தாண்டவபுரம் புதினத்தின் கதைத்தலைவன்
திருஞானசம்பந்தன். திருஞானசம்பந்தனின்
மதம் சைவம். இந்தச் சைவம் தமிழகத்தில்
தமிழ்ச் சைவமாகவே உள்ளது. இந்தத் தமிழ்ச் சைவத்திற்கு மெய்யியலாகச் சைவசித்தாந்தம்
மிகவும் பிற்காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்ச்சைவம் சங்ககாலத்திலேயே தோன்றி வளர்ந்து வரத்
தொடங்கிவிட்டது. அதற்கு மெய்யியலாக அருமறை
விளங்கி இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இந்த அருமறைதான் மறை,
கேள்வி, தமிழ்மறை, நான்மறை, மாமறை, ஓதி என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தொல்லாணை என்று சொல்லப்பட்ட
ஆணையைத் தொடர்ந்து சமூக வளர்ச்சிக்கு ஏற்ப வளர்த்து உருவாக்கப்பட்ட மெய்யியல்
வளர்ச்சிக்குரிய கட்டங்களில் வழங்கப்பட்ட பெயர்கள். ஆனால் கம்பன் காலம்வரை அருமறை என்ற பெயரோடு
புழக்கத்தில் இருந்துள்ளது.
தமிழகத்துப்
பார்ப்பனர்கள் தங்களைப் பிராமணர்களென்றும் வேதியர்கள் என்றும் கூறிக்கொண்டு
சமற்கிருத வேதாந்திகளாக மாறிய பின்னர் நான்மறை என்று கூறப்பட்ட தமிழ்மறை வேதம்
என்று கூடக் கூறப்பட்டுள்ளது. ஆரிய வேதம்
மனிதனாலோ கடவுளாலோ இயற்றப்பட்டதன்று என்றும், அது எப்போதும் இருந்து வருவது ஆகும்
என்றும் கூறப்படுகிறது. இதன்படிப்
பார்த்தால் நாம் இருக்கும் புடவி (பிரபஞ்சம்) அழிந்தபிறகும் அது அழியாமல்
இருக்கும் என்பதாகும். ஆனால் அருமறை அப்படிப்பட்டது
அன்று,
‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழிதானே மந்திரம்
என்ப’
என்று தொல்காப்பியர் குறிப்பிடுவதிலிருந்து தமிழ்மறையாகிய அருமறை மனிதர்களால்
உருவாக்கப்பட்டது என்று புரிந்து கொள்ளமுடியும்.
இந்தத்
தமிழ்மறை அழிந்துவிட்டது; அல்லது அழிக்கப்பட்டது.
தமிழ்மறை ஒரே நாளில் அழிக்கப்பட்டிருந்திருக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான்
அழிக்கப்பட்டிருந்திருக்க முடியும்.
அதற்குமுன் வேதமும் அருமறையும் வேறுவேறு அன்று எனும் பொருள் தோன்ற
சொல்லாடல் உருவாக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் ஆரியவேதம் ஏற்கப்பட்ட நிலையில்
அருமறை என்றால் கூட, ஆரியவேதம் என்றே புரிந்து கொள்ளும் நிலை தோன்றிவிட்டது.
தாண்டவபுரம்
புதினத்துக்குள் புகுந்து திணைகளின் இருப்பை எழுச்சியாகப் பார்த்துப் புரிந்து கொள்ள
மேற்கூறிய செய்திகளைச் சுருக்கமாகப் புரிந்து கொள்வது தேவையாகும். தாண்டவபுரத்திற்கான நீண்ட முன்னுரை இந்தத்
தேவையை வலியுறுத்துகிறது.
மனித
சமூகம் இயங்கியல் அடிப்படையிலேயே வளர்ந்து வருகிறது. குலங்கள் இணைந்து இனக்குழு,
இனக்குழுக்கள் இணைந்து சாதிச்சமூகம் என்று வளர்ந்து சாதிச்சமூகம் இந்தியாவில்
நிலைத்தது. எனவே, சாதிச்சமூகம் பழங்குடிச்
சமூகத்தின் யாவற்றுக்கும் கடைக்கோடி வடிவம் என்று சொல்லப்பட்டாலும் இனக்குழுச்
சமூகம் வேறு, சாதிச்சமூகம் வேறு ஆகும்.
இந்தச் சாதிச்சமூகம்
நிலமானியச் சமூகத்தில் வர்ணச் சமூகமாகவும் முதலாளியச் சமூகத்தில் வகுப்புச்
சமூகமாகவும் வளர்ந்து வந்துள்ளது. இதனை
இன்றைய இந்தியச் சமூகத்தில் கடந்த கால சமூகங்கள் அனைத்தும் உள்வாங்கப்பட்டு அழியாமல்
பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்று டி.டி. கோசாம்பி அவர்கள் தமது இந்திய வரலாறும்
பண்பாடும் பற்றிக் கூறும் நூலுள் குறித்துள்ளார்கள். இதனை எனது ‘சாதி உருவாக்கத்தில் உடன்போக்கின்
பங்கு’ எனும் கட்டுரையில் விளக்கிக் கூறியுள்ளேன்.
குலம் தாய்வழித் தலைமைச் சமூகம், குலம்
அகமணமுறையைத் தடைசெய்துவிட்டபின் புறமணமுறை ஏற்கப்பட்டுக் குலங்களுக்கிடையே நிலவிய
பகைமை மறைந்து இனக்குழுக்கள் உருவாகின.
இவ்வினக் குழுத்தலைமை ஒரு குறிப்பிட்ட காலம்வரைத் தாய்வழித் தலைமையாகவே
நீடித்தது.
பின்னர்
ஆணாதிக்கம் சமூகத்தின் சொத்து தனிமனிதனிடம் திரளத் தொடங்கியதிலிருந்து
உருவானது. இதன் தொடக்கக் காலத்தில்தான்
இணைமணமுறை உருவானது. ஓர்
இனக்குழுவிற்குரிய தலைவனும், வேறோர் இனக்குழுவிற்குரிய தலைவியும் காதல்
வயப்பட்டுத் தலைவனுடன் தலைவி ‘ஓடிப்போய்’த் தலைவனுடைய இனக்குழுவில் குடும்பம்
நடத்தியதுதான் இணைமணமுறை.
இந்த இணைமணமுறை மூலம்
இணைந்த தலைவனும் தலைவியும் சமவுரிமை படைத்தவர்களாக இருந்துள்ளனர். எனவே தலைவன் தலைவியரிடம் கருத்துவேற்றுமை
தோன்றி விரிசலாக மாறிய நிலையில் அவர்கள் பிரிந்துவிடுவது என்பது எளிதாக
இருந்தது. இதனால் தனிக்குடும்பம்
நிலைபெற்றிருக்க முடியாததாகிவிட்டது.
இக்கட்டத்தில்தான் திருமணம் என்னும் நிகழ்வு கரணம் என்ற பெயரில்
உருவாக்கப்பட்டது. இதைத்தான் தொல்காப்பியர்,
‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம்என்ப.’
என்று கூறியுள்ளார். இதன்பிறகே சமூகத்தின் அடிப்படை அலகாகத் தனிக்குடும்பம்
உருவாகியது. இதன்பிறகே இனக்குழுவே
குடும்பமாக இருந்த நிலைமாறியது.
இந்தக்
கரணம் உடன் போக்கின் மூலம் இணைந்த தலைவன் தலைவியருக்கு முதலில் நடத்தி
வைக்கப்பட்டது. இவ்வாறு நடத்தி
வைக்கப்பட்ட திருமணமான கரணத்தில் தலைவியின் பெற்றோரோ சுற்றத்தவரோ கலந்துகொள்ளவில்லை. இவ்வாறு இனக்குழுக்களிடையே நிலவிய உடன்போக்குக்
காலப்போக்கில் இனக்குழுக்களிடையே நிலவிய பகைமையை முடிவிற்குக்
கொண்டுவந்துவிட்டது. இந்த நிலையில் தான்
அறத்தொடு நிற்றல் மூலம் தலைவியின் காதலை உணர்ந்த பெற்றோரும் சுற்றத்தவரும்
தலைவனுக்குத் தலைவியைத் திருமணம் செய்து வைக்க முன்வந்து உள்ளனர். இவர்களே தமர் எனப்படுபவர் ஆவர்.
கொடுப்போரும்
இவரே, தலைவியின் காதலை ஏற்காவர்கள் ஒன்றாத் தமர் எனப்பட்டனர். தொல்காப்பியர் கற்பியலின் இரண்டாவது
நூற்பாவில்,
‘கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலையான’
என்று கூறியுள்ளதன் மூலம் இதை உணர
முடியும். மேலும்,
‘மறைவெளிப்படுதலும் தமரின் பெறுதலும்
இவைமுதலாகிய இயல்நெறி திரியாது
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே’
(தொல்
- பொருள் - செய்.185)
தொல்காப்பியர் இப்படிக் கூறுதலால் தமரே
கொடுப்போர் என்பது தெளிவாகும். இயல்நெறி
திரியாது என்று கூறப்பட்டுள்ளதால் இயல் நெறிக்கு அடிப்படையாகவுள்ள அறத்தொடு
நிற்றல் மறைமுகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறத்தொடு நிற்றலாவது தலைவி தோழியிடத்து தன் காதலைத் தெரிவித்து அறத்தொடு
நிற்பாள். தோழி தன் தாயாகிய செவிலித்
தாய்க்குத் தலைவியின் காதலைத் தெரிவித்து அறத்தொடு நிற்பாள். செவிலித் தாய் நற்றாயாகிய தலைவியின் தாய்க்குத்
தலைவியின் காதலைத் தெரிவித்து அறத்தொடு நிற்பாள்.
இந்த அறத்தொடு நிற்றல்
இனக்குழுவிற்குள் நிகழ்ந்தாலும் இனக்குழுவிற்குள் அதன் உறுப்பினர்களுக்கிடையே
காதலுக்குத் தடை இருந்ததில்லை. ஆதலால்
காதல் வயப்பட்ட தலைவன் தலைவியர் வெவ்வேறு இனக்குழுவினர். ஆகவே காதலை மறைபொருளாக வைத்திருந்து பின்னர்
தலைவி தோழிக்கு அறிவிப்பாள்.
இதன் பிறகே அறத்தொடு
நிற்றல் தொடங்கும். எனவே தான் தலைவியின்
இனக்குழுவில் அறத்தொடு நிற்றல் நிகழ்ந்து தலைவியின் காதலுக்குத் தடைவிதிக்கப்பட்ட
நிலையில்தான் தலைவி தலைவனுடன் உடன்போக்காகச் செல்லும் நிகழ்வு
நடைபெறுவதாயிற்று. ஆகவே ஒரே இனக்குழு
உறுப்பினர்களுக்கிடையேயான காதல் தடைசெய்யப்பட்டதில்லை. ஆதலால் உடன் போக்கு அங்கு நிகழ வாய்ப்பில்லாமல்
இருந்தது. ஆகவே, அதற்கு அறத்தொடு
நிற்றலும் தேவைப்பட்டிருந்திருக்காது.
மேலே
கூறப்பட்ட அறத்தொடு நிற்றல்தான் இயல்நெறி உருவாகக் காரணமாயிருந்தது ஆகும். இந்த இயல்நெறியே தொன்னெறி மரபென்றும்
அழைக்கப்பட்டது. இங்கே அறம் எனப்பட்டது
அகத்துறைக்குரிய களவுசார்ந்த நடைமுறையாகும்.
தலைவன் தலைவியின் காதல் சார்ந்த நடைமுறைகள் ஆகும்.
‘அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்
நான்கும்
இழுக்கா இயன்றது அறம்’
என்று வள்ளுவர் கூறியுள்ளாரே எனின்
மேற்கூறப்பட்ட நான்கும் சொத்து தனிமனிதனிடம் திரண்டு உருவான சாதிச் சமூகத்துக்கு
உரியவை. தலைவன் தலைவியர் ஒத்த செல்வம்
உடையவர்களாக அறியப்பட்டாலும் திணைச்சமூகத்துச் சொத்தோடு ஒப்பிடும்போது அஃது அளவிற்
சிறியதாகவே இருந்திருக்க முடியும். எனவே,
திணைச்சமூகத் தலைவன் தலைவியரிடம் அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காகக் கருதப்பட்ட அறம் நிலவியது.
இதனைத் தான், ‘இன்பமும் பொருளும் அறமும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை’
(தொல்-பொருள்
- களவு -1)
எனும் நூற்பா மூலம் தொல்காப்பியர்
கூறியுள்ளார்.
‘பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே’ என்றதால் கற்பு
வாழ்க்கைக்குப் பிரிவு மிகவும் தேவை என்பதாகும்.
இந்தப்
பிரிவு தூதுகாரணமாகவும் கற்றல் காரணமாகவும் போர்க் காரணமாகவும் பொருளீட்டல்
காரணமாகவும் பரத்தையர் காரணமாகவும் அமையலாம்.
பரத்தையர் பிரிவு காமம் சார்ந்து அகமாகும். தலைவன் பரத்தையை நாடிச்செல்வது காமப்பகுதி
என்று ஆகுபெயராலும் சொல்லப்பட்டுள்ளது.
