சாகித்திய அகாடமி தன்னுடைய அறுபதாவது ஆண்டை
நிறைவு செய்யும் நிகழ்வை அசாம் மாநிலம் ஹொகாத்தியில் (22, 23, 24 – ஆகஸ்ட் 2014) ஆகிய
மூன்று நாட்கள் நடத்தியது.
பிரமபுத்திரா நதிக்கரை படகுத்துறையை ஒட்டி
அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரா பண்பாட்டு நிறுவன அரங்கில் மொழிபெயர்ப்பாளர்களுக்கான
அகாடமி விருது வழங்கும் விழாவினையும் கவிதை
வாசித்தல், சிறுகதை வாசித்தல், எதற்காக எழுதுகிறேன் என்ற வகைபாட்டில் எழுத்தாளர்கள்
சந்திப்பினையும் (Abhivyakti)
நடத்தியது.
இந்த சந்திப்பில் சிறுகதை வாசிப்புக்கு நானும்,
கவிதை வாசிப்பிக்கு அ. வெண்ணிலாவும் கலந்து கொண்டோம். தமிழ் மொழிபெயர்ப்புக்கென்று
விருது பெற்று பெங்களூரை வாழிடமாகக் கொண்டிருக்கும்
இறையடியான் அவர்களும் விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றார்.
சென்னையில் இருந்து ஹொகாத்தி போய் சேர நான்கு
மணிநேரம் தான் தேவைப்பட்டது. பயண ஏற்பாடுகளையும் தங்குமிடம், உணவு உட்பட அனைத்தையும்
அகாடமி திட்டமிட்டு சிறப்பானதொரு முறையில் ஏற்பாடு செய்திருந்தது.
எனக்கு சகத்தோழராக கேரளாவைச் சேர்ந்த ஆஷாமேனன்
அமைந்து போனார். எதற்காக எழுதுகிறேன் என்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
அவருக்கு மலையாளம் தாய்மொழியாக இருந்தாலும் தமிழிலும், இந்தியிலும், ஆங்கிலத்திலும்
எழுதவும் பேசவும் புலமை பெற்றவராக இருந்தார்.
அறிமுக அளவிலான ஆங்கிலம் அறிந்திருக்கும்
எனக்கு அவரின் தோழமை கிட்டியிராவிடில் அந்த மூன்று நாட்களும் இறுக்கமடைந்து போயிருக்கும்.
அவ்விடத்தில் எந்த ஒரு அறிமுகத்திற்கும் ஆங்கிலமோ அசாமியோ இந்தியோ தெரிந்திந்திருக்கும்
பட்சத்தில் தான் எளிதாகவும் மகிழ்வாகவும் செயல்பட முடியும் என்ற உணர்வுக்குத் தள்ளப்பட்டிருந்தேன்.
அமர்வுகளில் வாசிக்கப்படும் படைப்புகள் ஆங்கிலத்திலோ
இந்தியிலோ தான் அமைந்திருக்க வேண்டும் என்பது வரையறை செய்யப்பட்டு இருக்கிறது.
நான் வாசிக்க இருந்த ‘வண்டல்’ சிறுகதையைத்
தோழர் இரா.தாமோதரன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்திருந்தார். எனக்கு
ஒதுக்கப்பட்டு இருந்த அமர்வில் நிதானமாக வாசித்திருப்பதாக உணர்ந்தேன். அந்த அமர்வுக்குத்
தலைமை ஏற்றிருந்த அசாமிய எழுத்தாளரும் விமர்சகருமான திரு அனில்போரோ அவர்கள் வண்டல்
சிறுகதையின் வடிவத்தினையும் உள்ளடக்கத்தினை விரிவாகவே எடுத்துரைக்கும் போது தமிழ்நாட்டில்
வேளாண்வாழ்க்கையில் ஏற்பட்டு இருக்கும் சரிவை காட்டுவதாகச் சொன்னார்.
