Thursday, 26 November 2015

தாண்டவபுரம் நாவல் இரண்டாம் பதிப்பின் முன்னுரை - சோலை சுந்தரபெருமாள்




தாண்டவபுரம் நாவல் இரண்டாம் பதிப்பின் முன்னுரை




இரண்டாம் பதிப்பின் முன்னுரை
மிழ் என்றால் துறை சார்ந்த அகப்பொருள் என்று சிறப்புப் பெயர் பெறும். இதனை மாணிக்கவாசகர், தன் திருக்கோவையார் என்னும் நூலினுள், “சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்துஎன் சிந்தையுள்ளும் / உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின் / துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ / இறைவா தடவரைத் தோட்கென்கொலாம் புகுந் தெய்தியதே” (பாடல் 20) இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார்.
சேக்கிழார், காரிநாயனார் புராணத்தில் காரிக்கோவை என்ற நூலை அகத்துறை விளக்கம் பெறுமாறு காரிநாயனார் எழுதினார். அதனை மூவேந்தரிடமும் எடுத்துச் சென்று படித்துக்காட்டி பரிசு பெற்று, அப்பொருள் கொண்டு சிவத்தொண்டு ஆற்றினார் என்று குறிப்பிடுகிறார். இதனால் தமிழும், அகவாழ்வும் சிவனடியார்களோடு பின்னிப்பிணைந்துள்ளன என்று தெளிவாகத் தெரியவரும்.
‘தமிழ் நெறி விளக்கம்’ என்னும் அகத்துறை இலக்கணம் ஒன்று உள்ளது. அது, ‘அன்பின் ஐந்திணை ஒழுக்கம்’ தமிழ்நெறி என்று வலியுறுத்துகிறது. இவ்வாறு தமிழ் என்றால் அகத்துறை என்ற சிறப்புப் பெயருக்கே உரியதாக அமைவதை உணரலாம்.
இதன் அடிப்படையிலேயே ஞானசம்பந்தர்  தமிழ் நெறியோடு தன்னை இணைத்துக் கொண்டதால் தன்னைத் தமிழாளன் என்றும் தமிழாகரன் என்றும் கலைஞானசம்பந்தன் என்றும் கூறிக் கொள்ள முடிந்தது. (இவ்விடத்தில் ஐந்திணைக்குரிய கடவுளின் இணைப்பாகவே சிவபெருமான் வடிவம் பெற்றிருக்கிறார் என்ற செய்தியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, சிவனும் தமிழோடு பொருந்தியக் கடவுள் ஆகிறார்)
ஞானசம்பந்தன் தன்னை தமிழுலகுக்கு வெளிப்படுத்திக் கொள்ளும் போது தற்புகழ்ச்சிக்காக கலைஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்ள வில்லை. ஆடலிலும் பாடலிலும் ஒருசேர தேர்ந்த கலைஞனாக உருபெற்று இருந்திருந்தார்.  அதனால் தான், தன்னை தமிழ்நெறியாளர் என்று அறிவித்துக் கொள்ள முடிந்தது.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தரின் அந்த ஆடல் சிற்பமே (பஞ்சலோகத்தில் ஆனது) அதற்கு சான்றாக வடித்து வைக்கப் பட்டிருக்கிறது. இன்றைக்கும் திருவாரூர் ‘புற்றிடம்கொண்டார்’ கோயிலில் உள்ள அருங்காட்சியகத்தில் ஆடல்கலை கொண்டிருக்கும் முத்திரையினை கொண்டு இருக்கிறது. சிற்பத்தில் உள்ள ஞானசம்பந்தரின் இடது கை முத்திரை ‘உஞ்சல்’ என்றும் வலது கை முத்திரை ‘உடுக்கை’ என்றும் ஆடல்கலையில் இன்றைக்கு ஈடுபாடு கொண்டு இருப்பவர்கள் சொல்லுகிறார்கள்.  இதனைப் போலவே பல்வேறு ஆடல் முத்திரைகளை கொண்ட ஆடல் சிற்பங்கள் சென்னை அருங்காட்சியகத்திலும், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும் இருக்கிறதாம்.