ஏனைய பிரிவுகள் அனைத்தும் புறம் சார்ந்தவை ஆகும். எனவே, அகம் சார்ந்த காதல் வாழ்க்கை
புறம்சார்ந்த நடைமுறை வாழ்க்கையைப் புறக்கணித்துவிட்டு இருக்க முடியாது. எனவே, தான் தொல்காப்பியர்,
‘அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின்
வெட்சிதானே குறிஞ்சியது புறனே
உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே!’
(தொல்
- பொருள் - புறத் -1)
என்று தொடங்கி அன்பின் ஐந்திணை மற்றும்
கைக்கிளை பெருந்திணை ஆகியவற்றுடன் பொருந்தி வரும் புறத்திணைகளையும் அவற்றுக்கான
துறைகளையும் வகுத்துக் கூறியுள்ளார்.
ஆகவேதான்,
‘அறன் எனப்பட்ட தேஇல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று’
என்று திருக்குறள் செய்த வள்ளுவர் அறன் என்றது
அறத்தொடு நிற்றலைத்தான் என்று உணரலாம், அவரே
‘அறத்திற்கே அன்புசார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை’
என்றதன் மூலம் புறம்சார்ந்த மறமாகிய
வீரத்திற்கும் அறத்தொடு நிற்றலே துணையாகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அறத்தொடு நிற்றலே அறம் ஆனதை
உணரலாம். மேலும் அறத்தொடு நிற்றலே
இன்பத்திற்கு அடிப்படையாக இருத்தலான்,
‘அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல’
என்றும், பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறு
அறத்தின் வழி அமைந்துள்ளதை ஏற்காத வள்ளுவர்,
‘அறத்தாறு இதுவென வேண்டா, சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’
என்றும் குறள் செய்துள்ளதால் அறத்தாறு
இன்பத்திற்கானது. துன்பதுயரத்தைப் பாவச்செயலின் விளைவு என்றாக்கக் கூடாது எனும்
கருத்தைக் கூறியுள்ளார். இது ஆணை மற்றும்
உலகாயதம் வழியாக வள்ளுவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்.
மறை என்னும் சொல் கூட
முதலில் மறைவாகக் கடைப்பிடிக்கப்பட்ட தலைவன் தலைவியரின் களவைக் குறிப்பதற்காகத்
தோன்றிப் பின்னர் அக்களவே இன்பத்திற்கும் இல்லறத்துக்கும் உரிய அறமாக வளர்ந்து
மெய்யியலாகவும் தோற்றம் பெற்றதால் மெய்யியலும் மறையென்றே பெயர் பெற்றது. இதனால் தான்
‘ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை
கிளத்தலின்
தாய்
எனப்படுவாள் செவிலி யாகும்’
என்று தொல்காப்பியர் செவிலித்தாயைத் தாய் என
அழைக்கப்பட்டதற்கான காரணத்தைக் கூறவந்தபோது தலைவிக்குச் செவிலி அருமறையிலுள்ள களவு
தொடர்பான செய்திகளை விளக்கி உரைப்பதாகக் கூறுகிறார். ஆதலால் இனக்குழுவில் தாய்வழித் தலைமை நீடித்த
காலத்திலேயே மறை தோன்றி மெய்யியலாகவும் வளர்ந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
இதற்கு முன்பே ஆணை
தோன்றியிருந்திருக்க வேண்டும். ஆகவே ஆணையும்
இனக்குழுவில் தாய்வழித் தலைமையிருந்த அதன் தொடக்க காலகட்டத்திலேயே தோன்றிவளர்ந்து
பின்னர் மறையையும் இணைத்துக்கொண்டு அருமறையாகவும் வளர்ந்திருக்க வேண்டும். எனவேதான் வள்ளுவரும் தொல்காப்பியர் கூறியதைப்
போலவே,
‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்’
என்று குறள்செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.
மறை
என்றால் மறைவாக உள்ள ஒழுக்கம் என்று பொருள்பட்டுப் பின்னர் மறைபொருள் கொண்ட
நிறைமொழியாலான மெய்யியல் என்னும் பொருள் பெற்றிருந்திருக்கவேண்டும். ஆனால் வேதம் எனும் சொல் வித்து-வித்தை-வித்வம்
என்றாகி வேதம் என்றாகி இருந்திருக்கவேண்டும்.
எனவே இரண்டும் ஒன்றாக இருக்கமுடியாது.
ஆகவே, மறைவழிப்பட்ட
களவும் களவு சார்ந்த கற்பும் அகம் என்று அழைக்கப்பட்டதுபோல அகம் தமிழ் என்றும்
சொல்லப்பட்டது. தமிழ்மொழியில்தான்
அகத்திணைக்கு இலக்கணம் உள்ளது. தமிழே
அகமானது இதனால்தான். கபிலர்
குறிஞ்சிப்பாட்டை இயற்றினார். இதற்கான
அடிக்குறிப்பு ‘ஆரிய அரசன் யாழ்பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்ததற்காகப் பாடியது’
என்று உள்ளது. இதனால் இக்கருத்து
உறுதியாகும்.
எனவே,
தமிழ் ஞானசம்பந்தன் என்று தன்னைத் தானே ஞானசம்பந்தன் குறித்துக் கொள்வதாலும் தமிழ்மறையாகிய
நான்மறை அகத்தினை வாழ்வியலை மெய்யியலாக்கிக் கொண்டிருந்திருந்தமையாலும்
ஞானசம்பந்தன் திணை சார்ந்த அகவாழ்க்கையினால் கவரப்பட்டுச் சைவம் சார்ந்திருக்க
வேண்டும் என்று உணரலாம். கடவுளரும் அகம்
சார்ந்த இல்லற வாழ்க்கையைக் கடைப்பிடித்துள்ளதாகவே சைவம் கூறுகிறது.
‘கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே’
(தொல்-பொருள்-கற்பு-1)
இந்நூற்பாவின்படிக் கற்பு என்று சொல்லப்பட்ட
திருமண வடிவமானது கரணமென்னும் திணைச் சமூகத்துக்குரிய திருமணவடிவத்தைச் சடங்காக
ஏற்றுக்கொண்டதோடு மரபுவழிப்பட்ட உறவு உரிமையோடு பெண்ணைக் கொடுத்து
எடுத்துக்கொள்ளும் இருதரப்பு உறவுமுறையாரும் கூடிப்பேசி முடிவு செய்து
நடத்தப்படும் திருமண வடிவமாகவே காட்டப்பட்டுள்ளது. இதிலுள்ள உறவுமுறை சாதிக்குள் உள்ள ஒத்தான்
உறவுமுறையல்லாமல் வேறில்லை.
எனவே,
சாதிக்குள் நிகழும் இந்தத் திருமணத்திற்கு அறத்தொடு நிற்றல் தேவையில்லை. ஆகவே, திணைச்சமூகத்திற்கே உரிய இயல்நெறியும்
தேவையில்லை. எனவே, இது காதல்சார்ந்த கற்பு
ஆகாது. எனவே மரபுவழிப்பட்ட கொடைக்குரி
மரபினர் தமராகிய கொடுப்போர் ஆகார்.
கொடுப்போர் திணைச்சமூக மாந்தர். கொடைக்குரி மரபினர் சாதிச்சமூக
மாந்தர். எனவே சாதிக்குட்பட்ட காமம்
திணைச் சமூகத்துக் காமத்தைப்போல சிறந்ததன்று என்பதாலேயே,
‘காதற்காமம் காமத்துச் சிறந்தது’ என்று பரிபாடலில் கூறப்பட்டுள்ளது. திணைச் சமூகமும் சாதிச் சமூகமும் பக்கம்
பக்கமாக நிலவிய காலத்தில் தொல்காப்பியர் வாழ்ந்தவர். ஆதலால் சாதித் திருமணத்தைக் கற்பியல் முதல்
நூற்பாவாக்கிக் காதற்காமத்தால் உருவான கற்பும் சாதிக் காமத்தால் உருவான கற்பும்
ஒன்றுபோலக் காட்டியுள்ளார். இதற்குக்
காரணம் திணைச் சமூகத்துக்கும் சாதிச் சமூகத்துக்கும் இடையே மோதல் போக்கற்ற ஒருநிலை
தேவைப்பட்டு இருந்திருக்கிறது என்று தோன்கிறது.
கலிங்கமன்னன் காரவேலனது அத்திக்கும்பா கல்வெட்டுக்கூறும் தமிழர்கூட்டணி
இந்தத் தேவையை நிறைவு செய்திருக்கலாம்.
இயல்நெறியாகிய
தொன்னெறி மரபு இனக்குழுக்களிடையே பெண் கொடுத்து எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை மரபு
வழிப்பட்டதாக மாற்றிக்கொண்டதால் சாதிச்சமூகம் உருவானது. சாதிகள் எண்ணிக்கையில் அதிகரிக்க அதிகரிக்கத்
திணைச்சமூகத்தில் இனக்குழுக்களின் எண்ணிக்கை சுருங்கிக்கொண்டே வந்திருக்கும். சாதிகள் அதிகரிக்க அதிகரிக்க அவை வர்ணங்களில்
தொகுக்கப்பட்டாக வேண்டும். இல்லையேல்
முடியரசுகள் தோன்றுவதற்குத் தேவையான பெரிய சமூகமாக உதிரிகளாக இருந்த சாதிகளைக்
கட்டமைக்க முடியாமற் போயிருந்திருக்கும்.
ஆகவே தான் வர்ணங்களை தரப்படுத்தும் அதிகாரத்தை தன்கையில் வைத்துக் கொண்டது
அரசு.
‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே’
எனும் புறப்பாடல் மூலம் நெடுஞ்செழியன்
அறிவித்துள்ளதால் இதை உணரலாம். இதனால்
தான் நிர்வாக இயலும் தத்துவ இயலும் உள்ளடங்கியுள்ள உபநிடதங்களைச் சத்ரியர்கள்
இயற்றிப் புரோகிதர்களிடம் அளித்தார்கள் என்று கருதப்படுகிறது. எனவே பிராமணர்களால் சாதியும் வர்ணமும்
உருவாக்கப்பட்டுத் தண்டனை முறைகளும் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுவது
ஏற்கத்தக்கதாக இல்லை.
எனவே,
திணைச்சமூகம் சாதிச்சமூகமாக மாறுவதற்குத் தேவையான நீண்ட நெடுங்காலம் வரை திணைச்
சமூகம் நீடித்து இருந்திருக்கிறது என்று தெரிகிறது. இதைத்தான் மார்க்சிய மூலவரான தோழர்
கார்ல்மார்க்சு அவர்கள் ‘இந்தியாவில் பழங்குடிச் சமூகம் நீண்ட நெடுங்காலமாக
நீடித்து நிலைத்திருந்ததன் காரணமாகவே சாதி உருவாகி இருந்திருக்க வேண்டும்’, என்று
தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.
கலிங்கமன்னன் காரவேலன் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகாலத் தமிழர் கூட்டணியை
உடைத்ததாகக் கூறும் அத்திக்கும்பா கல்வெட்டுச் செய்தியும் இதற்கு ஒத்து வருவதாகவே
அமைந்துள்ளது.
சேர சோழ பாண்டியர்கள்
பன்னிரண்டு வேளிர்களுடன் செய்து கொண்ட உடன்பாடு திணைச்சமூகம் ஆக்கிரமிக்கப்படாமல்
இருக்க உதவியது என்றே பொருள்.
அத்திக்கும்பா கல்வெட்டு காரவேலனால் கி.மு.165 ஆம் ஆண்டில்
வெட்டப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறானால்
கி.மு.1465ஆம் ஆண்டில் தமிழர் கூட்டணி உருவானது என்றாகும். இவ்வாறு திணைச்சமூகத்துக்கும் சாதிச்
சமூகத்துக்கும் இடையே உடன்பாடு உருவாகத் தமிழகத்துக்கு வெளியே இருந்து வந்த
நெருக்கடி காரணமாக இருந்ததா?
சாதிச்சமூகமாக
மாறிவரும் திணைச்சமூகத்தை மோதி அழிப்பதை விட அதனிடம் நட்புப் பாராட்டுவதே நல்லது
என்று முடிமன்னர் மூவரும் முடிவெடுத்தனரா? அல்லது பழங்குடிச் சமூகம் பெருவாரியாக
இருந்த நிலையில் அவற்றின் கொடூரத் தாக்குதலில் இருந்து சேர சோழ பாண்டிய அரசுகளைத்
தக்க வைத்துக்கொள்ளவதற்காக முடிமன்னர்கள் எடுத்த போர்த்தந்திரமா? அல்லது
‘நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பாடாலானும்’
(தொல்-பொருள்-புறத்-காஞ்சி-24)
என்பதால் தொடர்ந்து முடிமன்னர்களால் திணைச்
சமூகம் தாக்கி அழிக்கப்பட்டு வந்ததைத் தடுக்கத் திணைச் சமூகங்கள் 12 வேளிர்கள்
தலைமையில் ஒன்றுபட்டு முடிமன்னர்களுக்கு எதிராகப் போரிடும் நிலை
முன்னெடுக்கப்பட்டிருந்தால் அதனால் போரைத் தவிர்க்கக் கூட்டணி உருவாகி
இருந்திருக்குமா? இறுதி இரண்டுமே
சரியானதாக இருந்திருக்கும். ஆகவே, கூட்டணி
ஏற்பட்டிருப்பதற்கான அடிப்படைக் காரணம் இருந்துள்ளதால் காரவேலன் கல்வெட்டுச்
செய்தியை ஏற்பதில் தவறில்லை.
