Friday, 23 January 2015

தமிழ் மண்ணில் திருமணம் - முன்னுரை

‘திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்இந்த மக்கள் வழக்காறு, என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.  இதனை எளிதில் புறம் தள்ளிட முடியவில்லை.  இது,  ஆணும் பெண்ணும் நடத்திக் கொள்ளும் திருமணத்தைக் குறித்துச் சொல்லப்பட்டு இருப்பதாக என்னால் நம்ப முடியவில்லை. திருமணம் என்னும் பண்பாட்டு வாழ்வியலின்  தொடக்கம் குறித்தும், அதன் வளர்ச்சி, பலம் குறித்தும் தான் சொல்லப்பட்டு இருப்பதாக எனக்குத் தோன்றியது. இதுவே எனக்கு முதல் படிப்பினையாக அமைந்து போனது.
                திருமணம் செய்ய  வரன் தேடிப் போவோர்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அது போன்ற அனுபவம் உங்களுக்கு எப்படி வரும்? நீங்கள் எந்த உறவுமுறையை நெருக்கமாக வைத்திருக்கிறீர்கள்?” என் இளமைப் பருவம் முதல் இன்று வரை நட்பை சீராகக் கொண்டிருக்கும் நண்பர் இரா. ராஜகுமார் பேச்சு வாக்கில் கேட்டு விட்டார்.  எனக்கு கோபம் மூக்கில் வந்து இறங்கியது, என்னவோ உண்மை தான். இருந்தாலும், அவர் எழுப்பிய வினாவுக்கு விடை சொல்ல வழியில்லை. அப்போதைக்குக் கமுக்கமாகவே இருந்தேன்.
                அவர், வினா எழுப்பியதோடு நிறுத்தி விடவில்லை. “பெண் எடுப்பதும் கொடுப்பதும், நீங்க நினைத்துக் கொண்டு இருப்பது போல கிள்ளுக்கீரை இல்லை. பணத்தை எடுத்துக் கொண்டு போய்  புத்தகம் வாங்கி வருவது போலும் இல்லை என்பதை  இனி மேல், உங்களுக்கு அனுபவம் கற்றுக் கொடுத்தால் தான் பதத்துக்கு வருவீர்கள்என்று விருத்தியுரை சொல்லும் போதும் என்னால் வாய் திறக்க முடியவில்லை.
                அந்தக் காலத்தில பொண்ணு பாக்கப் பொறப்பட்டுட்டா  ரெண்டு சோடு தேய்ஞ்சி போயிடும்என்று என் தாத்தா சொல்லியது என் மனசில் வந்து நின்றது.
                சற்றைக்கெல்லாம், `இது பொதுப்புத்தியில் உள்ளவையாயிற்றே? நிலவுடைமைச் சமூக சிந்தனை அல்லவா இது?‘ என என் அறிவு மனம் விழித்துக் கொண்டு உணர்த்திற்று. இவர்  நிலவு டைமைச்  சமூகத்தின் ஒரு பிரதியாய் இருப்பவர்.  இவரிடம் பேசுவது கல்லில் நார் உரிப்பது போலத்தான். ஆனால், அதே நேரம் அவர் என் மீது  அலாதியான நட்பைக் கொண்டிருப்பவர். நான் இவரிடம் இது குறித்துப் பேசிட அப்போதைக்கு விருப்பம் கொள்ள வில்லை.
`அம்மா! அப்பா!’ என்று அழைக்கத் தொடங்கின காலத்தில் இருந்து அவர்கள் எருப்போட்டு வளர்த்து விட்ட சிந்தனையல்லவா அது? என் அறிவுத் தேடல், அதனைக் கவாத்து செய்து வைத்திருக்கிறதே தவிர, முற்றிலும் வேரோடு கெல்லி எறிந்து விட முடியவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
