சைவ மடங்களின்
பட்டியலில் முதலாவது அமைவது திருவாவடுதுறை ஆதீனம். ‘தில்லை பாதி திருவாசகம் பாதி’ என்றொரு
பழமொழியைப் போலவே, ‘பிள்ளை பாதி திருவாவடுதுறை பாதி’ என்று கூறுவது பொருந்தும். காரணம்,
திருவாவடுறை ஆதீன வரலாற்றில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரபிள்ளை அவர்களுக்குப்
பெரியதோர் இடமுண்டு. மாதொருபாகன் என்பது போலத் திருஆடுதுறையில் பிள்ளை ஒரு பாகம். பிள்ளையவர்களைத்
திருவாவடுதுறை ஆதீனம் வளர்த்தது. ஐயரவர்களைப் பிள்ளையவர்கள் வளர்த்தார். ஆவடுதுறை இன்றேல்
பிள்ளையவர்கள் இல்லை. பிள்ளையவர்கள் இன்றேல் ஐயரவர்கள் இல்லை….” (மடங்கள் வளர்த்த தமிழ்
– ஊரன் அடிகள் – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர்)
‘…தமிழ்ப்புலவர்களின் வரலாறுகள் தமிழகத்தில் ஒரு வரையறையின்றி வழங்குகின்றன.
கர்ணபரம்பரைச் செய்திகள் முழுவதையும் நம்ப முடியவில்லை. எந்தப் புலவர்பாலும் தெய்வீக
அம்சத்தை ஏற்றிப் புகழும் நம் நாட்டினரில் ஒரு சாரார் புலவர்களைப் பற்றிக் கூறும் செய்திகளில்
சில நடந்தவனவாகத் தோன்றவில்லை. அப்புலவர்களுக்கு மிக்க பெருமையை உண்டாக்க வேண்டுமென்பதொன்றனை
மட்டும் கருதுகிறார்களேயல்லாமல் நடந்த விஷயங்களை நடந்தபடியே சொல்லுவதை விரும்புவதில்லை.
கம்பர் முதலிய சில புலவர்களை வரகவிகளென்றும் கல்லாமலே பாடி விட்டனரென்றும் சரஸ்வதி
தேவியின் திருவருளாலும் உமாதேவியின் அருளாலும் அங்ஙனமாயினரென்றும் கூறுவது தான் பெருமையெனவும்
திருவருளால் கிடைத்த நல்லறிவைத் துணைக்கொண்டு பல நூல்களைப் பயின்று செயற்கையறிவும்
வாய்க்கப் பெற்று நூல் முதலியன இயற்றினார்கள் என்பது சிறுமையெனவும் எண்ணுகிறார்கள்…
(மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் – முகவுரை – உ.வே.சா)
“…பிள்ளையவர்களோ
சிறிதேனும் பெருமிதமின்றியும் தம்முடைய கவியைப் பாராட்டாமலும் வேறு பேச்சின்றியும்
மேலே மேலே செய்யுள் செய்து கொண்டு போதலைப் பார்த்த எனக்கு விம்மிதம் உண்டாயிற்று. கவிஞர்களுடைய
பேராற்றல் இத்தகையதென்பதைச் சரித்திரங்களின் மூலமாக அறிந்தவனேயன்றி, அன்று போல நான்
நேரிற் பார்த்ததில்லை. ஆதலின் ஒரு மகாகவியின் வாக்கிலிருந்து ஆற்றொழுக்கைப் போலக் கவிதாப்
பிரவாகம் பெருகிக் கொண்டிருப்ப அதனை காதினால் கேட்டும் கையினாலெழுதியும் இன்புற்ற எனது
நிலை இங்கே எழுதற்கரியது…” என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் கவிதாற்றலை உ.வே.சா.
பதிவு செய்திருக்கிறார். (மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களின் சரித்திரம் – பகுதி இரண்டு.
பக்கம் 80)
ஆசான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும் உ.வே.சாமினாதய்யரும்
இன்றேல் தமிழ் இன்னும் சிலகாலமாவது பின்னோக்கி தேங்கி நின்று தான் பின் வளர்ந்திருக்க
முடியும் என்று கருத இடமிருக்கிறது அல்லவா?