ஆகவே தொல்காப்பியம்
கூறும் மகட்பாற் காஞ்சி எனும் வேந்தர்களால் திணைச் சமூகம் அழிக்கப்பட்ட நிகழ்வு
கி.மு.1465க்கு முன்பே நிறுத்தப்பட்டு மீண்டும் கி.மு.165க்குப் பிறகு பிறகு
நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்.
இதன்பின்பு வர்ணச் சமூகம் வலுவடைந்துவிட்ட நிலையில் முடிமன்னர்களோடு
இணங்கிப் போகத் திணைச் சமூகமாகிய முதுகுடி முன்வந்ததால் மகட்பாற்காஞ்சி மகட்கொடை
மறுப்புக்காஞ்சியாக நில்லாமல் மகட்கொடைக் காஞ்சியாக மாறிப்போனது. இவ்வாறு திணைச்சமூகத்தின் காலகட்டம் முடிவிற்கு
வந்தது.
சாதிச்சமூகம்
வர்ணச் சமூகமாக வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து தீண்டாமையும் உரம்பெற்றது. வர்ணச் சமூகம் முழுவளர்ச்சியை
எட்டிப்பிடிப்பதற்கு முன்பே திணைச்சமூகம் மற்றும் சாதிச் சமூகம் ஆகிய இரு
மையங்களிலும் செயல்பட்டாக வேண்டிய சூழல் தமிழ்ச்சைவத்திற்கு வந்தது. எனவே, திணைச்சமூகத்தின் அகவாழ்வையும் சாதியற்ற
சமூக நிலையையும் ஏற்றுக்கொண்டதால் சாதிச் சமூகத்துக்குரிய சாதியக் கட்டமைப்பை
எதிர்த்ததோடு பெருந்தெய்வமாகிய சிவனை அம்மையப்பன் வடிவில் ஏற்றுக்கொண்டது. பெருந்தெய்வம் உடைமைச் சமூகத்தின் உற்பத்தி
ஆதலால் சைவம் சொத்துடைமைக்கு எதிரானதாக இருக்க முடியாது என்பது விளங்கும். சைவம் சாதிக்கு எதிரானது என்பதை மறைமலை அடிகளாரின்
‘சாதி வேற்றுமையும், போலிச்சை வரும்’ எனும் நூலுள் கண்டுதெளியலாம்.
குலம்
இனக்குழுக்குள்ளும் இனக்குழு சாதிக்குள்ளுமாக உள்வாங்கப்பட்டது போல குலத்துக்குரிய
காடுகிழாளாகிய பழையோள் கொற்றவையாகிப் பாலைத் திணைக்குரிய தெய்வமாகிப்போனாள். இதையடுத்து அவள் மகன் முருகனே குறிஞ்சியின்
சேயோனாகி விட்டான் என்பாரும் உளர். ஆனால்
சேயோன் எனில் சிவந்தவன் என்பார் பாவாணர்.
சிவந்தவன் என்பதே சிவன் என்று சுருங்கி இருந்திருக்க வேண்டும். எனவே தான் சிவன் மலைக்கடவுளாகக்
காட்டப்படுவதைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
சிவம் என்பதே சிவனுக்குரிய மதமான சைவமாகத் திரிந்திருக்கவேண்டும். சிவமதம் என்னும் வழக்கும் உள்ளதை நோக்கவும்.
‘மலைமகள் மகனே; மற்றோர் கூற்றே;
வெற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ;
இழையணி சிறப்பின் பழையோள் குழவி’
என்று முருகனைத் திருமுருகாற்றுப்படை கூறுவதால்
எந்த தந்தைக்குப் பிறந்தான் என்று அறிய முடியாத தாய்வழித் தலைமைச் சமூகத்தில் பழையோளின்
மகளாகக் கந்தனும். கொற்றவை மகனாக வேலனும் கந்தனும் வேலனும் இணைக்கப்பட்டு மலைமகள்
மகனாக முருகனும் வளர்ந்து வந்திருக்கவேண்டும்.
மலைக்கடவுளான சிவனை
மலைமகள் மணந்துக்கொண்டதால் முருகன் சிவனுக்கும் சேய் ஆகிப்போனான். சேயோன் சிவனில் கரைந்துவிட்டதால் முருகனையே
குன்றுதோறும் ஆடும் குமரனாகவும் சேயோனாகவும் காணும் நிலை தோன்றியிருந்திருக்க
வேண்டும். திணைச் சமூகமும் சாதிச்சமூகமும்
பக்கம் பக்கமாக நிலவியகாலத்தில் இருமையங்களுக்கும் இணக்கமாக இயங்கவேண்டிய சைவம்
இப்படித்தான் கடவுளர்களை படைத்திருக்க முடியும்.
ஆகவே.
முந்தைய சேயோன் குறிஞ்சித் தெய்வமாயும் மாயோன் முல்லைத் தெய்வமாயும் வேந்தன்
மருதத்தின் தெய்வமாயும் வருணன் நெய்தல் தெய்வமாயும் வடிவம் பெற்றனர். இனக்குழுக்களில் இணைமணமுறையும்
தனிக்குடும்பமும் தோன்றும்வரை பெண்ணே சமூகத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தாள். பின்னர் ஆண் சமூகத்தின் தலைமைப் பொறுப்பிற்கு
வந்ததையே திணைத் தெய்வங்கள் நமக்குக் காட்டுவனவாக உள்ளன. இத்திணைத் தெய்வங்கள் குலதெய்வங்களை விடவும்
பெரியவை. ஆனால் சாதிச் சமூகத்துக்குரிய
கடவுள் எனும் பெருந்தெய்வங்களை விடவும் சிறியவை.
இவற்றுக்கும் படிமைகள் இருந்தன.
வழிபாடுகள் நடந்திருந்தன. இதனை
‘மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையாததாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே’
(தொல்-பொருள்-அகத்-28)
என்னும் நூற்பா மூலம் அறியலாம். மேலும் அத்தெய்வங்களின் வழிபாடுகள் திணை
வாழ்க்கையோடு தொடர்புடையவையாதலின் அவை நிகழாது தப்பியவிடத்து மீண்டும் அதை நிகழச்
செய்வதற்கான ஏற்பாடு இருந்தது என்பதும் அதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிய
நேர்ந்தது என்பதும் தெரியவருகின்றது.
குலதெய்வமாயிருந்த
பழையோள் பாலைத்திணையின் கொற்றவையானதைப் போன்றே சாதிச் சமூகம் உருவானதை அடுத்துத்
திணைத்தெய்வங்களின் இணைப்பாகப் பெருந்தெய்வங்கள் உருவெடுத்தன. கொற்றவை சேயோன் வேந்தன் ஆகியவற்றின் இணைப்பாகச்
சிவன் அம்மையப்பன் வடிவமேற்றுள்ளது.
கொற்றவை மலைமகளாகவும் அவள் வடிவம் பால்மாற்றம் செய்யப்பட்டும் அவளது
கொடூரமும் சேயோனின் சிவந்த நிறமும் வேந்து நிலைப்பட்ட ஆள்வினையும் இணைந்து
உருவானதே சிவன் என்றாகும்.
‘மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழிந்து விழித்த இமையா நாட்டத்து
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கருத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநான் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவைப் போர்த்து அணங்கு ஆகிய
அரியின் உருவை மேகலை ஆட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீரடி
வலம்படு கொற்றத்து வாய்வாள் கொற்றவை’
என்னும் சிலப்பதிகார வரிகள் கொற்றவையின்
வடிவத்தைக் காட்டுகின்றன. ஆதலால்
சமூகத்தில் ஆணாதிக்கம் தோன்றிப் பேரளவில் நிலவுடைமை ஏற்பட்டபோது கொற்றவையின்
வடிவம் சிவனுக்குரியதாக மாறிவிட்டது. எனவே
இதிலுள்ள பழங்கதைகள் அனைத்தும் தாய்வழிச் சமூகத்தில் உருவாகித் தந்தை வழிச்
சமூகத்தில் சிவனோடு தொடர்புபடுத்தப் பட்டிருக்க வேண்டும். எனவே, தந்தைவழித் தலைமையோடு இந்தியாவிற்குள்
வந்த ஆரிய இனக்குழுக்களுக்கும் கொற்றவை மீது புனையப்பட்ட பழங்கதைகளுக்கும் தொடர்பு
இருந்திருக்க முடியாது. மேலும் இந்தப்
பழங்கதைகள் தமிழில் தமிழ் மக்களால் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதும்
தெளிவாகின்றது. நிற்க.
மாயோனும்
வருணனும் இணைந்து உருவானதே திருமால்.
வருணன் ஆரியத்தெய்வமான மழைத் தெய்வமன்று.
தமிழர் தெய்வமாகிய கடல் தெய்வம் என்று மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள். கடல் மழைக்குக்
காரணமாகி மழை மாலானது. இந்த இணைப்புத்தான்
மாயோனாகிய கண்ணனைக் கடல்வண்ணனாக்கியது.
சமுத்திர நாராயணன் எனும் பெயர் பொருத்தத்திலிருந்தும் இதைப் புரிந்து
கொள்ளலாம். இதுவும் நிற்க.
முருகனைப்
பரிபாடல், ‘காய் கடவுட் சேஎய்’ என்று குறிக்கிறது. இதனால் சினம் பொருந்தியக்
கடவுளாகச் சிவன் குறிக்கப்பட்டிருப்பது புரியும்.
திருமாலைப் பற்றிப் பாடியதுபோல சிவனைப் பற்றிப் பரிபாட்டில் பாடவில்லை எனச்
சிலர் கருதுகின்றனர். மறைந்துபோன
எண்ணற்றப் பரிபாட்டுகளில் ஏதோ சிலவற்றில் பாடப்பட்டிருக்கக் கூடும் என்பதையே ‘காய்
கடவுள்’ என்னும் குறிப்பால் உய்த்துணரமுடியும்.
காய்
கடவுள் சிவனைக் குறிப்பதால் கடவுள் என்பது பெருந்தெய்வத்துக்கு உரிய பொதுப்பெயராக
ஆளப்பட்டுள்ளது. ஆகவே தான்,
‘காமப்பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்’
(தொல்-பொருள்-புறத்-28)
இந்நூற்பாவிற்கு
இளம்பூரணர் உரை, ‘காமப்பகுதி கடவுள் மாட்டும் வரையார்; ஏனோர் மாட்டும் வரையார் என்பர்
புலவர்’ என்றது கடவுள் மாட்டுத் தெய்வப்பெண்டிர் நயந்த பக்கமும் மானிடப் பெண்டிர்
நயந்த பக்கமும் பாடப்பெறும் என்றவாறு கூறுகிறது.
நச்சினார்க்கினியர்
உரை வேறாகவுள்ளது.
‘அது கடவுண்மாட்டு கடவுட் பெண்டிர்
நயப்பனவும் அவர்மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பனவும் கடவுள் மானிடப் பெண்டிரை
நயப்பனவும் பிறவுமாம்’ என்றுள்ளது.
பிறவுமாம் என்று நச்சினார்க் கினியர் கூறியுள்ளது ஏனோர் பாங்கினும்
என்பதற்காகவேயாம்.
இவர்கள்
இருவரும் வரையார் என்பதற்கு நீக்கார் என்று பொருள்கொண்டு காமப்பகுதியை நயப்பார்கள்
என்று கூறியுள்ளனர். ஆனால் தொல்காப்பியர்
வரையார் என்பதற்குத் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்; ஆனால் காமப்பகுதி
துய்ப்பார்கள் என்னும் பொருளிலேயே அந்நூற்பாவை செய்துள்ளனர். அவ்வாறு துய்ப்பவர்கள் கடவுளர் மட்டுமன்று
மானுடரும் தான் என்று தனக்கு முன்னர் நூல்செய்த புலவர்கள் கூறியுள்ளதாகக்
கூறியுள்ளார். எனவே, தொல்காப்பியர்
காலத்துக்கு முன்னரே பரத்தமை இருந்துள்ளது என்பதும் அவர்களை மணம் செய்து கொள்ளும்
வழக்கம் இல்லாமல் இருந்தது என்பதாலேயே வள்ளுவர் அவர்களை வரைவின் மகளிர் என்றும்
பொருட்பெண்டிர் என்றும் குறித்துள்ளார் என்பது துலங்கும். இவர்கள் திணைத் தெய்வங்கள் தோன்றிய காலந்தொட்டே
கடவுட்பெண்டிராக இருந்திருக்க வேண்டும்.
