Saturday 20 December 2014

திரிசிரபுரத்து ஆசான்



சைவ மடங்களின் பட்டியலில் முதலாவது அமைவது திருவாவடுதுறை ஆதீனம். ‘தில்லை பாதி திருவாசகம் பாதி’ என்றொரு பழமொழியைப் போலவே, ‘பிள்ளை பாதி திருவாவடுதுறை பாதி’ என்று கூறுவது பொருந்தும். காரணம், திருவாவடுறை ஆதீன வரலாற்றில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரபிள்ளை அவர்களுக்குப் பெரியதோர் இடமுண்டு. மாதொருபாகன் என்பது போலத் திருஆடுதுறையில் பிள்ளை ஒரு பாகம். பிள்ளையவர்களைத் திருவாவடுதுறை ஆதீனம் வளர்த்தது. ஐயரவர்களைப் பிள்ளையவர்கள் வளர்த்தார். ஆவடுதுறை இன்றேல் பிள்ளையவர்கள் இல்லை. பிள்ளையவர்கள் இன்றேல் ஐயரவர்கள் இல்லை….” (மடங்கள் வளர்த்த தமிழ் – ஊரன் அடிகள் – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர்)
        ‘…தமிழ்ப்புலவர்களின் வரலாறுகள் தமிழகத்தில் ஒரு வரையறையின்றி வழங்குகின்றன. கர்ணபரம்பரைச் செய்திகள் முழுவதையும் நம்ப முடியவில்லை. எந்தப் புலவர்பாலும் தெய்வீக அம்சத்தை ஏற்றிப் புகழும் நம் நாட்டினரில் ஒரு சாரார் புலவர்களைப் பற்றிக் கூறும் செய்திகளில் சில நடந்தவனவாகத் தோன்றவில்லை. அப்புலவர்களுக்கு மிக்க பெருமையை உண்டாக்க வேண்டுமென்பதொன்றனை மட்டும் கருதுகிறார்களேயல்லாமல் நடந்த விஷயங்களை நடந்தபடியே சொல்லுவதை விரும்புவதில்லை. கம்பர் முதலிய சில புலவர்களை வரகவிகளென்றும் கல்லாமலே பாடி விட்டனரென்றும் சரஸ்வதி தேவியின் திருவருளாலும் உமாதேவியின் அருளாலும் அங்ஙனமாயினரென்றும் கூறுவது தான் பெருமையெனவும் திருவருளால் கிடைத்த நல்லறிவைத் துணைக்கொண்டு பல நூல்களைப் பயின்று செயற்கையறிவும் வாய்க்கப் பெற்று நூல் முதலியன இயற்றினார்கள் என்பது சிறுமையெனவும் எண்ணுகிறார்கள்… (மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் – முகவுரை – உ.வே.சா)
“…பிள்ளையவர்களோ சிறிதேனும் பெருமிதமின்றியும் தம்முடைய கவியைப் பாராட்டாமலும் வேறு பேச்சின்றியும் மேலே மேலே செய்யுள் செய்து கொண்டு போதலைப் பார்த்த எனக்கு விம்மிதம் உண்டாயிற்று. கவிஞர்களுடைய பேராற்றல் இத்தகையதென்பதைச் சரித்திரங்களின் மூலமாக அறிந்தவனேயன்றி, அன்று போல நான் நேரிற் பார்த்ததில்லை. ஆதலின் ஒரு மகாகவியின் வாக்கிலிருந்து ஆற்றொழுக்கைப் போலக் கவிதாப் பிரவாகம் பெருகிக் கொண்டிருப்ப அதனை காதினால் கேட்டும் கையினாலெழுதியும் இன்புற்ற எனது நிலை இங்கே எழுதற்கரியது…” என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் கவிதாற்றலை உ.வே.சா. பதிவு செய்திருக்கிறார். (மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களின் சரித்திரம் – பகுதி இரண்டு.  பக்கம் 80)
ஆசான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும்  உ.வே.சாமினாதய்யரும் இன்றேல் தமிழ் இன்னும் சிலகாலமாவது பின்னோக்கி தேங்கி நின்று தான் பின் வளர்ந்திருக்க முடியும் என்று கருத இடமிருக்கிறது அல்லவா?
‘‘நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே’ என்பதை எண்ணி இந்த மகாவித்துவானுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளேன்” என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திர நூலின் முகவுரையில் குறிப்பிடும் உ.வே.சா அவர்கள், அதில் இம்மி அளவேனும் குறை வைத்திருக்க வில்லை என்று உணரவே முடிகிறது.
‘நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர் என்னும் மூவகை ஆசிரியராக இருந்தாலும் சரித்திரத்தால் இவர் பாடஞ்சொல்லுதலையே விரதமாக உடையவரென்பதும் மாணாக்கர்கள் பால் தாயினும் அன்புடையவரென்பதும் யாவரிடத்தும் எளியராகப் பழகும் இயல்புடையவரென்பதும் பொருளை மதியாமல் கல்வி அறிவையே மதிக்கும் கொள்கை உடையவரென்பதும் எவ்வளவு உண்மையோ அது போலவே இவர் காலத்திற்குப் பின்பு இவரைப் போன்றவர்களைக் காணுதல் அரிதாக இருக்கிறது’ என்பதும் உவேசாவின் புனைவாகத் தெரியவில்லை.
”…எங்களுக்குத் தமிழ்ச்சுவையைப் புலப்படுத்தியது போலக் கணக்காயனாராக இருந்து எங்களுடைய பிள்ளைகளுக்கும் உரிய தமிழ்ப் பாடங்களைக் கற்பிக்க வேண்டும்” என்ற ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இவரின் தந்தையார் சிதம்பரம்பிள்ளை திண்ணைப்பள்ளி அமைத்து தமிழைக் கற்பித்திருக்கிறார்.  இத்திண்ணைப் பள்ளிகள் வாழ்க்கைக்கு இன்றியமையாத பல விஷயங்களைக் கற்பித்தன.  மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களுக்கு, ‘நாடெங்கும் நாம் தமிழுக்கு தலையான மாணவர்களை திரட்டி இம்மண்ணில் மாபெரும் இயக்கமாகவே வளர்த்து எடுக்க வேண்டிய தேவையும்  இருக்கிறது. அதற்காக தமிழை ஆழமாக கற்கவும் கற்பிக்கவும் வேண்டும்’ என்ற உறுதியான தேடலில் நெடும்பயணத்தைத் தொடங்கியிருந்திருக்கிறார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடிபாயும் இந்த மக்கள் வழக்காறு மீனாட்சிசுந்தரம்பிள்ளைக்கு ஏகப்பொருத்தமாக அமைந்து போயிருக்கிறது.