(ஆடல்வல்லான் ஞானசம்பந்தர் ஆடல் சிற்பம் – நிழற்படம்) – Gnanasambandar
ஏழுவகையான இசை - ஏழுவகைத் திணைப்பண்களில் இருந்து சிவபெருமான் ஆடிய ஏழு வகையான தாண்டவங்கள் தோன்றின என்கிறார்கள். அவரே இந்த ஏழுவகையான தாண்டவங்களை படைத்தார் என்றும் அவரே நூற்றெட்டு தாண்டவங்களாக வளர்த்தெடுத்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த அடிப்படையான தாண்டவங்களில் இருந்து காலம் காலமாக ஒவ்வொரு கலைஞனும் தன்னுடைய புனைவாற்றலுக்கு ஏற்ப விருத்தி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள் என அறிய முடிகிறது.   
திருஞானசம்பந்தரும் அப்படியான ஆடல்கலையில் வல்லவராக ஆடல்கலைஞர்களுள் சிறப்பிடம் பெற்றவராகப் போற்றப் பட்டு இருக்க வேண்டும். இந்தப் போற்றுதலுக்கு உரிய அந்தக் கலைஞனின் புனைவின் விருத்தியைச் சிற்பகலைஞன் வடித்து வைத்திருக்க வேண்டும். இச்சிற்பத்தில் - படத்தில் திருஞானசம்பந்தர் வெளிப்படுத்தும் கர்ணப்புனைவு ஊர்த்துவ தாண்டவத்தின் விருத்தியாக இருக்கலாம் என்று கொள்ள இடமிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.  
நிலவுடைமைச் சமூகக் கட்டுமானம் வளர்த்த தமிழோடும் தமிழ்மக்கள் பண்பாட்டோடும் தமிழ்மண்ணின் வரலாற்றோடும் நெருக்கமாகப் பின்னிப் பிணைக்கப்பட்டிருந்த தேவதாசிமரபுக்கு உட்பட்ட ஆடல்வல்லாள் ருத்திரதாசியான மனோன்மணி முற்றிலும் என்னுடைய புனைவுக்குட்பட்ட படைப்பே.
பரத்தையர் பிரிவை அனுமதித்திருக்கும் தொல்காப்பியம், ‘காமப்பகுதி கடவுளும் வரையார்’ என்று கூறுவதின் மூலம் பரத்தையர் சமூகம் – முழுமை அடைந்த நிலவுடைமைச் சமூகத்தில் தேவதாசி சமூகமாக உருமாறிய சமூகம் -  அப்போதே தமிழ்ச்சமூகத்தில் இடம் பெற்றுள்ளதையும் அவர்கள் கடவுளோடும் மனிதர்களோடும் உறவு கொண்டு இருந்ததையும் இலக்கணப்படுத்தியுள்ளது. ஆகையால் பரவையாரிடம் சுந்தரர் பொருட்டு சிவபெருமான் தூது போனதாகச் சொல்லப்படுவது தமிழின் மீது கொண்ட காதலாலேயே எனலாம். இவ்விடம் பரவையார் தேவதாசி மரபினள் என்பதை மறந்து விடக்கூடாது.  இது சிவபெருமானுக்கும் தெரிந்திருக்கும் அல்லவா?
சுந்தரர், தேவதாசிமரபில் பிறந்த பரவையிடம் உறவு வைத்துக் கொள்ளுவதை மிகவும் விரும்பினார்.  இதற்கு சிவபெருமான் ஏற்பு அளித்திருக்கிறார் என்றால் அது தமிழ்நெறிக்கும் சிவநெறிக்கும் முரண்பட்டது அல்ல என்று தான் பொருள். அப்படியான பண்புடைய, என்னுடையப் புனைவு பாத்திரமான மனோன்மணியை திருஞானசம்பந்தரோடு  பிணைக்கப்பட்ட உறவு எப்படி பொருத்தமானதாக இல்லை என்று சொல்ல முடியும்?