தனி உரையாடலின் போது, நான் வாசித்த வண்டல் சிறுகதை செரிவுடன் இருந்தது என்று தெலுகு எழுத்தாளர்
திரு எம்.நரேந்திரா அவர்களும் மராத்தி எழுத்தாளர் திரு மகேந்திரகாடம் அவர்களும் கை
குலுக்கிப் பாராட்டினார்கள்.
மறுநாள் காலையில் உணவு உண்டு தங்கும் விடுதியின்
வரவேற்பறையில் எழுத்தாளர்கள் பலரும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். நானும் ஆஷாமேனன்
அவர்களும் அவ்விடத்திற்குப் போய் அமர்ந்தோம் திரு நரேந்திரா அவர்கள் கைக்குலுக்கி,
“உங்களுடைய கதைவாசிப்பு நிகழ்வையும் அந்தக்கதையைப் பற்றிய சிறுகுறிப்பையும் காட்சி
ஊடகங்களில் ஒளிபரப்பினார்கள் என்றும் ஆங்கில நாளிதழில் படத்தோடு செய்தி வெளிவந்திருப்பதாகவும்
சொன்னார்.
போதாமையோடு கூடிய என்னுடைய ஆங்கில உச்சரிப்பில்
வாசித்திருந்தச் சிறுகதை, அதன் உள்ளடக்க, வடிவ பலத்தில் தான் கேட்டவர்களைப் போய் சேர்ந்திருப்பதாக
உணர்ந்து கொண்டேன். அதே நேரம் எனக்கு இருக்கும் போதாமையும் ஆங்கில அறிவை நாம் பெறுவதற்கு
கவனம் செலுத்தாமல் காலத்தைப் போக்கிக் கொண்டு இருந்திருக்கிறோமே என்ற ஆதங்கம் என்னை
உறுத்திக் கொண்டிருந்தது.
இதனைத் தோழர் சி.அறிவுறுவோன் அவர்களிடம்
பகிர்ந்து கொண்டேன். “சோலை! உங்கள் ஆதங்கம் பொருளற்றது. அடிமைத்தனமானது. இந்த நிறுவனத்தின்
நோக்கம், படைப்பாளிகளை கௌவரப்படுத்தவும் பல தேசியமொழிகளைக் கொண்டு இருக்கும் இந்தியமண்ணில்
மொழிகளிடையே சமத்துவத்தை நிலைநாட்டவும் ஆதிக்கமின்மையை உறுதிப்படுத்தவுமே அந்தந்த மொழி
படைப்பாளிகளை கூட்டுவித்து இப்படியான சந்திப்புகளை நடத்திடும் இலக்கிய அமைப்பாக இருக்க
வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டதே. அப்படி எதுவும் நடத்தப்படுகிறதா? உங்களைப்
போன்றவர்கள் தான் இதற்கு விடை காணச் சிந்திக்க வேண்டும்…” கேள்வி எழுப்பி அதற்கு விடை
காண வேண்டும் என்று அழுத்தமாகப் பேசினார்.
இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொண்டு இருக்கும்
இருபத்துமூன்று மொழிகளுமே சமத்துவம் கொண்டவையாகும். இதனை உறுதிப்படுத்திடும் போது அந்தந்த
மொழிகளில் படைக்கப்படும் படைப்புகளும் சமத்துவம் கொண்டவையாகவே இருக்கும். இந்த இருபத்து
மூன்றில் ஒன்றாக இந்திமொழி இருக்கிறது. அப்படி இருக்கும் போது இந்திப் படைப்பாளிகளுக்கு
மட்டும் தனித்த கௌரவம் தரப்படுவது சமத்துவமின்மையைக் காட்டுகிறது. இந்தி மொழியில் படைப்பைச்
செய்யும் படைப்பாளிகள் சிறந்தவர்களாகவும் உயர்ந்தவர்களாகவும் கருத ,இடம் அமைத்துத்தரப்படுகிறது.