அதனால் தான், அவர் மனசுக்குள் பொத்தி வளர்த்து எடுத்துக் கொண்டு இருக்கும் தமிழ்ச்சுடரை ஏற்றம் செய்ய, அன்னப்பிச்சை எடுத்து உண்டு காலங்கழித்து வந்த பரதேசி ஒருவர் பின்னால் கஞ்சா பொட்டலத்தோடு பின் தொடர்ந்து அந்தப் பரதேசிக்கு உரிய காலத்தில் கஞ்சாவை அளித்து தண்டியலங்காரத்தைப் பாடமாகக் கேட்கவும்  அவ்வேட்டை அவரால் பெறவும் முடிந்திருக்கிறது. அதனால் தான் தம்முடைய மாணவர்களுக்கு எந்த வகையில் குறைகள் உள்ளனவோ அவற்றையெல்லாம் தாமே அறிந்து ஆராய்ந்து தீர்க்கும் அரிய தன்மை பிள்ளை அவர்களுக்கு இருந்தது என்கிறார் உவேசா
“…ஒரு முறை திருவாவடுதுறைக்கு ஆறுமுகநாவலர் வந்திருந்த பொழுது மடத்திற் படித்துக் கொண்டிருந்த நமச்சிவாயத்தம்பிரானைக் கண்டு, ‘பிள்ளையவர்களிடம் பல நூல்களைப் பாடங்கேட்டுக் கொள்ள வேண்டும்.  அவர்கள் இங்கே இருப்பது பெரும் பாக்கியம் அவர்களைப் போல இப்பொழுது பாடஞ்சொல்பவர்கள் இல்லை” என்று சொல்லிப் போகிறார். (மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் பக்கம் 242) அந்த அளவுக்கு மாணவர்களுக்கு பாடம் சொல்லுவதிலும் மாணவர்களின் மனமறிந்து பயிற்று விப்பதிலும் வல்லவராக இருந்திருக்கிறார் என்பது தமிழுலகம் அறிந்த ஒன்றாகவே இருந்திருக்கிறது. அம்மாணவர்களுக்கு பாடம் படித்துச் சொல்லுவது மட்டுமல்லாமல் தக்கவிடங்களில் இயன்ற அளவில் அவர்களை முன்னிலைப்படுத்துவதிலும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை.
“…மாதவராயரவர்களைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமே. அவர்கள் இப்பொழுது திருவனந்தபுரத்தில் திவானாக இருக்கிறார்கள். தாங்கள் திருவனந்தபுரம் மகாராஜா காலேஜ் தமிழ்ப்பண்டிதர் வேலையை ஒப்புக் கொண்டால் முதலில் மாதவேதனம் ரூ 100 கொடுப்பார்கள். பின்பு வேண்டிய சௌகரியங்களைச் செய்வார்கள். எங்களுக்கும் கௌரவமாக இருக்கும் ராஜாங்க வித்துவானாகவும் இருக்கலாம். சமஸ்தானத்திற்கும் கௌரவம் ஏற்படும்” என்று வற்புறுத்திச் சொன்னார்கள்.
பிள்ளை அவர்கள், “பராதீனனாக இருந்தால் என்னுடைய நோக்கத்திற்கு மிகவும் அசௌகரியமாக இருக்கும். ஏழைகளாக இருக்கும் பிள்ளைகளுக்குப் பாடஞ்சொல்லிக் கொண்டும் அவர்களுடன் சல்லாபம் செய்து கொண்டும், காவேரி ஸ்நானமும் சிவதரிசனமும் செய்து கொண்டும் இருப்பதே எனக்குப் பிரியமான காரியமாக இருக்கின்றது. சாதாரண ஜனங்களோடு பழகுதல் தான் எனக்கு இன்பத்தை விளைவிக்கும்...” (மேற்படி நூல் பக்கம் 258)
பிள்ளை அவர்களின் நோக்கம் பட்டம், பதவி, புகழ், பொருள் என்று அலைந்ததாக அறிய முடியவில்லை. தமிழ்மாணவர்களை உருவாக்கம் செய்து அதன் மூலம் தமிழின் வளத்தை உலகறியச் செய்தல் ஒன்றே குறிக்கோளாக இருந்திருக்கிறது. இந்த குறிக்கோளுக்கு சாதி, வர்ணம், சமயம் இவை எதுவும் தடையாக இருக்க நாம் அனுமதிக்கக் கூடாது என்பதில் வலுவான கருத்தோட்டத்தில் இருந்திருக்கிறார் என்றும் அறிய முடிகிறது.
அதனால் தன்னைத் தேடிவந்த திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி  தமிழ்ப்பண்டிதர் வேலையை, “தஞ்சாவூர் அரண்மனையிலும் சென்னைக் கல்விச் சங்கத்திலும் தமிழ்ப்பண்டிதராக இருந்த சிவக்கொழுந்து தேசிகருடைய குமாரர் சாமிநாததேசிகர் என்னிடத்தில் வாசித்தவர் அவருக்கு அவ்வேலையைச் செய்வித்தால் நன்றாகப் பாடஞ்சொல்லுவார். எனக்கும் மிகவும் திருப்தியாக இருக்கும்…” என்று தமிழ் ஒன்றே என்ற கருத்தோட்டத்தில் இருந்ததால் தான் தமிழ்படிக்கும் மாணவர்களை நேசிக்கும் பிள்ளை அவர்களால் அப்படிச் சொல்ல முடிந்திருக்கிறது.