தேவதாசி மரபில் பிறந்த மனோன்மணி, தனக்கு கைவரப்பெற்ற ஆடல்கலையினைக் கொண்டு சிவபெருமானோடு ஐக்கியமாகி சிவபக்தியில் இழைந்தவளாக இருக்கிறாள். அத்தோடு இல்லாமல்  இம்மண்ணில் தமிழ்ச்சைவம் தழைக்க, தானே சிவப்பணி ஆற்ற வேண்டும் என்று விருப்பம் கொண்டவளாக இருந்திருக்கிறாள். அப்படியான இந்த மனோன்மணி என்னுடையப் படைப்பின் வளர்ச்சிப் போக்கில் அருளாளர் மனோன்மணியாகியிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிறைவாகப் பார்க்கும் போது தமிழ்ச்சைவம் சாதிக்கு எதிராகவும் வர்ணத்துக்கு எதிராகவும் போராடியது என்பதை படைப்பின் பாத்திரர்கள் மூலம் அறியமுடியும். இன்றைக்கும் சிவாலயங்களில் வழிபாடு நடத்தி வைக்கும் சிவாச்சாரிகள் ஒரு சாதியைச் சார்ந்தவர்களாக இல்லை.
மனோன்மணியானவள் இந்தப்படைப்புக்கு மையப்புள்ளியாக இல்லாவிட்டாலும் இவளின்றி ‘படைப்பு’ நிறைவை எட்டவே முடியாது. படைப்பின் இயக்கத்தின் உள்ளே மனோன்மணியாவள் ஞானசம்பந்தரிடம் சிவஅருள் பெற்று சிவத்தொண்டு ஆற்றியதோடு நின்றுவிடவில்லை. தமிழ்ச்சைவத்திற்கு ஒரு வாரிசை ஈன்ரெடுத்துத் தந்திருக்கிறார். திருஞானசம்பந்தனுக்குப் பிறகாகிய  தமிழ்சைவத்தின் வரலாற்றின் உருவமாக ‘வாரிசு’ புனையப்பட்டுள்ளது என்பதனை வாசகர்கள் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது.
தமிழ்சைவர்களின் மேற்கண்ட கருத்துக்கு எதிராக, நவீன பிராமணியத்தை வளர்த்தெடுக்க விரும்பும் பழைய பிராமணியத்தின் வாரிசுகள் மனோன்மணியின் பாத்திரப்படைப்பு, திருஞானசம்பந்தரை கொச்சைப்படுத்தி இழிவு படுத்தியிருப்பதாக படைப்பைத் தரம் தாழ்த்திப் பேசினார்கள். இது எவ்வகையில் பொருந்தும்? என்று தமிழ்மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
வரலாற்று நெடுகிலும் காலம்தோறும் பிராமணியம், மற்றவர்களை ஒடுக்கிப்போடுவதிலும் அழித்து ஒழிக்கும் நடவடிக்கைககளிலும் திட்டமிட்டுச் செய்து வந்திருக்கிறது. அதன் போக்கையும் அவர்களுக்கென்று மறைமுகமாக இயங்கிக் கொண்டு இருந்த அமைப்புகளையும் கொண்டு சமூகத்தை எப்படி அடக்கி ஒடுக்கினார்கள் என்பதையும் படைப்பு வெளிப்படுத்தியிருக்கிறது.  அவர்கள் கை கொண்டிருந்தச் சாத்திர சம்பிராதாயத் தந்திர உபாயங்களை எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பது ஊடும்பாவுமாக படைப்பினுள் அம்பலப்பட்டுக் கிடக்கின்றன.  நவீன பிராமணியவாதிகளின் வாரிசுகளுக்கு ‘திருடனுக்கு தேள் கொட்டிய’ கதையாக ஆயிற்று.