‘‘நல்லார்
குணங்களுரைப்பதுவும் நன்றே’ என்பதை எண்ணி இந்த மகாவித்துவானுடைய வாழ்க்கை வரலாற்றை
எழுதியுள்ளேன்” என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திர நூலின் முகவுரையில்
குறிப்பிடும் உ.வே.சா அவர்கள், அதில் இம்மி அளவேனும் குறை வைத்திருக்க வில்லை என்று
உணரவே முடிகிறது.
‘நூலாசிரியர்,
உரையாசிரியர், போதகாசிரியர் என்னும் மூவகை ஆசிரியராக இருந்தாலும் சரித்திரத்தால் இவர்
பாடஞ்சொல்லுதலையே விரதமாக உடையவரென்பதும் மாணாக்கர்கள் பால் தாயினும் அன்புடையவரென்பதும்
யாவரிடத்தும் எளியராகப் பழகும் இயல்புடையவரென்பதும் பொருளை மதியாமல் கல்வி அறிவையே
மதிக்கும் கொள்கை உடையவரென்பதும் எவ்வளவு உண்மையோ அது போலவே இவர் காலத்திற்குப் பின்பு
இவரைப் போன்றவர்களைக் காணுதல் அரிதாக இருக்கிறது’ என்பதும் உவேசாவின் புனைவாகத் தெரியவில்லை.
”…எங்களுக்குத்
தமிழ்ச்சுவையைப் புலப்படுத்தியது போலக் கணக்காயனாராக இருந்து எங்களுடைய பிள்ளைகளுக்கும்
உரிய தமிழ்ப் பாடங்களைக் கற்பிக்க வேண்டும்” என்ற ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இவரின்
தந்தையார் சிதம்பரம்பிள்ளை திண்ணைப்பள்ளி அமைத்து தமிழைக் கற்பித்திருக்கிறார். இத்திண்ணைப் பள்ளிகள் வாழ்க்கைக்கு இன்றியமையாத
பல விஷயங்களைக் கற்பித்தன. மீனாட்சி சுந்தரம்பிள்ளை
அவர்களுக்கு, ‘நாடெங்கும் நாம் தமிழுக்கு தலையான மாணவர்களை திரட்டி இம்மண்ணில் மாபெரும்
இயக்கமாகவே வளர்த்து எடுக்க வேண்டிய தேவையும்
இருக்கிறது. அதற்காக தமிழை ஆழமாக கற்கவும் கற்பிக்கவும் வேண்டும்’ என்ற உறுதியான
தேடலில் நெடும்பயணத்தைத் தொடங்கியிருந்திருக்கிறார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி
பதினாறு அடிபாயும் இந்த மக்கள் வழக்காறு மீனாட்சிசுந்தரம்பிள்ளைக்கு ஏகப்பொருத்தமாக
அமைந்து போயிருக்கிறது.
அதனால்
தான், அவர் மனசுக்குள் பொத்தி வளர்த்து எடுத்துக் கொண்டு இருக்கும் தமிழ்ச்சுடரை ஏற்றம்
செய்ய, அன்னப்பிச்சை எடுத்து உண்டு காலங்கழித்து வந்த பரதேசி ஒருவர் பின்னால் கஞ்சா
பொட்டலத்தோடு பின் தொடர்ந்து அந்தப் பரதேசிக்கு உரிய காலத்தில் கஞ்சாவை அளித்து தண்டியலங்காரத்தைப்
பாடமாகக் கேட்கவும் அவ்வேட்டை அவரால் பெறவும்
முடிந்திருக்கிறது. அதனால் தான் தம்முடைய மாணவர்களுக்கு எந்த வகையில் குறைகள் உள்ளனவோ
அவற்றையெல்லாம் தாமே அறிந்து ஆராய்ந்து தீர்க்கும் அரிய தன்மை பிள்ளை அவர்களுக்கு இருந்தது
என்கிறார் உவேசா
“…ஒரு
முறை திருவாவடுதுறைக்கு ஆறுமுகநாவலர் வந்திருந்த பொழுது மடத்திற் படித்துக் கொண்டிருந்த
நமச்சிவாயத்தம்பிரானைக் கண்டு, ‘பிள்ளையவர்களிடம் பல நூல்களைப் பாடங்கேட்டுக் கொள்ள
வேண்டும். அவர்கள் இங்கே இருப்பது பெரும் பாக்கியம்
அவர்களைப் போல இப்பொழுது பாடஞ்சொல்பவர்கள் இல்லை” என்று சொல்லிப் போகிறார். (மீனாட்சி
சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் பக்கம் 242) அந்த அளவுக்கு மாணவர்களுக்கு பாடம்
சொல்லுவதிலும் மாணவர்களின் மனமறிந்து பயிற்று விப்பதிலும் வல்லவராக இருந்திருக்கிறார்
என்பது தமிழுலகம் அறிந்த ஒன்றாகவே இருந்திருக்கிறது. அம்மாணவர்களுக்கு பாடம் படித்துச்
சொல்லுவது மட்டுமல்லாமல் தக்கவிடங்களில் இயன்ற அளவில் அவர்களை முன்னிலைப்படுத்துவதிலும்
அவர் விட்டுக் கொடுத்ததில்லை.