“…யார் வந்து பாடங்கேட்டாலும் அவர்களுக்குப் பாடஞ் சொல்லுவார். இவரிடத்துப் படித்தவர்களிற் பல சாதியினரும் உண்டு. பிராமணர்களில் ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள், மாத்தவர்கள் என்னும் வகுப்பினரும், வேளாளரிற் பல வகுப்பினரும், பிற சாதியினரும், கிருஸ்தவர்களும், முகமதியர்களும் இவர்பாற் பாடங் கேட்டதுண்டு. நாகூரில் புகழ் பெற்று விளங்கிய குலாம் காதர் நாவலரென்னும் முகமதியர் இவர் பால் வந்து சீராப்புராணம் முதலியவற்றைப் பாடங்கேட்டனர்…” (மேற்படி நூல் பக்கம் 144)
“…நான் தேம்பாவணியைப் பாடஞ்சொல்லுதலும் கிறிஸ்தவர் முதலிய பிற மதமாணாக்கர்கள் என்பாற் பாடங்கேட்டலும் கூடாத செயல்களென்று சிலர் சொல்லி வருவதாகத் தெரிகிறது. தமிழ்மாணாக்கராக யார் வந்தாலும்  அன்போடு பாடம் சொல்லுதலையே எனது முதற்கடமையாக எண்ணியிருக்கிறேன்... தமிழ்நூல் என்னும் முறையில் யாதும் விலக்கப்படுவது அன்று…” மேற்படி நூல் பக்கம்149
‘பிள்ளை அவர்கள் பயணிக்குமிடமெல்லாம் தன்னுடன் சில மாணவர்களாவது இல்லாமல் இருக்க மாட்டார்கள். செல்லுமிடமெல்லாம் பாடம் படித்துத்தருவார். அது போல வேதநாயகம்பிள்ளை அவர்களின் வேண்டுகோளின்படி தம்மோடு சிலரை அழைத்துச் செல்கிறார். பிரபந்த நயம் குறித்து உரையாடல் தொடர்கிறது. அவ்விடத்தில் பிள்ளை அவர்கள் இல்லாத நேரத்தில் அவரோடு உடன் சென்றவர்கள் அழுக்காறு உடையவர்களாக நடந்து கொள்கிறார்கள். அதனை பிள்ளை அவர்களிடமே மாயவரம்வேதநாயகம்பிள்ளை உடன் இருப்பவர்கள் அவமதிப்பு செய்வது போல நடந்து கொண்டவற்றை வெளிப்படுத்துகிறார்.
”…தக்கவர்கள் எங்கே கிடைக்கிறார்கள்? கிடைத்தவர்களைக் கொண்டு தான் நாம் சந்தோஷத்தை அடைய வேண்டியிருக்கிறது. இவர்கள் நல்லவர்கள் தான். தம்மை அறியாமலேயே ஏதோ தவறு செய்து விட்டார்கள் போலும். இனி ஒரு போதும் அவ்வண்ணம் செய்யமாட்டார். பொறுத்துக் கொள்ள வேண்டும்…” என்று வேதநாயகம்பிள்ளையிடத்து தான் நடத்தும் தமிழ் இயக்கத்தோடு பயணிப்பவர்களையும் ஆற்றுப்படுத்தும் அந்த ஆளுமை, சிறந்த ஆசான் என்று  பறை சாற்றுகிறதல்லவா?
‘…தன்னுடன் இருந்து பாடம் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் கவனம் கொள்கிறவர். முன் நாட்களில் பட்டு இருந்த கடனை அடைக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும் வேளையில், ‘தமக்கு சீர்காழியிலும் பிற இடங்களிலும் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு தம்முடைய மாணவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து வைத்தும் அவருள் முத்துக்குமாரபிள்ளை என்பவருக்கு மணம் செய்வித்தும் வீடு கட்டிக் கொடுத்தும் செலவு செய்து விட்டு எஞ்சிய தொகையைத் திரிசிரபுரத்திற் செலுத்த வேண்டிய கடனுக்காக அனுப்பிவிட்டார்…’ என்று பதிவு செய்கிறார் உ.வே.சா (மேற்படி நூல் 188 பக்கம்)
        இவர் சிலதினம் கும்பகோணத்திலேயே இருந்து வருகையில் ஒரு நாள், அவ்வூரில் வராகக்குளத்தின் கரையிலுள்ள ரங்கசாமி ஐயங்காரன்னும் செல்வர் ஒருவர் இவருடைய கவித்துவத்தை அறிந்து, “விஷ்ணு புராணத்தை வடமொழியிலிருந்து தமிழில் செய்யுள் நடையாக மொழிபெயர்த்து நீங்கள் செய்து தரவேண்டும். செய்து தந்தால் ஐயாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நாங்கள் தொகுத்துத் தருகிறோம். எங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் மிக்க விருப்பத்தோடிருக்கின்றனர்”
“ நான் சைவனாதலின் அவ்வாறு செய்தல், நான் கொண்ட கோலத்திற்கு மாறாகும். ஆதலால் அது செய்ய என்னால் இயலாது. சென்னையைச் சார்ந்த எழும்பூரில் திருவேங்கடாசல முதலியாரென்னும் வைணவ வித்துவானொருவர் இருக்கிறார். அவர் வைணவ நூல்களில் நல்ல பயிற்சியுள்ளவர். நூல் இயற்றுதலிலும் வன்மையுடையவர். அவரைக் கொண்டு உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்...” என்று சொல்லி தான் ஒதுங்கிக் கொள்கிறார்.
அந்த நேரம் அவருக்கும் பணம் அவசியத்தேவையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் மறுத்து விடுகிறார். காரணம், தனித்த ஆளுமை கொண்ட  தனிமனிதனாக இருந்து சைவத்தினை கைக் கொண்டு ஒழுகும் கொள்கைக்கு மாறாக நடக்க விரும்ப வில்லை. அதே நேரம் அவர் சாதிமதம் கடந்த ஆசிரியராகவும் தாய்மொழிப்பற்றாளராகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் முகத்தான் அப்புராணம் மொழிபெயர்ப்புச் செய்ய தக்கவரை அறிமுகம் செய்கிறார்.
“தமிழ்ப் பாஷையில் எனக்கு விசேஷமான பிரீதியுண்டு. யாரிடத்திலாவது போய் பாடம்  கேட்கலாமென்று நினைத்தாலோ, இந்தப் பக்கத்திற் பாடஞ்சொல்லத் தக்கவர் யாரும் இல்லை. சொல்லக்கூடியவர் இருந்தாலும், சுலபமாக அவர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. அவர்களுக்கு நாள் முழுவதும் பணிவிடை செய்தாலும் ஏதோ கடனுக்காகச் சொல்லிக் கொடுப்பார்கள். என்னுடைய நிலைமை ஜீவனத்திற்கே தாளம் போடும் பொழுது அவர்களை அண்டி நான் எப்படிக் கற்க வேண்டிய நூல்களைக் கற்க முடியும்?” (மேற்படி நூல் பக்கம் 288) அக்காலத்தில் தமிழ்படிக்க விருப்பம் உள்ளவர்கள் நிலைமை இப்படித்தான் இருந்திருக்கிறது. இந்த நிலைமையில் இருந்து மீட்டு தமிழ்படிக்க விருப்பம் கொண்டவர்களுக்கு பாடம் சொல்லித்தர முன் வந்திருக்கிறார்.
