி இன்றைய நவீன இலக்கிய கால நெடுகிலும் தமிழுக்கு
குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ள படைப்பாளிகளை காவிரி வண்டல் மண் பெற்றுள்ளது என்று சொல்லுவது
மிகை இல்லை. இப்படைப்பாளிகள் எல்லோரும் வண்டல் மண்ணின் மக்கள் வாழ்நிலை, அவர்கள்
மொழி, பண்பாட்டு அம்சங்கள் வாழ்வியல் போராட்டங்கள் அனைத்தையும் உள்வாங்கி
படைப்பினுள் இறக்கினார்கள் என்ற முடிவுக்கு நாம் வந்து விட முடியாது.
வான்பொய்ப்பினும் தான் பொய்யா வற்றா
வளமுடைய காவேரியின் நீரை, காலால் மடைதிறந்து விட்டு பாய்ச்சி,
வேளாண்மை செய்த காலங்களில் இவ்வண்டல் மண் வளம் கொழித்திருந்தது என்பது என்னவோ
உண்மை தான். இவ்வண்டல் வளத்தினை எல்லாம் சுரண்டிக் கொழுத்தது யார் யார்? அவர்கள்
வண்டல் நிலமக்களில் எத்தனை விழுக்காட்டினர் என்ற வினா எழுப்பினால் எல்லாம்
மட்டுப்பட்டு விடும்.
நிலவுடைமை என்பது குறிப்பிட்ட சிலரின்
கையில் மட்டுமே இருந்தது. இவர்கள் சமூகத்தில் உயர்சாதியினராக இருந்தனர்.
பெரும்பாலும் வேதிய வைதீகர்களின் நிலஉடைமையாகவே இருந்தது. இவர்கள் அனைவரும் இந்திய நில உடைமைக்குரிய
குணாம்சங்களை முழுமையாகக் கொண்டிருந்தனர்.
மனுசாத்திரம், அர்த்தசாத்திரம் போன்ற வைதீக சட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட்டு
இருந்தன. புரோகிதர்களும் ஜோதிடர்களும் மக்களை வைதீகத்திற்குள் இறுக்கி
வைத்திருந்தனர். இவர்களை அண்டிப்பிழைத்த உழுதுண்பவர்களும் பண்ணை அடிமைகளாக இருந்தவர்களும் கடுமையான
ஒடுக்கு முறைக்கு உள்ளானார்கள்.
இப்பண்ணை அடிமைகள் கிராமப்புற
உழைக்கும் வர்க்கமாக இருந்தாலும், இவர்கள் வர்ண முரண்பாட்டுக்குள் தள்ளப்பட்டதோடு
பஞ்சமர்களாக ஆக்கப்பட்டார்கள். இவர்கள் மேலை நாடுகளில் இருந்த அடிமைச்
சமூகத்தினைப் போல இல்லாமல் இந்தியாவிற்கே உரிய பண்ணை அடிமைச் சமூகத்தில் உழன்று
கிடந்தார்கள்.
இவர்களுக்குக் கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்டு
இருந்தது. இப்படியான பண்ணை அடிமைகள், சாதி உள்ளடுக்குகளுக்கு ஏற்பவே அடிமைச்
சேவகம் செய்ய வேண்டியிருந்தது. இதன் புறத்தோற்றம், உட்சாதி அடுக்குகளாகத்
தெரியாமல் வைக்கப்பட்டு இருந்தது.
சாதிச் சமூகமும், பண்ணை அடிமைச்சமூகமும் இணைந்து அவற்றின் மேல்கட்டுமானமாக
மதமும், அரசியலும் உருவாக்கிக் கொண்டன. உருவாகிய மதமும், அரசியலும்
பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஒடுக்கு முறைக்கே தள்ளியது. அவர்கள், இந்த சூழலில்
இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவே முடியாமல் தான் இருக்க நேரிட்டது.
இந்த நிலையில் தான் திணைச்
சமூகத்துக்கும் பண்ணையடிமைச் சமூகத்துக்கும் இடையே ஓர் இணக்கத் தன்மை ஏற்படுத்தும்
முகமாக சைவ, வைணவ மதங்கள் இம்மண்ணில் தோன்றிச் செல்வாக்குப் பெற தொடங்கியிருந்தன.