மற்றைய மொழிபடைப்பாளிகளின் சுயப்படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய வைத்து வாசிக்கச்
செல்லி வாசிப்பு அரங்கம் நடத்தும் போதே… பிறமொழி படைப்புகள் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படுகின்றன.
இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொண்டு இருக்கும் மொழிகளுக்கிடையேச் சமத்துவத்தைக் குலைத்து
விடுகிறது. அதேசமயம் சமத்துவமின்மையை நியாயப்படுத்தும் அதிகாரம் கொண்ட இலக்கிய அமைப்பாக
சாகித்திய அகாடமி மாறிப்போகிறது.
இப்போக்கு களையப்பட வேண்டும். தன்னாட்சிமை
கொண்ட அமைப்பின் உண்மையான நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும்.
அந்தந்த மொழி படைப்புகளை அந்தஅந்த மொழியிலேயே
வாசிக்கச் செய்ய வேண்டும். கூடவே இலக்கியச் சந்திப்புகளை அனைத்துமொழி பேசும் மக்களிடையே
நடத்தப்படும் போது அந்த படைப்பாளியும் படைப்பும் படைப்பு மொழியும் கெளரவம் பெறுவார்கள்.
சமத்துவம் உயர்ந்து நிற்கும். படைப்பின் மொழியே
தெரியாத அல்லது புரியாத போது படைப்பு உள்வாங்கி வைத்திருக்கும் மக்களின் பாண்பாட்டு
அம்சங்களையும் வாழ்நிலையையும் பிறமொழி பேசும் மக்களிடையே எப்படி பகிர்ந்துக் கொள்ளச்
செய்ய முடியும்? இதனால் இலக்கியப்படைப்பு செய்திடும்
பயனை விளைவித்திட முடியுமா? என்ற கேள்விகள் எழும் அல்லவா?.
மொழிவாரி ஒவ்வொரு மாநிலங்களின் நடத்தப்படும்
இலக்கியச் சந்திப்புகளில் பல மொழி படைப்பாளிகள் படைப்புகளை வாசிக்கும் போது அந்தந்த
மொழிகளின் படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்திடும்
முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது அனைத்து மொழிகளிலும் படைக்கப்படும்
படைப்புகள் எளிதாக மக்களிடம் போய் சேரும்.
படைப்புகள் அவரவர் மொழிகளில் ஏற்படுத்திடும்
ரசவாதத்தை. மக்களின் மனங்களில் எளிதாக நெகிழ்வைப் பெறச் செய்துவிடும். இதனால் எந்த ஒருமொழி
மீதும் எந்த மொழிப் படைப்பு மீதும் அதிகாரம் செலுத்த இடமில்லாமல் போகும். நடுவன்அரசு
தன்னாட்சி நிறுவனமாக சாகித்ய அகாடமியை ஏற்படுத்தியதின்
நோக்கம் முழுமையடையும் என்று நம்பலாம்.
ஹெகாத்தியில்
இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காமக்யாக் கோயில் புகழ்பெற்றது என்று
அறிய முடிந்தது. இக்கோயிலைப் பார்த்து விட்டுத்தான் ஊர் புறப்படுவது என்ற முடிவில்
சென்று இருந்தேன். அந்தக்கோயில் ஒரு பெரிய குன்றில் மேல் இருக்கிறது. மேலேறிச் சென்றால்
நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இலவசத் தரிசனம், ரூ100, 300 கட்டணத் தரிசனம் என்ற வகைபாட்டில் உள்ளேச்
செல்ல ஏற்பாடுகள் இருந்தன.
மூன்று மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
குன்றின் மேல் கோபுரம், பிரகாரம் என்று இன்றைய கோயில்கள் அமைப்பில் கட்டப்பட்டு இருந்தாலும்
அது குகைக்கோயிலாகத் தான் இருக்கிறது. புதியதாக கட்டப்பட்டு நெறிப்படுத்தியிக்கும்
வரிசையில் காத்திருந்து போகும் நீண்ட பாதை, கம்பி அடைப்புகளாய் பிரகாரங்களைச் சுற்றிச்
செல்லுகிறது. குகை வாயிலை ஒட்டிய பிரகாரத்தில் அவ்வப்போது ஆடுகளையும் மாடுகளையும் குறிப்பாக
எருமைமாடுகளைக் காவுகொடுக்கும் சடங்கு நடத்தப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.