“மாயூரத்தில் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் என்று ஒரு சிறந்த தமிழ் வித்துவான் இருக்கிறாராம். ஏழைகளாயுள்ளவர்களுக்கு அன்னமும் வஸ்திரமும் அளித்துச் சில வருஷம் வைத்திருந்து அவர்களை நன்றாகப் படிப்பித்து அனுப்புவது அந்த மகானுக்கு வழக்கமாம். அவரிடத்தில் சில மாதம் படித்தாலும் படிப்பவர்கள் கல்விப் பெருக்கத்தையடைவார்களென்று சொல்லுகிறார்கள்…” பிள்ளைஅவர்களின் தமிழ்ப்பாடம் சொல்லித்தரும் பணி, வெகுவாய் பரவிக் கொண்டு இருந்திருக்கிறது. அதனால் தான் நாலா திக்கிலும் இருந்தும் தமிழ் பாடம் சொல்லி கேட்போர் அவரை நாடி வந்திருக்கிறார்கள்.
தன்னை நாடி தமிழ்ப்படிக்க வரும் மாணாக்கர்களுக்கு இருக்கவும் படுக்கவும் நல்ல வசதியான இடம் இல்லாமையை உணர்கிறார்.  ‘மாயூரம் தெற்கு வீதியில் திருவாவடுதுறை மடத்திற்கு மேல் புறத்துள்ள இரண்டு கட்டு வீடு ஒன்றைச் சுக்கில வருசத்தில் 900 ரூபாய்க்கு வாங்கினார். அந்த வீட்டின் தோட்டம், பின்புறத்திலுள்ள குளம் வரையிற் பரவியிருந்தது. அந்தக் குளத்தின் கரையிற் படித்துறையுடன் ஒரு கட்டடம் கட்டுவித்து, அதிலிருந்து பாடம் சொல்ல வேண்டும் என்று எண்ணினார்… அதனை குறிப்பால் அறிந்த அவரது அன்பர்கள் அக்கட்டத்தை அவர் விருப்பத்தின் படியே பூர்த்தி செய்வித்தனர். அதன் பின்னர் அவ்விடத்திலேயே இவர் பாடஞ்சொல்லுதலும் சிவபூசை செய்தலும் நடைபெற்று வந்தன…’ என்று உ.வே.சா. அவர்கள் பதிவு செய்திருக்கிறார். (மேற்படி நூல் பக்கம் 329)
“…எந்தையாரவர்கள் தம் ஆசிரியராகிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களை அடிக்கடி நினைந்து தம்மிடம் வருவோர்களிடம் பிள்ளையவர்களுடைய கல்விப் பெருமை, போதானா சக்தி, செய்யுளியற்றுவதில் இருந்த ஒப்புயர்வற்ற திறமை முதலியவற்றைக் கூறித் தமக்கு ஏற்பட்டு வரும் பெருமைக்கெல்லாம் அவர்களிடம் முறையாகப் பலவருடம் பாடங்கேட்டு இடைவிடாது பழகியதே காரணம் என்று சொல்லுவார்கள்…” (சா. கலியாணசுந்தர அய்யர். என் சரித்திரம் முன்னுரை)
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, புறநானூறு, பத்துப்பாட்டு போன்ற ஏடுகள் கரையானுக்கு இரையாகி, மண்ணோடு மண்ணாகப் போகாமல் மீட்டுஎடுத்து தமிழின் தொன்மை இழந்து போகாமல் உ.வே.சா அவர்கள் காப்பாற்றியிருக்கிறார். அதனால் அவருக்கு கிடைத்திருக்கும் பெருமைகள் அனைத்திலும் அவருடைய ஆசான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. அதாவது உவேசா அவர்கள் மேல்தளம் என்று நம்மால் குறிப்பிட முடியுமானால் அவருக்கு அடித்தளமாக இருந்து வலுயூட்டியவர் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் தான் என்று உறுதிபடச் சொல்ல முடியும். இந்த உண்மையை நாம் தவற விட்டு விடக் கூடாது
முடிவுரையாக
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள்  இருபதுக்கு மேற்பட்ட தலபுராணங்கள் பாடியிருக்கிறார். இதன் மூலங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்ததென்றும் அதன் உள்ளடக்கத்தினைச் சமஸ்கிருத அறிஞர்களைக் கொண்டு உரைநடை தமிழாக்கி வைத்துக் கொண்டு பின்பு  வளமான தமிழில் செய்யுள் நடையாக்கியிருக்கிறார். “…கும்பகோணம் புராணத்தை வடமொழியிலிருந்து முதலில் தமிழ் வசனமாக மொழி பெயர்த்து வைத்துக் கொண்டார். அவ்வாறு மொழி பெயர்த்தற்கு உதவியாயிருந்தவர்கள் சங்கராச்சாரியார் மடத்து வித்துவானாகிய மண்டபம் நாராயணசாஸ்த்திரிகள் முதலியவர்கள். பின்பு புராணத்தை இவர் (தமிழ்) செய்யுள் நடையாக இயற்ற ஆரம்பித்தார்…” (மேற்படி நூல் பக்கம் 259)
 இப்படியாக சமஸ்கிருதத்தை மூலமாகக் கொண்டுள்ள 22 தல புராணங்கள், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களால் இனிய தமிழில் பாடப்பட்டு இருக்கிறது என்று  கிடைத்திருக்கும் பதிவுகள் உறுதி செய்கின்றன. அதில் நமக்கு  எள்ளளவும் மயக்கமில்லை.
ஆனால், இந்த புராணங்கள் அனைத்தும் இந்த தமிழ் மண்ணில் உள்ள ஊர்களைப் பற்றியும் இயற்கை வளங்களைப் பற்றியும் இவ்வூர்களில் உள்ளடங்கிய மக்களையும் அவர்களிடையே கோயில் கொண்டு இருப்பதாக கருதும் இறைவன் இறைவியரைப் பற்றியுமே பாடப்பட்ட மூலவரலாறு எவ்வாறு சமஸ்கிருதத்தில் முதன்முதல் எழுதப்பட்டு இருக்க முடியும்?