                எனக்குத் திருமணம் செய்து விடவேண்டும் என்று என்னை வளர்த்த சின்னம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டார்கள். `அது, அவர்கள் கடமை தானே? செய்யட்டும்என்று இருந்தேன்.
ஒரு நாள், `இவள் தான் உனக்கு வாக்கப்படப் போகிறவள். உன் அப்பாவின் உறவுக்காரி. அந்த உறவு விட்டுப் போய் விடக்கூடாதுன்னு பேசி முடித்துக்கொண்டு வந்து விட்டார்என்று சொல்லிச் சின்னதான கருப்பு வெள்ளைப் படத்தைக் காட்டினார்.
உங்களுக்குப் பிடிச்சிருந்தா சரி தான்என்று அந்தப் படத்தைக் கூடப் பார்க்காமல் என் முடிவைச் சொன்னதும் நான் அவர்களை, கௌரவப்படுத்தச் சொல்லுவதாகப் புரிந்து கொண்டார்கள். ஓரிரு நாளில் `திருமண உறுதிசெய்து எழுதிக் ( பாக்கு மாற்றி ) கொண்டு வந்து விட்டார்கள்.
என் அப்பாவின், விருப்பத்தை மறுத்துப் பேசும் தைரியத்தை அவர்கள் எனக்கு கொடுத்து வளர்க்கவில்லை என்பது தான் உண்மை.  `திருமணத்தை நான் விரும்பிடும் முறையில் நடத்திக் கொள்ள வேண்டும்என்ற உறுதிப்பாட்டில் மட்டும் இருந்தேன். என் அப்பாவிடம் அதனை, நேரில் பேசவும் அச்சம் கொண்டு இருந்தேன்.
`திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதுஎன்பதை முழுமையாக நம்பிக் கெண்டிருக்கும் என் அப்பாவின் மனசு உள்பட இந்தச் சமூகம் கரடு தட்டிக் கிடக்கிறது. இதன் மீது  ஒரு சிறு கீறலைக் கூடச் செய்து விட முடியாது என்று அது நாள் வரையிலும் என்னளவில் ஒதுங்கி இருந்து வாழக் கற்றுக் கொண்டு விட்டேன். 
`சாதிச்சனமே சாதித்துக் காட்டும். அதனை மீறி நடந்து விட்டால் ஒரு நாதி கூட வந்து எட்டிப் பார்க்காதுஎன்ற உறுதியான நம்பிக்கையோடு சாதிச்சமூக உறவு முறைகளோடு நெருக்கமாக இருந்தவர்கள் என் அம்மாவும் அப்பாவும். அக்கருதுகோள் என் மனதில் என்றைக்கும் சுத்தமாய் இருந்ததில்லை. என் மனதில் உறுதியாக இருந்தது , திராவிட இயக்கத் தத்துவம் ஒன்று மட்டும் தான்.
நான் திராவிட இயக்கப் பற்றாளனாக இருந்தாலும், அவர்கள் வழி நடத்திச் செய்து வைக்கும் திருமணச் சடங்குகளின் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட வில்லை.
                `என் அம்மாவும் அப்பாவும், `மலர் மாலையையும், தாலியையும்எடுத்துக் கொடுக்கத் தான் நான், திருமணம் செய்து கொள்ள வேண்டும்என்பதே என் விருப்பமாக இருந்தது.  இதை என் அப்பாவிடம் நேரில் சொல்லவும் அச்சமாக இருந்தது. காரணம், என் அப்பா வைதிகத்தின் மீது நம்பிக்கை உள்ள தீவிர சிவபக்தர். ஆனால், அவர் வழிபாட்டை நடத்தும் விதத்தில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இருக்காது.