இவர்களிடம் பெறும் காம இன்பத்தை வள்ளுவர்,
‘பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம்
இருட்டறையில்
எதில் பிணந்தழீஇ யற்று’ என்று எடுத்துக்
கூறுவார். மேலும் உண்மையான முயக்கத்தின்
மூலம் கிடைக்கும் உண்மையான காம இன்பத்தையும் அவரே,
‘ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்’ என்று விளக்கமுறக்
கூறுவார். எனவே,
‘கூடலும் ஊடலும் கோவலர்க் களித்துப்
பாடமைச் சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்’ என்று இளங்கோவடிகளால் மாதவி சிலப்பதிகாரத்தில்
சிறப்பிக்கப்பட்டுள்ளாள். ஆதலால் மாதவி
வெறும் ஆடல்மகள் இல்லை. கோவலனோடு பன்னிரண்
ஆண்டுகளுக்கு மேலாக இல்லறம் இனிது நடத்தியவள்.
இவ்வாறே தாண்டவபுரம் புதினத்துள்வரும் மனோன்மணி ஆடல்மகள் என்னும் நிலையைக்
கடந்து அருளாளராகவும் ஞானசம்பந்தனால் கருவுயிர்த்துக் காதலன்பின் எடுத்துக்
காட்டாகவும் திகழுவதைக் காணமுடியும். இதனை
வள்ளுவரே,
‘திணைத்துணையும் ஊடாமை வேண்டும்
பனைத்துணையும்
காமம் நிறைய வரின்’ எனும் குறள்வழியாக
உணர்த்துகிறார்.
பரம்
என்னுஞ்சொல் மேல்பரப்பு, மேலுலகம், அயல் என்னும் பொருட்களுக்கு உரியது. எனவே பரத்தை எனுஞ்சொல் மேலுலகத்துக்குரியவர்
(தேவதாசியர்), அயலில் வாழ்பவர் ஆகிய பொருட்களை உள்வாங்கிக் கொண்டுள்ளது. எனவே, பரத்தையரால் ஆடப்பெற்ற ஆட்டம் பரத்தம்
என்றாகிப் பின்னர் தகர ஒற்று விடுபட்டு பரதம் என்றாகி இருந்திருக்கவேண்டும். ஆனால் பரதமுனிவர் பரத நாட்டியத்திற்கு இலக்கணம்
வகுத்ததால் (க்ஷய) பரதமாயிற்று என்று பிற்காலத்தில் கதைகட்டப்பட்டுள்ளது.
உண்மையில் பரதமுனிவர்
காலத்திற்கு முன்பே சிலப்பதிகாரம் படைக்கப்பட்டுவிட்டது. அக்காலத்திற்கு முன்பே
பரதத்திற்குரிய முத்திரைகள் கூத்தின் வழித்தோன்றி தொகுக்கப்பட்டுப் பரதமாக வளர்ச்சியடைந்தது. ஆகவே நட்டுவாங்கனார் முதலில் பதினோரு வகைக்
கூத்தையும் கற்றுக்கொடுத்த பின்னரே பரதத்தைப் பயிற்றுவிப்பார் என்று மூவலூர்
இராமாமிர்தத்தம்மா அவர்கள் எழுதியுள்ளார்கள்.
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தேர்தல் என்பது பரதத்தின்
முத்திரைகளையே குறிக்கும். இதற்கான களம்
பண்டைய தமிழகமாகவே இருந்தது. பதினோரு வகை
கூத்தையும் ஆடும் ஆடல் வடிவங்கள் இறை வடிவமாகப் பழந்தமிழகத்திலேயே உளது என்று
மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்.
சிவன்
கூத்தனாகவும் நடராசனாகவும் காட்சி அளிப்பதுவும், ‘தென்னாடுடைய சிவனே’ என்று
போற்றப்படுவதும் இதனாலேயே எனலாம். ஆகவே
கூத்தும் பரதமும் ஆடிக்கோயில் பணி புரிந்தவர்களே பரத்தையராகக் கருதப்பட்டனர்
என்பது தெளிவு. மேலும் பரதநாட்டியத்தைத்
தேவதாசியர் மட்டுமே ஆடவேண்டும் எனும்மரபிருந்ததாக மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்
கூறியுள்ளார்கள். இது திணைச்சமூகக்
காலகட்டம் முதலே நடைமுறையில் இருந்திருக்க வேண்டும். எனவே உருவவழிபாட்டை முன்னெடுத்த சைவநெறியையும்
மாலிய நெறியையும் வேதாந்தம் உள்வாங்கிக் கொண்டபோது ஆகமம் பொதுவாகிப்போனது. ஆரியரிடத்து உருவவழிபாடு இல்லை என்பதால் ஆகமம்
அவர்களுக்குத் தேவையற்றவை. எனவே வேதாகமம்
எனும் சொல்வழக்கு வேதத்தோடு ஆகமங்கள் இணைக்கப்பட்டதைச் சொல்வதாகும். ஆரியர் இந்திய மக்களோடு அடையாளம் தெரியாமல்
கலந்துவிட்ட பிறகு உருவானது வேதாகமம்.
மேலும்
பிராமணர்களும் பிராமணியமும் ஆரிய வழியில் வந்திருக்க வேண்டும் எனக்கருதுவதும் தவறு. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து முல்லை நிலத்து
மக்களோடு கலந்திருக்க வேண்டும். இவ்வாறு
ஆரியத்தை விழுங்கி ஏப்பம்விட்டது இந்தியா.
இதற்குமுன்பே சாதிச்சமூகம் இங்கே உருவாகிவிட்டது என்பதைத்தான் சிந்துவெளி
நாகரிகம் மூலம் நம்மால் உணரமுடிகிறது.
சிந்துவெளி எழுத்து தமிழி எழுத்தின் முந்தைய வடிவம் என்கின்றனர். எனவே சிந்துவெளி நாகரிகம் தமிழ் நாகரிகமே
ஆகும். முற்காலத் தமிழ் அங்கே வழங்கி
வந்ததால் தான் ஆரிய வேதங்களில் தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளன. எனவே தமிழ்மக்களிடம் படிப்படியாகத் தோன்றி
வளர்ந்த சாதிச்சமூகம் சிந்துவெளிக்கும் உரியதாகவே இருந்திருக்கும்.
லிங்கவழிபாடு
சிந்துவில் இருந்துள்ளது. லிங்கவழிபாடு
என்பது தாந்திரீகத்துக்கு உரியது.
இயற்கைக்கும் மனிதனுக்குமான போராட்டத்தில் குழுவின் இனப்பெருக்கம் மிகவும்
தேவையாக இருந்தது. எனவே தங்குதடையற்ற ஆண்
பெண் புணர்ச்சியின் அடையாளமாக ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் இணைந்த நிலையிலான
லிங்கம் வழிபாட்டுக்குரியதாயிற்று. இதன்
நேர்த்தியான வடிவமே கடவுள் நிலையில் அம்மையப்பன்.
அம்மையப்பன்
இனக்குழுச் சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமநிலை பெற்றிருந்த காலத்தில் உருவாகிச்
சாதிச்சமூகம் உருவெடுத்த போது ஆணுக்குள் பெண் அடக்கமாகிவிட்டதாகச் சமூக நிலைக்குத்
தக்கவாறு மாற்றம் பெற்றிருக்கலாம்.
சேயோனின் நிறமும் மலையும் வேந்தனின் திறமும் கொற்றவையின் வடிவமும் குணமும்
இணைந்த வடிவமாக அம்மையப்பன் மாற்றப்பட்டது
சாதிச் சமூகத்திலாகத்தான் இருக்கமுடியும்.
ஆகவேதான் ‘சக்தி இன்றேல் சிவமில்லை; சிவமின்றேல் சக்தி இல்லை’ என்பது
இன்றும் ஒலித்துக் கொண்டிருந்தாலும் சிவத்துக்குள் சக்தி அடக்கம் என்பதே
சாதிச்சமூகத்தின் நடைமுறையாகும். நிற்க.
இனி
முற்காலத்தில் சைவசமயத்தின் மெய்யியலாக விளங்கிய அருமறை அல்லது மாமறை தொடர்பாக
ஓரளவு பார்க்க வேண்டியுள்ளது.
தொல்காப்பியர் அறம் சார்ந்து பொருளீட்டலையும் பொருள் சார்ந்து இன்பவாழ்வு
வாழ்தலையுமே பேசுதலால் அவர் காலத்து அருமறை மூன்று பொருள்களைப் பற்றியே பேசியது
என்று உணரலாம்.
‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப’
(தொல்-பொருள்-செய்யுள்-480)
என்று தொல்காப்பியர் கூறுவதால் தொல்மாந்தன்
இயற்கையின் மீது ஆணை செலுத்துவதற்காகப் போலச் செய்தலோடு கட்டளை இடலும் என்னும்
நிகழ்வே தாந்திரீகமாகும். இது தந்திரம்
என்று தமிழகத்தில் சொல்லப்பட்டது.
வேட்டையாடுதல், படையெடுத்தல், பயிர்த்தொழில் செய்தல் மருத்துவம் போன்றே
அனைத்துத் துறைகளுக்கும் தந்திரம் விரிவுபடுத்தப்பட்டது. போலச் செய்தலில் இருந்து மந்திரம் பிரிந்தாலும்
போலச் செய்தலே முதலில் கூத்தும் அதைத்தொடர்ந்து பரதநாட்டியமும் தோன்றிவளரக்
காரணமாக இருந்ததால் தெய்வத்தையும் கடவுளையும் மகிழ்விக்க அவை கோவில் பண்பாட்டுடன்
இணைத்து வளர்க்கப்பட்டன.
பின்னர்
சமூகவளர்ச்சிக்கு ஏற்ப அதாவது வர்க்கங்களாகச் சமூகம் பிளவுபட்ட நிலையில் இயற்கை
சார்ந்த மெய்யியலாகத் தொல்லாணையே உலகாயதமாகவும் கடவுள்சாந்த மெய்யியலாக
மந்திரத்தாலான மறையாகவும், மெய்யியலிலும் பிளவு ஏற்பட்டது. இவ்வாறு தந்திரத்தின் கட்டளை வடிவில் இருந்த
மந்திரச்செய்யுள் பின்னர் வேண்டுகோள் நிலைக்கு மாற்றப்பட்டுப் போலச் செய்தலில்
இருந்து பிரிந்து மந்திரத்தை ஓங்கிப் பன்முறை ஒலித்தல் மூலம் முதலில் இயற்கையையும்
பின்னர் தெய்வத்தையும் மகிழ்வித்து எண்ணியதைப் பெறமுடியும் என நம்பியதுதான்
மாந்திரீகம் எனப்பட்ட மந்திரம். இதுதான்
புரோகிதத்தின் தொடக்கமாக இருந்திருக்க வேண்டும்.
இதில் மந்திர உச்சாடணம் முதன்மையானது.
இதனை தேவிபிரசாத் சட்டோபாத்தியாயர் தமது உலகாயதம் எனும் நூலுள் தெளிவுபடக்
கூறியுள்ளார். ஐம்பூதங்களின் மீது கட்டப்பட்ட
மெய்யியலே உலகாயதம்.
மேற்கண்ட
தொல்காப்பியரின் நூற்பா பண்டைய ஆணையினின்று மறைமொழியாக மந்திரம் வந்தது என்று
தொல்காப்பியருக்கு முன்பிருந்தவர்கள் கூறுவதாகக் கூறியுள்ளது. இதையே வள்ளுவரும்,
‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்’ என்று குறளாக வடித்துத் தந்துள்ளார். இந்தத் தந்திரத்தையும் மந்திரத்தையும் தான்
சைவம் உள்வாங்கிக் கொண்டது. இதனைத்தான்
ஞானசம்பந்தன்;
‘மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு;
தந்திரமாவது நீறு; துதிக்கப்படுவது நீறு; என்று பாடினான். மேலும்,
‘மந்திரம் நான்மறையாகி வானவர்
சிந்தையுள் நின்று அவர்தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் ஐந்தெழுத்தும்மே’
(திருமுறை
-3-22-2)
என்னும் தேவாரப் பாடலில் மந்திரமே நான்
மறையானது என்று ஞானசம்பந்தன் கூறியுள்ளான்.
அதுவரை கட்டளையாக இருந்த தந்திரத்திற்குரிய மந்திரமும் மாந்திரீகத்துக்
குரியதும் உச்சாடணத்துக்கு உரியதும் (உச்சாடணம் - உருவேற்றுதல்) ஆகிய மந்திரமும்,
அறம், பொருள், இன்பம் பற்றியே பேசி இருந்திருக்க வேண்டும். பின்பே வீடுபற்றிய சிந்தனையும் மதமும்
உருப்பெற்று வளர்ந்து அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு பொருள்பற்றிப்
பேசியதால் மந்திரம் நான்மறையாக வளர்ந்தது.
இந்த நான்மறை ஒரே நூலாகும். ரிக்,
யஜுர், சாமம், அதர்வணம் என்கிற ஆரிய வேதங்களாகிய நான்கு வேதங்கள் ஆகமாட்டா. வானவர் சிந்தையுள் நின்று, அவர் தம்மை ஆள்வன
என்று பன்மையில் கூறியது. நான்மறையோடு
மந்திரத்தைத் தொடர்புபடுத்தியதால் என்க.
மேலும், ஞானசம்பந்தன்,
‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே’
(திருமுறை
-3-49-5)
என்று தேவாரம் பாடியுள்ளதால் நான்கு வேதங்களை
விடவும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயமே ஆகும் என்பதாகும். எனவே நான்கு வேதத்திற்கும் நமச்சிவாயத்திற்கும்
தொடர்பில்லை என்னும் பொருள் தோன்றவும் சொல்லியுள்ளான்.