பொதுவில் பேசப்படும் பெரியபுராணம், விஷ்ணுபுராணம் போன்றவை அல்ல இந்தத் தலபுராணங்கள். கோவில் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இறைவனையும் இறைவியையும் அந்தந்தப் பகுதி மக்களிடத்து நிலைப்படுத்துவதற்காகச் செய்யப் பட்டவையாகும். அவை மக்களுக்குப் புரியும் மக்கள் மொழியிலேயே உருவாகி இருந்திருக்க முடியும். பின்னரே சமஸ்கிருத ஆதிக்கம் மேலோங்கிய நிலையில் அவை சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுத் தமிழ் மூலங்கள் இழிவென்று ஒதுக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். அதனாலேயே திருமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சமஸ்கிருதத்திலிருந்து தலபுராணங்களைத் தமிழ்ப்படுத்த வேண்டியவரானார் என்று புரிந்து கொள்வது வரலாற்றுக்குப் பொருத்தமுடையதாக இருக்கும்.
 ஐம்பத்தாறு தேசங்களைக் கொண்ட துணைக்கண்டத்தை சமஸ்கிருதம் என்னும் ஒரு மொழியைப் பொதுமொழியாகக் கொண்டு இணைப்புக் கொடுத்ததனால் மக்கள் மொழிக்குரிய இலக்கியங்கள் அழிக்கப்பட்டதும் மக்கள் மொழிகள் நசுக்கப்பட்டதுமான வரலாற்றின் வெளிப்பாடே மேற்கண்ட நிகழ்வாகும்.
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள், தமது படைப்புகளில் பிற்காலச் சோழர்கால வாழ்வியலை இறையியலோடு கலந்தும், கல்வி நிலையில் பயிற்றிதலோடும் உறவாட விட்டு இருந்திருக்கிறார் என்பதனை பளிச்சென்று அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இதில் இருந்து திரிசபுரத்து ஆசான் என்று போற்றப்படும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் பங்களிப்பை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
(சாகித்யா அகாடமியும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகமும் இணைந்து பல்கலைக் கழக அரங்கில் 29.10.2014 நடத்திய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் 200 வது பிறந்த நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டுக் கட்டுரை)

Thursday 18 September 2014

வாத்தியாரும் நானும்... பள்ளிப்பிராயம்



                கழுதை ஏருக்கு ஒத்து வந்தாலும் வரும் காவனூரான் ஒத்து வரமாட்டான்’ - நான் பிறந்து, உண்டு வளர்ந்த ஊர் மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சீத்துக்கழிப்பா அசலூர்காரவங்கக்கிட்ட வாய்ச்செலவு இன்னிக்கு நிலைச்சி நிக்குது.  இத்தனைக்கும் ஊருக்குள்ள தெக்கால இருக்கிற எழுபதுகளுக்குள்ள அடங்குகிற பறையர் குடிகளும் மீதி இருக்கிய நாலஞ்சி தெருவுக்குள்ள நாப்பது முன்னப்பின்ன வெள்ளாளக்குடிகளும், மூணுசாணார் உறவுமுறைக் குடிகளும் ஊர்க்காவலுக்குன்னே பண்ணை மாகாணம் குடியேச்சி வச்ச ரெண்டு கள்ளர் குடிகளும், எண்ணெச் செட்டியார், நாய்க்கர்ன்னு தலைக்கு ஒரு குடிகளும் கிராமத் தொழிலாளிங்க குடிங்களுமா சேந்து ஒண்ணாடி முன்னாடியா கிடக்குங்க.
                எல்லாக்குடிகளும் திங்கிறதுக்கும் உங்கிறதுக்கும் சின்னதும் பெரிசுமா குடிசை கட்டிக்க பண்ணை மாகாணம் கை காட்டிவிட்டிருக்கும்.  மொத்தத்தில் பண்ணைக்கு எல்லாருமே ஒண்டுக்குடிகதான்.  மொத்தமா பட்டா அடங்கல வச்சிக்கிட்டு இருந்துச்சு.  எல்லாத்தையும் ஏகபோகமா அனுபவிச்சிக்கன்னு ஒருசிவன்கோயிலும் கோயில் குளக்கரையில் இருந்த குருக்கள் இருக்கும் ஒத்தக்கட்டு ஓட்டுவீடும் ஊருக்குள்ள பிரபலம்.  பண்ணைக்கார பெருங்குடி நாலுகட்டு வீட்டுல, பெரிய காங்கிரஸ் கொடியப் பறக்க விட்டுருக்கும்.  பாக்கிறதுக்கு பண்ணையோட கட்டுமானத்தில் தான் தெரியும்.  பறையர் தெருவுக்குள்ள கம்யூனிஸ்ட் காரவங்க வந்து போயிக்கிட்டு பண்ணைக்குக் கீழறுப்பு வேலையைச் செய்யும்போதே மத்த குடிகள் தெருவில் திராவிட கழகத்தோட கொடியை தெம்பா பறக்கவிட்டது.  அண்டை அயலாருங்களும் இல்ல.
                டீக்கடை ராஜாங்கம், மாங்காகணேசன், தங்கையன் இவங்க போதாதா?  இவங்களுக்கு பண்ணைக்கிட்ட கீழ்முள்ளு வைக்கன்னே ரெண்டுமூணு குடிக அப்பஅப்ப முளைச்சிக்கும்.  எந்த புத்துல எந்தப் பாம்பு இருக்குன்னு கண்டுக்க முடியாமத்தான் இருங்குங்க.  தேர்தல் வந்தா ஓட்டுப்போடுற காலத்தில் பண்ணைமாகாணம் கிழிக்கிற கோட்டைத் தாண்டித்தான் ஓட்டுவிழும்.  அதைக் கண்டு காணாதுமா பண்ணை இருந்துடும்.  அதுக்கு எப்படியோ கலகம் வந்துடக் கூடாது.  நம்ம குடிபடைங்க நம்மக்கிட்ட ஒண்டுக்குடியாக இருந்தா போதுங்கிற மனசு.  இதைக் குத்திக்காட்டத்தான் அயலூர் பண்ணை மாகாணங்க கிளப்பிவிட்ட வாய்ச்செலவு அது.
                திருவாரூக்கு மேலப்பக்கம் எட்டு மைல் தொலைவில் காட்டாத்துக் கரையில் அறுவது வேலி நஞ்சைபுஞ்சையோட கிடக்கிறதுதான் காவனூர்.  நடுத்தெருவில் ஒண்டுக்குடியா இருந்த கமலாம்பாளுக்கும் சுப்பிரமணிக்கும் அஞ்சாவதா கரிக்கட்டைக்குக் கால் முளைச்சாப்போல பொறந்திருந்தேன்.  அஞ்சாவதா ஆம்புளப்புள்ள பொறந்திருக்கான் பாரு அரசாளுவான்ன்னு பெரிய கனவை மனசுல வைச்சிக்கிட்டு என்னைப் பெத்த அம்மா பீத்திக்கிட்டு சொல்லும்போதுஉனக்கெல்லாம் அதுக்கு பொசுப்பு இல்லடிஅடுத்த குடிசைக்கார பட்டக்கா சொல்லறப்ப அம்மா மூஞ்சி சூம்பித்தான் போயிடும்.