அன்றாடங்காய்ச்சியாய் வாழ்ந்தவர், விடியலுக்கு முன்பே எழுந்து,  சிவன் கோயில் குளத்தில் நீராடி, வரும்போதே குளக்கரையில் உள்ள மலர்கள் சிலவற்றைப் பறித்து வந்து விடுவார். திருநீறைத் தரித்துக் கொண்டு பறித்து வந்த மலர்களை, சாமி மாடத்தில் வைத்து வணங்கி, சிவமந்திரங்களைச் சொல்லிக் கொள்வார்.
சூரியன் எழும்பும் போது அதன் முன் நின்று வழிபாடு நடத்துவார். இப்படியான பண்புகளைக் கொண்டவரிடம் என் தத்துவம் வேகாது. என்  மனம் எச்சரிக்கைச் செய்தது. இந்த எச்சரிக்கையை எதிராடுவது   போல   என்னுடைய  தாய்மாமா சம்பந்தம்பிள்ளை, என் மனதில் உட்கார்ந்திருந்தார்.
அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் போராளியாக இருந்தவர். மணலி கந்தசாமி, .கே.சுப்பையா போன்றவர்களுடன் உடன் நின்று களப்பணி ஆற்றியவர்.   பல முறை போராட்டங்களில் கலந்து கொண்டு  முறையாகக் கைது செய்யப்பட்டவர். அவர் சிறைப்பட்ட நாட்களைத் தொகுத்துப் பார்த்தால் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நாட்கள் கூடி நிற்கும்.  நான்கு முறை ஊராட்சி மன்றத்தலைவராக இருந்தார். நான்காவது முறை ஒருவர் பொறுப்புக்கு வரக்கூடாது என்ற தடையைக் கொண்டிருந்தது அந்தக் கட்சி. இருந்தாலும் அந்த தடையைத் தளர்த்தி நான்காவது முறை ஊராட்சி மன்றத் தலைவர் ஆனார். அந்த அளவுக்கு, கட்சியிடமும்  மக்களிடமும் செல்வாக்கு பெற்றிருந்தவர்.  என்னைப் புரிந்து கொண்டிருந்தவர்.
அப்படியானவருக்கு , அவர் நினைத்தபடி திருமணத்தை நடத்திக் கொள்ள குடும்பத்தினர் தடையாக இருந்திருக்கிறார்கள். அவர் தம்பிகளுக்குத் திருமணத்தை நடத்திய பின்னர் தான், அவர் விரும்பியபடி வைதிக மறுப்புத் திருமணத்தை நடத்திக் கொள்ளச் சம்மதித்திருக்கிறார்கள்.
அந்த மாமாவை வைத்து நான் மணம் கொள்ளும் முறையைப் பற்றி என் அப்பாவிடம் பேசி முடித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதற்குள் ஒரு சின்னக்காயை நகர்த்திப் பார்க்க விரும்பினேன். அதற்குப் பொருத்தமானவர் என் நண்பர் ராஜகுமாரே என்று முடிவு செய்தேன். காரணம், அவர் மீது என் அப்பாவுக்கு நம்பிக்கை உண்டு.
அவரைக்  கொண்டே   நான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் முறை பற்றிப்   பேசச் சொன்னோன். அவரும் பேசலாம் என்று என் அப்பாவிடம் பேச்சைத் தொடங்கி இருக்கிறார்.
 படரும் கொடியை நான் கை நீட்டி மடக்கிடக் கூடாது.  என் குடும்பத்திலேயே தத்திஉத்தி முதல் ஆளா வாத்தியாரா வந்திருக்கான். `சிவஅருள்அப்படித்தான் இருக்குன்னா அதில நான் தலையிட மாட்டேன். அவன் விருப்பப்படியே நடத்திக்கிட்டும். ஆனா, குடும்ப கௌரவம் ஒன்னு இருக்குன்னு சொல்லிடுங்க....”
 தேசிய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்டு செல்வாக்கு பெற்று பாராளுமன்ற உறுப்பினருமாக இருந்த,  என் அப்பாவுக்கு அண்ணன் உறவு முறையில் இருந்த,  வே. சாம்பசிவம்பிள்ளை அவர்களை முன் நிறுத்தி  நடத்திக் கொள்ளலாம் என்று அப்பா தன் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார்.