“…மாதவராயரவர்களைப்
பற்றித் தங்களுக்குத் தெரியுமே. அவர்கள் இப்பொழுது திருவனந்தபுரத்தில் திவானாக இருக்கிறார்கள்.
தாங்கள் திருவனந்தபுரம் மகாராஜா காலேஜ் தமிழ்ப்பண்டிதர் வேலையை ஒப்புக் கொண்டால் முதலில்
மாதவேதனம் ரூ 100 கொடுப்பார்கள். பின்பு வேண்டிய சௌகரியங்களைச் செய்வார்கள். எங்களுக்கும்
கௌரவமாக இருக்கும் ராஜாங்க வித்துவானாகவும் இருக்கலாம். சமஸ்தானத்திற்கும் கௌரவம் ஏற்படும்”
என்று வற்புறுத்திச் சொன்னார்கள்.
பிள்ளை
அவர்கள், “பராதீனனாக இருந்தால் என்னுடைய நோக்கத்திற்கு மிகவும் அசௌகரியமாக இருக்கும்.
ஏழைகளாக இருக்கும் பிள்ளைகளுக்குப் பாடஞ்சொல்லிக் கொண்டும் அவர்களுடன் சல்லாபம் செய்து
கொண்டும், காவேரி ஸ்நானமும் சிவதரிசனமும் செய்து கொண்டும் இருப்பதே எனக்குப் பிரியமான
காரியமாக இருக்கின்றது. சாதாரண ஜனங்களோடு பழகுதல் தான் எனக்கு இன்பத்தை விளைவிக்கும்...”
(மேற்படி நூல் பக்கம் 258)
பிள்ளை
அவர்களின் நோக்கம் பட்டம், பதவி, புகழ், பொருள் என்று அலைந்ததாக அறிய முடியவில்லை.
தமிழ்மாணவர்களை உருவாக்கம் செய்து அதன் மூலம் தமிழின் வளத்தை உலகறியச் செய்தல் ஒன்றே
குறிக்கோளாக இருந்திருக்கிறது. இந்த குறிக்கோளுக்கு சாதி, வர்ணம், சமயம் இவை எதுவும்
தடையாக இருக்க நாம் அனுமதிக்கக் கூடாது என்பதில் வலுவான கருத்தோட்டத்தில் இருந்திருக்கிறார்
என்றும் அறிய முடிகிறது.
அதனால்
தன்னைத் தேடிவந்த திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி
தமிழ்ப்பண்டிதர் வேலையை, “தஞ்சாவூர் அரண்மனையிலும் சென்னைக் கல்விச் சங்கத்திலும்
தமிழ்ப்பண்டிதராக இருந்த சிவக்கொழுந்து தேசிகருடைய குமாரர் சாமிநாததேசிகர் என்னிடத்தில்
வாசித்தவர் அவருக்கு அவ்வேலையைச் செய்வித்தால் நன்றாகப் பாடஞ்சொல்லுவார். எனக்கும்
மிகவும் திருப்தியாக இருக்கும்…” என்று தமிழ் ஒன்றே என்ற கருத்தோட்டத்தில் இருந்ததால்
தான் தமிழ்படிக்கும் மாணவர்களை நேசிக்கும் பிள்ளை அவர்களால் அப்படிச் சொல்ல முடிந்திருக்கிறது.