                இருந்தாலும், ‘பொச்சரிப்பு புடுச்சவளுங்க இப்புடித் தான் எடக்குத்து குத்துவாளுங்கன்னு சொல்லிக்கிட்டு என்னை தன் கைக்குள்ளே பொத்திப் பொத்தித்தான் வளர்த்துச்சி.  எனக்குத்தான் கொடுப்பன இல்ல.  அம்மாவுக்கு என்னா நோவுன்னு தெரியாமலேயே ஒரு நாள் அம்மாவை தெக்கே கொண்டுபோய் வச்சிட்டாங்க.  அந்தக் கூலிக்காரவங்களுக்கு சூத்துவச்சி குத்த நேரம் ஏது?  ரெக்கையைக் கட்டிக்கிட்டு நின்னாத்தான் அரைவயிறாவது ரொம்பும்.  இந்த வல்லளவில சவளைதட்டி ஒடுக்கு விழுந்து கிடக்கும் புள்ளைங்களை அப்பன்காரர் கைப்பத்தா பள்ளிக்கூடத்துக்கு அழைச்சிக் கிட்டுப்போய் சேத்துவிட்டு பணிக்குப் பண்ணிவிட நேரம் ஏது?
                அம்மாவுக்கு வீடு போபோன்னும் காடு வாவான்னு சொல்லிக்கிட்டு இருக்கிறத புரிஞ்சிக்கிறதுக்குக்கூட திராணி இல்ல.  படிப்புச் சொல்லித் தாறேன்னு புள்ளைங்களைத் தேடிக்கிட்டு திரியிற வாத்தியாரோடஇவனையாச்சும் அனுப்பி வையிங்களேன்அம்மா நச்சரிப்ப தாங்க முடியாம ஒருநாள், ‘வாத்தியாரே! பயலை அழைச்சிக்கிட்டுப்போய் சேத்துக்கங்கைய்யான்னு அப்பா ஒரு காலைப்பொழுதுல பிச்சமுத்து வாத்தியாருகிட்ட என்னைக் காட்டியுட்டார்.  நான் அவரு கையைக் கெட்டியாப் புடுச்சிக்கிட்டேன்.
                உன் பேரு என்னான்னு கேட்டார்.  எனக்கு சந்தோசம் தாங்க முடியல.  ஏன்னா என்னோட பேரைக் கேட்டது வாத்தியாருதான்.  ஊருக்குள்ள கரியன் மொவன் பொரிச்ச முறுக்குன்னு  கூப்புடுவாங்க.  நான் வாத்தியாருக்கிட்டகலியபெருமான்னு சொன்னேன்.  பிச்சைமுத்து வாத்தியாரும் என் ஜாடையாத்தான் இருந்தார்.  என் மூஞ்சை உத்துப் பார்த்தவர், ‘டேய் கலியபெருமா! ஊருக்குள்ள ரொம்ப கலியபெருமாவா இருக்குடா.  உனக்கு அந்தப்பேரு வேணாம்டான்னு சொன்னதும், ‘ஊருக்குள்ள பொரிச்ச முறுக்குன்னு கூப்புடுவாங்க சார், வேணும்னா அதை வைச்சிக் கூப்புடுங்க சார்...’ன்னு சொல்லிட்டு பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு நின்னேன்.  டேய் நீ என்னைவிட வயசுல அழகா இருப்பேடா.  உன் அம்மா வைச்ச பேருல கொஞ்சம் மாத்தி சுந்தரபெருமாள்ன்னு கூப்பிடுறேன்டா,  உன் அப்பாக்கிட்ட ஒரு வார்த்த கேட்டுக்கிட்டு நாளைக்கு ரெக்கார்டு சீட்டு எழுதிடுறேன்.  (நான் அறிஞ்ச வரைக்கும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுந்தரபெருமாள் கோயில் ஒரு ஊரோட பேரா மட்டும் தான் இருக்கு)
                நீ எப்பப் பொறந்தேன்னு உம்மாக்கிட்ட கேட்டுக்கிட்டு வாடா...’ன்னுட்டார்.  நான் என் அம்மாகிட்டகேட்டப்பா, ‘பெரியகாத்து அடிச்சப்ப நீ வயித்தில இருந்தே.  அப்பறம் வந்த சித்திரை மாசக்கடைசியில அமாவாசைக்கு மூணு நாளைக்கு முன்னால அந்தியில பொறந்தேன்னு சொன்னதை அப்படியே வாத்தியாருக்கிட்டச் சொல்லிட்டேன்.
                சுந்தரபெருமா! இந்த ஊருக்குள்ள எப்ப பெரிய புயல்காத்து அடிச்சுச்சின்னு எனக்கு எப்படிடா தெரியும்?  எங்க இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டு நான் மாட்டிக்காம ஒரு தேதியிலதான் பொறந்தேன்னு எழுதிடுறேன்னு சொன்னார்.
                வாத்தியாரு என்னா வேணும்ன்னாலும் எழுதிக் கிட்டும்ன்னு தான் அப்பைக்கு இருந்திருப்பேன்.  பொறந்த தேதியைப் பத்தி அப்பெல்லாம் யாரு கண்டுக்கிட்டா?  எங்கள் ஊருக்குள்ள பள்ளிக்கூடம் ஒன்னு வரும்ன்னு நினைச்சிக்கூட பார்த்திருக்கமாட்டாங்க.  காமராசர் முதலமைச்சரா வந்துதான் இந்த பிச்சைமுத்து வாத்தியாருக்கிட்ட கால்கடுதாசி கொடுத்து அனுப்ப ஊருக்குள்ள வந்தார்.  கூடவே அப்ப டிஸ்டிக்போர்டுல இருந்த முதலியார், பண்ணைக்கு எழுதிக் கொடுத்து அனுப்பியிருந்த கடுதாசியிலபள்ளிக்கூடம் ஏற்படுத்த ஒரு இடம் தர்றதுஎன்று வாத்தியாரை அனுப்பி வைச்சதைத் தட்டமுடியாம பண்ணைக்காரர் வீட்டுலேயே வண்டிக் கொட்டாவையில இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். 