என் நண்பரை விட்டே மீண்டும் ஒரு முறை என் விருப்பத்தைப் பேசச் செய்தேன். அவர் மசியவில்லை.
“...நான் முன்னின்று என் மகனின் திருமணத்தை நடத்துவதும் அந்த அண்ணார் நடத்துவதும் என்அளவில் ஒன்று தான். அவர் நடத்தி வைப்பதால் சம்பந்தி வீட்டாரும் குறுக்கே  நிற்க மாட்டார்கள்என்று பச்சைக்கொடிக் காட்டினார். என் அப்பாவின் விருப்பப்படியே அவரை முன் வைத்தே, `எனக்கும் பத்மாவதிக்கும் திருமணம்இனிதே நடந்தேறியது.
என் அப்பா, எங்கள் திருமணத்திற்கு, சாத்திரம் சம்பிரதாயத்தோடு, சோதிடப் பொருத்தம் பார்த்தார்களா? இல்லையா? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எங்கள் சமூகத்தில் உறவுக்குள் கொடுத்து எடுத்தால் சம்பிரதாயம் எல்லாம் பார்ப்பது கிடையாது என்று மட்டும் அறிந்திருக்கிறேன்.
திருமணம் ஆன பின்னர் துணைவியாரின் உறவுகளோடு, என்னால் நெருக்கம் கொண்டு இருக்க முடியவில்லை. என் மனம் அவர்களோடு ஒண்டி நிற்க ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் பண்பாடு வேறு ஒன்றாக இருந்தது.
திருமண நாளில் என் மனைவியின் குடும்பத்தார், சிலரை அழைத்து வந்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். அவர்கள் மனிதப் பண்பு அற்றவர்கள். கிட்டத்தட்ட பெரும் பண்ணையார்களின் மனதையும் செயலையும் ஒத்து வாழ்பவர்கள். அவர்களை  மனிதனாக ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை.
எங்கள் இருவரின் அம்மா அப்பா ஆகியோரிடம் மட்டுமே வணங்கி ஆசி பெற விரும்புகிறேன். மற்றவர்களின் காலில் விழ முடியாதுஎன்று எடுத்தெறிந்து பேசி பிடிவாதம் பிடித்து விட்டேன். அவர்கள் பல வழிகளில் பேசிப் பார்த்தார்கள். நான் மசிய வில்லை.
என் பிடிவாதம் அவர்கள் மனதை உருக்காக மாற்றி விட்டது. அவர்களால் என்னை அடிபணிய வைக்க முடியவில்லை. கொஞ்ச நாள் கழித்து, “உங்களுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் தான் அதனால் தான் நீங்கள் இப்படி பிடிவாதக்காரராக இருக்கிறீர்கள்என்று என் மனைவி சொன்னாள். `அது என்னா ஏழாம் பொருத்தம்?’ அதன் பொருளை, இன்றைய நாள் வரையிலும் நான் என் மனைவி யிடம் கேட்டு அறிந்து கொள்ளவில்லை. அப்படியான விருப்பமும் எனக்கு எழவில்லை. இன்றைய நாளில் என் மைத்துனர் ஒருவர் மட்டும் ஓரளவுக்கு என்னைப் புரிந்து கொண்டு நட்புடன் இருக்கிறார்.