இவ்வாறானால்
செந்தழல் ஒம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் ஐந்தெழுத்தானது எப்படி?
தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களை வேதியர்களாக மாற்றிக் கொண்டார்கள் என்பது
தமிழறிஞர் தி.வே. கோபாலையர் அவர்கள் கருத்தாகும்.
மேலும் அவர்கள் தாங்கள் எந்தக் குருவிடம் சமற்கிருத கல்வி கற்றார்களோ
அக்குருவினுடைய கோத்திரத்தவராகவே தங்களை அறிவித்துக் கொண்டார்கள் என்று
‘தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்’ எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். திருமூலரும்
‘பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்மை
அர்ச்சித்தால்
போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா
வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆமென்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே’
(திருமந்திரம்
- 519)
என்று கூறும் பாடலில் பேர் கொண்ட பார்ப்பான்
என்றே பார்ப்பானைத் திட்டுகிறார். ஏன்
திட்டவேண்டும்? பார்ப்பான் பிராமணன்
என்னும் புதிய பெயரைத் தனக்குச் சூட்டிக்கொண்டு விட்டான். அவனே சமற்கிருதத்தையும் வழிபாட்டு மொழியாக
ஏற்றுக்கொண்டு விட்டான். ஆரிய
வேதங்களுக்கு ஆட்பட்டுவிட்டான். ஆகவே அவனை
அவ்வாறு திட்டுகிறார். ஆகவே, பிராமண
எதிர்ப்பும் அதன் தொடர்ச்சியாகச் சமற்கிருதம் மற்றும் ஆரிய வேத எதிர்ப்பும்
திருமூலர் காலத்திலேயே இருந்துள்ளதை உணரலாம்.
எனவே ஞானசம்பந்தனும்
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியரும் ஐந்தெழுத்து மந்திரத்தையே காலை மாலை இருவேளையும்
ஓதியாகவேண்டும். வேறுவழியில்லை எனும்
கருத்துப்படவே கூறியுள்ளான். என்ன காரணம்? சிவன் ஆரிய வேதத்தில் இல்லை. உருத்திரன்தான் உண்டு. இந்த உருத்திரனும் சிந்துவெளித் தொடர்பின்
மூலம்தான் ஆரியவேதத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஆகவே பிராமணர்கள் சிவனை வழிபடுவது உண்மை
என்றால் அவர்கள் நமச்சிவாய மந்திரத்தை ஓதாமல் இருக்க முடியாது. ஏன்?
‘வேதம் ஒருகால் ஓதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சம் நெக்குருவி நிற்பவர் காண்கிலேம்’ என்று சிவப்பிரகாசர் பிற்காலத்தில்
கூறிய அதே செய்தியைத் தமிழ்மறையோடு தொடர்புபடுத்தி ஞானசம்பந்தன்
கூறியுள்ளான். தமிழ்மறை அல்லது அருமறை
அல்லது நான்மறை ஏற்றிப்போற்றும் நமச்சிவாயத்தை காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்க
உருகி ஓதும் நிகழ்வைக் கூறியுள்ளான். தமிழ்மறை அழிவுற்ற காலத்தில் வாழ்ந்த
சிவப்பிரகாசர் திருவாசகத்தையே ஆரிய வேதத்துக் குஎதிராக நிறுத்துவதைக்
காணமுடிகிறது. மேலும் ஆரிய வேதங்களை
ஒலிப்புமாறாமல் ஓதினால்தான் பொருள் மாறுபாடு வராது. எனவே ஆரியவேதங்களை ஓதுவோர் அதன் ஒலிப்பிலேயே
கவனமாக இருந்தாக வேண்டும். பக்தி
இரண்டாவது இடத்துக்குப் போய்விடும். எனவே
உண்மையில் பக்தி செலுத்தும் செம்மை வேதியர்க்கு ஐந்தெழுத்து மந்திரம்தான்
தேவைப்படும் என்னும் பொருளை உய்த்துணருமாறு ஞானசம்பந்தன் மேற்கண்ட பாடலைப்பாடினான்
என்று கூறினால் தவறாகாது.
மேலும்
வேதத்தால் சொல்லப்படாத சிவன் (உருத்திரன் சிவனுடைய ஒரு பகதி மட்டுமேயாகும்) வேத நான்கிலும் மெய்ப்பொருளாக முடியாது. எனவே, வேதநான்கினும் என்பதற்கு
நான்குவேதங்களைவிடவும் எனப்பொருள் கொள்வதே சரியாக இருக்கும். எனவே நாதன் நாமமே
அஞ்செழுத்து மந்திரமாகி மந்திரமாய் அமைவதாகும்.
இனி,
‘மந்திர மரபின் தெய்வம் பேணி
மெய்யூர் அமைச்சியல் மையூர்க்கிழானை
புரையறு கேள்வி புரோசு மயக்கி’ என்று
பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்துக்குரிய பதிகம் கூறுவதால் மந்திரமரபின் தெய்வம்
எனப்படுவது திணைத் தெய்வமே ஆகும். திணைத்
தெய்வங்கள் தோன்றிய காலத்தில் ‘மந்திரம்’ எழுத்துவடிவம் பெறாத நிலையிலேயே
கற்கப்பட்டது. எனவே,
‘எழுதாக் கற்பின் நின்சொலுள்ளும்’ என்று
குறுந்தொகை கூறும். ஆகவே ‘புரையறு கேள்வி’
என்றவுடனேயே ஆரிய வேதம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏன்?
‘பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறித்தெடுத்த உருகெழு கொடியும்’ எனப் பட்டினப்பாலை
கூறுவதால் கேள்வி ஒன்று மட்டுமன்று. ஒவ்வொரு சமயத்துக்கும் மெய்யியல் கேள்வியாகவே
இருந்துள்ளது.
எனவே
பல்வேறு சமயங்களுக்கும் உரிய பல்வேறு கேள்விகளாக இருந்த மறைகளையும் ஐம்பூதக்
கொள்கையை அடிப்படையாகக்கொண்ட தொல்லாணையைக் கற்ற நல்லாசிரியர்கள் கொடியை நட்டு
வைத்து வாதுக்கழைக்கும் நிகழ்வை புகார் நகரத்தில் நிகழ்ந்த இந்திரவிழாவின் போது
நிகழ்ந்ததாக உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளார்.
எனவே அவர்கள் திணைத்தெய்வ வழிப்பட்ட மந்திரத்தையும் கற்றுத் தேர்ந்தவர்கள்
என்றுதான் புரிந்துகொள்ள முடியும்.
ஆரிய
மொழிக்கு (சமற்கிருதமன்று) எழுத்துத்தோன்றாமல் இருந்ததால் ஆரிய வேதங்கள்
எழுதப்படாமல் இருந்தன. ஆனால்
தமிழ்மொழிக்கு எழுத்து இருந்தும் தமிழ் மந்திரம் எழுதாக் கற்புக்குரிய தாகவே
இருந்தது. ஏன்?
‘ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையை
போற்றி உரைத்துஏட்டின் புறத்துஎழுதார் ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலை
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று’
(வள்ளுவமாலை
- கோதமனார்)
நான்மறையை எழுதிப்படித்தால் அதன் ஆற்றல்
குறையுமென்று அந்தணர்கள் நம்பினர். அதனால் நான்மறையை எழுதாமலேயே ஓதிவந்தனர் என்பது
திருவள்ளுவமாலைச் செய்யுள் வழி நன்கு துலங்கும்.
இதன்மூலம் அந்தணர் என்போர் பிராமணர் ஆகார். அவர்கள் தமிழ்ப் பார்ப்பணர்களே யாவர் என்பதும்
தெளிவாகும். இவர்கள் காமக் கூட்டத்தில்
தலைவன் தலைவியருடன் அளவியன் மரபினராக இருந்தவர்கள். எனவேதான் வள்ளுவரும்
‘அந்தணர் என்போர் அறவோர்
மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்’ என்று
குறள்செய்தார். அறத்தொடு நிற்றலாகிய
களவிற்கும் களவின் வழிப்பட்ட கற்பிற்கும் துணையானதால் அந்தணரும் அறவோராதலும்
அதனால் செந்தண்மை பூண்டு ஒழுகுதலும் அவர் இயல்பாயிற்று என்க.
இவர்களே
தங்களைப் பிராமணர்களாக மாற்றிக் கொண்டபின் அவர்கள் களமும் கருத்தும் மாறிப்போனதால்
அவர்களால் அந்தணர்களாக இருக்க முடியாமற் போனது.
‘கோதமனாரைப் போலவே நல்லந்துவனாரும்,
சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருளெல்லாம் - தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார்
எப்பாவலரினும் இல்’ என்று பாடிய செய்யுள்
வள்ளுவ மாலையுள் இடம் பெற்றுள்ளது.
இதிலிருந்து தெரியவருவது என்ன?
வள்ளுவர் குறளில் செய்துள்ளவை எல்லாம் அருமறையிலுள்ளவை என்பது
புலனாகும். எனவே கேள்வி என்றவுடனே ஆரிய
வேதங்களே என முடிவுகட்டுவது முற்றிலும் தவறாகும்.
நிறைமொழி மாந்தர்தம் மறைமொழியாகிய ஆணையே தொல்லாணை எனவும் சொல்லப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக மந்திரமும் இதன்
அடுத்தகட்டமாக நான்மறையும் உருவாகி வந்துள்ளதைத்தான் இதுவரை நாம்
கண்டுவந்துள்ளோம்.
இனித்
திருமூலர் கூறுவதையும் கவனிக்கலாம்.
‘ஆறங்கமாய் வருமாமறை ஓதியைக்
கூறங்கமாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்கமாக விளைவு செய்தப்புறம்
பேரங்கமாகப் பெருக்குகின்றாரே’
(திருமந்திரம்
10ஆம் திருமுறை - 66)
திருமூலர் குறிப்பிடும் மாமறை ஒரே நூல். நான்கு வேதங்கள் அல்ல. ‘மாமறை ஓதியை’ என்று ஒருமையில்
குறித்துள்ளதாலும் இதனை உணரலாம். மேலும்
மாமறையை ஓதி என்று சுட்டுவதால் எழுதிப் படிக்கப்பெறாமல் ஒதப்பெற்றதாகவே இருந்தது
என்பது புலனாகும். எனவே திருமூலர்
குறிப்பிடும் மாமறையும் ஞானசம்பந்தன் குறிப்பிடும் நான்மறையும் ஒன்றுதான் என்று
உணர முடியும். மேலும் மாமறை ஓதி ஆறு
கூறுகளை உடைய ஒரே நூல் என்றும் கூறுகிறார்.
ஆனால் வேதாந்திகளாக
மாறிவிட்ட தமிழ்ப்பார்ப்பனர் பிராமணர் எனும் புதிய பேர்கொண்ட நிலையில் மாமறையின்
ஆறு கூறுகளையும் மனித உறுப்புகளைப் போல பாவித்து ஒவ்வொரு உறுப்புக்கும் ஒன்றோ பலவோ
சமற்கிருத நூல்களைச் சேர்த்துப் பேரங்க (மனித உடல்) மாகப் பெருக்கிக் காட்டும்
தவறான செயலைக் கண்டிக்கவும் செய்கிறார்.
மாமறை சமற்கிருதத்தின் வழி வந்தது எனக்காட்டுவதற்கான அந்தக் கீழ்த்தரமான
முயற்சியைச் சாடுகின்றார் என்றாலும் மாமறையும் வேதமும் ஒன்றே என்னும் சொல்லாடலை
உருவாக்காமல் ஆரிய வேதத்தைத் தமிழகத்தில் நுழைத்திருந்திருக்க முடியாது.
ஆகவே ஆறு அங்கங்களுக்குரிய சமற்கிருத நூல்களைக்
கற்பதன் மூலம்தான் வேதம் பயிலும் மாணவர்கள் ஒழுகவேண்டிய நெறிகளைக் கற்க
முடியும். எனவே ஆறங்கத்திற்கு உரிய
நூல்தொகுதி வேதாங்கம் எனப்பட்டது. இது
முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்குமான முடிச்சாக இருந்தாலும் தமிழ்மறையும் நான்கு
வேதமும் ஒன்றே என்னும் சொல்லாடலை உருவாக்க இது மிகவும் தேவையாக இருந்திருக்கும்.
திருமூலர்
ஆரிய வேதங்களை ஏற்பவராக இருந்திருந்தால் வேதாந்திகளாகிய பிராமணர்களது வேதாங்கக்
கோட்பாட்டையும் ஏற்றுக் கொண்டே இருந்திருப்பார்.
மாமறை ஓதியன் கூறங்கமான ஆறங்கத்தை வேதாங்கத்தோடு தொடர்புபடுத்தியதால்தான்
அவர் அதைச் சாட நேர்ந்தது. வேதாங்கம்
வேதத்துக்குரியது மட்டுமே என்று சொல்லப்பட்டிருந்திருக்குமேயானால் திருமூலர்
வாளாவிருந்திருப்பார் என்பதே உண்மையாகும்.