வடக்கிருந்து வந்த சமண, பௌத்த
மதங்களும் வளர்ந்து, பெருவாரியான உழைக்கும் மக்களின் ஆதரவோடும் ஆட்சி அதிகாரத்தில்
இருந்தன. என்றாலும், காலப்போக்கில் இம்மதங்களுக்குள்
வைதீகப்பண்புகள் வளர்தோங்கி அங்கிருந்த வேளாண்சமூகமக்கள் மீது ஆட்சி செலுத்தத் தொடங்கின. இம்மண்ணின் மக்கள் சாதிமேலாண்மைக்கும்
ஒடுக்கு முறைக்கும் ஆளாகியிருந்தார்கள்
ஆதலால், அம்மதங்களில் இருந்து விடுவித்துக்
கொண்டார்கள். இவர்களால் பழைய சமூகத்திற்கும் மீண்டும் திரும்ப இயலாது போயிற்று. இம்மண்ணிற்கு வந்தேறிய மதங்களும் வலுவிழந்தன.
இக்காலங்களில் ஆதி தமிழ்ச்சைவம்,
தமிழையும் சிவத்தையும் முன்னெடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில்
சாதியையும் தீண்டாமையையும் வெறுத்து ஒதுக்கி, அல்லாடிக் கொண்டிருந்த வேளாண்மக்களை அரவணைத்துக் கொண்டு வலுப்பெற்றது.
இவ்வர்க்கத்தினரே முதலாளித்துவ சமூகம்
உருவான காலகட்டத்தில் அவர்கள் மீது சுமத்தப்பட்டு இருந்த அடிமைத்தனங்களுக்கு
எதிராக போராடும் மனநிலைக்கு உந்தப்பட்டார்கள். அவர்கள் நடத்தியப் போராட்டமும்
வெற்றி பெற்றது. இன்னமும் அப்படியானப் போராட்டங்கள் தேவையாகவும் இருக்கின்றன. இது
தான் பண்பாட்டு வளர்ச்சியில் நிகழக்கூடிய வரலாற்று விதியாக இருக்கிறது.
காவிரிக்கரை வண்டல் மண்ணில் நில
உடைமையாளர்களாக இருந்த பெரும்பாலோர் வேதிய வைதீகத்தை சேர்ந்தவர்களாகவே
இருந்தார்கள் என்று முன்னரேப் பார்த்தோம். இந்த நிலஉடைமையாளர்கள், சமூகத்தில் உள்ள
சாதி அடுக்குகளில் கலப்பு ஏற்பட்டு விடாமல் நுட்பமாக காவல் காத்துக் கொள்ள
முடிந்தது.
இதனால் நிலஉடைமைச் சமூகம், பெரும்
தொகையான உழைப்பாளி மக்களின் உழைப்பைச் சுரண்டி உண்டு களித்தது. இந்த உடைமைச்
சமூகத்தினர் மகிழ்ந்து கிளர்ச்சி அடையவே இலக்கியவாதிகள் இலக்கியங்களை படைத்தனர்.
இப்படிப் படைத்ததோடு ‘கலை கலைக்காகவே’ என்ற கோஷத்தையும் முன்வைத்தார்கள். தமிழ்ச்சூழலில்
இப்படியான நவீன இலக்கியவாதிகளில் இருந்து மாறுபட்ட படைப்புகளை முன்வைத்தவர்களும்
உண்டு.
இவர்களும் முழுமையாக வண்டல் மண்ணில் உழுதுண்டு
வாழ்ந்தவர்களையோ பண்ணை அடிமைகளாக
வாழ்ந்தவர்களையோ முதன்மைப்படுத்தவில்லை. ஏன் என்றால், இவர்கள் முதலாளித்துவச்
சமூகத்தின் பிரதிநிதிகளாக வளர்ந்திருந்தார்கள்.
‘அம்மையப்பன் குழிக்கரை அம்புட்டுக்கிட்டு முழிக்கிற’ என்று என் பள்ளித்
தோழர்கள், என்னை நமட்டுவது உண்டு. நான் பிறந்திருக்கும் காவனூர் கிராமம் அந்த இரண்டு ஊர்களுக்கு நடுவில்
தான் இருக்கிறது. இங்கு வாழ்பவர்கள், பெரும்பாண்மையாவர்கள் வேளாண்தொழிலாளிகளாகத்
தான் இருந்தார்கள். அவர்களோடு நானும் வாழ்ந்து கொண்டு இருந்தேன். பள்ளிபடிப்பு
முடிந்ததும் உழவுப் பணியில் ஈடுபட
வேண்டியிருந்தது. அது தான், என் எதிர்கால வாழ்க்கையாக அமையப் போகிறது என்ற
முடிவோடு வாழ்ந்த காலம் அது.