`பழந்தமிழர் வாழ்வும், அவர்கள் பண்பாடும் உன்னதமானவைஎன்று திராவிட இயக்கத்தவர்கள் அக்காலங்களில் பரப்பியிருந்தார்கள். சங்க இலக்கியங்களோடு, காப்பியங்களையும் காட்டி என்னைப் போன்றவர்களை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் வாய்ஜாலம் மயக்கிப் போட்டு இருந்தது, என்னவோ உண்மை தான். அவர்கள் விதந்தோதிய சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, அகநானூறு போன்ற நூல்களுக்கு புலியூர் கேசிகன் எழுதிய உரைகளைப் படித்து விட்டு, கனவில் மிதந்து கிடந்தவர்களில் நானும் ஒருவனாகத் தான் கிடந்தேன்.
காலம்,  வரலாற்று இயங்கியலின் போக்கைச்  சுட்டிக் காட்டியது. அது தொடர்பான புரிதலும் என் மனதுக்குள் விரியத் தொடங்கின. இடைக்காலத் தமிழர் வாழ்வும் பண்பாடும், இக்காலத் தமிழர் வாழ்வும் பண்பாடும் எந்த வகையைச் சார்ந்தன? என்ற வினா என்னை கிளிக்காட்டம் காட்டிக் கொண்டிருந்தது.
என் நண்பர் கேட்ட கேள்விக்கு விடை காணும் திசையில் பயணித்தேன். அனுபவப்பட்டவர்களின் வழிகாட்டலும், சுய அனுபவத்தோடு கூடிய வாசிப்பும், விசாலப்படுத்திய களமும், என்னை முன்நோக்கி அழைத்துச் சென்றன.
                `திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்என்பதற்கான சான்றாதாரங்களைத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், உலகாயதமும், தொல் சமூகத்  தாந்திரிக வரலாறும் தொட்டுக் காட்டின. அவற்றின் கைப்பற்றலோடு என் மனதில், திருமணப் பண்பாட்டின் வரலாற்று இழையை அறிமுகப்படுத்தின. அதன் வலை, விரிந்து விரிந்து போக என் மனதையும் விரித்து  கொண்டே சென்றது.
அதன் விளைச்சலே, `தமிழ் மண்ணில் திருமணம்என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொடர். அது வரலாற்றுக் கணக்கைத் தொடங்கியது. கணக்கைப் போடும் போது, தப்பும் தவறும் வரத்தான் செய்தன. அவற்றினைத் திருத்திக்கொள்ள ஆய்வாளர், தோழர் சி.அறிவுறுவோன் அவர்கள் வழக்கம் போல் செய்த வழிகாட்டல் மிகுந்த பயன் அளித்தது.
இந்தத் தொடர் கட்டுரைக்காக, நான் படித்த நூல்கள் பெரிதும் உதவின. அதே நேரத்தில் சிலவிடங்களில் இக்கட்டுரையில் விடுபடல் இருப்பதாகவும், வரலாற்று இயங்கியலுக்கு ஒவ்வாததாக இருப்பதாகவும் அவை எனக்கு உணர்த்தின. மிகவும் நுட்பமாக என்னை அணுகிடச் செய்தன. பலவிடங்களில் அவ்வாய்வு நூல்களில் இருந்து, நீண்ட மேற்கோள்களையும், கருதுகோள்களையும் அந்நூல்களில் உள்ளபடியே எடுத்துக் காட்டியுள்ளேன்.  என் மனம் எழுப்பியனவற்றையும் சுட்டியிருக்கிறேன்.
 அந்தந்த இடங்களிலேயே அடிக்குறிப்பு இட்டு இருப்பதால், அந்த நூல்களின் தனிப்பட்டியலை இணைக்கவில்லை. அந்தந்த மூல நூலாசிரியர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  எடுத்துக்காட்டல்கள் வாத, பிரதிவாதங்களுக்கு உட்பட்டே இருக்கின்றன. அறியாமையை வெளிப்படுத்தி இருப்பேனானால் எதிர்காலத்தில் ஒழுங்குப்படுத்திக் கொள்ள எந்த நேரமும் ஆயத்தமாக இருக்கிறேன்.
                 