எனவே மாமறை ஓதி தமிழ்மறையே என்பது விளங்கும்
கை
- கற்பம் (தரும ஆத்திரங்கள் எனும் சட்ட நூற்கள்)
கால்
- சந்தம் (செய்யுள் இலக்கணம்)
கண்
- எண் எனப்படும் கணியம்
காது
- நிருத்தம் (வேதச் சொல்லாய்வு)
மூக்கு
- திக்கை அல்லது பயிற்சி (பாணினி ஆக்கியது)
முகம்
- சொல்லிலக்கணம் பற்றிய சமற்கிருத நூல்கள் இவை அனைத்தும் சமற்கிருத நூல்கள். இவற்றைத்தான் திருமூலர் எதிர்க்கிறார். இவற்றில் தருமசூத்திரங்களைத் திருமூலர் ஏன்
எதிர்க்கவேண்டும்? வருண நீதியுரைப்பவை அவை.
சங்க காலத்திற்குப் பிற்பட்ட கி.பி.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான
திருமூலர் சாதி, வர்ணநீதி ஆகியவற்றை எப்படி எதிர்க்க முடியும்? திணைச் சமூகப் பின்புலத்தில் வாழ்வியலை ஏற்றுக்
கொண்டிருந்த சைவத்தைச் சார்ந்தவராகத் திருமூலர் இருந்ததால்தான் தருமசாத்திரங்களான
சமற்கிருத நூல்களை அவரால் எதிர்க்க முடிந்தது.
இவ்விடம்
ஒரு நல்லவினா தொடுக்கக் கூடும். திருமூலர்
வேதாங்கத்தைத் தானே எதிர்த்தார்? வேதங்களை
அல்லவே! எனின், வேதாந்திகளே நான்கு ஆரிய வேதங்களும் ஆறங்கங்களாகப்
பகுக்கப்பட்டுள்ளதாகக் கூறவில்லை. அப்படி
இருக்க வேறு எதனுடைய ஆறங்கத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வோர் அங்கத்திற்கும் ஒன்றோ
சிலவோவான நூற்பட்டியலைத் தயாரித்தார்கள்?
நான்மறையின் கூறங்கமாகிய ஆறங்கத்தை வேதத்துக்குரியது எனும் மாயத் தோற்றம்
ஏற்படும்படிச் சொல்லாமல் நான்மறையும் நான்கு வேதங்களும் ஒன்று தான் என்று
நம்பவைத்திருக்க முடிந்திராது. எனவே தான்
வேதம்பயிலும் மாணாக்கர்களை நெறிப்படுத்தும் நூற்களை வேதாங்கமாகத்
தொகுத்திருந்திருக்க வேண்டும். இல்லையேல்
திருமூலர் இதில் தலையிட்டிருக்கத் தேவையில்லாமல் போயிருந்திருக்கும். எனவே
திருமூலர் ஏற்றிப் போற்றிய மாமறை ஒதி தமிழ்மறையே யாகும் என்பது உறுதியாகிறது.
உண்மை
இவ்வாறிருக்கக் குழப்பம் செய்தவர்கள் எப்படியெல்லாம் செய்தார்கள் என்பதற்கு
எடுத்துக்காட்டாக வள்ளுவமாலைச் செய்யுளே அமைந்துள்ளதைக் காணலாம்.
‘ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தருமமுதல் நான்கும் சாலும் - அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும் வள்ளுவனார்
புந்தி முடித்த பொருள்’
இப்பாடல் களத்தூர் கிழாரால் எழுதப்பட்டதாக
உள்ளது. தருமமுதல் நான்கு என்பது அறம்,
பொருள், இன்பம், வீடு என்பதாகும்.
அருமறைகள் ஐந்தாக ஆரியவேதம் நான்கொடு மகாபாரதத்தினை ஐந்தாவதாக வேதமாக
இணைத்துக் கூறியுள்ளார். அருமறை என்னும் ஒரு
நூலை அருமறைகள் ஐந்து எனக்குழப்பிவிட்ட பெருமை களத்தூர் கிழாருக்கே உரியது.
எனவே
மறை என்றாலும் வேதம் என்றாலும் ஒன்றுதான் எனும் கருத்தை உருவாக்கும் முயற்சி
தொடர்ந்து நடந்துள்ளதை அறியமுடிகிறது.
இதன் விளைவாக மறைபொருளாகிய வேதம் எனும் பொருள் தோன்றும்படி திருமூலரே சில
பாடல்களை இயற்றியுள்ளார். எனின்
தமிழ்நாட்டில் பிராமணியம் திருமூலர் காலத்திலேயே வளர்ந்துள்ளது என்பதைப்
புரிந்துகொள்ளப் போதுமானதாகவுள்ளது.
மேலும்
கொற்கைக் கிழான் தற்கொற்றன், பூஞ்சாற்றூர் கௌணியன் விண்ணந்தாயன் ஆகிய பெயர்கள்
நல்ல தமிழில் இருப்பதை உணர்ந்தால் இவர்கள் தமிழ்ப்பார்ப்பணர்கள் என்பதும் இவர்கள்
ஓதியது நான்மறையாகிய தமிழ்மறை என்பதும் இவர்கள் நடத்திய வேள்வி தமிழ்மறைப்படியானது
என்பதும் தெளிவாகும்.
நெருப்புக்
கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பண்டை மனிதன் வேட்டை விலங்கை நெருப்பிளிட்டு வாட்டித்
தின்னத் தொடங்கினான். அவ்வாறு வாட்டப்பட்ட
விலங்குகள் குழு முழுமைக்கும் பங்கிடப் பட்டிருக்கும். வேட்டை விலங்குகளை அதிகம் பெறுவதற்கான
தாந்திரிகச் சடங்காக அதற்குரிய போலச்செய்தலும் ஆணையும் அமைந்திருக்கும். இதில் குழு முழுமையும் ஈடுபட்டிருந்திருக்கும்
இதன்பின்
ஐம்பூத நிலைப்பட்ட இயற்கை வழிபாடு தோன்றிய நிலையில் லிங்கத்தின் குறியீடாக கந்து
என்ற தூண் வைக்கப்பட்டு வேட்டை விலங்குகள் அதில் கட்டப்பட்டுப் போலச் செய்தல்
சடங்கோடு அவை இயற்கைக்கு அளிக்கப்படுவது போல பாவனை செய்யும் விதமாகப் பலியிட்டு
ஐம்பூதங்களில் ஒன்றான தீயிலிட்டுப் பொசுக்கி இயற்கையை மகிழ்வித்திட முனைந்திருக்க
வேண்டும். முன்பு கட்டளை வடிவிலிருந்த
தாந்திரிகம் வேண்டுகோள் நிலைக்கு மாறியிருந்திருக்க வேண்டும்.
பின்னர்
சிறுதெய்வங்கள் தோன்றிய நிலையில் கந்து எனப்பட்ட தூணே கந்தனாகிப் பழையோள்
மைந்தனாகக் கருதப்பட்டிருக்கவேண்டும்.
இரும்புக் காலத்தில் கந்தன் வேல் எடுத்து வெற்றிசேர்க்கும் வேலனாகிக்
கொற்றவை மைந்தனாகக் கருதப்பட்டிருக்க வேண்டும்.
கந்தனைவிட வேலனும்
வேலனைவிட முருகனும் நாகரிகப்பட்டவர்கள்.
இவ்வாறு நாகரிகப்பட்ட முருகன் மலைமகள் மகனாக விருந்து மலைமகள் மலைக்கடவுளான
சிவனை மணந்த நிலையில் சிவனுக்கும் சேய் ஆனான்.
கந்து கந்தனாகிப் பின் கந்து வேலாகி வேலனிலிருந்து முருகன் வரை
வந்துள்ளது. இந்தக் கந்துவே வேள்வித்தூணாக
இருந்து பின்னர் பிராமணர்களால் யூபமாக மாற்றப்பட்டது. அரசர்கள் வேள்வி நடத்தித் தங்கள் வலிமையை
அதிகரித்துக் கொள்ள முனைந்தபோது தான் தமிழ் அந்தணர்களுக்குத் தானம் வழங்கினாலும்
பிராமணர்களாகத் தங்களை மாற்றிக் கொண்ட பார்ப்பனர்களுக்கே முதன்மை இடம்
அளித்தனர். இதனால் ஆரியவேதமும்
சமற்கிருதமும் முதன்மை பெறத் தொடங்கின.
இந்தியாவின்
புராண இதிகாசங்கள் இந்தியா ஐம்பத்தாறு தேசங்களாக இருந்ததைக் கூறுகின்றன. இங்கு மன்னர்களின் புதல்விகளுக்குச் சுயம்வரம்
நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச்
சுயம்வரத்திற்கு இந்த ஐம்பத்தாறு தேச அரசர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகச்
சொல்லப்பட்டுள்ளது. இவற்றுக்கு அப்பால்
உள்ள தேசங்களின் அரசர்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை. ஏன்? இந்த ஐம்பத்தாறு தேசங்களில் மட்டுமே
சாதிச்சமூகம் இருந்தது. திணைச்சமூகமும்
சாதிச் சமூகமும் பக்கம்பக்கமாக நிலவியதால் அக்காலத்தில் ஆணாதிக்கத்தைப் பெண்கள்
மீது திணிப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
ஆகவே, அரச மகளிர்க்கான திருமணம் அரசர்களுக்குள்ளேயே உள்ள ஆடவர்களில்
பிடித்தவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையுடன் கூடியதாக அமைந்தது.
இவ்வாறு இந்தியத்
துணைக்கண்ட கட்டமைப்பு உருவாக்கத்தின் முதல்கட்டமாக இந்தச் சுயம்வரம்
அமைந்தது. இந்த அரசர்களுக்கு இடையே
தொடர்பு கொள்ளவும் இந்நாடுகளுக்கு இடையே ஒற்றாடவும் ஒருமொழி ஆட்சியாளர்களுக்குத்
தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியத்
துணைக் கண்டத்தில் நிலவிய பல்வேறு மொழிகளிலும் இருந்து எடுக்கப்பட்ட சொற்களைக்
கொண்டு கட்டப்பட்ட மொழியாகவே சமற்கிருதம் உருவாக்கப்பட்டது. எனவே தான் இது மக்கள் மொழியாக இல்லாமல்
அறிஞர்களின் மொழியாகவே இன்றும் உள்ளது.
இது அறிஞர்களின் மொழியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசு
விரும்பியதாலேயே பிராமணர்களுக்கு மட்டுமே இதைக் கற்க வாய்ப்பளிக்கும்படியாக தண்டனைச்
சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இதன் காரணமாகவே
பிராமணர்கள் அரசர்களுக்கு நெருக்கமானவர்களாகவும் சமூகத்தில் முதன்மைத் தன்மை
வாய்ந்தவர்களாகவும் அரசர்களால் ஏற்கப்பட்டனர்.
இதனால் தான் தமிழகத்து அரசர்களும் சமற்கிருதத்துக்கும் பிராமணர்களுக்கும்
முதன்மை அளிக்கத் தொடங்கினர். இவ்வாறு
ஏற்றம்பெற்ற சமற்கிருதமும் பிராமணர்களும் வழிபாட்டிலும் தங்கள் ஆதிக்கத்தைச்
செலுத்தினர். அரச ஆதரவோடுதான் இதைச் செய்ய
முடிந்தது. மக்கள் மொழிகள் பின்னுக்குத்
தள்ளப்பட்டன. வேள்விகள் சமற்கிருதமயப்படுத்தப்பட்டு
அரசர்களால் விரும்பிச் செய்யப்படுவதாயிற்று.
இந்த நிலையில்தான் வர்ணங்கள் இறுகித் தீண்டாமை சமூகத் தர்மமாகியது. பன்மொழி பேசும் ஒரு நாட்டில் ஒரு மொழி வைத்து
உலகாளும் போக்கு ஆதிக்கத் தன்மையை அதிகரிக்கவே உதவியது என்பதற்கு சமற்கிருதம் நல்ல
எடுத்துக்காட்டாகவே உள்ளது.
இன்றைய
இந்தி ஆட்சிமொழித் தகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
இதுவும் ஆதிக்கம் சார்ந்ததாகவே இயங்குகிறது. பன்மொழிப் பண்பாடுள்ள ஒரு நாட்டிற்கு ஏற்ற
ஆட்சிமொழிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதைக் கடந்தகால நிகழ்வுகளில் இருந்து
கற்றுக்கொள்ள வேண்டும். இது நிற்க.
ஆரியர் இந்தியாவிற்குள் நுழைந்தபோது அருவ
வழிபாட்டினராகவே வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர்கள் சிந்துவெளி மக்களிடம் இருந்து
பலவற்றைக் கற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
சிந்துவெளியில் தாந்திரீகத்துக்கு உரிய லிங்கமும் பெண் தெய்வ முத்திரைகளும்
ஐமுகக் கடவுளும் மும்முகக் கடவுளும் அம்மையப்பன் தோற்றமுடைய முத்திரையும் கூட
கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உருத்திரனும் சிந்துவெளியில் காணப்பட்ட கடவுளே. இங்கிருந்தே உருத்திரனை ஆரியர்கள் ஏற்றுக்
கொண்டிருந்திருக்கின்றனர்.