                பண்ணைக்காரருக்கு இதிலயும் ஒரு கணக்கு இருந்திச்சி.  தான் ஊட்டுப்புள்ளையைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம வீட்டுலேயே வச்சி சொல்லிக் கொடுக்கச் சொல்லிட்டார்.  அந்த பிச்சமுத்து பறை வாத்தியாராம்.  அவன் பள்ளுபறைய னெல்லாம் தெரட்டி வச்சிக்கிட்டு பள்ளிக்கூடம் நடத்த எடம் கொடுத்திருக்கிறது தரித்திரத்தை வெலை கொடுத்து வாங்கியிருக்கிறாப் போலத்தான் இருக்கு.  அம்மையப்பன் காசுக்காரத்தெரு பள்ளிக்கூடத்துல ராஜகோபால் அய்யர் வாத்தியாரா இருக்கார்.  பேசாம நம்ம வீட்டுப்புள்ளைங்களை அங்க அனுப்பிடலாம்...’  குருக்கள் வீட்டம்மா பண்ணைக்கு மந்தரம் போட்டதும் பண்ணை சுருண்டுட்டு.
                ஊருக்குத் தெக்க தலையாரிகள் பொறுப்புல இருக்கிறவாடியை ஒழிச்சி கொடுக்கிறேன்னு சொல்லி வாத்தியாரை அனுப்பி வைச்சிட்டார்.  ஊருக்குக் கடைசியில புளியமரத் தடியில் இருந்தது அந்த வாடி.  கோட்டு ஆக்கையால கரும்பலகையைக் கட்டி கொட்டாவை குறுமாடியில் சுருக்குப் போட்டுத் தொங்கும்.  கை ஒடிஞ்சிப்போன நாற்காலி ஒன்னு கிடக்கும்... இங்கதான் எனக்கு அனா ஆவன்னா சொல்லிக் கொடுத்த இடம்.  என்னோட கால்சட்டைக்கால தெருத் தோழர்கள் பொட்டை சாமிநாதன், செல்லதுரை, தியாகராசன், ராசேந்திரன் இதுல சாமிநாதன் முண்டன்.  நாங்க நாலு பேரும் சேந்தாலும் அவனை தள்ளிடக்கூட முடியாது.  சண்டைன்னு வந்தா எங்களை வரைதரை இல்லாம அடிச்சிப்புடுவான்.  அந்த பயத்திலேயே இருப்போம்.  நாங்க அவனை ஒதுக்கிடவும் முடியாது.  அவன் துணையில்லாட்டா எங்க வீட்டுல இருக்கிற கறவை எருமைகளையும்  உழவுக்கு வச்சிருக்கும் எருமைக்கடாக்களையும் விடியறதுக்குள்ள பால்காரர் வர்றதுக்கு முன்னாடி குளத்துக்கு ஓட்டிக்கிட்டுப்போய் குளிப்பாட்டி ஓட்டுக்கிட்டு வந்து சேரமுடியாது.
                ட்டுருவான்னு அவன் கொடுக்கும் குரலுக்கு எருமைக கட்டுப்பட்டு அடங்கிடும்.  அவன்கிட்ட அபாரமான வசியசக்தி இருக்குன்னு நம்பிக்கிட்டு இருந்தோம்.  எருமைகளோடவே நாங்களும் குளிச்சிடுவோம்.  பொட்டைசாமிநாதனை சுளை இல்லாத முரட்டுப் பலாக்கான்னு தான் வாத்தியாரு சொல்லு வார்.  நான் ஆறாம் கிளாஸ்க்குப் போறவரைக்கும் அங்காளம் மைக்கு வேண்டுதல் விட்டு இருக்கும் மயிரை வாகு எடுத்து ரெட்டை ஜடை பின்னிவிடும் அம்மா.  புட்டாமாவு அடிச்சி கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வச்சிவிடும்.  நான் கண்ணாடி பாக்கிறவரைக்கும் ரொம்ப அழகாத்தான் இருந்தேன்.
                ஒவ்வொரு நாளும் காலையில நானும் சாமிநாதனும் வாத்தியாரு முன்னால முதல் ஆளா போய் நிப்போம்.  வாத்தி யாரு படிச்சிக் கொடுக்க ஊர்கோலி வரப் புறப்படும்போது நாங்களும் துணைக்குப் போவோம்.  ஓடி ஒழிஞ்சதுங்க போவ மீதி பத்து பேராச்சி தேறிடுங்க.  பள்ளிக்கூடத்துக்குத் திரும்பி வரும்போது சூரியன் உச்சிக்குக் கிட்டத்தில வந்திடும்.  அதுக்குப் பிறகு எங்களோட வாத்தியாரும் பொதி மணல்ல எழுதிக் கத்துக்கொடுப்பார்.  நாங்க எல்லோரும் எழுதி முடிக்கங்காட்டியும் சாமிநாதன், பசிக்குதுன்னு நாலுபேரை அழைச்சிக்கிட்டு பெரிய தோப்புக்குப் போயிடுவான்.  எந்த மரமா இருந்தாலும் அப்படித் தாவுவான்.  குரங்கு கூட அவன்கிட்ட பிச்சை வாங்கணும்.  எந்தப் பருவத்திலயும் ஏதாச்சும் காயோ பழமோ கிடைச்சிடும்.  மத்தியான வயிறு ஆறிடும்.  நாங்க நாலாவது வரும்போதுதான் மதிய உணவு போட்டாங்க.
                மாங்காணேசன், டீக்கடை ராஜாங்கம், தங்கையன் இவர்கள்ல ஒருத்தராச்சும் வாத்தியாரோடவே இருப்பாங்க.  பள்ளிக்கூடத்துக்கு ஒரு இடம் தேடியாகணுன்னு முடிவு செஞ்சாங்க.  ஊராட்சி ஒன்றியத் தலைவரா இருந்த முதலியாரை ஊராட்சி சாலையில் தென்னங்கன்னு நடு விழாவுக்கு அழைக்க ஏற்பாடாகியிருந்தது.  அன்னிக்கு எங்களை வச்சே தலைவரை குறுக்க மறிக்கிறதுன்னு திட்டம்.  அன்னிக்கு இருவதுக்குக் குறையாத புள்ளைங்க வந்துட்டுங்க.  நாங்க எப்புடி நடந்துக்கிறதுங்கிறத சொல்லிக் கொடுத்திட்டாங்க.  இந்த ஏற்பாடு பண்ணைக்கோ ஊராட்சித் தலைவருக்கோ தெரியாமத்தான்.  யாரும் நாங்க குறுக்க உக்காந்து மறைக்கப்போறோம்ன்னு எதிர்பார்க்கல.  தலைவர் காரை மறிச்சிவேண்டும் வேண்டும் பள்ளிக்கூடத்துக்கு எடம் வேண்டும்கோஷம் போட்டதும், தலைவர் திகைச்சிப் போயிட்டார்.  எறங்கி வந்தார்.  எனக்குச் சொல்லிக் கொடுத்ததை ஒன்னுவிடாம ஒப்பிச்சிட்டேன்.