4 comments:

  1. பிதற்றல் – இதற்குப் பெயர் நாவல்?
    தாண்டவபுரம் நாவல் குறித்து ‘புதின’ எழுத்தாளர் சோலைசுந்தரபெருமாள். ‘சிவ ஒளி’ மாத இதழுக்கு அவர் அளித்த விளக்கமும் அதில் வெளிப்படும் முரண்பாடுகளும்.
    விளக்கம்1. தாண்டவபுரம் நாவலுக்கு அடிப்படையான அகச்சான்றாக, வரலாறாக அமைந்திருப்பதுதிருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்களே.
    முரண்பாடுகள்: அகச்சான்று என்பது படைப்பாளியின் கவிதைப் போக்கில் இயல்பாக வெளிப்படும் சான்றுகளே அகச்சான்றுகள் ஆகும். பாண்டிய மன்னன் கூன் பாண்டியன் முன்பே சமணர்கள் ஞானசம்பந்தப் பெருமானை வெருட்டும் வண்ணம் நடந்துகொள்ள, குழந்தைப் பருவத்திலுள்ள சம்பந்தப்பெருமானைக் காக்கத் தாயுள்ளம் கொண்ட பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் பரிவுகொள்கின்றார்; இந்தச் சூழலில் அன்னையைத் தேற்ற சம்பந்தப் பெருமான் பாடிய பாடல் இதோ:
    மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்
    “பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு எய்திடேல்!
    ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
    ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
    இந்தப் பாடலில் பெருமான் தன்னை பால் மணம் மாறாத பாலகன் என “பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு எய்திடேல்! என்று பாண்டிமாதேவிக்குக் கூறுவது ஒரு சிறந்த அகச்சான்று. அகச்சான்றிபடி பால் மணம் மாறாத பாலகனை, கட்டிளம் காளையாக கற்பனை செய்து, கடும் வக்கிரபுத்தியுடன் இந்நாவலாசிரியர் எழுதிய பாலுணர்வைத்தூண்டும் நாவலின் பகுதி இதோ:
    "அவர் மனசும் உடம்பும் ஒரே திக்கில் நெளுநெளுப்பைத் தூண்டிக் கொண்டிருந்தன.அதில் இருந்து விடுபட தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டு இருந்தார்"
    "எப்போது அசந்து உறங்கிப் போனாரோ அவருக்கே நினைவில்லை. அவர் உடம்பிலும் மனசிலும் ஏறி முறுகிக் கிடந்த நெளுநெளுப்பு முற்றிலும் வடிந்து போய் சாசுவதமாய் உணர்ந்தார்."
    (பக்கம் 320)
    "இடுப்பில் இருந்த உத்தரியத்தில் திட்டுதிட்டாய் படிந்திருந்த கொழகொழப்பு இப்போது காய்ந்து முடமுடப்பாக ஆகியிருந்தது. அதிலிருந்து வெளிப்படும் மெல்லிதான இனம் புரிந்து கொள்ளக் கூடிய அம்மணத்தை தன்னோடு நிழலாக இருக்கும் சரணாலயரோ யாழ்ப்பாணரோ உணர்ந்துவிடக் கூடாது என்ற பரபரப்பில் எழுந்தார்"
    (பக்கம்-321)