“…யார்
வந்து பாடங்கேட்டாலும் அவர்களுக்குப் பாடஞ் சொல்லுவார். இவரிடத்துப் படித்தவர்களிற்
பல சாதியினரும் உண்டு. பிராமணர்களில் ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள், மாத்தவர்கள் என்னும்
வகுப்பினரும், வேளாளரிற் பல வகுப்பினரும், பிற சாதியினரும், கிருஸ்தவர்களும், முகமதியர்களும்
இவர்பாற் பாடங் கேட்டதுண்டு. நாகூரில் புகழ் பெற்று விளங்கிய குலாம் காதர் நாவலரென்னும்
முகமதியர் இவர் பால் வந்து சீராப்புராணம் முதலியவற்றைப் பாடங்கேட்டனர்…” (மேற்படி நூல்
பக்கம் 144)
“…நான்
தேம்பாவணியைப் பாடஞ்சொல்லுதலும் கிறிஸ்தவர் முதலிய பிற மதமாணாக்கர்கள் என்பாற் பாடங்கேட்டலும்
கூடாத செயல்களென்று சிலர் சொல்லி வருவதாகத் தெரிகிறது. தமிழ்மாணாக்கராக யார் வந்தாலும் அன்போடு பாடம் சொல்லுதலையே எனது முதற்கடமையாக எண்ணியிருக்கிறேன்...
தமிழ்நூல் என்னும் முறையில் யாதும் விலக்கப்படுவது அன்று…” மேற்படி நூல் பக்கம்149
‘பிள்ளை அவர்கள்
பயணிக்குமிடமெல்லாம் தன்னுடன் சில மாணவர்களாவது இல்லாமல் இருக்க மாட்டார்கள். செல்லுமிடமெல்லாம்
பாடம் படித்துத்தருவார். அது போல வேதநாயகம்பிள்ளை அவர்களின் வேண்டுகோளின்படி தம்மோடு
சிலரை அழைத்துச் செல்கிறார். பிரபந்த நயம் குறித்து உரையாடல் தொடர்கிறது. அவ்விடத்தில்
பிள்ளை அவர்கள் இல்லாத நேரத்தில் அவரோடு உடன் சென்றவர்கள் அழுக்காறு உடையவர்களாக நடந்து
கொள்கிறார்கள். அதனை பிள்ளை அவர்களிடமே மாயவரம்வேதநாயகம்பிள்ளை உடன் இருப்பவர்கள் அவமதிப்பு
செய்வது போல நடந்து கொண்டவற்றை வெளிப்படுத்துகிறார்.
”…தக்கவர்கள்
எங்கே கிடைக்கிறார்கள்? கிடைத்தவர்களைக் கொண்டு தான் நாம் சந்தோஷத்தை அடைய வேண்டியிருக்கிறது.
இவர்கள் நல்லவர்கள் தான். தம்மை அறியாமலேயே ஏதோ தவறு செய்து விட்டார்கள் போலும். இனி
ஒரு போதும் அவ்வண்ணம் செய்யமாட்டார். பொறுத்துக் கொள்ள வேண்டும்…” என்று வேதநாயகம்பிள்ளையிடத்து
தான் நடத்தும் தமிழ் இயக்கத்தோடு பயணிப்பவர்களையும் ஆற்றுப்படுத்தும் அந்த ஆளுமை, சிறந்த
ஆசான் என்று பறை சாற்றுகிறதல்லவா?