அக்காலத்தில் தான் தீவிர வாசிப்புக்கு
உந்தப்பட்டேன். என் வாசிப்பு - நாவல், சிறுகதை என்று வசீகரப்பட்டுப் போனது. ஒவ்வொன்றையும் படித்து முடித்ததும் சோகம்
அப்பிக் கொள்ளும். நானும் கிராமப்புற உழைப்பாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதனால்
என்னுடைய முகத்தையும் என்னைப் போன்ற என்னுடைய மக்களுடைய முகத்தையும் அப்படைப்புகளில் காண முடியவில்லை.
இது குறித்து என் நண்பர்களோடு பலகாலும் விவாதித்திருக்கிறேன்.
‘‘நம் சமகாலப் படைப்பாளிகளின் படைப்புகள்
போல் அல்லாமல் நம் முகம் போன்ற முகங்களை உடைய நம் மண்ணின் மக்கள், அவர்களுடைய முகத்தினை
அடையாளம் கண்டுகொள்ளும்படியான படைப்புகளை, நீ தான் படைக்க முடியும்’’ என்று என்னை
ஊக்கப்படுத்தினார்கள். இவர்களுடைய விருப்பமே சரியானது என்று எனக்குப் பட்டது.
அவ்விருப்பமே, வண்டல் நில மக்களின்
வாழ்வியலை முதன்மைப்படுத்து சிறுகதைகளாக எழுத வைத்தது. இதழ்களுக்கு அனுப்பி வைப்பேன்.
போன வேகத்தோடு திரும்பி வந்து என் வாசலில் கிடக்கும்.
நான் வருத்தப்பட்டதில்லை. காரணம், வழக்கமாக அந்த இதழ்கள் வெளியிடும்
கதைகள் போல என் கதைகள் அமைந்திடவில்லை. அப்படி நான் எழுதவும் முடியாது. அப்படியான ‘கற்பனை’
கதைகளை எழுதவும் எனக்கு அவசியத் தேவை இருக்க வில்லை.
சமகால வரலாற்று புனைவுகளும்
வரலாற்றுப்புனைவுகளும் மனிதசமூகத்தை
ஊக்கப்படுத்தி வாழ்வியலை கட்டமைத்துக் கொள்ளும் உந்து சக்தியாக அமைந்து
விடும். இப்படியான படைப்புகள் மனித மாண்பையும், ஜனநாயகத்தையும் வளர்த்து எடுக்கும்
என்பதை மானிட சமூக வரலாற்று ஆய்வுகள் தெளிப்படுத்தியிருக்கின்றன.
இந்தப் புரிதலோடு தான், செந்நெல்,
பெருந்திணை, உறங்க மறந்த கும்பகர்ணர்கள், ஒரே ஒரு ஊர்ல… நஞ்சைமனிதர்கள், மரக்கால்,
தாண்டவபுரம் போன்ற நாவல் படைப்புகளையும் பத்துக்கு மேற்பட்ட குறுநாவல்களையும் எண்பதுக்குள்
அடங்கும் சிறுகதைகளையும் படைத்திருக்கிறேன்.
தமிழ்ச்சூழலில் பக்திஇயக்கக்கால
வரலாற்றை புதினப்படுத்திட என் மனது தேடல் கொண்டலைந்தது. முற்போக்காளர்கள் இந்த
முயற்சியில் இறங்குவது தற்கொலைக்கு சமமானது என்று பலரும் எச்சரிக்கை செய்தார்கள்.
இந்திய வரலாற்றை எழுதியிருக்கும் தேவிபிரசாத்சட்டோபாத்யாய, டி.டி.கோசாம்பி,
இவருடைய அப்பா தர்மார்த்தகோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, ரொமிலாதாப்பர் போன்றோரின்
ஆய்வுகளும் தமிழ்இலக்கியத்தினை மார்க்ஸிய ஞானத்துடன் ஆய்வுகள் செய்திருக்கும்
கைலாசபதி, கா. சிவதம்பி ஆகியோரின் ஆய்வுகளும் என்னை துணிச்சல் படுத்தின.