    நாவலாசிரியருக்கு அகச்சான்று என்றால் என்ன என்றே தெரியவில்லை. இவர் தமிழாசிரியர் என்பது இன்னும் வெட்கக்கேடான ஒன்று. அருவெறுப்பான, அழுகிப்போன சிந்தனைகளைக் கொண்ட இவர் பாலுணர்வைத்தூண்டும் செக்ஸ் கதை எழுதமட்டுமே லாயக்கானவர். இவர் போன்றோருக்குச் சாகித்திய அகாடமி விருது கொடுக்கும் அறிவுஜீவிகள் உள்ளவரை இவர் போன்றோரின் சொத்தை ஆய்வுகள் தொடரும். இந்த நாவலைத் தடை செய்யக் கூடாது. இந்த அழுகிய மனம் கொண்ட அசிங்கம் பிடித்த ‘படைப்பாளி’ என்ற போர்வையில் திரியும் கொக்கோக எழுத்து கீழ்த்தர வார்த்தைகளின் சாக்கடை வணிகனை தமிழ்ச் சமூகத்துக்குத் தோலுரித்துக் காட்டும் சான்றாவணம் அல்லவா இந்த அழுகல் நாவல்.
    பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

    ReplyDelete
  2. “தாண்டவபுரம்” நாவலுக்கான முன்னுரையின் 118 - ம் பத்தியில்
    "தஞ்சை மண்ணின் கீழக்கோடியில் உள்ள சீர்காழி என்று அழைக்கப்படும் சிவபுரமே ஆளுடையப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட திருஞானசம்பந்தர் பிறந்த ஊராகும். " என்று பிதற்றியுள்ளார் இந்நாவலாசிரியர்.

    சமயக் குரவர்கள் நால்வரில், திருஞானசம்பந்தரை 'ஆளுடைய பிள்ளை' என்றும், திருநாவுக்கரசரை 'ஆளுடைய அரசு' என்றும், சுந்தரமூர்த்தி பெருமானை 'ஆளுடைய நம்பி' என்றும், மாணிக்கவாசகப் பெருமானை 'ஆளுடைய அடிகள்' என்றும் அழைப்பது சைவ மரபு. 'ஆளுடைய' என்ற அடைமொழி இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்' என்ற பெருமைக்காகவும், 'பிள்ளை' என்பது குழந்தைப் பருவத்தில் இருந்தமையால் சம்பந்தருக்கும், 'அரசு' என்பது 'நாவுக்கரசே' என்று இறைவனால் அழைக்கப்பட்டமைகாக அப்பருக்கும், 'நம்பி' என்பது 'தம்பிரான் தோழன்' என்ற பெருமைக்காக சுந்தரருக்கும், 'அடிகள்' என்பது அழுது அடியடைந்த அன்பராம் மாணிக்கவாசகருக்கும் வழங்கப்படுவது சைவசமயிகள் அனைவரும் அறிந்த ஒன்று. சிறப்புப் பெயரை இயற்பெயரென சாதிக்கும் நாவலாசிரியரின் கண்டுபிடிப்பு ஒன்றுக்காகவே சாகித்திய அகாடமி விருது வழங்கப்படலாம்!!! வெட்கக்கேடு!!!!

    பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

    ReplyDelete
  3. “தாண்டவபுரம்” நாவலுக்கான முன்னுரையின்1௦3 - ம் பத்தியில் ஆசிரியர் சோலை சுந்தரப்பெருமாளின் தீர்ப்பு பின்வருமாறு:
    "ஆளுடையப்பிள்ளை, பாலகனாக சேத்திராடனம் மேற்கொண்டார் என்பதும் அவருக்கு சிவபார்வதி முலைப்பால்அமுது ஊட்டினாள் என்பதும் புராணக் கற்பனையே. மிகைபட ஏற்றிக் கூறும் சேக்கிழாரின் கற்பனையே அன்றி வேறில்லை. புராணப் படைப்பாளிகளுக்கு இப்படியான கற்பனை செய்து படைப்பைச் செய்திடும் உரிமை உண்டு."

    ஆனால், திருஞானசம்பந்தரின் அகச்சான்று அடங்கிய பின்வரும் தேவாரப் பாடல்கள் இந்நாவலாசிரியரின் வாசிப்புக் குறைபாட்டையும், அரைவேக்காட்டுத்தனமான ஆணவத் தீர்ப்புகளின் ஓட்டையையும் வெட்ட வெளிச்சமாக்கும்.
    போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
    தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்;
    காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர்
    பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!
    3ம் திருமுறை: 24:திருக்கழுமலம்:3053-ம் பாடல்

    இப்பாடலின் பொருள் பின்வருமாறு: பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து "யார் தந்த அடிசிலை உண்டனை?" என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார். அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளுகின்றார். ( போது - மலர். போதை ஆர் - மலரை யொத்த; பொற்கிண்ணம், அடிசில் - சோறு. போனகம்; இங்கே அடிகளார் உண்டருளியது பாலேயாயினும், அதிற்குழைத்த உணவு ஞானம் ஆதலால் அடிசில் எனப் பட்டது. )

    கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத,
    படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞானமுனிவன்,
    இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல்,
    நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை கெடுதல் ஆணை நமதே.
    2ம் திருமுறை: பதிக எண்.84 - திருநனிபள்ளி : 2387ம் பாடல்.