இவை தான் தாண்டவபுரம் நாவலைத் தரம் தாழ்த்திப் பேசுவதற்குக் காரணம். நாவல் கமுக்கமாக வெளிப்படுத்துபவற்றை அவர்களால் அப்படியே வெளிப்படையாகப் பேசிட முடியவில்லை. அப்படியே பேசினால், தங்கள் பக்கம் தமிழ்மக்களைத் திரட்டி வைத்துக் கொள்ள  முடியாது என்பது அவர்களுக்கு தெரிந்த கதைதானே? அதனால் தான் சிவத்தொண்டரான அருளாளர் மனோன்மணியை இழிவு படுத்தினார்கள்.
ந்தப் படைப்பு, அச்சுஅசலான வரலாற்றுப் புத்தகமுமல்ல. திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் நூலுமில்லை. கூடவே, தமிழ்ச்சைவம் எழுச்சிப் பெற்ற வரலாற்றுப் பின்னிணைப்பில் புனையப்பட்ட நாவல் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
திருஞானசம்பந்தர் இம்மண்ணில் தோன்றிய மாமனிதர். மகத்தான கலைஞன். இவர் எழுதியிருக்கும் தேவாராமே இதற்குச் சான்று. வணிகர்களையும் சமஸ்கிருதத்தையும் முன்னிறுத்தி வைதீகஆட்சி பலப்படுத்தப்பட்டு இருந்தது இதற்கு எதிராக வேளாண்மக்களை ஒன்றுத்திரட்டி, தமிழையும் தமிழ்ச்சைவத்தையும் உயர்த்திப் பிடித்து ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று போராடியவர். தேர்ந்த கலைஞனாக இருந்த அவர் நடத்தியப் போராட்டத்தில் கலை, இலக்கியத்தை ஊடும்பாவுமாக பின்னிப்பிணைத்தார் என்பதை யாரும் மறுப்பதற்கு இடமில்லை. எனக்கும் இவற்றில் நிறைவான முழு உடன்பாடு உண்டு.
திருஞானசம்பந்தர் ஆடல், பாடல் கலையில் தேர்ந்த கலைஞனாக இல்லாவிட்டால் அவர் பெயரிலேயே அக்காலச் சமூகத்தில் ‘திருஞானசம்பந்த தலைகோலி’ என்ற பட்டம் உருவாக்கப்பட்டு இருக்க முடியுமா? ஆனால், உருவாக்கப்பட்டு இருக்கிறதே. அதோடு மட்டுமல்ல அக்காலத்தில் சிறந்து விளங்கிய ஆடல்மகளிருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறதே. இப்பட்டத்தை, ‘ஒலோக மாதேச்சுரம்’ என்று அழைக்கப்பட்ட ஐயாரப்பர் கோயிலில், ‘நக்கன் உடைய நாச்சியார்’ என்ற தேவதாசிமரபில் பிறந்த ஆடல்மகளிருக்கு வழங்கப்பட்டுயிருக்கிறதாமே?
எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தக் கல்வெட்டு ஒன்று, ‘திருஞானசம்பந்த தலைகோலி’ பட்டம் வழங்கியமைக்கு இன்றைக்கும் சான்றாக இருக்கிறது. இதனை ஆய்வு செய்து தன் ஆய்வின் முடிவை வெளியிட்டு இருப்பவர் மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் என்பதும் கவனத்துக்கு உரியது.
க்தியியக்காலச் சமூகப் பண்பாட்டு அம்சங்களை உள்வாங்கியே ‘தாண்டவபுரம்’ படைப்பாகியிருக்கிறது. விரிந்து பரந்து பட்ட அக்காலப் பல்லவப் பேரரசில் சமணமதத்தின் ஆட்சியும் அதன் அதிகாரப் போக்கும் மேலோங்கியிருந்தது. கூடவே, சமணப் பள்ளிகளே நிலவுடைமை அமைப்பாக மாறியிருந்தது.