சிந்துவெளி நாகரிகம்
தமிழி எழுத்துவடிவம் தோன்றக் காரணமாயிருந்த எழுத்து வடிவத்தைக்
கொண்டிருந்தது. மேலும் அவர்களது எழுத்தமைதி
தொல்காப்பிய இலக்கண நெறியோடு ஒத்துப் போவதாய் உள்ளது என்றும் அறிஞர்கள்
கூறியுள்ளனர். விரிவாகத் தெரிந்துகொள்ளப்
பூரணச்சந்திர ஜீவா அவர்கள் எழுதியுள்ள ‘சிந்துவெளியில் முந்துதமிழ்’ எனும் நூலுள்
பரக்கக்காணலாம்.
எனவே
சிந்துவெளி நாகரிகம் தமிழ் நாகரிகம் என்றுணலாம்.
தமிழ் நாகரிகத்திலிருந்து உருத்திரனை பெற்றதைப்போலவே வேள்வித்தூணையும்
கூடப் பெற்றுக் கொண்டிருக்கலாம். இதனாலேயே
வேள்வி ஆரியர்க்குரியது என்று கூறுவது ஏற்கத் தக்கதாய் இல்லை. வேள்வித் தூண் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள
குணா அவர்களது தொல்காப்பியத்தின் காலம் எனும் நூலைக் காணவும். வேள்வித் தூணை யூபம் என்று சமற்கிருதச்
சொல்லால் குறித்துள்ளதாலேயே யூபம் ஆரியர்க்கு உரியது என்றாகாது. ஆரியச்சொற்கள் பெருவாரியாக வேதங்களின் வழியாகச்
சமற்கிருதத்துக்குள் வந்திருக்கலாம்.
ஆனால் சமற்கிருதம் ஆரிய மொழியாக இருக்கவியலாது. ஆரியமொழி மக்கள் மொழியாக இருந்து மறைந்துவிட்ட
மொழியாகும். இவ்வாறுதான் பாவாணர்
கருதுகிறார்.
‘மந்திரமரபின் தெய்வம் பேணி
மெய்யூர் அமைச்சியல் மையூர்க்கிழானை
புரையறு கேள்வி புரோசு மயக்கி’
(பதிற்றுப்பத்து
- 9ஆம் பத்து)
என்னும் வரிகள் மையூர்க்கிழான் என்னும்
அமைச்சன் நான்மறையைப் பிழையறக் கற்ற ஆசானை விடவும் திறம்படக் கற்றவனாக
அறிவிக்கின்றன. நான்மறை ஆரிய வேதங்களாகக்
கருதப்படும் இருக்கு, யசூர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களாக
இருந்திருக்குமானால் பிராமணன் அல்லாத மையூர்க்கிழான் அக்காலத்தில் கற்றிருந்து
இருக்க முடியுமா? முடியாது. எனவே நான்மறை தமிழ்மறை என்பது தெளிவாகும். எனவே,
‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செரகுத்து உண்ணாமை நன்று’
என்று வள்ளுவர் எழுதியிருப்பதால் வள்ளுவர்
வேள்வி எதிர்ப்பாளர் என்பது துலங்கும்.
அதே நேரத்தில் அவர் மறையையும் போற்றியுள்ளார் என்பதை முன்பே
காட்டியுள்ளோம். சமயநூல் ஆறும்
வள்ளுவத்துள் வந்துள்ளதாக வள்ளுவ மாலைச் செய்யுளில் களத்தூர்க்கிழார் கூறுவதுபோல்
அதில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
சிலர்
கௌணியன் விஷ்ணுதாயனை விண்ணந்தாயனாகிவிட்டதாகக் கூறுவர். இது தவறு.
தமிழ்ப்பார்ப்பானாகிய விண்ணந்தாயனை தமிழ்மறை மறுப்பாளர்கள் பிராமணனாக்கிக்
காட்டவே அவ்வாறு கூறிவருகின்றனர். கௌணிய கோத்திரம் ஆரியக்கோத்திரம் அன்று,
கௌண்டிண்ய கோத்திரமே ஆரியக்கோத்திரம் என்கின்றனர். கௌண்டியன்ய கோத்திரமே கௌணியக் கோத்திரமாயிற்று
என்போர் வேதாங்கத்தில் மூக்குக்கு வரும் திக்கையில் தேர்ச்சி பெற்றோர் கோத்திரப்
பெயரை மருவி வரும்படி வழங்குவரோ? என்ன
விடைசொல்ல முடியும்? முடியாது. எனவே
கௌணியக்கோத்திரம் என்பது மருவி வந்த பெயரன்று என்று புரிந்து கொள்ளலாம்.
மேலும்
இன்று கௌணியர்கள் குருக்கள்களாகவும் மடைப்பள்ளியில் பணிபுரிவோராகவும் உள்ளனர்.
இந்தக் கௌணியர்களுக்கு அக்னி கோத்திரிகளாகத் தங்களை அறிவித்துக் கொண்ட பிராமணர்கள்
பெண் கொடுப்பதும் இல்லை. அவர்களிடமிருந்து
பெண் எடுப்பதுமில்லை. இன்றும்
அக்கிரகாரத்திலுள்ள சிவன் கோயில்களில் இந்தக் கௌணியக் குருக்கள்களே வழிபாடு
செய்விக்கின்றனர். பிராமணர்கள் யாரும்
கருவறைக்குள் செல்லமுடியாது. இதனால் இந்த
வழக்கம் திணைச் சமூகத்திலேயே உருவாகி இருந்திருக்க வேண்டும்.
எனவே
திருஞானசம்பந்தன் தன்னைக் கௌணியன் என்று குறித்துக் கொள்வதும் நான்மறையை ஏற்றிப்
போற்றுவதும் தான் பிராமணனாக மாறவில்லை என்று அறிவித்துக் கொள்ளவே என்று
அழுத்தமாகக் கூறலாம். இதையெல்லாம்
மனங்கொண்டே பிரமதேய அதிபர் சிவபாத இருதயருக்கு அடுத்தபடியாக ஞானசம்பந்தனை
அர்ச்சகராக்கத் திட்டமிடுவதாகத் தாண்டவபுரத்துள் கொண்டு வந்துள்ளார். இதற்காகவே மிக நீண்ட முன்னுரையையும் புதினத்துக்கு
வழங்கித் தமிழக வரலாற்றுக்கு ஓரளவு உதவியுள்ளார்.
இனி நாம் புதினத்துக்குள் புகுவோம்.
தாண்டவபுரம்
புதினத்தில் ஞானசம்பந்தனின் பெரியப்பாவாக வரும் சிவநாத வைபாடியார், ஒரு கற்பனைப்
படைப்பு என்று தோன்றும். ஆனால் உற்று
நோக்கினால் புதினத்தில் வரும் ஞானசம்பந்தனில் கொண்டு வரப்படாத அவனது ஆளுமைகளே
சிவநாத வைபாடியாராக வடிவமைக்கப்பட்டுள்ளதைப் புரிந்துகொள்ள முடியும். திருஞானசம்பந்தன் இல்லாமல் சிவநாதவைபாடியாரால்
தமது குறிக்கோளை அடைந்திருக்க முடியாது.
அதேபோல சிவநாதவைபாடியார் இல்லாமல் ஞானசம்பந்தனால் தனது குறிக்கோளை எட்டிப்பிடித்திருக்கவே
முடியாது. ஆகவே, ஞானசம்பந்தனின் ஆளுமைகள்
இரண்டாகப் பகுக்கப்பட்டு ஒரு பகுதி ஞானசம்பந்தனாகவும் மறுபகுதி சிவநாத
வைபாடியாராகவும் படைக்கப்பட்டுள்ளதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு ஏன் படைக்கப்படவேண்டியிருந்தது?
ஆதிசங்கரன்
தான் இயற்றிய சௌந்தரிய லகரியில் ஞானசம்பந்தன் மலைமகளிடம் ஞானப்பால் அருந்திக்
குழந்தைப் பருவத்திலேயே பெரும்பெரும் புலவர்களாலும், புகழப்படும் புலமை உள்ளவனாக
உள்ளான் என்று குறிப்பிட்டுள்ளார். அதை
அப்படியே சேக்கிழாரும் பயன்படுத்திக் கொண்டு பெரிய புராணத்தில் ஞானசம்பந்தன்
புராணத்தை இயற்றிவிட்டார். ஞானசம்பந்தனின்
தெய்வத்தன்மையை மேலும்மேலும் மிகைப்படுத்திக் காட்டப் பல்வேறு கற்பனை நிகழ்வுகளை
அதனுள் உருவாக்கியுள்ளார். புராணம்
என்றால் பழங்கதை என்று பொருளாகும். கடவுளை
நிலைப்படுத்தவும் மக்கள் மனத்தில் கடவுள் தொடர்பான மலைப்புடன் கூடிய மதிப்பை
உண்டாக்கவும் இந்தப் பழங்கதைகள் பயன்பட்டுள்ளன.
எனவே சேக்கிழாரின் பெரியபுராணம் இதற்கு விதிவிலக்குக் கிடையாது. அதனால் ஞானசம்பந்தன் கடவுள் தன்மை வாய்ந்தவன். ஆகவே அவன் அத்துணை ஆளுமை உடையவனாக இருந்தான்
என்று புராணம் படைக்கப்பட்டது.
ஞானசம்பந்தனின்
கடவுள்தன்மையை அப்படியே புதினத்தில் கொண்டு வருவது வரலாற்றுக்குப் புறம்பாக
அமையும். ஏனெனில் புதினம் நவீன
காலத்துக்கு உரியது. அறிவியலுக்குப்
புறம்பான செய்திகளைப் புறக்கணிக்கும் உரிமை புதினத்துக்கு உண்டு. எனவே ஞானசம்பந்தனைக் தாண்டவபுரம் மனிதனாக்கி காட்டியுள்ளது. அதன் முதல் கட்டமாகவே ஞானசம்பந்தனிடம் குவிந்து
கிடந்த ஆளுமைகள் இரு கூறாகப் பகுக்கப்பட்டு சிவநாத வைபாடியாரும் ஞானசம்பந்தனுமாகப்
படைக்கப்பட்டுள்ளனர்.
சிவநாத
வைபாடியார் அகவை முதிர்ந்த பிரம்மச்சாரியாகப் படைக்கப்பட்டுள்ளார். சைவம் மும்மலங்களாகிய ஆணவம், கண்மம், மாயை
ஆகியவற்றை அறுப்பதன் மூலம் வீடுபெற முடியும் என நம்புகிறது. பதியாகிய கடவுளை பாசமாகிய மும்மலங்களை
அறுப்பதன்மூலம் கடவுளால் படைக்கப்படாத ஆன்மா கடவுளைச் சரணடைந்து விடுகிறது. இதன்மூலம் சாதி தீண்டாமை ஆகியவையும்
அறுபட்டுவிடும் என்பது சைவக் கோட்பாடு.
சைவத்தின் இருமையக் கொள்கையைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.
இல்லற வாழ்க்கையை ஏற்றுக்கொண்டுள்ள சைவம் ஒரே பிறவியில் வீடு
அடைந்துவிடமுடியும் என நம்பவில்லை. எனவே
பல பிறவிகளை எடுக்க வேண்டியிருக்கிறது என நம்புகிறது. ஆதனால் பிறவிதோறும் அழியக்கூடிய பருவுடலில்
(பூதவுடல்) பிறவி அறுபடும்வரை அழியாமல் இருக்கக்கூடிய நுண்ணுடம்பும் கடவுளால்
படைக்கப்படாத ஆன்மா (உயிர்) நுண்ணுடம்பிலும் உறைவதாகக் கருதப்படுகிறது. நுண்ணுடம்பும் அழிந்தபின் ஆன்மா இறைவனைச்
சரணடைவதாக உள்ளது.
அவ்வாறானால்
நுண்ணுடம்பை ஆன்மா ஏற்பதற்கு இறைவனிலிருந்து பிரிந்து வருவதாகச் சைவம்
கூறவில்லை. அவ்வாறானால் ஆன்மா என்பது
இயற்கையே அருவமாற்றமாகப் படைக்கப்பட்டு இறைவனில் இரண்டறக் கலப்பதாகக்
கொள்ளப்பட்டுள்ளது. இக்கருத்து இயற்கைவாதிகளாகிய
பூதவாதிகளிடம் இருந்து சைவம் விலகிவந்த புள்ளியைப் புரிந்துகொள்ள உதவுவதாகவுள்ளது. திருமூலர் நந்தி என்று குறிப்பிடுவதும்
ஆன்மாவைத்தான். எனவே தாய்வழிச் சமூகத்தின்
கடைக்கட்டத்தின் இறுதியில் பசுவாக இருந்த ஆன்மா தந்தை வழிச் சமூகத்தில் நந்தியாக
உருமாறி இருந்திருக்க வேண்டும். சிவன்
தோன்றியபின் சைவம் சிவனோடு இணைந்திருக்க வேண்டும்.