    இப்பாடலின் பொருள், "கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் பதியின்கண் நால்வேத, ஆறங்கங்களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன், தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப்பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும். (ஆறும் நாலும்-ஆறங்கங்களும் நால்வேதங்களும், அத்தர்பியல்மேல் இருந்து-தந்தையார்
    திருத்தோள்மிசை அமர்ந்து, பிடரியின் மேல் அமர்ந்து)

    மேலே குறிப்பிட்ட இரண்டு பாடல்களிலும் உள்ள அகச்சான்றுகளின் அடிப்படையில்
    1. பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து "யார் தந்த அடிசிலை உண்டனை?" என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார் என ஞானசம்பந்தரே பாடியிருப்பதும்.
    2. ஞானசம்பந்தர் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும்போது பாலகனாக இருந்ததும், தந்தையின் பிடரியின் மேல் அமர்ந்து பாடியருளியதும் ஞானசம்பந்தரின் திருவாக்கின் அடிப்படையிலேயே சேக்கிழார் பெருமான் பாடினார் என்பதும்
    உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் விளங்கும். சேக்கிழாரின் புராணக் கற்பனை என்று அறிவுஜீவி சோலை சுந்தரப் பெருமாள் கூறுவது எவ்வளவு அபத்தம் என்பது வாசகர்களுக்கு விளங்கும். இந்தப் பேத்தல் நாவலுக்குத் தடையாம்! அந்தத் தடைகளை இந்த ஆல் இன் ஆல் அழகு சுந்தரம் தகர்த்தாராம்!!

    தமிழ் ஆர்வலர்களுக்கும் சைவ சமய ஆர்வலர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்! இது போன்ற கால் காசுக்குப் பெறாத கொக்கோகம் தர அசிங்கங்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று வீண் விளம்பரம் தராதீர்கள். கக்கூஸில் வைத்துப் படிப்பதற்குக் கூடத் தரமில்லாத நாவல்கள் எழுதவும் படைப்பாளிகள் என்று பட்டம் கட்டிக்கொண்டு திரியும் அற்பர்களுக்கும் எழுத்துரிமை உண்டு. அத்தகையவர்களால் சைவத்துக்கோ, திருஞான சம்பந்தப்பெருமானுக்கோ எந்தக் குறைவும் ஏற்பட்டு விடாது. தமிழில் அரிச்சுவடி கற்கும் என்னைப் போன்றோருக்கே இந்நாவலின் தரம் விளங்கும்போது, மற்றவர்களுக்கு புரியாதா? எழுதுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு; அவர்களை அடையாளம் காட்டி விமர்சிப்பதற்கு வாசிப்பாளர்களுக்கு உரிமை உண்டு. விமர்சனம் தொடரும்.
    பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

    ReplyDelete
  4. ஐயா நீங்கள் தொகுத்த “ தஞ்சை கதைக்களஞ்சியம்’ என்ற நூல் எங்கு கிடைக்கும். உங்களின் தஞ்சை சிறுகதைகள் தொகுப்பை படித்தேன். நன்றாக இருந்தது. எனக்கு தஞ்சை கதைக்களஞ்சியம் நூலை அனுப்ப இயலுமா? அந்த தொகுப்பில் உள்ள கதைகளின் பெயரையும் ஆசிரியரின் பெயரையும் தந்தால் நலம், எனது E Mail
    enselvaraju@gmail.com. எனது Blog. enselvaraj.blogspot.in. நன்றி
    ReplyDelete

    ReplyDelete