பல்லவ பேரரசின் ஒண்டு குடியாக  இருந்த சோழச்சிற்றரசு – பழையாறை தனக்கே உரியதான போக்கில் தமிழையும் சிவத்தையும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை கமுக்கமாகச் செய்து வந்திருக்கிறது. இந்த ஏற்பாட்டில் தங்களையும் இணைத்துக் கொண்டவர்களே திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும். இவர்களே மக்கள் இயக்கமான பக்தி இயக்கத்திற்குத் தலைமை தாங்கியிருக்கிறார்கள்
பிற்காலத்தில் விரிவான  சோழப்பேரரசை நிறுவிய இராஜராஜனின் அரசாட்சி தொடங்கி பிராமணியத்தையும் சமஸ்கிருதத்தையும் உயர்த்திப் பிடித்தார்கள். தமிழையும் தமிழ்ச் சைவத்தையும் அவர்களால் முற்றாக நிராகரிக்க முடியாமல் இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இது வெளிப்படையாகத் தெரியாமல் இருக்க செல்லரித்துக் கிடந்த தேவாரத்தை  நம்பியாண்டார் நம்பி மூலம் மீட்டு எடுக்க உதவியதோடில்லாமல் திருஞானசம்பந்தர் காலத்து தமிழ் இசைக்குறிப்புகளையும் இணைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ்ச்சைவத்திற்கும் பிராமணியத்திற்கும் உள்ள முரண்பாட்டை வேளாண் உற்பத்தியில் இருந்த மக்கள், வணிகர்களால் சுரண்டப்பட்ட  வரலாற்றுப் பின்னணியில் படைப்பாக்க வேண்டும் என்று எனக்கு இருந்த உந்துதலே, ‘தாண்டவபுரம்’ நாவல் வடிவம் கொள்ளச் செய்திருந்தது.  
“…தேவாரம் – சம்பந்தர் – சமணர் இவர்தம் போராட்டம் எல்லாம் அக்கால சமுதாயத்தின் முரண்பாடுகளை எல்லாம் தெளிவாகக் காட்டும் கண்ணாடி! நம் முகத்தை நாம் பார்த்துக் கொள்ள கண்ணாடி வேண்டாமா? இந்தக் கண்ணடி தான் தேவாரம். அது நம்முடைய சொத்து, மரபு! மக்களின் மொழியில் வழிபாடு இருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக காட்டக் கூடிய மரபு, போராட்டத்தின் தொடர்ச்சியைக் காட்டும் மரபு அது தான் முற்போக்கு மரபு!” (சிகரம் .செந்தில்நாதன், சம்பந்தரும் சமணப் போராட்டமும், முற்போக்குத் தமிழ் மரபு சிறப்பு மலர், 2015, வெளியீடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)
இந்த தாண்டவபுரம் நாவல் 2011 இல் முதல் பதிப்பாக வெளிவந்தது. அடுத்து அடுத்து மறு அச்சாக்கம் பெற்று வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இலக்கியப் புனைவுகள்  இரண்டாம் பதிப்பை எட்டும் போது  பிழைத்திருத்தம் செய்வது உண்டு. படைப்பாளி மீண்டும் அந்தப்படைப்பினுள் நகாசு நுட்ப வேலைப்பாடுகளைச் செய்வதில்லை. இந்த தாண்டவபுரம் நாவலை இரண்டாம் பதிப்பு வெளியீடும் செய்யும் முன் நகாசு வேலைப்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவை எனக்கு இருந்தது.   அவ்விடத்தினை நிறைவு செய்திருக்கிறேன்.  அதனால் அறுபத்திரண்டாம் அத்தியாயத்தின் இறுதிப்பகுதி விரிவடைந்திருக்கிறது. இதன் மூலம் இந்தப்படைப்பு நிறைவெய்தியிருப்பதாக  படைப்பாளியாகிய எனக்கு மனநிறைவைத் தருகிறது.
-    சோலைசுந்தரபெருமாள்


No comments:

Post a Comment