                எங்களைத் தூண்டிவிட்டது வாத்தியாரும் அவரோடு சுத்திக்கிட்டு இருக்கிற கலகக்கார வங்கன்னு தலைவரோட எடுபிடிங்க வத்தி வச்சிட்டுங்க.  அவரு பெரிசா எடுத்துக்காம அவங்களைக் கூப்புட்டு வரச்சொல்லி, ‘சீக்கிரம் ஏற்பாடு செஞ்சு தாறேன்ன்னு சொன்னத நாங்க ஏத்துக்காம, ‘இப்பவே வேணும்ன்னு கோஷத்தைக் கிளப்பிட்டோம்.  வேற வழியில்லாம பண்ணைக்காரரைக் கூப்பிட்டு அவர் அனுபவத்தில இருந்த கோயில் இடத்தில பள்ளிக்கூடம் கட்ட ஆணை போட்டதும்தான் காரை போவவிட்டோம்.
                தத்திஉத்தி அம்மையப்பன் பெரிய பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.  அப்பதான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் முச்சூடும் நடந்துகிட்டு இருந்துச்சு.  எல்லா மாணவர்களும் போராட்டத்தில குதிச்சதும் எங்க பள்ளிக்கூடத்திலயும் தீவிரமா எறங்கிட்டாங்க.  இந்தப் போராட்டத்தோட உச்சகட்டத்தில ஊருக்கு ஊரு முன்னுக்கு நின்னவங்களை கைது பண்ணிக்கிட்டு இருக்கும்போது, எங்கப் பள்ளிக்கூடத்துக்குத் தலைமை தாங்கின பழனி அய்யா, ஜெயராமன், லெட்சுமணன், ஜெயசீலன், காவனூர் கோ. கலியபெருமாள், கோவிந்தராசு இவங்களெல்லாம் தலைமறைவா இருந்துகிட்டு விடிஞ்சதும் தபால் ஆபீஸ் முன்னால வந்து நூத்துக்கு மேற்பட்டவங்களைத் தெரட்டிட்டாங்க.
                இந்தி ஒழிக! கக்கா!  மாணவர்கள் உனக்குக் கொக்கா?’ இப்புடி கோஷம் போட்டுக்கிட்டு கொடும்பாவி எரிக்கும்போது பெரிய கலவரமாயிட்டு.  போலீஸ் எல்லாரையும் சுத்தி வளைச்சி கைது பண்ணி லாரியில ஏத்திக்கிட்டாங்க.  அதில நானும் ஒருத்தனா இருந்தேன்.   நீடாமங்களம் பங்களாவில கொண்டுபோய் அடைச்சிட்டாங்க.  நாங்க காலையில வீட்டவிட்டு வந்தது.  கையில தம்புடி காசு கிடையாது.  ராத்திரி பத்துமணி வரைக்கும் சோறு தண்ணி காட்டல.  வேறுவேறு ஊருகளில் இருந்து கொண்டுவந்து அடைச்சிருந்தவங்களும் சேந்து சத்தம் போட ஆரம்பிச்சிட்டோம்.
                போலீஸூக்கு என்னா பண்ணுறதுன்னு மட்டுப்படாம போயிட்டு.  பன்னெண்டு மணிக்கு மேல எங்களை வெளியே விட்டுஓடுங்கடான்னு விரட்டி அடிச்சதும் பசியோட நடந்தே வந்துகிட்டு இருந்தோம்.  அப்ப வெளியே இருந்து எங்களுக்குத் தலைமை தாங்கியிருந்த .சி. மணியனோட, கலைஞர் கருணாநிதி தலைமை ஏற்று கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த சோமசுந்தரம், ஜெயச்சந்திரன், மாங்காகணேசன், தங்கையன் கொரடாச்சேரிக்கு வந்து காத்துக்கிட்டு இருந்தாங்க.  இவங்களோடு பிச்சைமுத்து வாத்தியாரும் வந்துட்டார்.  பிச்சைமுத்து வாத்தியாரு என்னைப் பார்த்ததும், ‘சுந்தரபெருமான்னு அளக்கா என்னைத் தூங்கி முத்தம் கொடுக்கும்போது நான் அழுதுட்டேன்.  அப்ப கொரடாச்சேரி கழக உயர்நிலைப்பள்ளியில் இறுதி வகுப்பு படிக்கும்போது போராட்டத்துக்கு தலைமை தாங்கியிருந்த தாழை
மு. கருணாநிதி, பொன்நரசிம்மன், வில்வளவன் இவங்கள்லாம் சேந்து ஒரு கடையைத் தொறக்க வச்சி ரொட்டியும் டீயும் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைச்சாங்க.  என்னை பிச்சமுத்து வாத்தியாரே வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரும்போது என் அப்பா கண்ணு செவந்துபோய் ஆத்திரமா உக்காந்திருந்ததை நான் பார்த்ததும் வாத்தியாருக்குப் பின்னால ஒளிஞ்சிக்கிட்டேன்.  என்னோட கால்சட்டை தொப்பரையா நனைஞ்சி போயிட்டு. 
                என் அப்பா வாத்தியாரு மூஞ்சைப் பார்த்ததும் பொட்டிப் பாம்பாட்டம் அடங்கிப்போயி, ‘வாத்தியாரைய்யா! உங்க மூஞ்சிக்காவ இவனை உடுறேன்.  இல்ல...’ அப்பாவோட உதடும் கையும் துடிச்சிச்சி.  புள்ளை! மவனை வீட்டுக்குள்ள உள்ள அழைச்சிக்கிட்டுப் போங்க.  காலையில பேசிக்கலாம்...’ என் கையைப் பற்றி அப்பா கையில் கொடுத்தார். 
                அன்னிக்கு பிச்சமுத்து வாத்தியார் என்னைத் தூக்கிக் கொடுத்த முத்தத்தின் சுகம் தந்த  ஆனந்தக் களிப்பு என் நெஞ்சுக்குள் இப்பைக்கும் பரவிக்கிட்டுத்தான் இருக்கு.
புதியபார்வை’   16-31 மார்ச் 2007