குகைக்குள் இறங்கும் பாதை குறுகலாக இருக்கிறது.
கொஞ்சம் விசாலமான இடத்தில் மொழுமொழுப்பான பெரிய கல் இருக்கிறது. அதன் மேல் ஏராளமாக
சிவப்பு நிறப் பூக்களைக் குவித்திருந்தார்கள். அந்த பெரியகல்லின் மீது சிவலிங்கமும்
அதன் பக்கவாட்டுகளில் ஆண்பெண் கலவி உருவங்களும் வடிக்கப்பட்டு இருக்கிறதாம். இவற்றை நேரிட்டு பார்க்க முடியாதவாறு மலர்களைக்
கொண்டு போர்த்தி வைத்திருக்கிறார்கள். அதனை தொட்டு வணங்க பலிபீடத்தின் மீது நூறுரூபாய்க்கு
மேல் வைத்தால் அனுமதிக்கிறார்கள்.
வைதீககர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது
குகை. மினுக்குக்கென்று எரியவிட்டு இருக்கும் மின்விளக்கு ஒளியைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
குகை சுவர்களில் ஏராளமாக புடைப்புச்சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டு இருந்திருக்கிறது.
ஏதோ ஒரு காலத்தில் அந்தச் சிற்பங்கள் சிதைக்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சியச் சிற்பங்களை
உற்றுப் பார்க்கும் போது கலவிச் சிற்பங்களாகத்
தெரிந்தன.
சறுக்கலானப் பாதையில் இறங்கினால் கொப்பறை
வாயில் இருளில் கிடக்கிறது. வாயிலை ஒட்டியது போல சின்னதான மண்டபம் இருக்கிறது. அதன்
நடுவில் தான் ‘காமக்யா’ வழிபாட்டுக்குரியதாக இருக்கிறது. காமக்யா என்பது பெண்குறி.
குடைவு மண்டபத்தின் கீழ் உள்ள பாறையில் செதுக்கப்பட்டு இருக்கும் பெண்குறி ஒரு பாகத்திற்குள் உள்ளடங்கி விடும். பளிங்கு போன்ற வழுவழுப்பான அந்தப்
படிமத்தின் மீது குங்குமத்தைக் கொட்டி வைத்திருக்கிறார்கள்.
“…காமக்யா என்ற புகழ் பெற்றக் கோயிலில் உள்ள
பெண்தெய்வத்தின் படிமம் யோனியாகும். பெண் பிறப்புறுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்
இயற்கையின் வளமைக்கு ஆதாரமான பொருள் செழிப்புடன் இணைக்கப்பட்டுள்ளதைக் காணவேண்டும்…”
(உலகாயதம் – தேவிபிரசாத்)
கொப்பறை வாயிலில் இறங்கினால் அந்தப் படிமத்தை
சுற்றி ஒருநபர் மட்டுமே குனிந்துப் போகக்கூடிய வழி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன்
வழியே சுற்றிவந்து தான் வணங்குகிறார்கள். காமக்யாவின் அடிப்பகுதியில் இருக்கும் நீர்
தாரையில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்ததைப் பார்த்தேன். தொல்குடி சமூகபூசாரி ஒருவர் அதன் அருகில் அமர்ந்து
வணங்குபவர்கள் காமாக்காவின் நீர்தாரை வெளிப்படும் இடத்தில் மண்டியிட்டு அந்த ‘தாரை’
யின் மீது கை வைத்து தொட்டு வணங்கி அந்த நீரை புனிதநீராக கருதி தலையில் தெளித்துக்
கொள்ளவும் சிறிது அருந்தவும் அனுமதிக்கிறார். பெரும்பாலனவர்கள் அந்தப் பூசாரிக்கு நூறுரூபாய்க்கு
மேல் காணிக்கைத் தருகிறார்கள்.