‘…தன்னுடன்
இருந்து பாடம் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து
கொடுப்பதில் கவனம் கொள்கிறவர். முன் நாட்களில் பட்டு இருந்த கடனை அடைக்க வேண்டிய நிர்பந்தம்
இருக்கும் வேளையில், ‘தமக்கு சீர்காழியிலும் பிற இடங்களிலும் கிடைத்த பணத்தில் ஒரு
பகுதியைக் கொண்டு தம்முடைய மாணவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து வைத்தும் அவருள்
முத்துக்குமாரபிள்ளை என்பவருக்கு மணம் செய்வித்தும் வீடு கட்டிக் கொடுத்தும் செலவு
செய்து விட்டு எஞ்சிய தொகையைத் திரிசிரபுரத்திற் செலுத்த வேண்டிய கடனுக்காக அனுப்பிவிட்டார்…’
என்று பதிவு செய்கிறார் உ.வே.சா (மேற்படி நூல் 188 பக்கம்)
இவர் சிலதினம் கும்பகோணத்திலேயே இருந்து வருகையில் ஒரு நாள், அவ்வூரில்
வராகக்குளத்தின் கரையிலுள்ள ரங்கசாமி ஐயங்காரன்னும் செல்வர் ஒருவர் இவருடைய கவித்துவத்தை
அறிந்து, “விஷ்ணு புராணத்தை வடமொழியிலிருந்து தமிழில் செய்யுள் நடையாக மொழிபெயர்த்து
நீங்கள் செய்து தரவேண்டும். செய்து தந்தால் ஐயாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நாங்கள்
தொகுத்துத் தருகிறோம். எங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் மிக்க விருப்பத்தோடிருக்கின்றனர்”
“ நான் சைவனாதலின் அவ்வாறு செய்தல்,
நான் கொண்ட கோலத்திற்கு மாறாகும். ஆதலால் அது செய்ய என்னால் இயலாது. சென்னையைச் சார்ந்த
எழும்பூரில் திருவேங்கடாசல முதலியாரென்னும் வைணவ வித்துவானொருவர் இருக்கிறார். அவர்
வைணவ நூல்களில் நல்ல பயிற்சியுள்ளவர். நூல் இயற்றுதலிலும் வன்மையுடையவர். அவரைக் கொண்டு
உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்...” என்று சொல்லி தான் ஒதுங்கிக் கொள்கிறார்.
அந்த நேரம்
அவருக்கும் பணம் அவசியத்தேவையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் மறுத்து விடுகிறார்.
காரணம், தனித்த ஆளுமை கொண்ட தனிமனிதனாக இருந்து
சைவத்தினை கைக் கொண்டு ஒழுகும் கொள்கைக்கு மாறாக நடக்க விரும்ப வில்லை. அதே நேரம் அவர்
சாதிமதம் கடந்த ஆசிரியராகவும் தாய்மொழிப்பற்றாளராகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும்
முகத்தான் அப்புராணம் மொழிபெயர்ப்புச் செய்ய தக்கவரை அறிமுகம் செய்கிறார்.
“தமிழ்ப்
பாஷையில் எனக்கு விசேஷமான பிரீதியுண்டு. யாரிடத்திலாவது போய் பாடம் கேட்கலாமென்று நினைத்தாலோ, இந்தப் பக்கத்திற் பாடஞ்சொல்லத்
தக்கவர் யாரும் இல்லை. சொல்லக்கூடியவர் இருந்தாலும், சுலபமாக அவர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை.
அவர்களுக்கு நாள் முழுவதும் பணிவிடை செய்தாலும் ஏதோ கடனுக்காகச் சொல்லிக் கொடுப்பார்கள்.
என்னுடைய நிலைமை ஜீவனத்திற்கே தாளம் போடும் பொழுது அவர்களை அண்டி நான் எப்படிக் கற்க
வேண்டிய நூல்களைக் கற்க முடியும்?” (மேற்படி நூல் பக்கம் 288) அக்காலத்தில் தமிழ்படிக்க
விருப்பம் உள்ளவர்கள் நிலைமை இப்படித்தான் இருந்திருக்கிறது. இந்த நிலைமையில் இருந்து
மீட்டு தமிழ்படிக்க விருப்பம் கொண்டவர்களுக்கு பாடம் சொல்லித்தர முன் வந்திருக்கிறார்.
“மாயூரத்தில்
மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் என்று ஒரு சிறந்த தமிழ் வித்துவான் இருக்கிறாராம்.