“…பிற்போக்கான சக்திகள் என்று நாம்
கருதுகின்றவர்கள் பக்தி இலக்கியங்களைப் பயன்படுத்துகின்றனர். முற்போக்கு
எழுத்தாளர்களாகிய நாம் பக்தி இலக்கியத்தை நாம் எவ்வகையில் நோக்குவது?
பாரம்பரியத்தை நாம் நிராகரிக்க முடியுமா? இன்றைய புதுக்கவிதைகளில்
இப்பாரம்பரியத்தின் சாயலை நான் காண்கிறோம். புராணமரபுகளை அவைகள் எடுத்தாள்கின்றன.
இலக்கியம் சமூக உற்பத்தியில் ஒன்று. ஆனால், அது சிறப்பானதொரு உற்பத்தி. இலக்கியம்
சமூகத்தை உருவாக்குகிறதா? ‘சமூகத்தின் உருவாக்கத்தை இலக்கியத்தில் காணலாம்’ என்றார் கார்ல்மார்க்ஸ்.
‘பாரம்பரியம் வேண்டுமா? வேண்டாமா?’ என்ற
வினாவுக்கு லெனின், ‘‘மனித இனத்தினால் தோற்று விக்கப்பட்ட அனைத்து இலக்கியங்களின்
மூலம் அறிவை வளர்த்துக் கொள்பவனே கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியும்” என்று
குறிப்பிடுகிறார். எனவே மனித இனத்தினால் தோற்றுவிக்கப்பட்ட சகல அறிவுக்
களஞ்சியத்தையும் தனதாக்கிக் கொள்பவனே கம்யூனிஸ்ட் ஆவான்.
“சில சமயங்கள் தோன்றுகின்ற காலத்தில் வரலாற்றில்
முற்போக்கான அம்சங்களைக் கொண்டிருக்கும்” என்று எங்கல்ஸ் பழைய கிறிஸ்துவ சமயம் வரலாறு என்று நூலில்
குறிப்பிடுகிறார்…
“ …பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்”
என்று பௌத்தர்கள் கூறிய காலத்தில் தான் சிவனைக் காண “மனித்த பிறவியும் வேண்டுவதே”
என்று பாடினார் திருநாவுக்கரசர். அவர் ஆண்டவனைத் தன் ஆண்டானாகவே பாவித்துப்
பாடுகிறார்! எப்படி வந்தது இது? அவர் காலச் சமூதாய வழக்கில் இருந்தது அது தான். ஆண்டவன் –மனிதன் உறவு கூடச் சமுதாய
உறவு போலவே வர்ணிக்கப்படுகிறது. “தோழன்” உறவு கொண்டவர் சுந்தரர் ஒருவர் மட்டுமே.
இதை நாம் தட்டிக்கழிக்க இயலாது… (1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
சங்க இலக்கியப் பயிற்சி முகாமில் பேரா.கா.சிவதம்பி அவர்கள் உரையில் இருந்து)
இவர்களின் வழிகாட்டுதலை முழுமையாக
உள்வாங்கியே ‘தாண்டவபுரம்’ நாவலை
எழுதினேன் என்று சொல்லுவதில் நான் தயக்கம் காட்டப் போவதில்லை. என்னுடைய அனைத்துப்
படைப்புகளும், புனைவுக்குள் கட்டுண்டு கலைத்தன்மை பெற்று மக்கள் இலக்கியமாக அடையாளப்பட்டன.
(என்னுடைய படைப்புகள் கற்பனையானதில்லை) அதனால் தான் தொடச்சியாக வாசகத் தளத்தில் அங்கிகரிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
அரசு, நவீனமயம் என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு வேளாண்தொழிலை
எந்திரமயமாக்கியது. இந்த எந்திரமய வளர்ச்சியை தடைசெய்வது, மனிதகுல வளர்ச்சிக்கு
எதிரானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
எந்திரமயப்படுத்திய அரசு, நிலத்தில் இருந்து
உழைக்கும் மக்கள் வெளியேற்றப்படாமல் காப்பது போல நிலங்கள் அனைத்தும் அரசுப்
பண்ணைகளாக அல்லது கூட்டுறவு பண்ணைகளாக மாற்றம் செய்திருக்க வேண்டும். அப்படிச்
செய்திருந்தால் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமும் அவர்களும் இம்மண்ணில் வாழ்உரிமை
உடையவர்களாகவும் காக்கப்பட்டு இருந்திருப்பார்கள். அரசு அப்படிச் செய்யவில்லையே.