சைவம்
இல்லறத்தை ஏற்றிப்போற்றினாலும் மடங்கள் தோன்றிய பின்னர் அதன் தலைவர்கள்
பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதாகவே சொல்லப்படுகிறது. எனவே வைபாடியார் பிரம்மச்சாரியாகக்
காட்டப்பட்டுள்ளார். திருஞானசம்பந்தர்
புராணமும் ஞானசம்பந்தனைத் திருமணத்தன்று திருமணம் நிகழ்வதற்கு முன்பாகவே
கொன்றுவிடுகிறது.
எனவே திருஞானசம்பந்தன்
பிரம்மச்சாரி இல்லை என்று சொல்லமுடியாத நிலையை உருவாக்கி வைத்துள்ளது
புராணம். இதனாலும் வைபாடியார்
பிரம்மச்சாரியாகப் படைக்கப்பட்டிருக்கக் கூடும்.
வைபாடியார் தேர்ந்த அரசியல் அணுகுமுறைகளைக் கையாண்டு சோழச் சிற்றரசோடும்
ஒற்றர்களோடும் பாண்டிமாதேவியோடும் தொடர்புகளை உருவாக்கி ஞானசம்பந்தனின் சைவம்
பரப்பும் இறைப்பற்று இயக்கத்துக்கு வாகுவழி செய்து கொடுக்கிறார்.
மேலும் அவர்
துண்ணூத்து சாமியார் என்று மக்களால் அழைக்கப்படுவதாகக் காட்டப்பட்டுள்ளார். மூலிகையிலிருந்து பொடிகளைத் தயாரித்துத்
திருநீற்றில் கலந்து கொடுப்பதன் மூலம் நோய்தணிதல் மக்களிடம் கூடிவந்ததால் அவருக்கு
அப்பெயர் தோன்றியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திருநீற்று மருத்துவத்துக்கு மூலமான மூலிகை மருத்துவம் தாந்திரீகம்
மற்றும் மாந்திரீகக் காலங்களைக் கடந்து வளர்ந்து வந்துள்ளது. அதனால் தான் ஞானசம்பந்தன் கூண்பாண்டியனது
நோயைக் குணப்படுத்த வைபாடியார் கொடுத்து வைத்திருந்த திருநீற்றைப் பயன்படுத்துவதாக
வருகிறது. அப்போதுதான் ஞானசம்பந்தன்
‘மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு;
தந்திரமாவது நீறு; துதிக்கப்படுவது நீறு’
என்று பாடுவதாக வருகிறது. இதனால் சைவம் இயற்கைவாதமாக இருந்த தாந்திரீகத்திலிருந்தும்
ஐம்பூதவாத (உலகாயத) த்திலிருந்தும் மாந்திரீகத்திலிருந்தும் சமூக மாறுதலுக்கேற்ப
வளர்ந்திருப்பதைப் புரிந்து கொள்ளும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே கடவுள் அருள் என்பது விலக்கப்பட்டுள்ளதை
எளிதாகவே புரிந்துகொள்ள முடியும்.
வைபாடியாரின் தேர்ந்த அரசியல் அறிவும் மெய்யியல் அறிவும் தேர்ந்த சித்த
மருத்துவ நுட்பமும் அகவை முதிர்ச்சிக்கு உரியவை.
எனவே வைபாடியார் முதியவராகக் காட்டப்பட்டுள்ளார்.
மேலும்
தாந்திரிகம் திணைச் சமூகத்தின் தொடக்கக் காலத்திலும் மாந்திரீகம் திணைச்
சமூகத்தின் இடைப்பகுதியிலிருந்து இறுதிப்பகுதி வரையிலும் நிலவியவையாகும். இந்தவுணர்வு ஞானசம்பந்தனுடைய ஆழ்மனத்துள்
வீழ்படிவாக இருந்துள்ளதை உணரும்படி ‘மந்திரமாவது நீறு’ பாடல் புதினத்தில்
பயன்படுத்தப்பட்டுள்ளது. ஞானசம்பந்தனை
அவனது ஆளுமைகளின் குவியலுடன் காட்டியிருந்தால் அவனை அவைகள் மலைப்பூட்டுபவனாகக்
காட்டியிருந்திருக்கும். அந்தநிலையில்
அவன் கடவுள் அருள்பெற்றவனாகவே மக்களால் மதிக்கப்படுவான். அதை உடைக்கவே சோலை அவர்கள் ஞானசம்பந்தனை
உடைத்து வைபாடியாராகவும் ஞானசம்பந்தனாகவும் படைக்கவேண்டியதாகிவிட்டது என்று
தோன்றுகிறது.
இனி,
ஞானப்பால் அருந்தாத ஞானசம்பந்தனைப் புதினத்துள் சந்திக்கமுடிகிறது. எனவே ஞானசம்பந்தன் கல்வி முதிர்ச்சி
அடையவேண்டுமானால் குருகுலம் பயின்றாக வேண்டும்.
அதற்குரிய கால அவகாசம் தேவை. தமிழக
வரலாற்றையும் குருமூலமே கற்றறிந்திருக்க வேண்டும். எனவே அவன் குருகுலம் முடித்து ஏறத்தாழ
பதினெட்டு ஆண்டு அகவை உடைய இளைஞானவே வைபாடியாரிடம் மேலும் சில ஆண்டுகள்
தத்துவஞானப்பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகப் புதினம் கூறுகிறது. ஆதலால் புராணப்படியான ஞானசம்பந்தன் மூன்றாம்
அகவையிலேயே மலைமகளின் ஞானப்பாலுண்டு பாடினான் என்பது அடிப்பட்டுப் போய்விடுகிறது.
வைபாடியாரும்
சாதிவேறுபாடு பாராது மருத்துவம் புரிகிறார்.
ஞானசம்பந்தனும் சாதிவேறுபாடு கருதாது தாழ்த்தப்பட்டவராகக் கருதப்பட்ட
திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவருடைய துணைவியாரையும் தனது இறைப்பற்றுப்
பயணத்தின்போது கூடவே அழைத்துப்போவதாகவும் வயல்வெளியில் வேலை செய்து
கொண்டிருப்போரிடம் தீண்டாமை உணர்வின்றி அளவளாவி வருவதையும் புதினத்துள்
பார்க்கமுடிகிறது. திணைச்சமூகத்தின்
பாதிப்பால்தான் சாதிச்சமூகத்தில் இவ்வெழுச்சி தோன்றி இருந்திருக்க முடியும்.
சைவப்பதிகள்
தோறும் சென்று இறைப்பற்றுப் பாடல்களைப் பாடி மக்களிடம் சைவசமயத்தைப் பரப்பும்
வேளையில் மரைக்காட்டிலிருந்து மதுரை புறப்படும் பொழுது ஞானசம்பந்தனை அந்தணர்கள்
நேரம் சரியில்லை; கிரகநிலை சரியில்லை
என்றெல்லாம் கூறித் தடுத்த போது ஞானசம்பந்தன் பாடிய பதிகம்தான் ‘கோளறு
பதிகம்’ தொடக்கமே ‘நாளென் செய்யும், கோள் என் செய்யும்’ என்பதுதான். திருக்குறளில்
‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்’
எனும் வள்ளுவர் கூற்றை நமக்கு நினைவூட்டுவதாகக்
கோளறு பதிகம் ஞானசம்பந்தனால் பாடப்பட்டுள்ளது.
இதைத் திணைச்சமூகத்திலிருந்து பெறப்பட்ட விழுமியமாகவே
பார்க்கவேண்டும். பூதவாதத்தின் தாக்கம்
இது.
திருமறைக்காட்டில்
திருநாவுக்கரசர் தாழ்திறக்கப்பாடினாலும் சோழச்சிற்றரசின் படைப்புகளும் பாண்டியப்
படைத்தளபதியின் வழிகாட்டலும் பாண்டிமாதேவியின் உதவியும் ஆக எல்லாமும் சேர்ந்தே
பிராமணியத்தை வீழ்த்திக் கோயிலின் தாழைத்திறக்க முடிந்ததாகப்
புதினத்துள்வந்துள்ளது. பிராமணர்கள்
வீழ்த்தப்பட்ட பின்னர் கதவை மூட ஞானசம்பந்தர் ஒரு பாடல் பாடினாலே போதும்
முடிவிட்டார்கள். இதில் மனிதசக்தியே
வென்றுள்ளது. கடவுள் அருளன்று.
நனிப்பள்ளியில்
மாமன் மகள் கண்ணில் படமாட்டாளா என்று தேடுவதும் கண்டதும் மகிழ்வதும் இரவு கோயிலில்
படுத்துறங்கும் போது அவளைப்பற்றிக் கனவு காண்பதும் போன்ற நிகழ்வுகள் ஞானசம்பந்தன்
மனிதத்தன்மை பொருந்தியவனே அல்லாமல் இறையருள் பெற்றவனில்லை என்றுணர்த்துவதாகும்.
பெற்றோர்
விருப்பப்படிச் சொக்கியை மணக்க முன்வருவதற்கு முன்பு வைபாடியார்க்கும்
ஞானசம்பந்தனுக்கும் இடையே நிகழும் உரையாடல் ஞானசம்பந்தனின் மனப்போராட்டத்தைக்
காட்டுவதோடு தீர்வுக்கு வரவும் உதவுகிறது.
ஆடல்மகள்
மனோண்மணியை அவளுடைய தமையன் கொன்றையாளன் மூலம் ஞானசம்பந்தன் அடைந்து
உறவுயிர்க்கிறான். இதில் கொன்றையாளன்
திணைச் சமூகத்துக்கு உரிய ‘தமராக’ வருகிறான்.
மேலும் மதுரையில் ஞானசம்பந்தன் உருவாக்கிய சைவமடத்தின் தலைவியாக மனோன்மணி
அமர்த்தப்படுகிறாள். திணைச்சமூகத்தில்
நிலவிய பெண் சமத்துவம் திருஞானசம்பந்தனால் பேணப்பட்டுள்ளது. இது கற்பனை நிகழ்வாக இருந்தாலும் பெண்
சமத்துவம் கோரப்படும் தற்காலத்துக்கும் பொருந்திவரும் நிகழ்வாகவே இது
அமைந்துள்ளது. ஞானசம்பந்தனின் கலை ஆளுமையை
வெளிப்படுத்தும் முறையிலேயே மனோன்மணி படைக்கப்பட்டுள்ளான்.
திருஞானசம்பந்தன்
தன்னைக் கலைஞானசம்பந்தன் என்றும் அழைத்துக் கொள்கிறான். மேலும் ‘ஓலோகமாதேச்சுரம்’ என்று அழைக்கப்பட்ட
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ‘நக்கனுடைய நாச்சியார்’ என்றழைக்கப்பட்ட
தலைக்கோலியாகிய தேவதாசிக்குத் ‘திருஞானசம்பந்த தலைக்கோலி’ என்று விருது
வழங்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டுச் செய்தி உள்ளது. ஞானசம்பந்தனின் கலை ஆளுமையை இக்கல்வெட்டு
மெய்ப்பிப்பதால் மனோன்மணி எனும் தேவதாசி அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டுத்
தமர்வழியாக ஞானசம்பந்தன் பெறுவது திணைச்சமூகத்தை நினைவுகூறும் படியாகவே
அமைந்துள்ளது.
இவ்வாறு
திணைச்சமூகத்தின் தாக்கம் தாண்டவபுரம் நாவலுள் வந்துள்ளதை உணர்ந்து மகிழலாம். அதே நேரத்தில் சாதிச்சமூகம் எனும் ஒருமையத்தையே
உயர்த்திப்பிடிப்பதால் வேதியத்தை அரசர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக
முதலிடத்திலும் தமிழ்ச்சைவத்தை இரண்டாவது இடத்திலும் வைத்துத் தமிழ்ச் சைவத்தை
வீழ்ச்சியடைய வைத்தனர். அதனால்தான்
திருமூலர் ‘போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்’ என்று பாடநேர்ந்தது. இதை மனங்கொண்டே சோலை அவர்கள் முன்னுரையில்
தமிழ்ச் சைவத்தின் வீழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இறுதியாகத்
திருமணத்தன்று நல்லூர் பெருமணத்துள் ஞானசம்பந்தனையும் சொக்கியையும் பிராமணர்கள்
சமணர்களோடு சேர்ந்து சதிசெய்து சமணர் மூலம் எரியூட்டி அழித்துவிட்டதாகப் புதினம்
முடிந்துள்ளது. சமணத்துக்கும்
சைவத்துக்குமான மோதல்போக்கால் இந்த முடிவு நேர்ந்துவிட்டதாகப் புதினத்துள் வருவது
ஏற்கத் தக்கதாகவே உள்ளது. இதனால்
ஞானசம்பந்தனும் சொக்கியும் சோதியில் கலத்தல் என்னும் புராணக் கருத்து அடிபட்டுப்
போய்விடுகிறது. புராணமாந்தனை
மனிதாயப்படுத்தியதில் சோலை சுந்தரபெருமாள் வெற்றியடைந்துள்ளார் என்றே தோன்றுகிறது.
(சாகித்ய அகாடமியும் தஞ்சைப் பல்கலைக்
கழகமும் இணைந்து 23. 24 / 08 / 2013 ஆகிய இரண்டு நாட்களில், ‘திணைகளின் எழுச்சி’ என்னும் பார்வையில் பத்து நாவல்களை முன் வைத்து
நடத்தியக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டக் கட்டுரை)
No comments:
Post a Comment