ஏழைகளாயுள்ளவர்களுக்கு அன்னமும் வஸ்திரமும் அளித்துச் சில வருஷம் வைத்திருந்து அவர்களை
நன்றாகப் படிப்பித்து அனுப்புவது அந்த மகானுக்கு வழக்கமாம். அவரிடத்தில் சில மாதம்
படித்தாலும் படிப்பவர்கள் கல்விப் பெருக்கத்தையடைவார்களென்று சொல்லுகிறார்கள்…” பிள்ளைஅவர்களின்
தமிழ்ப்பாடம் சொல்லித்தரும் பணி, வெகுவாய் பரவிக் கொண்டு இருந்திருக்கிறது. அதனால்
தான் நாலா திக்கிலும் இருந்தும் தமிழ் பாடம் சொல்லி கேட்போர் அவரை நாடி வந்திருக்கிறார்கள்.
தன்னை
நாடி தமிழ்ப்படிக்க வரும் மாணாக்கர்களுக்கு இருக்கவும் படுக்கவும் நல்ல வசதியான இடம்
இல்லாமையை உணர்கிறார். ‘மாயூரம் தெற்கு வீதியில்
திருவாவடுதுறை மடத்திற்கு மேல் புறத்துள்ள இரண்டு கட்டு வீடு ஒன்றைச் சுக்கில வருசத்தில்
900 ரூபாய்க்கு வாங்கினார். அந்த வீட்டின் தோட்டம், பின்புறத்திலுள்ள குளம் வரையிற்
பரவியிருந்தது. அந்தக் குளத்தின் கரையிற் படித்துறையுடன் ஒரு கட்டடம் கட்டுவித்து,
அதிலிருந்து பாடம் சொல்ல வேண்டும் என்று எண்ணினார்… அதனை குறிப்பால் அறிந்த அவரது அன்பர்கள்
அக்கட்டத்தை அவர் விருப்பத்தின் படியே பூர்த்தி செய்வித்தனர். அதன் பின்னர் அவ்விடத்திலேயே
இவர் பாடஞ்சொல்லுதலும் சிவபூசை செய்தலும் நடைபெற்று வந்தன…’ என்று உ.வே.சா. அவர்கள்
பதிவு செய்திருக்கிறார். (மேற்படி நூல் பக்கம் 329)
“…எந்தையாரவர்கள்
தம் ஆசிரியராகிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களை அடிக்கடி நினைந்து தம்மிடம்
வருவோர்களிடம் பிள்ளையவர்களுடைய கல்விப் பெருமை, போதானா சக்தி, செய்யுளியற்றுவதில்
இருந்த ஒப்புயர்வற்ற திறமை முதலியவற்றைக் கூறித் தமக்கு ஏற்பட்டு வரும் பெருமைக்கெல்லாம்
அவர்களிடம் முறையாகப் பலவருடம் பாடங்கேட்டு இடைவிடாது பழகியதே காரணம் என்று சொல்லுவார்கள்…”
(சா. கலியாணசுந்தர அய்யர். என் சரித்திரம் முன்னுரை)
சிலப்பதிகாரம்,
மணிமேகலை, சீவகசிந்தாமணி, புறநானூறு, பத்துப்பாட்டு போன்ற ஏடுகள் கரையானுக்கு இரையாகி,
மண்ணோடு மண்ணாகப் போகாமல் மீட்டுஎடுத்து தமிழின் தொன்மை இழந்து போகாமல் உ.வே.சா அவர்கள்
காப்பாற்றியிருக்கிறார். அதனால் அவருக்கு கிடைத்திருக்கும் பெருமைகள் அனைத்திலும் அவருடைய
ஆசான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. அதாவது உவேசா அவர்கள்
மேல்தளம் என்று நம்மால் குறிப்பிட முடியுமானால் அவருக்கு அடித்தளமாக இருந்து வலுயூட்டியவர்
மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் தான் என்று உறுதிபடச் சொல்ல முடியும். இந்த உண்மையை
நாம் தவற விட்டு விடக் கூடாது
முடிவுரையாக
மகாவித்வான்
மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் இருபதுக்கு
மேற்பட்ட தலபுராணங்கள் பாடியிருக்கிறார். இதன் மூலங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில்
இருந்ததென்றும் அதன் உள்ளடக்கத்தினைச் சமஸ்கிருத அறிஞர்களைக் கொண்டு உரைநடை தமிழாக்கி
வைத்துக் கொண்டு பின்பு வளமான தமிழில் செய்யுள்
நடையாக்கியிருக்கிறார். “…கும்பகோணம் புராணத்தை வடமொழியிலிருந்து முதலில் தமிழ் வசனமாக
மொழி பெயர்த்து வைத்துக் கொண்டார். அவ்வாறு மொழி பெயர்த்தற்கு உதவியாயிருந்தவர்கள்
சங்கராச்சாரியார் மடத்து வித்துவானாகிய மண்டபம் நாராயணசாஸ்த்திரிகள் முதலியவர்கள்.