எம்.எஸ்.சுவாமிநாதனின் பசுமைப் புரட்சியினை,
அரசு நடைமுறைப்படுத்தி சாதித்தச் சாதனையின் விளைவாக உரநிறுவனங்கள் வேளாண்மக்களை
சுரண்டி, கொள்ளை அடித்துக் கொழுத்தன. வேளாண்மண் முழுமையும் தரமிழந்து போனது போல, வண்டல் மண்ணும் தரமிழந்து போவதும் ஒருசேர
நிகழ்ந்தன. எனவே, வண்டல் மண் மலடாகும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கூடவே நிலஉடைமை, முதலாளித்துவப் பண்ணைகளாக மாற்றம் பெறத் தொடங்கின.
வேளாண்தொழிலாளிகள் வேளாண்மண்ணில் இருந்து
வெளியேற்றப்பட்டது போல இரண்டாயிரம் ஆண்டு
தொடங்கி நிலஉடமையாளர்களை அந்த மண்ணில் இருந்து மெல்லமெல்ல வெளியேற்றிக் கொண்டு இருக்கிறது.
அரசின் அந்தச் சூட்சமம் தான் தனியார்மயம், தாராளமயம், உலகமயம்.
படிப்படியாக இம்மண்ணில் இருந்து
வெளியேறிப் போகும் வேளாண்மக்கள், நகரத்தை நோக்கிச் சென்றார்கள். வண்டல்மண்ணில் இருந்து அவர்கள் போராடிப் பெற்ற உரிமைகள்
பலவற்றையும் இழந்து, விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு நகர் மயத்தில் கரைந்து நலிந்து
போய் கொண்டிருக்கிறார்கள்.
புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு
கொண்டு வந்ததின் அடிப்படையில் மத்தியஅரசும் மாநில அரசும், இயக்கம் கொண்டதால் இந்த
அவலம் நேர்வதை எம் மக்கள் தவிர்த்துக் கொள்ள முடியாதபடி ஆக்கி விட்டது. கூடவே,
இவ்வண்டல் மண்ணுக்கு உயிராக அமைந்திருந்த காவிரி நீரின் வரத்திலும் சுருக்கு
விழுந்து விட்டது.
இதில் தலையீடு செய்ய வேண்டிய
மத்தியஅரசு, தனக்கு சாதகமாக இல்லாத மாநிலத்துக்கு எதிராக அரசியல் ரீதியாகவும்
பொருளாதார ரீதியாகவும் நெருக்கடி கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
தனக்குச் சாதகமாக இருக்கும்
மாநிலத்தோடு மறைமுகமாகக் கூட்டு வைத்துக் கொண்டு, நடத்தும் ஆதிக்க அரசியலின்
விளைவாக தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் கிட்டாமல் வறட்சிக்கு உட்பட்டுக் கிடக்கிறது.
வண்டல்
மண், பழைமையான வளத்தை முற்றிலுமாக இழந்து அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. வறட்சியைத் தாக்குப் பிடித்துக் கொண்டு
இருக்கும் எஞ்சிய வெள்ளாமைக்காரன், அன்றைக்கு காலால் மடை திறந்து, வளம்
பெருக்கியவன் இன்றைக்கு தலைகீழாக நின்று பார்த்தாலும் தண்ணீர் பாய்ச்சிட
முடியவில்லை. வயல்களில் இறங்கி வேலை செய்யும் ஆட்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டும்.
போராட வேண்டியிருக்கிறது. வானம் பார்த்து வெள்ளாமை செய்து விளைவித்த மகசூலையும்
தனக்கு கட்டுப்படியாகிற விலைக்கு விலையாட முடியவில்லை.
விவசாயி, தலை நிமிரும்படியான விலை
கொடுத்தால் விவசாயத்தொழிலாளிகளும் மற்றத்தொழிலாளிகளும் வாங்கும் விவசாயப்
பண்டங்களின் விலை அதிகரித்து விடும் என்றும், விவசாயி விவசாயத்தொழிலாளி,
மற்றத்தொழிலாளிகளின் ஒற்றுமை உருவாகிவிடாமல் தடுப்பதற்கான முயற்சியை அரசும்,
ஊடகங்களும், முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் தொடர்ந்து செய்து கொண்டு
இருக்கின்றன.