இந்தப் பெண்குறி வழிபாடு தொல்குடிச் சமூக
விளைச்சல் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இதன் பூர்வாங்க வரலாற்றை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
அவர்களின் உலகாயதம் என்ற நூல் வழி விரிவாக
அறியலாம், தினம்தினம் ஆயிரக்காணக்கான மக்கள்
வந்து வழிபாடு செய்து விட்டுச் சொல்கிறார்கள் என்றும் அறியமுடிகிறது,
ஒவ்வொரு முழுநிலா நாளிலும் காமக்யாவின் நீர்தாரையில்
இருந்து மாதவிடாய் ரத்தம் வெளிவருகிறதாம். இந்த ரத்தம் புனிதசெந்தூரம் என்று ஒவ்வொரு
துளியையும் ஆயிரக்கானக்கான ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்களாம். குழந்தைப்பேறு எட்டாதவர்கள்
நாற்பத்தெட்டு நாள் விரதம் இருந்து காமக்யாவை வணங்கி புனித ரத்தத்தை பெற்று தரிக்கொள்பவர்களுக்கு
குழந்தைப்பேறு கிட்டி விடுவதாக ஒரு நம்பிக்கை மக்களிடையே இருப்பதாக அறிந்தேன்..
மக்களிடம் இருக்கும் நம்பிக்கை ஒரு புறம்
இருக்கட்டும். இது வைதீகத்தின் சூதடி என்று உறுதியாக சொல்ல முடியும். காமக்யாவில் இருந்து
புனித ரத்தம் எதுவும் வெளிப்பட வாய்பே இல்லை. நான் முதலில் குறிப்பிட்டுள்ளபடி தினம்தினம்
நூற்றுக்கணக்கான கால்நடைகள் காவு கொடுக்கப்படுகிறது.
இந்தக் கால்நடைகளை மக்கள் தங்கள் கால்நடை
பெருகி வாழ்வு தர வேண்டி செலுத்தும் காணிக்கையே. இந்த கால்நடைகளையே பலியிடுகிறார்கள்.
அப்போது சிந்தும் அந்த ரத்தத்தைக் குளிர்பதனத்தில் வைத்து கெட்டுவிடாமல் பாதுகாப்புச்
செய்து அதனை குறிப்பிட்ட நாளில் காமக்யாவின் நீர்தாரைக்கு செலுத்திக் கொண்டு இருக்க
வேண்டும் என்பது தான் உண்மையாக இருக்க முடியும்.
இந்த காமக்யா வழிபாடு தொல்குடி சமூகம், வாழ்க்கையைத்
தொடங்கிய இடமெல்லாம் இருந்திருக்க வேண்டும். இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சி தான் சிவலிங்க
வழிபாடாக வந்திருக்க முடியும். காமக்யா வழிபாட்டின் எச்சமாக இன்றும் சான்றாக அசாம் மாநிலம் கௌகாத்தியில் இருப்பதைப் பார்க்க
முடிகிறது..
அசாம் மாநிலம் ஹெகாத்தியில் சாகித்ய அகாடமி நடத்திய இலக்கிய நிகழ்வில் கலந்து
கொண்ட மகிழ்ச்சியை விட காமக்யா கோயிலுக்குப்போய் பார்த்து வந்தது தான் என் மனதைவிட்டு
நீங்காமல் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‘தமிழ்மண்ணில் திருமணம்’ என்ற ஆய்வுக்
கட்டுரை எழுதும் போது தொல்குடி சமூகம் பெண்குறியை
வழிபாடு நடத்துவதை கொண்டிருக்கும். அதற்கு சான்றாதாரத்தை காண வேண்டும் என்ற அவா மனதில்
எழுந்திருந்தது. அந்த ஆசையை இந்தப் பயணம் நிறைவேற்றியிருக்கிறது.