பின்பு புராணத்தை இவர் (தமிழ்) செய்யுள் நடையாக இயற்ற ஆரம்பித்தார்…” (மேற்படி நூல்
பக்கம் 259)
இப்படியாக சமஸ்கிருதத்தை மூலமாகக் கொண்டுள்ள 22 தல
புராணங்கள், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களால் இனிய தமிழில் பாடப்பட்டு
இருக்கிறது என்று கிடைத்திருக்கும் பதிவுகள்
உறுதி செய்கின்றன. அதில் நமக்கு எள்ளளவும்
மயக்கமில்லை.
ஆனால்,
இந்த புராணங்கள் அனைத்தும் இந்த தமிழ் மண்ணில் உள்ள ஊர்களைப் பற்றியும் இயற்கை வளங்களைப்
பற்றியும் இவ்வூர்களில் உள்ளடங்கிய மக்களையும் அவர்களிடையே கோயில் கொண்டு இருப்பதாக
கருதும் இறைவன் இறைவியரைப் பற்றியுமே பாடப்பட்ட மூலவரலாறு எவ்வாறு சமஸ்கிருதத்தில்
முதன்முதல் எழுதப்பட்டு இருக்க முடியும்?
பொதுவில்
பேசப்படும் பெரியபுராணம், விஷ்ணுபுராணம் போன்றவை அல்ல இந்தத் தலபுராணங்கள். கோவில்
கொண்டிருப்பதாகக் கருதப்படும் இறைவனையும் இறைவியையும் அந்தந்தப் பகுதி மக்களிடத்து
நிலைப்படுத்துவதற்காகச் செய்யப் பட்டவையாகும். அவை மக்களுக்குப் புரியும் மக்கள் மொழியிலேயே
உருவாகி இருந்திருக்க முடியும். பின்னரே சமஸ்கிருத ஆதிக்கம் மேலோங்கிய நிலையில் அவை
சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுத் தமிழ் மூலங்கள் இழிவென்று ஒதுக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்திருக்க
வேண்டும். அதனாலேயே திருமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சமஸ்கிருதத்திலிருந்து தலபுராணங்களைத்
தமிழ்ப்படுத்த வேண்டியவரானார் என்று புரிந்து கொள்வது வரலாற்றுக்குப் பொருத்தமுடையதாக
இருக்கும்.
ஐம்பத்தாறு தேசங்களைக் கொண்ட துணைக்கண்டத்தை சமஸ்கிருதம்
என்னும் ஒரு மொழியைப் பொதுமொழியாகக் கொண்டு இணைப்புக் கொடுத்ததனால் மக்கள் மொழிக்குரிய
இலக்கியங்கள் அழிக்கப்பட்டதும் மக்கள் மொழிகள் நசுக்கப்பட்டதுமான வரலாற்றின் வெளிப்பாடே
மேற்கண்ட நிகழ்வாகும்.
மகாவித்வான்
மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள், தமது படைப்புகளில் பிற்காலச் சோழர்கால வாழ்வியலை இறையியலோடு
கலந்தும், கல்வி நிலையில் பயிற்றிதலோடும் உறவாட விட்டு இருந்திருக்கிறார் என்பதனை பளிச்சென்று
அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இதில் இருந்து திரிசபுரத்து ஆசான் என்று போற்றப்படும்
மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் பங்களிப்பை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
(சாகித்யா அகாடமியும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்
கழகமும் இணைந்து பல்கலைக் கழக அரங்கில் 29.10.2014 நடத்திய திரிசிரபுரம் மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் 200 வது பிறந்த நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டுக்
கட்டுரை)