ஆனால், அரசின் தவறான பொருளாதாரக்
கொள்கையின் விளைவாக பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயர்ந்து விடுகிறது என்ற உண்மை,
மக்கள் கவனத்திற்கு செல்லாமல் மறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பொருளாதார,
அரசியல் மறுமலர்ச்சி ஏற்படாமல் போய் விடுகிறது.
விவசாயி நாளுக்கு நாள் விளிம்பு நிலைக்கு
தள்ளப்பட்டு கிடக்கிறான். அவன் பட்ட கடனை, திருப்பிச் செலுத்த முடியாமல் மானத்தைக்
காப்பாற்றிக் கொள்வதாக நினைத்து தற்கொலைக்கு உள்ளாகுகிறார்கள். இவர்களைப் பற்றிய
கணக்கு உண்டா?
பன்னாட்டு முதலாளிகளுக்கு சிவப்பு
கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுத்துக் கொண்டு இருக்கும் அரசின் போக்கு, எல்லை
தாண்டிபோய் விட்டது. இதனால், பன்னாட்டு நிறுவனங்களின் கையாட்கள், உயிரை விட்டுக்
கொண்டு இருக்கும் உழுதுண்ணும் வேளாண்மக்களின் கண்முன் பணக்கட்டுக்களை விரித்து வேளாண்மக்களுக்கு மண்ணின் மீது இருக்கும் உரிமையைப்
பறித்துக் கொண்டே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விளைநிலங்கள் ரியல் எக்ஸ்டேட்டுகளாக
மாற்றப்படுகிற கொடுமையும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
இத்தகைய கொடுமைகளும் ஒடுக்குமுறைகளும்
மாற்றப்பட வேண்டியதல்லவா?
நாடாளுமன்றம் என்பது இந்தியசமூகத்தின் ஒரு பகுதி. சமூகத்தை அரிக்கக் கூடிய
விஷயம் நடாளுமன்றத்தில் பிரதிபலிக்கும். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற
பத்தாம்பசலித்தனம், நாடாளுமன்றத்தின் ஜனநாயகத் தன்மையை முற்றாக அரித்து அழித்து
விடுகிறது. ஊழல் செய்தவர்களே ஊழலுக்கு எதிராகப் போராடக்கூடிய விந்தையான இடமாக
மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் மக்களையும் ஆட்கொண்டு
விட்டது. அதனால் அரசியலில் வளர்ச்சி அற்றப் போக்கை உருவாக்கி, சமூகவளர்ச்சிக்கு
இடையூறாக இருக்கிறது. ஊழல் புரிபவர்களே மாறிமாறி ஆட்சிக்கு வருவதால் இந்திய ஜனநாயகம்
கேள்விக்குறியாக ஆக்கப்படுகிறது.
இம்மண்ணின் மக்களுடைய வாழ்உரிமையையும்
அவர்கள் ஜனநாயத்துடன் வாழவேண்டிய வாழ்வும் முற்றிலுமாக பறிபோய் கொண்டு இருக்கிறது இந்த உண்மையை ஒரு படைப்பாளி கண்டும் காணாது போல
இருக்கவே முடியாது. கூடாது. எனவே இனிவரும் காலங்களில் இதனை சரி செய்ய தனது
இலக்கியப் படைப்புகளில் கொண்டு வருவது மட்டுமே இந்திய மக்கள் மீது அக்கறை உள்ள
படைப்பாளியாக இருக்க முடியும்.
அப்படிப்பட்ட படைப்பாளிகளில் நானும்
ஒருவனாக இருக்க விரும்புகிறேன். ‘நானும் எனது படைப்புகளும்’ இத்தன்மைக்குள்
உரியதாக இருக்கிறோம். இருப்போம்!’ என்று உறுதிபட கூறுகிறேன்.
(19.10.2013 அன்று மன்னார்குடியில்
சாகித்திய அகாதெமி நடத்திய இலக்கிய அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை- அப்போது
எழுந்த வினாக்களுக்கு அளிக்கப்பட்ட பதில்களை உட்படுத்தி கட்டுரையில் சில திருத்தங்கள்
செய்யப்பட்டுள்ளது)
No comments:
Post a Comment